உரையாட விரும்புகின்ற நாவல்

 ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவல் குறித்த வாசிப்பனுபவம்.

க.வை. பழனிசாமி

 தமிழ் இலக்கியத்தில் முக்கியமானப் புத்தகம் எஸ்.ராவின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’. வாசிக்கத் தொடங்குகிறபொழுதே அதை உணர்ந்துவிடுகிறோம். வாசகனிடம் அதிகமாக உரையாட விரும்புகின்ற நாவல். உரையாடல்தான் இந்த நாவலின் பலம். உரையாடல் பன்முகத் தன்மையில் இருக்கிறது. பழக்கமான நாவல்களிலிருந்து வேறானது என்பதை இதன் கதையாடல் சொல்லிவிடுகிறது. இந்தப் புரிதல் தோன்றியதுமே நாவல் மீதான அக்கறை கூடிவிடுகிறது. டால்ஸ்டாயை மையமாகக்கொண்டு ரஷ்ய சூழலில் எழுதப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே இதிலிருக்கும் புதுமையா? ரஷ்ய வாழ்க்கைத் தமிழில் என்பது புதுமையா? இதைத் தாண்டிய வேறு புதுமை இருக்கிறது. அது இதன் வாசிப்பு முறை சார்ந்தது. எல்லா நாவல்களும் கோருகின்ற வாசிப்பு அல்ல. இதன் ஒவ்வொரு நகர்தலிலும் டால்ஸ்டாயின் குரல் தீண்டி.., உள் நகர்ந்து, உணர்ந்து மீண்டும் வாசிக்கிறோம்.

 எண்ணற்ற சாளரங்களைத் திறந்து காட்டிய டால்ஸ்டாயை இந்த நாவலில் வேறு வகையான சாளரம் வழியாகப் பார்க்கிறோம். அவரையே அவர் காட்டிய இடத்திலிருந்து மீண்டும் அவரைப் பார்ப்பது. இதைத்தான் உள் நகர்ந்து என்று குறிப்பிட்டேன். மேலும்  பார்வையில் விரிகிற காட்சிகள் நாவலுக்கு உள்ளேயும் வெளியேயும் டால்ஸ்டாயை பார்வைகொள்ளவைக்கின்றன. அதனால்தான் உரையாட விரும்புகிற நாவல் என்று குறிபிட்டேன்.

  டால்ஸ்டாய் பாத்திரம்.., நாவலில் ஒரு வகையில் புனைவு. இன்னொரு வகையில் நிஜம். புனைவாக வாசிக்கிறபோது நிஜம் ஊடுருவும். நிஜமாக நினைத்து வாசித்தால் புனைவில் முட்டிக்கொள்வோம். கதைக்குள் வருகிற டால்ஸ்டாய் முற்றிலும் நிஜமும் அல்ல. முற்றிலும் புனைவும் அல்ல. புனைவும் நிஜமும் மோதி உருவாகிற அந்த நேர மனிதன். படைப்புக்கு வெளியே இருக்கிற எழுத்தாளனை விட படைப்பு உருவாகிறபோது பிறக்கிற அந்தநேர படைப்பாளிதான் முக்கியம். அவன் அந்தப் படைப்புக்காகவே தன்னை ஒப்புக்கொடுத்தவன். தனது அனுபவத்தை ஒரு படைப்புலகின் வழியாக சந்திக்கிறவன். இந்த உழைப்பின் வழியாகத்தான் Writer Self என்பதே உருவாகிறது. இதை படைப்பில் பாத்திரங்களின் வழியாகவோ  அல்லது உள் ஒலிக்கிற குரலிலோ உணரலாம். கரம்சேவ் சகோதரர்கள் கதையில் கடவுளின் இருப்பை வாசகனோடு இணைந்து தேடுவது இந்த Writer Self தான். படைப்பின் வழியாகத் தன்னையும் தன் வழியாகப் படைப்பையும் கூட்டிச் செல்கிறது. நாவலின் அந்தக் கதையாடலுக்காகத் தோற்றம்கொள்கிற சுயம். படைப்பாளி இத்தகைய பிம்பத்தின் வழியாகத் தன்னையும் செதுக்கிக்கொள்கிறான். டால்ஸ்டாயின் இந்த பிம்பத்திலிருந்துதான் எஸ்.ராவின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவலை வாசிக்கிறோம். நாவல் அதனால்தான் நம்மிடம் அதிகமாக உரையாடுகிறது.

