இத்தாலிய எழுத்தாளர் உம்பர்தோ ஈகோவும் பிரெஞ்சு எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான ஜீன் கிளாட் கேரியரும் சந்தித்துப் புத்தகங்கள் குறித்து உரையாடிதன் தொகுப்பாக வெளிவந்துள்ளது This is Not the End of the Book.
இரண்டு அறிவுஜீவிகளின் சந்திப்பும் உரையாடலும் எத்தனை ஆழமானதாக, விரிந்த தளத்தில் இருக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு உதாரணம். இருவரது பேச்சின் பொதுவிஷயமாக அமைத்திருப்பது நூலகமும் அரிய நூல்களும். இருவருமே முதன்முதலாக அச்சு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட 1500 காலகட்டத்தைச் சேர்ந்த அரிய நூல்களைத் தேடி சேகரம் செய்பவர்கள். இருவருமே புத்தகப்புழுக்கள்.
உம்பர்தோ ஈகோ தனது சேமிப்பில் 50000 புத்தகங்கள் இருப்பதாகவும் அதில் 1200 அரிய நூல்கள் எனக் குறிப்பிடுகிறார். கேரியரோ தன்னிடம் நாற்பதாயிரம் புத்தகங்கள் இருப்பதாகவும் அவற்றில் 2000 மிகப்பழமையான பொக்கிஷங்கள் என்று கூறுகிறார்.
பதினாறாம் நூற்றாண்டில் அச்சடிக்கபட்ட நூல்களைத் தேடிச் சேகரிக்கும் புத்தக ஆர்வலர்கள் பலரிருக்கிறார்கள். அவர்கள் பழைய நூல் ஒன்றுக்குப் பத்துலட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை தர தயாராகயிருக்கிறார்கள். உண்மையில் அது பழைய நூல் தானா என மதிப்பிடுவதற்கும் வல்லுனர்கள் இருக்கிறார்கள். இந்த ஆர்வலர்களை ஏமாற்றி மோசடி செய்யும் கள்ளவணிகர்களும் ஐரோப்பாவில் அதிகம்.
அரிய நூல்வகைகள் ஏலத்திற்கு விடப்படும் போது bibliophile ஒன்று கூடுகிறார்கள். யாரிடமும் எந்தப் பழைய நூல் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களை வைத்திருப்பவனே அதில் பெரும் செல்வந்தனாகக் கருதப்படுகிறான்.
குட்டன்பெர்க் காலத்தில் எப்படி நூல்கள் அச்சிடப்பட்டன. விற்பனை செய்யப்பட்ட முறை எவ்வாறு இருந்தது என்பதை இருவரும் சுவாரஸ்யமாக விளக்குகிறார்கள். ஜொஹானேஸ் குட்டன்பெர்க் 1455-ஆம் ஆண்டுப் பிப்ரவரி 23-ஆம் நாள் எழுத்துக் கோர்த்து அச்சடிக்கும் அச்சு முறையில் உலகின் முதல் புத்தகத்தை உருவாக்கினார். அது பைபிள் பிரதி. அவற்றில் தற்பொழுது 22 பிரதிகள் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றில் ஒன்று கிடைத்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள். அந்த அளவிற்குச் சந்தையில் போட்டியிருக்கிறது. 1480 களுக்குப் பிறகு ஐரோப்பாவெங்கும் 270 இடங்களில் அச்சகங்கள் உருவாகின.
கிளாடே கேரியர் பீட்டர் புரூக்கின் மகாபாரத நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் எழுதியவர். இந்தியா மீது பெரும் மதிப்பும் அன்பும் கொண்டவர். லூயி புனுவலின் திரைக்கதை ஆசிரியர். ஆகவே அவர் சினிமாவிற்கும் எழுத்திற்குமான உறவு பற்றி அழகாக எடுத்துச் சொல்கிறார். இருவரது உரையாடலின் போது அரிய தகவல்கள், சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய வெளிப்பட்டுள்ளன.
