உலகம் அறியாத காதல்.

ரோம் நகரிலுள்ள பழைய குடியிருப்பு ஒன்றில் மேல் மாடியில் வசிக்கிறாள் அன்டோனியெட்டா. அவள் ஆறு பிள்ளைகளின் தாய். அவளது கணவன் இமானுவேல் முசோலினியின் தீவிர விசுவாசி. கட்சி உறுப்பினர். 1930 களில் ரோமில் கட்டப்பட்ட மிகப் பெரிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு ஒன்றில் அவர்கள் வாழுகிறார்கள்.

ஒரு நாள் காலை அவள் படுக்கையிலிருந்து எழுந்து தனக்கான காபியைத் தயாரித்து அருந்திக் கொண்டு பிள்ளைகள் ஒவ்வொருவராக எழுப்பிவிடுகிறாள். படுக்கையிலிருந்த கணவனை எழுப்பி நேரமாகிவிட்டது என்று துரத்துகிறாள். அவளது காபியின் மிச்சத்தைக் கணவன் அருந்துகிறான்.

பிள்ளைகள் படுக்கையை விட்டு எழுந்து கொள்ள மறுக்கிறார்கள். கண்டித்து எழுப்பிவிடுகிறாள். அவசரமாகக் குளித்துப் புதிய ஆடைகள் அணிந்து கொள்கிறார்கள். கணவன் படுக்கை அறையிலே உடற்பயிற்சி செய்கிறான். இதற்குள் அனைவருக்கும் உணவு தயாரிக்கிறாள். சாப்பிட்டு முடித்து எச்சில் கையை அவளது உடையில் துடைக்கிறான் கணவன். அவர்கள் நகரில் நடைபெறவுள்ள பேரணியைக் காண்பதற்காகக் கிளம்புகிறார்கள்.

எல்லா நாட்களையும் போலவே அதுவும் ஒரு நாள் என்று தான் நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த நாள் மிக விசேசமானது என்பதை நாள் முடியும் போது தான் அன்டோனியெட்டா உணர்ந்து கொள்கிறாள். நாமும் உணருகிறோம்.

அன்டோனியெட்டாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமில்லை. வரலாற்றிலும் அன்று முக்கியமான நாள்.

1938 மே 6 ஆம் தேதி, ஹிட்லரும் அவரது மந்திரிகள் மற்றும் படைத்தலைவர்களான ஜோசப் கோயபல்ஸ் மற்றும் ஜோகிம் வான் ரிப்பன்ட்ரோப் உள்ளிட்டவர்கள் ரோம் வந்து அதிபர் பெனிட்டோ முசோலினியை சந்திக்கிறார்கள். மாபெரும் வரவேற்பு அளிக்கபடுகிறது.

நகரில் இத்தாலிய-ஜெர்மன் கூட்டணியின் பிரம்மாண்டமான பேரணி நடக்கிறது. ஹிட்லரும் முசோலினியும் கைகோர்த்துச் செல்வதை ரோம் நகரமே ஒன்று திரண்டு வேடிக்கை பார்க்கக் கூடுகிறது. நகரெங்கும் நாஜிக் கொடிகள். அலங்காரங்கள். ராணுவ வாகனங்கள். இந்த ராணுவ அணிவகுப்பினை பார்வையிடத் திரள் திரளாக மக்கள் கிளம்புகிறார்கள்.

அன்டோனியெட்டாவிற்கு அந்தக் கொண்டாட்டத்தில் விருப்பமில்லை. வீட்டுவேலைகளைச் செய்து முடிக்கவே அவளுக்கு நேரம் போதவில்லை. அவளது அழுக்கான அங்கியும் கலைந்த தலையும் அவள் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. பிள்ளைகள் சாப்பிட்டு மீதமாக்கிப் போன உணவைச் சாப்பிடுகிறாள். எச்சில் தட்டுகளைக் கழுவ எடுத்துப் போடுகிறாள். அவளிடம் உற்சாகமேயில்லை. சலிப்பும் அலுப்புமாக அவள் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்க்கிறாள். முசோலியின் தீவிர விசுவாசியான அவளது கணவன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஊர்வலத்தைக் காணச் செல்கிறான் கிளம்புகிறான்.