 வாழ்க்கையின் புரியாமையை, குழப்பத்தை தனது கதைகளின் வழியாக எழுத்தாளர் டால்ஸ்டாய் சந்திக்கிறார். இதே சூழலை ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவலில் வருகிற டால்ஸ்டாய் பாத்திரமும் சந்திக்கிறது. வாசிக்கிறபொழுது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது இந்த நாவலின் வசீகரம். இருவரும் பார்த்துக்கொள்வது என்பது டால்ஸ்டாயின் ஒட்டுமொத்த படைப்புலகமும், ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவலில் வருகிற படைப்புலகமும் சந்தித்துக்கொள்வது. இதுதான் நாவல் தருகிற புதிய அனுபவம். டால்ஸ்டாயின் பாத்திரங்கள் வாசிப்பில் கூடவே நமக்குள் வருவது இந்த புத்தகத்தைப் பல்வேறு மடிப்புகளாக்கிவிடுகிறது. நமக்குள் அர்த்தமாகியிருக்கிற மனிதர் நாவலுக்குள் ஒரு புனைவாக வந்து போகிற சாத்தியமே இல்லை. மரமும் மர நிழலும் சேர்ந்தே இருக்கிறது. இதை இந்த நாவலின் பல இடங்கள் உறுதிசெய்கின்றன.

 டால்ஸ்டாயிக்கு அவரது கள்ள உறவில் பிறந்த பிள்ளை ஒருவன் இருக்கிறான் என்கிற உண்மைமீது நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மண்ணில் அவர் வாழ்ந்த இடங்கள்தான் கதையின் களம்.  நம்பகத்தன்மைக்காக நிஜமான சில நிகழ்வுகளும் கலந்துள்ளன. ஆனால் பெரும்பாலான நிகழ்வுகள் எழுத்தாளரின் புனைவில் இருக்கிறது. டால்ஸ்டாய் என்ற ஒரு தந்தைக்கும் அவரது கள்ள உறவில் பிறந்த மகனுக்குமான வாழ்க்கை. பண்ணையில் உள்ள அக்ஸின்யா என்ற பெண்மீது அந்த வயதில் ஏற்பட்ட ஒரு காதலால் அல்லது ஈர்ப்பால் பிறந்தவன் திமோஃபி. பண்ணையிலேயே இருக்கிற இவர்களை அறிந்திருக்கிற மனைவி சோபியா, பிள்ளைகள். இவர்களின் இருப்பை விரும்பாத மனைவி. தந்தையை அறிந்தபின்பும் உரிமைகொண்டாட முடியாத இருப்பின்மீதான கோபம்தான் கதை. பெண்ணுக்கு உரிய இடம் கிடைக்காத கலாச்சாரப் பின்னணியும் கூடவே வருகிறது.

 நாவலை வாசிக்கும்போது நாவல்களில் டால்ஸ்டாய் முன் வைத்து உரையாடிய சில சம்பவங்களும் வருகின்றன. அவர்மீது எழுத்தின் வழியாகக் கட்டமைத்துக்கொண்ட படைப்பாளியின் பிம்பமும் அதிர்கின்றது. வாசகன் நாவலுக்குள் வருகிற டால்ஸ்டாயியை வெறும் பாத்திரமாகப் பார்க்க முடியாது. ஒரு படைப்பாளியாக அறிமுகமான இடத்திலிருந்தும் பார்க்கத் தூண்டும். இந்த வகையான நெருக்கடியை நாவலாசிரியர் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயம். இந்த நெருக்கடி தமிழ் படைப்பாளிகளுக்கு முன் நிகழாதது. டால்ஸ்டாய் என்ற படைப்பாளிமீதான பிம்பம்… கூடவே வாழ்க்கையைச் சந்திக்கிற டால்ஸ்டாய். இருவருக்கும் இருக்கிற முரண்களை நாவல் தருகிற அனுபவமாக ஏற்க வேண்டும். எஸ்.ராவிற்கேயான ரஷ்ய இலக்கியங்களின் பயிற்சி, டால்ஸ்டாயின் வாழ்தல் குறித்த அடிப்படையான புரிதல், பாத்திரங்களை முழுதாக உள்வாங்கிய வாசிப்பு அனுபவம். இவ்வளவும் இந்தச் சிறிய நாவலில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. வாழ்க்கைத் திணிக்கிற அனுபவங்களை பொது வெளியில் சந்திப்பதுதானே எழுத்து. இதையே தனது நாவலுக்கான தளமாக ஆக்கிக்கொள்கிறார் எஸ்.ரா.

