“உறுபசி” – நமக்குள் இருக்கும் தீமை

முனைவர். வ. இரமணன்

தமிழ் நாடு தடய அறிவியல் துறை.

பிரபஞ்சத்தின் சிதறம் (entropy) எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்கிறது வெப்பவியக்கவியலின் இரண்டாம் விதி. அதாவது ஒழுங்கின்மை அல்லது சிதறிக்கிடப்பதுதான் பிரபஞ்சத்தின் இயல்பு. எந்த ஒரு ஒழுக்கமும் இயற்கைக்கு எதிரானது. என்று ஆதிமனிதன் வாழத்தலைப்பட்டானோ அன்றே இயற்கையை எதிர்க்கத்துணிந்து விட்டான். இன்றுவரை மனிதன் இயற்கையை எதிர்த்துக்கொண்டேதான் இருக்கிறான்.

நாம் நமக்கென்று சட்டதிட்டங்கள் வகுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவை இல்லையென்றால் மனிதன் வாழ்வது கடினமாகிவிடும். ஒரு கட்டற்ற வாழ்க்கையை மனிதன் மேற்கொள்ள நினைத்தால் சமூகம் மதிக்கும்படி அவனால் வாழமுடியாது. சமூகம் அவனைத் துடைத்தெறிந்துவிடும். அவ்வாறு துடைத்தெறியப்பட்ட ஒருவனின் அவலம்தான் “உறுபசி”.

சம்பத் என்ற மனிதனை நாம் கதைநெடுக ஒரு கட்டற்றவனாகவே காண்கிறோம். பறவைகள் போல, விலங்குகள் போல. அவன் வெளிகளைப் பிரிக்கும் சுவர்களை மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே கொடுமையானது என்கிறான். ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஒருவன் வேலைக்குச்சென்று சம்பாதிக்க வேண்டுமென்பது எவ்வளவு பெரிய அநீதி என்கிறான். இவை கட்டற்ற விலங்குகளின் குணங்கள். விலங்குகளைப்போல அவனும் கால்போன போக்கில் சுற்றித்திரிகிறான். அடுத்த நிமிடத்தைப் பற்றிச் சிந்திக்காதவனாக, நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவனாக. உயிர்களின் அபரிமிதமான ஆதாரசக்தியான காமத்தால் அலைக்கழிக்கப்படுகிறான். அதனை மனவடக்கமெனும் மத்தகம் கொண்டு அடக்கத்தெரியாதவனாக அல்லலுறுகிறான்.

எஸ்.ரா அவர்கள் சம்பத்தின் வாழ்க்கையை ஒரு தீக்குச்சியின் வாழ்க்கையுடன் ஒப்பிடுகிறார் போலும். அதனாலேயே அவனைத் தீப்பெட்டிகளின்மீது விருப்பம் கொண்டவனாகச் சித்தரிக்கிறார் என எண்ணுகிறேன். எப்படித் தீக்குச்சியானது தொடக்கத்தில் அதிபிரகாசமாக எரிகிறதோ அப்படியே சம்பத்தின் இளமைக்காலம் அவனை ஒரு சிந்தனையாளனாக, போராளியாக, அஞ்சானாக, பெரும் அரசியல் எதிர்காலம் வாய்க்கப்பெறக்கூடிய ஒரு மேடைப்பேச்சாளனாக, புரட்சியாளனாகப் பிரகாசமாக அடையாளம் காட்டுகிறது. பிரகாசமாக எரிந்த தீக்குச்சியின் ஒளி அதன் தலையில் தரித்திருந்த பாஸ்பரஸ் ஆவியானதும் சட்டென்று வலுவிழப்பதைப்போல ஒரே நாளில் அவனது இயல்பான கட்டற்ற தன்மையால் அவனது அரசியல் எதிர்காலம் அஸ்தமிக்கிறது. பிறகு அவனது வாழ்க்கை, தீக்குச்சியின் ஆதரவில் இயல்பாக எரியும் ‘சவலைத்தீ’யானது, வீசும் காற்றுக்கு அஞ்சி அதிர்ச்சிக்குள்ளாகி இப்போது அணையுமோ எப்போது அணையுமோ என்று தழலாட்டம் ஆடித்தத்தளிப்பதைப்போலாகிறது.

நான் கவனித்தவரை, மகிழ்ச்சியளிக்கக்கூடிய புத்தகங்களை நாடும் அல்லது வாழ்க்கையின் இயல்பான சலிப்புகளிலிருந்து சிறிது ஓய்வுபெற புத்தகங்களில் அடைக்கலம் புகுந்து மகிழ்ச்சியை நாடும் வாசகர்களுக்கு “உறுபசி” ஏமாற்றம் அளித்துள்ளது. மாறாக இலக்கியத்தேடல் கொண்ட வாசகர்கள் உறுபசியைப் புரிந்துகொள்கிறார்கள். எஸ்.ரா அவர்களின் நேர்மையான எழுத்துக்கள் சிலசமயங்களில் வாசகர்களை அசௌகர்யமாக்குகின்றன. மருத்துவமனைச் சூழலிலும் ஜெயந்தியின் விலகிய மாராப்பைப் பார்த்துக்கொண்டிருந்த அழகரும், இறந்த கணவனுக்காக ஈரப்புடவையுடன் நீர்மாலை சுமந்துவரும் ஜெயந்தியை விழிகளால் பருகிக்கொண்டிருந்த ஆண்களும், மாரியப்பனின் பால்யகால ஓரினச்சேர்க்கை சம்பவமும், சம்பத்தின் காமவேட்கையும், இன்னபிறவும் வாசகனை அசௌகர்யமாக்கியிருக்கலாம். ஒருவேளை அந்நிகழ்வுகளில் வாசகன் அவனையேகூடப் பார்த்திருக்கலாம். அந்தக்குற்றவுணர்ச்சி அவனை அசௌகர்யமாக்கியிருக்கலாம்.