வீட்டில் தனித்திருக்கும் அவளுக்குப் புற உலகின் பரபரப்பு எதிலும் நாட்டமில்லை.

ஹிட்லரும் முசோலினியும் ஒன்று சேருவது வரலாற்றின் திருப்புமுனையாகக் கருதப்பட்டது. ஆகவே நகரமே விழாக்கோலம் கொண்டிருந்தது. இந்தப் பேரணியைக் காண ஒட்டுமொத்த குடியிருப்பும் போய்விட அவள் மட்டும் தனித்திருக்கிறாள். எங்கோ ரேடியோ ஒலிக்கிறது.

அன்டோனியெட்டா வளர்க்கும் மைனா கூண்டிற்குள்ளிருந்து சப்தமிடுகிறது. அந்த மைனாவிற்கு உணவு அளிப்பதற்காக கூண்டினைத் திறந்து கிண்ணத்தை வெளியே எடுக்கிறாள் அவள் உணவு கொண்டுவருவதற்குள் மைனா கூண்டினை விட்டு வெளியே பறந்து போய்விடுகிறது.

அதைப் பிடிக்கத் துரத்துகிறாள். ஆனால் மைனா பறந்து போய் அதே குடியிருப்பின் எதிர்வரிசை வீட்டில் போய் நிற்கிறது.

அங்கே ஒரு ஆள் அமர்ந்து தபால் உறைகளில் முகவரி எழுதி சீல் வைத்துக் கொண்டிருக்கிறான். அன்டோனியெட்டா அவனைச் சப்தமாக அழைக்கிறாள். அவன் அந்த அழைப்பினை கண்டுகொள்ளவேயில்லை.

அந்த ஆளின் பெயர் கேப்ரியல். நடுத்தரவயது ஆண் . அவன் சலிப்புடன் அந்த வேலை பிடிக்காமல் தபால்களை வீசி எறிந்துவிட்டு தற்கொலை செய்ய முயல்பவன் போலக் கைத்துப்பாக்கியினை எடுக்கிறான். இந்த நேரம் வெளியே. யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்டுப் பதற்றமாகச் சிதறிய காகிதங்களை எடுத்து அடுக்குகிறான். கதவைத் திறக்கிறான். வாசலில் அன்டோனியெட்டா நிற்கிறாள்.

தனது மைனா பறந்து வந்துவிட்டது என்று சொல்கிறாள். அதைப்பிடிப்பதற்குக் கேப்ரியல்.உதவி செய்கிறான்

மைனா அவளது கையில் கிடைக்கிறது. மைனாவை தன் மார்பினுள் சொருகியபடியே அந்த வீட்டினை சுற்றிப் பார்க்கிறாள். அவளை இதன்முன்பு பார்த்ததில்லை என்கிறான் கேப்ரியல். அந்த அறையில் தரையில் காலடித்தடங்கள் வரையப்பட்டிருப்பதையும் அதில் எண்கள் எழுதப்பட்டிருப்பதையும் கண்டு அது எதற்காக என்று கேட்கிறாள். தான் நடனம் பழகுகிறேன் என்று சொல்லி அவளையும் நடனமாடச் செய்கிறான். அவள் விளையாட்டுத்தனமான அவனது செயலை ரசிக்கிறாள். அவனது அலமாரியில் உள்ள புத்தகங்களைப் பார்வையிடுகிறாள். வேண்டுமானால் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போகும்படி சொல்கிறான். அவள் படிக்க நேரமில்லை என்கிறாள். முதற்சந்திப்பிலே அவனது இயல்பான பேச்சு, துடிப்பான செயல் அவளைக் கவர்ந்துவிடுகிறது.