நாவலின் 12 வது அத்தியாயம் வாசிப்பில் முக்கியமானதாகப்பட்டது. எஸ் ராவின் நாவலுக்கு அதிகமான பங்களிப்பு இந்தப் பகுதியில் இருப்பதாக உணர்கிறேன்.  அக்ஸின்யாவின் நினைவுகள் என்று எழுதப்பட்ட பகுதி. ஒரு சிறுமியாக, வளர் இளம் பெண்ணாக அவளுக்குள் எவ்வளவு ஆசைகள். எல்லாமும் பிறகான வாழ்க்கையில் அழிந்துபோகின்றன. இது மனதை உறுத்தாதா? இந்த உறுத்தலை டால்ஸ்டாய் போன்ற கருணைமிக்க மனிதரால் தாங்க முடியுமா? ஆனாலும் வாழ்க்கையில் அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதன் வெளிப்பாடுதான் அவரது நாவலில் வருகின்ற பெண்கள். அன்னா கரினீனா மட்டுமல்ல அவரது பெண் பாத்திரங்கள் பலவும் நினைவில் வருகிறார்கள்.

 வாசிக்கிற ஒவ்வொரு வாசகனுக்கும் இதில் அவர் அவர்களுக்கான பிரதி ஒன்று காத்திருக்கிறது. இந்தப் பிரதிகளைத் தொகுத்தால் படைப்பு, படைப்பாளி குறித்த புதிய உரையாடலைக் கேட்க முடியும். இதில் கிடைக்கும் எந்தப் பிரதியும் நாவலின் கதையாடலை மட்டும் முன் வைத்து உரையாடுவதில்லை. இந்த நாவலின் கதையாடல் நாவலுக்கு வெளியேயும் இருக்கிறது. அந்த வெளி டால்ஸ்டாயின் படைப்புகளின் வெளி. டால்ஸ்டாயின் படைப்புலகங்கள் சங்கமிக்கிற இடமாகிறது ‘மண்டியிடுங்கள் தந்தையே’. இதிலிருக்கும் கதை விரிந்தபடியிருக்கிறது. இதுவும் நாவலில் இருக்கிற புதுமை. டால்ஸ்டாயின் ஒவ்வொரு நகர்தலிலும் வாசகன் அவரை அவரது பாத்திரங்களின் வழியாகவே பின் தொடர்கிறான். நமக்கு தோன்றுகிறது  நடைமுறை வாழ்க்கையில் சந்திக்க முடியாத இருப்பின் வலியை, மன அவஸ்தையை கதைசொல்லி கடக்க முயல்கிறார் என்று. இந்த இடத்தில் பாரதியின் நினைவு வருகிறது. பாரதியின் எழுத்திலிருந்த வீரியத்தை, சக்தியை அவரது வாழ்க்கையில் பார்க்க முடிவதில்லை. இது முரணாகத் தோன்றினாலும் சில நேரங்களில் இது கள எதார்த்தம்.

