– கவிஞர் சுகுமாரன்.
காசிக்கு சென்ற ஆண்டு போனபோது பார்க்க விரும்பிய முக்கியமான இடங்களில் ஒன்றாக இருந்தது உஸ்தாத் பிஸ்மில்லா கானின் இல்லம். இடுங்கிய சந்து ஒன்றில் இருந்த அந்த வீட்டைத் தேடி தினமும் பார்வையாளர்கள் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு நாள் நண்பகலுக்குக் கொஞ்சம் முன்பாக அந்த வீட்டைச் சென்றடைந்தேன்.
அன்று அந்தப் பகுதியில் மின் துறையினர் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். எனவே மின்சார விநியோகம் இல்லை. குறைந்த வெளிச்சத்தில்தான் உஸ்தாதின் வீட்டைப் பார்க்க வாய்த்தது.
சுவர்களில் மாட்டியிருந்த புகைப்படங்களையும் பாராட்டிதழ்களையும் பார்த்துக் கொண்டிருந்தபோது மத்தியானத் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. அதே நொடியில் அற்ப நேரத்துக்கு மின்சாரமும் வந்தது. விளக்குகள் ஒருமுறை கண்சிமிட்டலாக மின்னின. கூரையிலிருந்த மின் விசிறி ஒருமுறை சின்ன ரீங்காரத்துடன் வட்டமிட்டு நின்றது.
பிஸ்மில்லா கான் ஷெனாயுடன் அமர்ந்திருக்கும் பெரிய படம் தெளிவாகத் தெரிந்தது. கண்கள் கசிய அந்தப் படத்தின் கீழே முழந்தாளிட்டு வணங்கினேன். அரை நிமிடத்துக்கும் குறைவான அந்த வெளிச்சப் பொழுதில் அவரது சிரிக்கும் கண்களைப் பார்த்தேன். மீண்டும் இருட்டு சூழ்ந்தது. வீட்டைச் சுற்றிக் காண்பித்த உஸ்தாதின் பேரனிடம் விடைபெற்றுக் கொள்வதற்காகக் கை குலுக்கியபோது அவர் கேட்டார். ‘உங்கள் கை ஏன் நடுங்குகிறது?’. பரவசத்தால் என்று அரைகுறை இந்தியில் பதில் சொன்னேன்.
இன்று பார்த்த செய்தியும் காட்சியும் அந்த நாளை நினைவுக்குக் கொண்டு வந்தன. கூடவே வருத்தத்தையும். பிஸ்மில்லா கானின் அந்த வீடு இடிக்கப்படவிருக்கிறது. மகன்களுக்கும் பேரன்களுக்கும் இடையில் நடந்த சொத்துப் பிரச்சனையில் ஓர் இசைக் கோவில் தரைமட்டமாகப் போகிறது. இனி அந்த வீடு ஒரு வணிக வளாகம். உஸ்தாத் பிஸ்மில்லா கானின் இல்லம் அல்ல. செய்தியைப் பார்த்ததும் துயரமாக இருந்தது. உஸ்தாத் அந்த வீட்டில் வாழ்ந்தார் என்பது உண்மை. அந்த வீட்டில் மட்டுமே அவர் வாழவில்லை என்பதும் உண்மை.
***
கதவு எண் சி.கே. 46 / 62,
ஹராகா சராய், வாராணசி.
மேற்குறிப்பிட்ட முகவரி இல்லத்தில்
பிஸ்மில்லா கான் இல்லை
ஆனால்
அந்த வீட்டில்தான் அவரைப் பார்த்தேன்
குறுகிய வரவேற்பு அறை மூலையில்
அவருடைய காலணிகள் இல்லை
ஆனால்
தாளகதியுடன் நகரும் இரண்டு பாதங்களை
அந்த மூலை அருகில்தான் பார்த்தேன்
கூடத்தின் தரையில் செவ்வண்ண ஜமக்காளத்தின் மீது
அவர் உட்கார்ந்திருக்கவில்லை
ஆனால்
சுருதி பிடித்து மகா குரு ஸ்வரம் கற்பிப்பதை
ஜமக்காளத்தின் மறுமுனையில் அமர்ந்துதான் பார்த்தேன்
ளுஹர் தொழுகைக்கான பாங்கு ஒலித்தும்
அறைக்குள் அசைவில்லை
ஆனால்
இருகை உயர்த்தி இறைஞ்சும் குல்லா அணிந்த நிழல்
அந்த மேற்குச் சுவர்மேல் அசைவதைப் பார்த்தேன்.
காட்சிப் பேழைக்குள்
வரிசையாக மௌனித்திருந்த குறுங்குழல்கள்
அப்போது உயிர்பெற்று விம்முவதைக் கேட்டேன்
விழிபனிக்க நிலத்தில் மண்டியிட்டு வணங்கி நிமிர்ந்தேன்
ஒரு முதிய ஆள்காட்டி விரல்
கண்துளிர்ப்பைத் துடைப்பதைக்
கண்ணி்மைக்காமல் பார்த்தேன்
அந்த விரலை முகர்ந்தபோது
பனாரசி பானின் வாசனையும்
கங்கையின் குளிர்ச்சியும்
மண்ணின் சொரசொரப்பும் இருந்தன.
வானத்தின் தழுதழுப்பும் இருந்தது.
••
நன்றி:
கவிஞர் சுகுமாரன் முகநூலில் பதிவு செய்த குறிப்பு.