கேப்ரியல் வானொலி அறிவிப்பாளராக இருந்து அந்த வேலையிலிருந்து நீக்கப்பட்டவன். மற்றும் முசோலினியின் பாசிச சட்டங்களை எதிர்ப்பவன். ஓரின சேர்க்கையாளன் என்று குற்றம்சாட்டப்படுகிறவன், எதிர்காலத்தைப் பற்றிய குழப்பமான மனநிலையோடு சலிப்பூட்டும் வேலை செய்து கொண்டிருந்த கேப்ரியலுக்கு அவளது வருகை புத்துணர்வை ஏற்படுத்துகிறது. அவளை வசீகரிக்க வேண்டும் என்பதற்காகத் துறுதுறுவென ஓடியாடுகிறான். அவளுக்காகக் காபி தயாரித்துத் தருவதாகச் சொல்கிறான். அவள் வேண்டாம் என விடைபெறுகிறாள். இனி எப்போது நாம் சந்திக்க முடியும் என்று கேட்கவே மைனா மறுபடி பறந்து போகும் போது என்று கேலியாகச் சொல்லி விடைபெறுகிறாள்.

மைனா பறந்து போவது என்பது அவள் ஆசையின் அடையாளம் போலவேயிருக்கிறது. தனது வீட்டில் அவள் ஒரு வேலைக்காரி போலவே நடத்தப்படுகிறாள். அவளை யாரும் பொருட்படுத்துவதேயில்லை. இந்த நிலையில் தான் அந்த மைனா கூண்டிலிருந்து பறந்து போகிறது. பறவையைத் தேடிச் சென்ற அவள் புதிய மனிதனை அறிமுகம் செய்து கொள்கிறாள்.

அவள் வருவதற்கு முன்பு வரை கேப்ரியலுக்கு வாழ்க்கையில் ஒரு பற்றுமில்லை. ஆனால் அவன் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறான். அவளது வருகை அவனுக்குள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது.

ஒரு குடியிருப்பிலுள்ள இருவர் தற்செயலாகச் சந்தித்துக் கொள்வதைத் தாண்டி ஏதோ அவர்களுக்குள் நடக்கிறது. அதைத் தன் கண்களால் அபாரமாக வெளிப்படுத்துகிறார் சோபியா லாரென்.

மைனாவோடு அவள் வீடு திரும்பிய சில நிமிஷங்களுக்குள் அவளைத் தேடி வருகிறான் கேப்ரியல். அடுத்த சந்திப்புத் துவங்குகிறது. அவனை வீட்டிற்குள் அழைத்துக் காபி தயாரித்துத் தருகிறாள். அவனே காபி பொடியை அரைக்கிறான். இந்த நேரம் ஒரு வேலைக்காரி அவன் அன்டோனியெட்டா வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்து கொண்டு அவனைப் பற்றி எச்சரிக்கை செய்கிறாள். அவன் ஒரு ஏமாற்றுக்காரன என்று திட்டுகிறாள். அதை அன்டோனியெட்டா கண்டுகொள்ளவேயில்லை.

அன்டோனியெட்டாவின் மகன் வைத்திருந்த விளையாட்டு வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் வலம் வருகிறான் கேப்ரியல். இது என்ன சிறுபிள்ளைத்தனம் என்று கேலி செய்கிறாள். அவன் ஒரு இளம் காதலன் போலவே நடந்து கொள்கிறான்.

அவனது துடிதுடிப்பு, உற்சாகம் அவளையும் தொற்றிக் கொள்கிறது. நடுத்தர வயதை அடைந்த அவள் இளமை தன்னைவிட்டுப் போய்விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாள். அது உண்மையில்லை என்பதைக் கேப்ரியல் உணர வைக்கிறான். அவளுக்குள் மெல்ல ஆசை உருவாகிறது. அவனைப் பற்றி விசாரிக்கிறாள். அவன் தனது கடந்தகாலத்தைப் பற்றிச் சொல்கிறான். தான் காதலித்த பெண்ணைப் பற்றிக் கூடச் சொல்கிறான்.

தன்னை அவன் சுற்றிவருவது காமத்தின் பொருட்டோ என நினைத்து விலகும் அன்டோனியெட்டா அவனைக் கோவித்துக் கொள்கிறாள்.