சம்பத்தின் நடத்தைக் கோணல்களையும் தாண்டி, அவன் நண்பர்களும், ஜெயந்தியும், யாழினியும் அவனை விரும்புகிறார்கள். நாம் எப்போதும் இயற்கையின் தன்னியல்பையும், கட்டிலா ஆற்றலையும், இயக்கத்தையும் கண்டு வியக்கிறோம். அதேபோன்ற இயல்புகள் கொண்ட சம்பத்தையும் அவன் நண்பர்கள் பல கருத்து வேறுபாடுகளையும், கசப்புகளையும் தாண்டி விரும்புகிறார்கள். அவனாக வாழமுடியவில்லையே என்ற உள்மன ஏக்கம் அவர்களுக்குள் இருந்திருக்கலாம்.

கட்டற்ற தன்மை கொண்ட சம்பத்தால் கட்டுப்பாடுகளே நியதியான இச்சமூகத்தில் தன்னைப்பொருத்திக்கொள்ள இயலவில்லை. ஒரு மேடைப்பேச்சாளனாக, அச்சக ஊழியனாக, விற்பனைப் பிரதிநிதியாக, பத்திரிகையில் பிழை திருத்துபவனாக, பூச்செடிகள் விற்பவனாக அவன் இச்சமூகத்தில் பொருந்திவாழ முயற்சிக்கிறான். அவனுடைய கட்டற்ற தன்மையாலும், இயற்கையான அறஉணர்வினாலும் அவனால் அவ்வேலைகளில் ஊன்றமுடியவில்லை. ஒவ்வொரு இடத்திலிருந்தும் பெயர்ந்துகொண்டே இருக்கிறான்.

அவனுடைய இயற்கையான கோணல் நடத்தையினால் சிறுவயதில் அவனது தங்கை சித்ராவின் மரணத்திற்கு அவனும் ஒரு காரனமாகிறான். அதுமுதல் குடும்பத்தினர் குறிப்பாக அவனது அக்கா அவனை வெறுக்கிறாள். அக்கா அவளது மகளுக்குச் சித்ரா என்று பெயர் சூட்டியிருப்பது தன் தங்கையிடம் அவளுக்குள்ள அன்பைக்காட்டுகிறது. தங்கையைத் தான் பார்த்துக்கொள்ளாமல் சம்பத்தின் பொறுப்பில் விட்டோமே என்ற குற்றஉணர்ச்சி கூடக் காரணமாக இருக்கலாம். சம்பத்தின் தந்தைக்கு இந்நிகழ்வுடன் சேர்ந்து அவனது பொறுப்பற்ற தன்மையும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அவனுக்கும், குடும்பத்தினருக்கும் நடுவில் ஒரு கட்புலனாகாத சுவர் எழுகிறது. அவன் தனிமைப்படுத்தப்படுகிறான். தங்கையின் மரணம் ஏற்படுத்திய குற்றஉணர்ச்சியும், குடும்பத்தினரின் புறக்கணிப்பும், தனிமையும், பாதுகாப்பின்மையும் சேர்ந்து அவனை முரடனாக்குகின்றன. எங்கும் அடிதடிகளில் இறங்குகிறான். தகப்பனிடம் அடிவாங்குகிறான். தகப்பனை அடிக்கிறான். மாமனிடமும், அக்காளிடமும் வசவு வாங்குகிறான். யாழினியால் இயல்பான வாழ்க்கைக்கு ஆகாதவனென நிராகரிக்கப்படுகிறான். தன் தோல்விகளையும், மனக்குமுறல்களையும் தனித்துக்கொள்வதற்காக ஜெயந்தியுடன் ஓயாமல் உறவில் ஈடுபடுகிறான். வாழ்க்கை முழுவதும் நிராகரிக்கப்பட்டு, துரத்தப்பட்டு, ஓடிக்களைத்து, மரணத்திற்கு விரும்பி, தீக்குச்சியின் கடைசி நொடித்துளிகள் போல் மங்கி ஒளியிழந்து கட்டுப்பாடுகளால் நிறைந்த இவ்வுலகை விட்டு கட்டற்ற வெளியுடன் கலக்கிறான்.

“நாமெல்லாம் பிராடுடா, சம்பத்தாண்டா வாழ்க்கைய உண்மையா வாழ்ந்தவன்” எனும் ராமதுரையின் வரிகள் யோசிக்க வைக்கின்றன. ஆம். உண்மையில் நாம் அனைவரும் நமக்குள் இருக்கும் தீமையை வெளியில் காட்டாமல் வேஷம் போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம், இச்சமுதாயத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டுவிடாமல் இருக்கும் பொருட்டு.

“அவன கொஞ்சம் பொறுத்துப்போயிருந்தா அவனும் வாழ்ந்துருப்பாண்டா” என்னும் ராமதுரையின் ஆதங்கம் அவனைச் சம்பத்தின் உண்மையான தோழனாக அடையாளம் காட்டுகிறது. சம்பத்தின்மீது எப்போதும் கோபப்பட முடியாத ஜெயந்தியின் பாத்திரவார்ப்பு விசித்திரமானது. இலக்கியத்தேவை கருதி நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியது நூல்தான் “உறுபசி”.

****

0Shares
0