இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ள Nomadland திரைப்படத்தைப் பார்த்தேன்

இந்தப் படம் சென்ற ஆண்டு வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்த படமாக விருது பெற்றுள்ளது. இந்த ஆண்டுக் கோல்டன் க்ளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஆஸ்கார் பரிசும் இந்தப் படத்திற்கு நிச்சயம் கிடைக்கக்கூடும்.
கடந்த இரண்டு வாரங்களாக ஆஸ்கார் போட்டிக்கான படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அதில் இதுவே மிகச்சிறந்த படம். சீன இயக்குநரான Chloé Zhao இதுவரை இரண்டே படங்களை இயக்கியுள்ளார். அவரது முதல் திரைப்படம் Songs My Brothers Taught Me விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது. அடுத்த படமான The Rider சிறந்த இயக்குநருக்கான Independent Spirit Award பெற்றிருக்கிறது.

இன்று Nomadland வழியாக ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் வியந்து பார்க்க வைத்திருக்கிறார். அதிலும் கோல்டன் க்ளோப் விருதுகளை இவர் வென்றபோது அமெரிக்கத் திரையுலகமே ஒன்று சேர்ந்து பாராட்டியது. இன்று அமெரிக்கச் சினிமா அமெரிக்கர்கள் கையில் இல்லை. சர்வதேச இயக்குநர்களே ஹாலிவுட்டின் புதிய சினிமாவை உருவாக்குகிறார்கள். கடந்த கால ஆஸ்கார் விருதுகளே இதற்குச் சாட்சி.
நாடோடி என்ற உடனே நம் மனதில் எழும் பொதுப்பிம்பம் ஆணாகும். ஆனால் நாடோடி வாழ்க்கையை வாழுவதற்கு ஆண் பெண் என்ற பால் பேதமில்லை என்பதையே நவீன வாழ்க்கை நிரூபிக்கிறது. பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் அமெரிக்காவின் பரபரப்பான அன்றாட உலகிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு அவரவர் விரும்பிய பாதையில் நாடோடியாக வாழும் மனிதர்களைக் கொண்டாடுகிறது இந்தப்படம்.
படத்தில் நாம் நவீன நாடோடிகளின் வாழ்க்கையை மட்டும் உணருவதில்லை. அமெரிக்காவின் விநோதமான நிலக்காட்சிகளை, பல்வேறு வகைப்பட்ட பண்பாடுகளை அறிந்து கொள்கிறோம். ரோடு மூவி எனப்படும் பயணத்தை முதன்மையாகக் கொண்ட படங்களில் இந்தப்படம் போல நிலவியலின் ஊடே நீண்ட பயணத்தை மேற்கொண்ட படம் எதுவும் சமீபமாக வெளியாகவில்லை.

ஒரு ஆவணப்படம் காணுவது போலவே கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மிக உண்மையாக, நெருக்கமாக நாம் காணுகிறோம். படத்தின் ஒளிப்பதிவு அபாரம். மிகச்சிறப்பான படத்தொகுப்பு.
நாடோடி வாழ்க்கையை வாழும் ஃபெர்ன் கதாபாத்திரத்தில் பிரான்சிஸ் மெக்டார்மண்ட் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் கதை ஜெசிகா ப்ரூடர் எழுதி 2017ல் வெளியான Nomadland: Surviving America in the Twenty-First Century என்ற கட்டுரைத்தொகுப்பினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது
அறுபது வயதான ஃபெர்ன் கணவரை இழந்தவர். அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள ஜிப்சம் தயாரிக்கும் ஆலை ஒன்றில் பணியாற்றியவர். 2011ல் அந்த ஆலை மூடப்பட்டதால் தனது வேலையை இழக்கிறார். தன் கைவசமிருந்த சேமிப்பினைக் கொண்டு ஒரு வேனை விலைக்கு வாங்கும் ஃபெர்ன் அதைத் தனது வீடாக மாற்றிக் கொண்டு நீண்ட பயணத்தைத் துவங்குகிறார். வேலை தேடிச் செல்வது போலத் துவங்கும் அந்தப் பயணம் உண்மையில் இலக்கற்றது. வழியில் அமேஸான் நிறுவனத்தின் விநியோகப் பிரிவில் தற்காலிகமாக வேலை செய்கிறாள்.
அங்கே உடன் பணியாற்றிய லிண்டாவோடு நட்பு கொள்கிறாள். ஒரு நாள் லிண்டா அரிசோனாவில் நடைபெறவுள்ள பாலைவன சந்திப்பைப் பார்வையிட ஃபெர்னை அழைக்கிறார், மெக்சிகோ எல்லையில் நடைபெறவுள்ள அந்தச் சந்திப்பினை பாப் வெல்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் நாடோடிகளுக்கான அமைப்பு ஒன்றினை நடத்தி வருகிறவர். அந்த அமைப்பு. நாடோடி வாழ்க்கையின் சுதந்திரத்தை முன்னெடுக்கிறது.