அவன் தான் அப்படி நடந்து கொள்கிறவனில்லை என்று மறுக்கிறான். வேலைக்காரி மறுபடி வரவே அவனை வெளியே ரகசியமாகப் போகும்படி அனுப்பி வைக்கிறாள்

அவர்கள் மொட்டை மாடிக்குப் போகிறார்கள். கொடியில் உலர்ந்து கொண்டிருக்கும் துணிகளை அவள் மடித்து வைக்கிறாள். அவன் துணிகளுக்குள் முகம் புதைத்து ஆசைமொழி பேசுகிறான். அவளை பலவந்தமாகக் கட்டிப்பிடித்து அணைக்க முயல்கிறான். அவள் கோபம் கொண்டு அடிக்கிறாள். அதை ரசிக்கும் கேப்ரியல் அவளிடம் மன்னிப்பு கேட்டுத் தான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது தவறு என்கிறான். ஊடலும் கோபமும் புரிதலும் அன்புமாக அவர்கள் தனியுலகில் சஞ்சரிக்கிறார்கள்.

வெளியே நகரில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடக்கிறது. மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள். அது வேறு உலகம். வேறுவாழ்க்கை.

கேப்ரியலைத் தேடி அவனது வீட்டிற்கு மறுபடியும் வரும் அன்டோனியெட்டா அவனிடம் கோபமாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறாள். உறைந்த பனி உருகுவது போல அவர்களின் வயது கரைந்து போய் இருவரும் இளம்காதலர்கள் போலவே நடந்து கொள்கிறார்கள்.

அன்டோனியெட்டாவிடம் பதற்றமில்லை. தயக்கமில்லை. அவனுடன்மனம் விட்டுப் பழகுகிறாள். படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். அதன்பிறகு அவன் அடையும் குற்றவுணர்ச்சி கூட அவளிடமில்லை. பேரணி முடிந்து ஆட்கள் வீடு திரும்புகிறார்கள். அவசர அவசரமாகத் தன் வீட்டிற்கு ஓடிவருகிறாள் அன்டோனியெட்டா.

பிள்ளைகளுடன் வீடு திரும்பும் கணவன் அந்த நாள் மறக்கமுடியாத தினம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். அவளுக்கும் அப்படியான ஒரு நாளே. அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அந்த நாளின் இரவில் அவளைக் கணவன் ஏழாவது குழந்தையைப் பெற்றுக் கொள்வோம் வா என்று படுக்கைக்கு அழைக்கிறான். அவள் தயக்கத்துடன் கேப்ரியல் வீட்டினை வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறாள்.

அந்த அவர்களின் உறவு இனி என்னவாகும் என்பதை அழகான இறுதிக்காட்சியின் வழியே நிறைவு செய்கிறார்கள்

நாம் இதுவரை பார்த்துக் கொண்டிருந்தது ஒரு சினிமா என்ற உணர்வு அப்போது தான் நமக்கு ஏற்படுகிறது

இத்தாலிய நியோ ரியலிச சினிமாவின் முக்கியத் திரைப்படமாகக் கொண்டாடப்படும் A Special Day 1977ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர். எட்டோர் ஸ்கோலா. சோபியா லாரெனும் மார்செல்லோ மாஸ்ட்ரோயானியும் நடித்திருக்கிறார்கள்.

மாபெரும் வரலாற்று நிகழ்வு ஒன்றின் மறுபக்கமாக ஒரு நடுத்தரவயது பெண்ணிற்கும் ஆணுக்கும் காதல் அரும்பி ஒரு நாளில் முடிந்துவிடுகிறது. அதிகாரத்தின் ஒன்றிணைவு ஒரு பக்கம் என்றால் அன்பின் ஒன்றிணைவு மறுபக்கம் நடக்கிறது

ஒரு நாளின் இரண்டு மடிப்புகளைத் திறந்து காட்டியதோடு எது சரி எது தவறு என்ற கேள்வியை நம்மிடமே விட்டுவிடுகிறார் இயக்குநர்.

