உறக்கத்தின் குகையில் யார் வசிக்கிறார்கள்

புதிய குறுங்கதை

மருத்துவமனையின் கட்டிலில் அமர்ந்திருந்த அந்தச் சிறுமி கேட்டாள்

“டாக்டர். உறக்கத்தின் குகையில் யார் வசிக்கிறார்கள். “

என்ன கேள்வியிது. பன்னிரண்டு வயது சிறுமியால் எப்படி இவ்வாறு யோசிக்க முடிகிறது என்ற வியப்புடன் டாக்டர் அவளிடம் திரும்பக் கேட்டார்

“எனக்குத் தெரியவில்லை. உறக்கத்திற்குச் சொந்தமாக வீடு இருக்குமா என்ன“

அவள் அதை மறுப்பது போலச் சொன்னாள்

“உறக்கத்தின் இருப்பிடம் வீடில்லை. அது ஒரு குகை. உறக்கத்தின் வயதை நாம் கண்டறிய முடியாது. சூரியன் வெளிச்சத்தைப் பரவவிடுவது போல உறக்கம் தனது ஈரத்தால் நம்மை அணைத்துக் கொள்கிறது. “

“நீ கவிதையைப் போலப் பேசுகிறாய். உனக்கு எதற்காக இந்தச் சந்தேகம் வந்தது“

“எங்கள் பள்ளியில் ஒரு பாடலை படித்திருக்கிறோம். அதில் பகலில் உறக்கம் தனது வீட்டிற்குத் திரும்பிப் போய்விடும் என்று சொல்லியிருந்தார்கள். அது உண்மையா டாக்டர். “

“நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பகலில் உறங்குகிறவர்கள் இருக்கிறார்களே“

“அது வேறு தூக்கம். இரவில் வருவது வேறு. எனக்கு என்னவோ உறக்கத்தின் வீட்டில் அதன் மகனோ மகளோ இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. உறக்கம் என்பது ஒரு அன்னை. “

அவளது அழகான கற்பனையை ரசித்தபடியே டாக்டர் சொன்னார்

“உறக்கத்தின் மகள் எப்போதும் உறங்கிக் கொண்டேயிருப்பாளா“

“இல்லை. உறங்கவே மாட்டாள். உறக்கம் என்பது விநோதமான திரவம். தூக்கத்தில் நம் உடல் படகாகிவிடுகிறது. அது செல்லும் திசையை நாம் கணிக்க முடியாது. உறக்கம் எப்போதும் கால்பாதம் வழியாகத் தான் உடலிற்குள் நுழைகிறது. உங்களுக்குத் தெரியும் தானே“

அவளது பேச்சில் மயங்கியபடியே கேட்டார்

“உனக்கு நன்றாகத் தூக்கம் வருகிறதா“

“பாறையில் வெயில் அடிப்பது போல வெளியே உறங்குவது போலிருக்கிறேன். உள்ளே உறங்கவேயில்லை. “

“அதற்குக் காரணம் உனது நினைவுகள். அது மெல்ல வடிந்துவிடும். பின்பு உன்னால் ஆழ்ந்து தூங்க முடியும். நலமாகி விடுவாய்“

“ஜன்னலுக்குப் பின்புறம் நின்று கொண்டு தெருவை வேடிக்கை பார்க்கும் சிறுமியைப் போலத் தூக்கம் என்னை விட்டு விலகி நிற்கிறது. நான் அதன் கண்களை, கைகளைப் பார்க்கிறேன். ஆனால் என்னை நெருங்கிவரவில்லை“

“நீ நிறைய யோசிக்கிறாய். கற்பனை செய்கிறாய். அது குழப்பத்தை அதிகமாக்கிவிடும்“

அவள் சிரித்தாள். பின்பு கைகளால் தலையைக் கோதியபடியே சொன்னாள்

“உறக்கத்திற்கும் பசியிருக்கிறது. அது நம் நினைவுகளைச் சாப்பிட்டுக் கொள்கிறது“

டாக்டரும் அதைக் கேட்டுச் சிரித்தார். பின்பு அவளிடம் சொன்னார்

“உன்னோடு பேசிக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. ஆனால் எனக்கு நேரமில்லை“.

உடல் முழுவதும் காயங்களும் சிக்கு பிடித்த தலையும் சிவந்த கண்களும் கொண்ட அந்தச் சிறுமி அந்தத் தேசத்திற்கு அகதியாக வந்திருந்தாள். அகதிகளை ரகசியமாக ஏற்றிவரும் கப்பல் ஒன்றில் ஒளிந்துவந்த அவளுக்கு ஆறு நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் அடித்தது. கண்களைத் திறக்கவேயில்லை. ஒரு நாள் அவளது உடல் விறைத்துப் போனது. அவள் இறந்துவிட்டதாக நினைத்துக் கடலில் வீசினார்கள். ஆனால் அவள் பிழைத்துக் கொண்டாள். எத்தனை இரவுபகல்கள் கடலில் மிதந்தாள் என்று தெரியவில்லை. ஆனால் மீனவன் ஒருவனால் காப்பாற்றப்பட்ட போது அவள் நினைவிழந்து போயிருந்தாள். அவளைக் கடலோர காவல்படையினர் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். நினைவு மீண்ட போதும் அவள் கடலில் மிதப்பது போலவே உணர்ந்தாள். மருத்துவர்கள் அவளைக் குணப்படுத்தப் போராடினார்கள். பின்பு அவளது தாய்மொழியில் உரையாடத் தெரிந்த மருத்துவரை சிகிச்சை செய்ய அழைத்து வந்தார்கள். அவள் வேகமாகக் குணமாகி வரத்துவங்கினாள்.

அதன் பிறகான நாட்களில் அவளது கவித்துவமான பேச்சு வயதை மீறியதாக இருந்தது. சில சமயம் அவள் தனது தலையணையோடு உரையாடினாள். சில நேரம் மருத்துவமனை சுவர்களுடன் பேசினாள்.

சில நாட்களுக்குப் பின்பு மருத்துவர் அவளுக்கு ஒரு நோட்டும் பேனாவும் கொண்டு வந்து கொடுத்தபடியே சொன்னார்

“எழுத துவங்கினால் நீயே உறக்கத்தின் குகையில் யார் வசிக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடுவாய். “

அவள் ஆசையாக அந்த நோட்டை வாங்கிக் கொண்டாள். அதன்பிறகு அவள் மருத்துவரோடோ, தலையணையுடனோ பேசவில்லை. மௌனமானாள். மிகவும் அமைதியாகிவிட்டாளாக மாறினாள். அவளது நோட்டில் நிறைய எழுதியிருந்தாள். அதை யாருக்கும் படிக்கத் தரவேயில்லை. பின்பு ஒரு நாள் அவள் குணமடைந்து முகாம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அன்று டாக்டரிடம் சொன்னாள்

“உறக்கம் ஒரு ஓவியன் டாக்டர். அது நம் உடலில் அற்புதங்களை வரைந்துவிட்டுப் போகிறது. உறக்கத்தின் குகையில் யாருமேயில்லை. அது எப்போதும் தனியாகவே இருக்கிறது. “

அவளது பேச்சைப் போலவே நடந்து செல்லும் அழகும் தனித்துவமாக இருந்தது. டாக்டர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

0Shares
0