உறவும் நட்பும்

கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த்-ன் ‘அழிந்தபிறகு‘ நாவலில் வரும் யசவந்தராயர் மறக்கமுடியாத கதாபாத்திரம். தற்செயலாக அவரை ரயில் பயணத்தில் சந்திக்கும் கதைசொல்லி பின்பு மும்பையில் அவரைத்தேடிச் சென்று நட்பு கொள்வது. அவரது மரணத்திற்குப் பிறகு அவரது ஆசைகளை நிறைவேற்ற முனைவதும் நாவலில் மிகசிறப்பாக எழுதப்பட்டுள்ளது

இந்த நாவலில் வரும் கதைசொல்லி பயணத்தை விரும்புகிறவன். நம்முடைய வாழ்க்கையே ஒரு ரயில் பயணம் தான் என்கிறான். நமக்கான இடம் கிடைக்காவிட்டால் பயணத்தில் நின்று கொண்டே பயணிப்பது போன்ற நிலை வாழ்க்கையிலும் ஏற்படவே செய்கிறது, நம்மோடு பயணிக்கும் எல்லோருடனும் நாம் நட்பாகப் பழகுவதில்லை. சிலர் இந்தப் பயணம் எப்போது முடியுமோ என்று நினைக்கிறார்கள். சிலர் இந்தப் பயணம் முடியவே கூடாது என ஆசைப்படுகிறார்கள் என்கிறான்

யசவந்தராயர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ரயில் பயணத்தில் பழக்கமான ஒருவரை நம்பி தனது வாழ்நாள் சேமிப்பை ஒப்படைக்கிறார். தனது காலத்திற்குப் பின்பு தான் செய்து வரும் உதவிகள் நின்றுவிடக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறார்.

யசவந்தரின் தந்தியைக் கண்டு மருத்துவமனைக்குச் செல்பவன் அவரது இறந்த உடலைத் தான் காணுகிறான். அவரது இறுதிக்காரியங்களை அவனே மேற்கொள்கிறான். அத்தனை உறவுகளை விடுத்து தனக்கு ஏன் தந்தி கொடுத்து வரச்செய்தார் என்று வியப்புடன் யோசிக்கிறான்.

வாழ்க்கையில் இப்படிச் சில நேரம் யாருக்கோ நாம் மிக முக்கிய மனிதராகிவிடுகிறோம். அதை நாமே உணருவதில்லை. யசவந்தர் தனது குடும்ப உறவுகளை விடவும் நட்பை முதன்மையாக நினைக்கிறார். நம்புகிறார். அவர்களுக்குள் இருந்தது கடித உறவு மட்டுமே. சிலர் மீது நம்பிக்கை கொள்வதற்கு ஆண்டுகள் தேவையற்றவை.

தான் செய்து வரும் உதவிகளுக்கான காரணம் பற்றி யசவந்தர் எதுவும் சொல்வதில்லை. ஆனால் அந்த உதவிகள் தன் காலத்திற்குப் பின்பும் அப்படியே தொடரவேண்டும் என்று விரும்புகிறார். இப்படியான மனிதர்களைக் காணுவது இன்று அபூர்வம்.

யசவந்தராயர் வீட்டில் ஒரு வேலைக்காரன் இருக்கிறான். நெருக்கடியான நேரத்தில் அவனுக்கு உதவி செய்து தனது வீட்டிலே அவனுக்கு வேலை கொடுத்து உணவு கொடுத்துச் சொந்தமகனைப் போல நடத்துகிறார். ஆனால் அவன் யசுவந்தரை ஏமாற்றவே விரும்புகிறான். மரியாதையின்றி நடத்துகிறான். அவனைத் துரத்திவிட்டுவிட வேண்டியது தானே கதைசொல்லி கேட்கும் போது அதற்கு மனம் வரவில்லை. இருந்துவிட்டுப் போகட்டும் என்கிறார். தவறுகளை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் அவரது மனது வியப்பளிக்கிறது.