அந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளும் , ஃபெர்ன் தன்னைப் போல உலகமே வீடு என நினைத்துப் பயணிக்கும் சக நாடோடிகளைச் சந்தித்து எளிய வாழ்க்கையின் சிறப்புகளைக் கற்றுக் கொள்கிறாள். இருப்பதைக் கொண்டு வாழுவதற்கான அடிப்படை திறன்களைப் பெறுகிறாள்.
நீண்ட பயணம் அவளது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. நாடோடிகளுக்குள் உள்ள அற்புதமான நேசத்தையும் அன்பையும் உணர்ந்து கொள்கிறாள். பறவைகளைப் போலத் தான் விரும்பும் திசையில் அவர்கள் பயணிக்கிறார்கள். ஒரே மரத்தில் பறவைகள் ஒன்று கூடுவது போல வழியில் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள்.
ஒரு நாள் ஃபெர்னின் வேன் டயர் வெடித்துப் போகிறது. அருகிலுள்ள நகருக்குச் சென்று மெக்கானிக்கை அழைத்துவருவதற்காக ஸ்வாங்கி என்ற நாடோடியிடம் உதவி கேட்கிறாள். இது போன்ற வேலைகளை நாமே செய்யப் பழக வேண்டும் என அறிவுரை கூறும் ஸ்வாங்கி அவளுக்குத் தேவையான உதவிகள் செய்கிறாள். அவர்களுக்குள் நல்ல நட்பு உருவாகிறது. புற்றுநோய் பாதித்து மரணத்தை எதிர்கொள்ளும் நிலையிலிருந்த ஸ்வாங்கித் தான் மருத்துவமனை கட்டிலில் கிடந்து உயிர்விடுவதை விடவும் விரும்பிய சாலைகளில் சுற்றியலைந்து வாழ்க்கையைக் கடைசி நிமிஷம் வரை அனுபவிக்க இருப்பதாகச் சொல்கிறாள்.
பின்னர் ஃபெர்ன் பேட்லாண்ட்ஸ் தேசிய பூங்காவில் தற்காலிகப் பணியாளராக வேலை செய்கிறார் அங்கே டேவிட் என்பவரைச் சந்தித்து நட்பு கொள்கிறார். அவர் திடீரென உடல்நலமற்றுவிடவே மருத்துவமனையில் அவரை அனுமதித்துக் கூடவே இருந்து பணிவிடைகள் செய்கிறாள். அவர்களின் உறவு படத்தில் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் ஊடே கலிபோர்னியாவில் உள்ள தனது சகோதரியின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார். அது மறக்கமுடியாத காட்சி. ஃபெர்னிற்குத் தேவையான பணத்தை அவளது சகோதரி தருகிறாள். அவளிடமிருந்து விடைபெறும் ஃபெர்ன் டேவிட் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தேடிப் பயணிக்கிறார்.
டேவிட் வீட்டில் அவளை உற்சாகமாக வரவேற்கிறார்கள். அங்கேயே சில நாட்கள் தங்குகிறாள். டேவிட் அவள் நிரந்தரமாகத் தன்னோடு தங்கிவிடும்படி அவளை வற்புறுத்துகிறார். ஆனால் அவள் அங்கிருந்தும் விடைபெறுகிறாள்.
தனிமையை உணர்வது, புதிய நட்பைப் பெறுவது. கிடைக்கும் வேலையைக் கொண்டு அதில் வாழுவது. நண்பருக்காகப் பணிவிடைகள் செய்வது. தோழியின் இறப்பை உணருவது என இந்த நாடோடி வாழ்க்கை ஃபெர்னை முற்றிலும் மாற்றுகிறது.