 டால்ஸ்டாய் அவர் விரும்பிய வாழ்க்கையை வாழ முடியவில்லை. இந்தத் துயரத்திலிருந்து கடைசிவரை விடுபடவேயில்லை. எஸ்.ரா இந்த இந்த இடங்களை நாவலில் கவனமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.  டால்ஸ்டாய் தனது வாழ்தலில் எல்லா முயற்சிகளையும் செய்து பார்க்கிறார். ஆனால் அவர் நினைத்ததுபோல எதையும் செய்து முடிக்கவில்லை. ஞானியாய் கருணைபொங்க சுற்றியிருந்த மனிதர்களைப் பார்க்கிறார். பண்ணையிலிருக்கும் பிள்ளைகளுக்கு கல்வியைக்கொடுக்க முயல்கிறார். அரசு தலையிடுகிறது. நிலத்தை மக்களிடமே தர முயல்கிறார். பஞ்சகாலத்தில் தனது இருப்பிலிருந்து தாணியங்களை, பிற உதவிகளைத் தருகிறார். அரசாங்கம் சந்தேகப்படுகிறது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவரது மனித மனம் அவஸ்தையிலேயே இருக்கிறது. மீள முடியாத மனதை எழுதியே மீட்க முயல்கிறார். எழுத்தில் அவர் உருவாக்கிய பாத்திரங்கள் சில ஆயிரம் இருக்கலாம். எல்லாமும் வாழ்வின் சாகரத்தைக் கடந்துபோக அவர் பயன்படுத்திய தோணிகளே.

 நாவலில் ஓல்கா என்ற பெண் வருகிறாள். திமோஃபியை விரும்பி திருமணம் செய்துகொள்கிறாள். அவளுக்கு கிரிபோ என்ற மகன் இருக்கிறான். கிரிபோவைத் தன் மகன்போல பாவித்து வளர்க்கிறான். ஆனால் திமோஃபியின் வாழ்வில் சிறிது வெளிச்சமாக ஓல்காவும் கிரிபோவும் வந்து போகிறார்கள். ஓல்கா, கிரிபோ இருவரும் மடிந்து திமோஃபி கைவிடப்படுகிறான். அக்ஸின்யாவின் பெற்றோர்கள் அவளது இளமையிலேயே இறந்துவிடுகிறார்கள். அக்ஸின்யாவின் இறப்பில்தான் நாவலே தொடங்குகிறது. டால்ஸ்டாயின் மனைவி தனது இளமையிலிருந்த குதூகலமான வாழ்க்கையைத் திருமணத்திற்குபின் வாழவே இல்லை. துக்கமே எட்டிப் பார்க்காத டிமிட்ரியும் இடையில் இறந்துவிடுகிறான். டால்ஸ்டாயின் அம்மா பற்றி அவரது அண்ணன் நிகோலாய்…‘அப்பாவின் அதிகாரமே அம்மாவை நோயாளியாக்கியது. அவள் மரணத்திற்கு அப்பா முக்கியக் காரணம்’ என்கிறார். நாவலில் இது ஏன் நிகழ்கிறது? நாவலில் ஒருவர்கூட சந்தோசமாக இல்லை. மகிழ்ச்சியான தருணங்கள் யாவும் குறைவான கால எல்லையில் முடிந்துவிடுகின்றன.  வாழ்வின் புரியாமை, குழப்பத்தை டால்ஸ்டாய் தனது எழுத்தில் எதிர்கொண்டது போலவே எஸ்.ராவின் நாவலும் இருக்கிறது. டால்ஸ்டாயை புரிந்துகொள்வதற்கு அவரது படைப்பை உணர்ந்துகொள்வதற்காக எழுதப்பட்ட நாவலாகத் தோன்றுகிறது. மாபெரும் படைப்பாளியை அவரது எழுத்தை அறிந்துகொள்வதான நாவலாகவும் உணர்கிறோம்.  

 நாவலின் இறுதியில் அக்ஸின்யாவின் கல்லறையில் இத்தனை காலம் மனதில் பாதுகாத்து வைத்திருந்த பூக்களைத் தூவி நகர்கிறார். திமோஃபி அதைப் பார்ப்பது டால்ஸ்டாயிக்கு எஸ் ராவின் பங்களிப்பு. டால்ஸ்டாயின் ஒவ்வொரு நகர்தலிலும் வாசகன் அவரது படைப்புலகையும் சேர்த்தே பார்க்கத் தூண்டுகிற எழுத்து மொழி நாவலில் இருக்கிறது. அது டால்ஸ்டாயின் கருணை மனத்தைக் காப்பாற்றிவிடுகிறது.  இது நாவலில் உள்ள எழுத்தின் வெற்றி. 

****

0Shares
0