யசுவந்தரின் வாழ்க்கையில் நடந்த, அவர் சொல்லவிரும்பாத நிகழ்வுகளை வாசகர்கள் கதையின் போக்கில் யூகித்துக் கொள்ள முடிகிறது. சாபம் என்பது சில குடும்பங்களின் மீது விழுந்த இடி தான் போலும். ஒருவரது வாழ்க்கையில் நாம் அறிந்திருப்பது கொஞ்சமே. எவராலும் யாருடைய வாழ்க்கையினையும் முழுமையாக அறிந்திருக்க முடியாது. அதற்கு ஒரு உதாரணம் யசுவந்தர்.

யசவந்தராயர் தன்னிடம் ஒப்படைத்த விஷயத்தை முறையாகச் செய்ய வேண்டும் என்று கதை சொல்லி விரும்புகிறார். ஒரு மனிதனின் இறப்போடு அவனுடன் இருந்த நட்பு முடிந்துவிடுவதில்லை. இவர்களுக்குள் நட்பு தொடர்கிறது. உண்மையில் யசவந்தராயர் மரணத்திற்குப் பிறகே அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்கிறான். ஆழ்ந்த நட்பு கொள்கிறான்.

சிவராம காரந்த் இந்த நாவலில் இரண்டு வகையான நட்பினை விவரிக்கிறார். ஒன்று பள்ளி வயதில் உருவாகும் நட்பு. அந்த வயதில் நண்பர்களே உலகமாக இருந்தது. அவர்களுடன் ஊர்சுற்றவும் சேர்ந்து விளையாடவும் கதை பேசவும் மகிழ்ந்திருக்கவுமே ஆசையிருந்தது. ஆனால் இளமைப் பருவம் வந்தபிறகு பள்ளி நட்பு மறைந்துபோகிறது. எத்தனை பேர் பள்ளி நண்பர்களுடன் வாழ்நாள் முழுவதும் நட்போடு இருக்கிறார்கள்.

பின்பு வாழ்க்கை பயணத்தில் புதிய நண்பர்கள் உருவாகிறார்கள். சிலர் மிகவும் நெருக்கமாகிறார்கள். ஆனால் அவர்களும் காலவேகத்தில் கடந்து போய்விடுகிறார்கள். மனதில் தங்கியிருப்பது ஒரு சிலர் மட்டும் தான்.

முதுமையில் தனித்து வாழும் யசவந்தராயர் தனது ஓவியத்தின் வழியே தனது உறவுகளின் இயல்பைக் குறியீடாக வரைந்திருக்கிறார். உலகை நேரடியாக மதிப்பீடு செய்வது போல உறவுகளை மதிப்பீடு செய்ய முடியாது தானே. கலையின் வழியே அதைச் சாத்தியமாக்குகிறார்.

முதுமையில் ஒத்த வயதுடையவர்களுடன் அதிகத் தொடர்பு ஏற்படுவதில்லை என்றொரு வரியை காரந்த் எழுதியிருக்கிறார். முற்றிலும் உண்மையது.

வாழ்வில் ஒரு மனிதன் அடையவேண்டியது என்ன. அதில் எவற்றை அடைந்துவிட்டிருக்கிறான். எதை அடைய முடியவில்லை. ஒருவன் மறைந்துவிட்டால் இந்த உலகிற்கோ, குடும்பத்திற்கோ என்ன இழப்பு ஏற்படுகிறது என்ற கேள்விகளை இந்த நாவல் எழுப்புகிறது. இதற்கான விடையாக யசவந்தராயரின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது.

மறதி நிறைந்த இந்த வாழ்க்கை இனிமையானது. கசப்பை மறக்க முடிந்தால் மட்டுமே வாழ்க்கை வாழக்கூடியதாக இருக்கும் என்கிறார் காரந்த்

கன்னடக்குடும்பம் ஒன்றின் கதையின் ஊடாகக் காலம் காலமாக உறவுகளுக்குள் நடக்கும் பகையை, வெறுப்பை, புறக்கணிப்பை நாவல் பேசுகிறது. இந்த கசடுகளிலிருந்து யசவந்த விடுபட்டிருக்கிறார். உயர்வான மனிதராக நடந்து கொள்கிறார். நம்மையும்இந்த நாவல் யசவந்த போலவே நடக்க தூண்டுகிறது

••

0Shares
0