உலகின் ஒரு நாள்

கரோனா முடக்கம் காரணமாக உலகமே ஸ்தம்பித்துப் போயிருந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை ஒரு நாளில் எப்படியிருந்தது என்பதை ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ஜூலை 25, 2020 அன்று, உலகெங்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு செலவிட்டார்கள் என்பதே இந்த ஆவணப்படத்தின் மையக்கரு.

உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே ஒருவன் உலகின் ஒருநாளைக் காணுவது எளிய விஷயமில்லை. படத்தைப் பார்க்கப் பார்க்க மனதில் சந்தோஷம் பீறிடுகிறது.

உலகைப் பற்றிய நமது எண்ணங்களை, வீண்பயத்தை, குறுகிய மனப்பாங்கினை முற்றிலும் மாற்றிவிடுகிறது இந்த ஆவணப்படம்.

கரோனா காரணமாக முடங்கிய வாழ்க்கை மனிதர்களின் அடிப்படை இயல்பை முடக்கவில்லை. பிறப்பு, இறப்பு, திருமணம், காதல், செக்ஸ், சண்டை, போராட்டம், வெற்றி, சாதனை, பிரிவு, சாகசம், பயணம், தனிமை, ஆட்டம் பாட்டம். விருந்து, நினைவுகள் என வாழ்வின் அத்தனை விஷயங்களும் அந்த ஒரு நாளில் எப்படி நடந்தன என்பதை வெகு அழகாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

உலகைப் பற்றிய நமது மதிப்பீடு பெரும்பாலும் செய்திகளின் வழியாகவும் தொலைக்காட்சி வழியாகவுமே நமக்குள் சேகரமாகிறது. எப்போதும் நாம் வசிக்கும் ஊரும், நமது மாநிலமும், நமது தேசமும் மட்டுமே நம் கவனத்திலிருக்கிறது. ஆனால் உலகின் பிரம்மாண்டத்தையும் ஒப்பற்ற இயற்கை வெளிகளையும் மனித வாழ்க்கையின் பல்வேறு நிலைகளையும் காணக்காண உலகம் எவ்வளவு பெரியது என்பதை உணர முடிகிறது.

உங்கள் வாழ்க்கையில் எதை மாற்ற விரும்புகிறீர்கள். எதைக் கண்டு பயப்படுகிறீர்கள். இப்போதை வாழ்க்கையைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன என்பது போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை வீடியோவாகப் பதிவு செய்து அனுப்பி வைக்கும்படி யூடியூப் நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

192 நாடுகளிலிருந்து 65 மொழிகளில் 324,705 வீடியோக்களை மக்கள் அனுப்பியிருக்கிறார்கள். இந்த காணொளிகளில் இருந்து முக்கியமான காட்சிகளைத் தொகுத்து ஒன்றரை மணி நேர ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ஜூலை 25, 2020 விடிகாலையில் படம் துவங்குகிறது. சூரியன் உதயமாவதற்கு முந்தைய இருண்ட வானம். விடிகாலையின் கலையும் இருட்டு, உலகின் ஒரு மூலையில் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி வீட்டிலே பிரவசத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையில் வலியில் துடிக்கிறார். வேறு வேறு இடங்களில் பிறப்பு நடைபெறுகிறது. தங்கள் குழந்தையைக் கையில் ஏந்தித் தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

கரோனா பற்றியோ, ஊரடங்கு பற்றியோ எந்தக் கவலையுமின்றிக் குழந்தைகள் பூமிக்கு அறிமுகமாகிறார்கள். எல்லா நாளும் உலகின் விருந்தாளிகளாகக் குழந்தைகள் பிறந்தபடியே இருக்கிறார்கள். அவர்கள் தான் சந்தோஷத்தின் திறவுகோலைக் கொண்டுவருகிறார்கள்.