குறிப்பாகக் கிளாடே கேரியர் “Every great French author from Rabelais to Apollinaire has written at least one pornographic text.என ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். பாலின்பத்தைப் பற்றிப் பேசாத பிரெஞ்சு எழுத்தாளரே கிடையாது. இருண்ட உலகைச் சித்தரிப்பதில் ஆர்வம் கொண்ட பிரெஞ்சு எழுத்தாளர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் உலகம் பற்றி அதிகம் எழுதியிருக்கிறார்கள்.
கவிதைகளை மனப்பாடம் செய்வது மறதிக்கு எதிரான நினைவை தூண்டும் பயிற்சியாகும். எவர் மனதில் கவிதைகள் நிரம்பியிருக்கிறதோ அவருக்கு நினைவு இழப்பு ஏற்படாது என்கிறார் உம்பர்தோ ஈகோ. புத்தகங்களின் கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் குறித்து இவரும் மிகுந்த ஆர்வத்துடன் உரையாடியிருக்கிறார்கள். அத்துடன் ஐரோப்பிய கலைமரபு குறித்தும், பிரெஞ்சு சினிமா குறித்தும் தங்கள் பார்வையைப் பகிர்ந்து தருகிறார்கள்
மின்புத்தகங்களின் வருகையால் அச்சிப்பட்ட புத்தகங்கள் அழிந்து போய்விடும். எதிர்காலத்தில் நூலகத்தில் அச்சிடப்பட்ட நூல்களே இருக்காது. ஈபுக் படிப்பது மட்டுமே வழக்கமாக இருக்கும் என்ற பயம் மெல்ல உலகெங்கும் பரவிவருகிறது. ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை கம்ப்யூட்டர் திரையை வெறித்துப் பார்த்து பார்த்துக் கண்கள் வீங்கிப் போன இந்தத் தலைமுறையினர் புத்தகங்களையும் தொடுதிரையில் தான் வாசிக்க விரும்புகிறார்களா என்ற கேள்வி விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
படுக்கையில் படுத்தபடியோ, பயணத்திலோ, சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே புத்தகம் வாசிக்கும் சுகம் ஈடு இணையற்றது என்ற குரல் இன்னொரு பக்கம் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
மொழியியல் பேராசியராகவும் ஆய்வாளருமான உம்பர்த்தோ ஈகோ தனக்கு அச்சு நூல்களை வாசிப்பதே விருப்பமாகயிருக்கிறது என்கிறார்.
புத்தகங்களைக் கண்ணால் பார்ப்பதே சுகம். கையில் எடுத்துப் படிப்பது ஒருவிதம் என்றால் இன்னொரு விதம் நமக்குப் பிடித்தமான புத்தகங்களைக் காணுவது. எனது நூலகத்திற்குள் சென்று புத்தகங்களை ஏறிட்டு பார்த்தபடியே மெய்மறந்து நிற்பேன். அந்த இன்பத்தைப் புரிய வைக்கமுடியாது என்கிறார் க்ளாடே கேரியர்
வேறு ஒரு இடத்தில்
The book is like the spoon, scissors, the hammer, the wheel. Once invented, it cannot be improved. You cannot make a spoon that is better than a spoon. When designers try to improve something like the corkscrew, their success is very limited; most of their “improvements” don’t even work. Philippe Starck attempted an innovative lemon-squeezer; his version was very handsome, but it lets the pits through. The book has been thoroughly tested, and it’s very hard to see how it could be improved on for its current purposes. Perhaps it will evolve in terms of components; perhaps the pages will no longer be made of paper. But it will still be the same thing. என உம்பர்த்தோ ஈகோ குறிப்பிடுகிறார். இது உண்மை. புத்தகத்தின் உருவம் மாறலாம். ஆனால் புத்தகம் வழியாகக் கிடைக்கும் அனுபவம், அறிவு. ஞானம் ஒரு போதும் மாறப்போவதேயில்லை.
THIS IS NOT THE END OF THE BOOK
Jean-Claude Carriere and Umberto Eco
Northwestern University. 336 pp.