படத்தின் துவக்கக் காட்சியில் ஹிட்லரின் வருகையைக் காட்டுவதற்காக அதிகாரப்பூர்வ நியூஸ் ரீல் காட்சிகளைக் காண்பிக்கிறார்கள். காரணம் நாம் திரையில் காணுவது உண்மை என்பதை உணர்த்தவே. ஹிட்லர் நிஜம் என்றால் படத்தில் நாம் காணும் காதலும் உண்மையானதே.

.ஒளிப்பதிவாளர் பாஸ்குவலினோ டி சாண்டிஸ் வீட்டுவசதிவாரிய குடியிருப்பினை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார். அதன் ஜன்னல்கள் வழியே தெரியும் காட்சி. உள்ளே நுழையும் வாசல். ஆட்கள் ஒன்று கூடும் விதம்.. பேரணிக்காட்சிகள், வீட்டிற்குள் கேமிரா அவர்கள் கூடவே நிழல் போலச் செல்கிறது. மிக அழகாக அரங்க அமைப்பு மற்றும் ஒளிப்பதிவு .

அன்டோனியெட்டா லியோ டால்ஸ்டாயின் அன்னாகரீனினாவை நினைவுபடுத்துகிறாள். அன்னாவிற்கு ஒரேயொரு பையன். அவள் விரான்ஸ்கியின் வழியே தன் இளமையை அடையாளம் கண்டுகொள்வது போலவே கேப்ரியல் மூலம் அன்டோனியெட்டா தன்னை அடையாளம் கண்டுகொள்கிறாள்.

குடும்பமே அவள் மீது அதிகாரம் செலுத்துகிறது. மைனாவின் கூண்டு போலவே அவளுக்கு வீடிருக்கிறது. அதிலிருந்து ஒரேயொரு நாள் விடுபடுகிறாள். அது தற்செயலான விஷயம். காலியான அந்தக் குடியிருப்பு ஒரு சாட்சியம் போலவே இருக்கிறது

வேலைக்காரியின் வருகை அந்தக் குடியிருப்பு ஒருபோதும் அடங்கிவிடாது. யாரோ மற்றவர்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதையே சுட்டுகிறது.

அன்டோனியெட்டாவிற்குப் புத்தகம் படிக்க விருப்பமிருக்கிறது. ஆனால் குடும்பச் சுமை அதை அனுமதிக்கவில்லை. கடைசிக்காட்சியில் அவள் கேப்ரியல் கொடுத்த புத்தகத்தைப் படிக்கிறாள்.

படத்தின் ஆரம்பக் காட்சி நான்கு நிமிஷங்கள் கொண்டது அதில் அன்டோனியெட்டாவின் தினசரி வாழ்க்கை அழகாக விவரிக்கபட்டுவிடுகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று அம்மாக்கள் தேவைப்படுகிறார்கள். படுக்கையறைகளைச் சுத்தம் செய்ய, மற்றவர் சமையலறையைச் சுத்தம் செய்ய, மூன்றாம் நபர் ஒரு நாள் முழுவதும் படுக்கையில் படுத்துக்கொள்ள என ஒரு காட்சியில் சொல்கிறாள். அது அவளது சலிப்பான வாழ்க்கையின் குரல்.

சோபியா லாரனுக்குப் படத்தில் மேக்கப் கிடையாது. அழுக்கான உடை. இத்தாலியத் தொழிலாளர் குடும்பத்துப் பெண்ணின் தோற்றத்தை அப்படியே உருவாக்கியிருக்கிறார்கள். சோபியா லாரெனும் மார்செல்லோ மாஸ்ட்ரோயானியும் சிறந்த திரை ஜோடிகள். இந்தப் படம் அவர்களின் திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படம்

இத்தாலிய நியோ ரியலிசப்படங்கள் இலக்கியப்பிரதிகளைப் போலவே வாழ்க்கையைத் திரையில் நுட்பமாகச் சித்தரித்துக் காட்டுகின்றன. இதன் காரணமாகவே இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அந்தப்படங்கள் புதுமை மாறாமல் இருக்கின்றன

•••

0Shares
0