நாடோடி சமூகத்தில் விடைபெறுவது இறுதியான விஷயமில்லை , காரணம் நாடோடிகள் எப்போதும் ஒருவரை ஒருவர் “சாலையில்” பார்ப்போம் என்று நம்புகிறார்கள். சாலை தான் அவர்களின் வசிப்பிடம். சாலையின் ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். நட்பினை புதுப்பித்துக் கொள்கிறார்கள். இணைந்து வாழுகிறார்கள்.
ஃபெர்ன் வழியாக அமெரிக்காவின் இன்னொரு முகத்தை இயக்குநர் அறிமுகம் செய்துவைக்கிறார். அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் வாகன நெருக்கடி மிகுந்தசாலைகளையும், கூட்டமான மின்சார ரயிலையும் கொண்ட பரபரப்பான வாழ்க்கையைப் பார்த்துப் பழகிய நமக்கு ஆளற்ற வெட்டவெளியும் பனிப்பிரதேசத்தின் இரவுகளும், இயற்கையின் விநோத தோற்றங்களாக விரியும் நிலவெளியும், வேனிற்குள்ளாகவே வாழும் எளிய வாழ்க்கையும் முற்றிலும் புதியதாக உள்ளன.
ஒரு காலத்தில் ஜிப்சிகள் இப்படித் தான் இசையும் நடனமும் எனக் கொண்டாட்டமான வாழ்க்கையை முன்னெடுத்தார்கள். ஆனால் இரண்டாம் உலகப்போரின் போது நாஜிகளால் அவர்கள் வேட்டையாடி கொல்லப்பட்டார்கள். அவர்களின் நாடோடி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்தப் படம் நவீன நாடோடிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது. இதில் ஒரு காட்சியில் ஃபெர்ன் ஒரு இளைஞனைச் சந்திக்கிறாள். உரையாடுகிறாள். அதில் வயது வேறுபாடின்றிச் சுதந்திரமான மனதோடு நாடோடிகள் பயணிப்பதை நாம் உணர முடிகிறது.
பனிச்சறுக்கு விளையாட்டு போலத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட பனிப்பிரதேசத்தில் மேலும் கீழுமாகச் சறுக்கிச் செல்வது போலவே கதை நகருகிறது. பயணம் எப்போதும் விசித்திரமான மனிதர்களை அடையாளப்படுத்தக் கூடியது. அதை இந்தப் படத்தில் நிறையவே காணுகிறோம்.
வீடு, குடும்பம், பொருள்தேடுவது அதிகாரம் செய்வது என்று உலகம் செல்லும் திசைக்கு எதிரான திசையில் செல்லும் வாழ்க்கைமுறையை இந்தப்படம் உண்மையாக விவரிக்கிறது. வீடற்றவர்களுக்கு உலகமே வீடு என்பதைப் படம் அழகாகச் சுட்டிக்காட்டுகிறது.

ஒரு வேனிற்குள்ளாகத் தனக்குத் தேவையான அத்தனையும் ஃபெர்ன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாள். நத்தை தன் கூட்டினை முதுகிலே கொண்டு போவது போன்ற வாழ்க்கையது.
அறுபது வயதான ஃபெர்ன் ஏன் இப்படி ஒரு இலக்கற்ற பயணத்தை மேற்கொள்கிறாள். அவள் தன் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைத் தேடிச் செல்கிறாள். அதைச் சாலையே அவளுக்கு உணர்த்துகிறது. நாம் அனைவரும் பயணிகளே. அவரவர் இடம்வந்தவுடன் பிரிந்து போய்விடுவோம். சாலையின் நினைவுகள் முடிவற்றவை. ஃபெர்ன் தன் சகோதரியின் வீட்டிலிருந்து விடைபெறுவது மிகச்சிறப்பான காட்சி. எல்லா உறவுகளையும் ஃபெர்ன் துண்டித்துக் கொள்கிறாள். இயற்கை தான் அவளது நிரந்தரத் துணைவன்.
ஒரு பெண் இயக்குநரால் மட்டுமே இத்தனை அழுத்தமான ஒரு பெண் கதாபாத்திரத்தை உருவாக்க இயலும். மனதிற்கு மிகவும் நெருக்கமான திரையனுபவத்தைத் தர இயலும். அந்த வகையில் Chloé Zhao ஆஸ்கார் வெல்வது தகுதியானதே.
**