பிறப்பில் துவங்கிய படம் மெல்லக் காலைநேரக் காட்சிகளை அறிமுகம் செய்கிறது. துயில் கலையாத சிறார்கள். பெரியவர்கள். இளைஞர்கள். வீட்டுவேலை செய்யும் பெண்கள். உடற்பயிற்சி செய்பவர்கள். வீட்டிற்குள் இருந்தபடியே ஆள் அற்ற வீதியை வேடிக்கை பார்ப்பவர்கள். மொட்டை மாடியில் வந்து நின்று உலகைக் காணுகிறவர்கள். துப்பரவு பணியாளர்கள். பூச்சி மருந்து அடிப்பவர்கள். தியானம் செய்பவர்கள் , காலியான மைதானங்கள். விளையாட்டுக்கூடங்கள், ஏரியில் குளிப்பது. ஆற்றில் நீந்துவது, பனியில் நடப்பது, பாலைவனத்தில் வாழ்க்கை. நாடோடிகளின் அதிகாலை என வாழ்க்கை தான் எத்தனை விதமாக இருக்கிறது.

எத்தனை எத்தனை காலைக் காட்சிகள். வழக்கமான நாட்களாக இருந்தால் அலுவலகம், படிப்பு, வேலை எனப் பரபரப்பாக ஓட வேண்டியிருக்கும். ஊரடங்கில் வீட்டிற்குள் முடங்கி இருக்க வேண்டிய சூழல் என்பதால் இணையவழியாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்கிறார்கள். காலை உணவு தயாரிக்கப்படுகிறது. ஆயிரமாயிரம் உணவு வகைகள். புதுப்புது சுவைகள்.

இந்த நாளின் பகல் துவங்குகிறது. ஒரு இளம்பெண் தன் காதலை வெளிப்படுத்துகிறாள். ஒரு காதலன் காதலியை நினைத்து ஏங்குகிறான். ஒரு இளம் பெண் முதன்முறையாகக் காதலனுடன் இன்பம் அனுபவிக்கிறாள். திருமணத்திற்கு ஒரு பெண் சம்மதம் தெரிவிக்கிறாள். ஒரு ஆண் இன்னொரு ஆணை முத்தமிடுகிறான். விதவிதமான திருமணங்கள் நடைபெறுகின்றன

கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. முகக்கவசம் அணிந்த மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள். அவர்களின் உற்சாகம் குறையவில்லை. செருப்பு தைக்கும் ஒருவர் யாருமில்லாத வீதியில் வேலை கிடைக்குமா எனச் சுற்றி அலைகிறார். வீட்டில் தனியே ஒருவர் வயலின் இசைக்கிறார். ஒரு பெண் படகினை ஏரிக்குக் கொண்டு செல்கிறாள். காவலர்கள் பாதுகாப்பு பணியினை மேற்கொள்கிறார்கள். மருத்துவமனை பரபரப்பாக இயங்குகிறது.

ஒரு ஆண் ஆடுமேய்க்கக் கிளம்புகிறான். ஒரு நடுத்தர வயது ஆள் பசுக்களை மேய்ச்சலுக்குக் கொண்டு போகிறான். மருத்துவர்கள் கவச உடை அணிந்த கரோனா வார்டுக்குள் போகிறார்கள். ஆள் இல்லாத ரயில் ஓடுகிறது. சிறார்கள் பட்டம் விடுகிறார்கள். ஒருவன் ஆகாசத்தில் பறக்கிறான். திருநங்கை ஒருவர் வீடு வீடாகச் சென்று பாட்டுப்பாடி யாசகம் பெறுகிறார். சாலையிலுள்ள போக்குவரத்து கண்ணாடியை ஒருவன் துடைக்கிறான். மத வழிபாடு செய்கிறான் வேறு ஒருவன். இன்னொருவன் ரயிலைத் துரத்திச் சென்று படம்பிடிக்கிறன. ஒரு ஆள் பனிக்கட்டிகளை உருக்கிக் குடி நீர் சேகரிக்கிறார். காடு. மலை, பனிப்பிரதேசம், தீவு பாலைவனம் பெருநகரம் சிறுநகரம் கிராமம் என விதவிதமான வாழ்விடங்கள். வேறுவேறு வகையான வாழ்க்கை. இப்படிப் பகல் கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்து போகிறது

வாழ்க்கை இத்தனை வண்ணமயமானதா. நம் கவலைகள். பிரச்சனைகள் என்ற சிறிய வட்டத்திற்குள் ஏன்முடங்கிக் கிடக்கிறோம் என்ற எண்ணத்தைப் படம் ஆழமாக நமக்குள் உருவாக்குகிறது.

எல்லா நெருக்கடிகளையும், துயரங்களையும் தாண்டி மனிதர்கள் உற்சாகமாகவே செயல்படுகிறார்கள். சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள். பகிர்ந்து தருகிறார்கள். தொலைவிலுள்ள பிள்ளைகளை நினைத்துக் கண்ணீர் விடுகிறார்கள். இந்த வாழ்க்கையின் மீது பெரிய புகார்கள் எதுவுமில்லை.

ஒட்டுமொத்த ஆவணப்படத்திலும் ஒருவர் கூடக் கரோனா பற்றிப் புலம்பவில்லை. வாழ்க்கையின் மீது சலிப்பு கொள்ளவில்லை. மாறாக முகக் கவசம் அணிந்தபடியே ஒன்று கூடுகிறார்கள் நடனமாடுகிறார்கள். ஒன்றாக விருந்து உண்ணுகிறார்கள். இளைஞர்களின் உலகை மிக அழகாகப் படம் பதிவு செய்துள்ளது. செல்போன், ஐபேட், லேப்டாப் என அவர்கள் இணைய வெளியில் எப்படிச் சஞ்சரிக்கிறார்கள். வீடியோ எடுத்துப் பகிர்ந்து கொள்கிறார்கள். காதலையும் காணொளி வழியாக வெளிப்படுத்துகிறார்கள் என விசித்திரமான அவர்களின் செயல்களைச் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்

மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவன் இன்னும் நான் இறக்கவில்லை. என்னுடன் பேசுங்கள் என்கிறான். செயற்கை கை பொருத்தப்பட்ட பெண் அந்தக் கையால் டம்ளரில் தண்ணீர் ஊற்றுகிறாள். ஒரு பெண் தனது நீலக்கிளிக்கு பறக்கப் பயிற்சி தருகிறாள்.. இப்படி ஒரு நாளுக்குள் எத்தனையோ காட்சிகள். உணர்ச்சிகள்.

இத்தனை விதமான மனிதர்களை ஒருசேரப் பார்க்கும் போது வாழ்க்கையின் மீது புதிய பிடிப்பும் நம்பிக்கையும் ஏற்படுகிறது. இதில் சில காட்சிகளில் இந்திய வாழ்க்கையும் இடம்பெற்றிருக்கிறது.

இதனை ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ளார் , அகாடமி விருது வென்ற கெவின் மெக்டொனால்ட் இயக்கியுள்ளார்.

ஜூலை 25, 2020 அன்று நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று எனது நாட்குறிப்பில் பார்த்தேன். வீட்டில் அடைந்துகிடந்தபடியே புத்தகம் படித்திருக்கிறேன். சினிமா பார்த்திருக்கிறேன். மொட்டைமாடியில் புறாக்களுக்கு தானியம் போட்டிருக்கிறேன். செய்திகள் எதையும் கேட்கக்கூடாது என்று முடிவு செய்த காரணத்தால் அன்று டிவி பார்க்கவில்லை. இரவில் ஜான் டன்னின் கவிதைகளைப் படித்திருக்கிறேன். பண்டிட் ஜஸ்ராஜ் இசை கேட்டிருக்கிறேன். இரண்டு பக்கம் எழுதியிருக்கிறேன். வேறு அந்த நாளில் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை.

அந்த நாளில் உலகம் எப்படி இயங்கியிருக்கிறது என்பதைக் கண்டவுடன் எனது நாள் எவ்வளவு சலிப்பூட்டுவதாக இருந்திருக்கிறது என்ற குற்றவுணர்ச்சியே மேலிடுகிறது.

ஆனாலும் எதிர்பாராத மழையில் நனையும் ஆனந்தம் போல இந்தப்படம் இந்த நாளை மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக்கிவிட்டது

••

0Shares
0