ஊரின் நினைவில்


நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஒருவர் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ஊருக்குப் போகிறார். அங்கே ஊரின் மிகவும் புகழ்பெற்ற குடிமகன் என விருது தரும் விழா ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தப் பயணமும் அதில் ஏற்படும் அனுபவங்களையும் மிக அழகாக விவரிக்கிறது The Distinguished Citizen திரைப்படம். காஸ்டன் டுப்ராட் மற்றும் மரியானோ கோன் இயக்கி 2016 வெளியான திரைப்படமிது.

நோபல் பரிசு விழாவில் டேனியல் மன்டோவானி விருது பெறுவதில் படம் துவங்குகிறது. இத்தனை காலமாற்றங்களுக்குப் பிறகு இன்றும் ஸ்வீடன் மன்னர் நோபல் விருது தருவதும் அவரை வணங்க வேண்டும் என்பதும் டேனியலுக்கு ஏற்புடையதாகயில்லை. தன் அதிருப்தியை அவர் பேச்சில் வெளிப்படுத்துகிறார்.

நோபல் பரிசின் புகழ் காரணமாக அவருக்குத் தொடர்ந்து இலக்கிய நிகழ்ச்சிகள். விழாக்களுக்கு அழைப்பு வந்தபடியே இருக்கிறது. புத்தகக் கண்காட்சிகளுக்கு வரும்படி நச்சரிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பதிப்பாளர் புதிய நாவல் ஏதாவது எழுதிக் கொண்டிருக்கிறாரா என்று கேட்கிறார்கள். ஆனால் டேனியல் இந்தப் பரபரப்பிலிருந்து ஒதுங்கி பார்சிலோனாவில் உள்ள வீட்டில் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

எவ்வளவு பெரிய நூலகம். எத்தனை பெரிய வீடு. கண்ணாடி ஜன்னல் வழியாக நகரமே தெரிகிறது. டேனியல் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அவரது உதவியாளர் நூரியாவிடம் எந்த நிகழ்ச்சியினையும் ஒத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார் டேனியல்.

ஒரு நாள் அவரது சொந்த ஊரான அர்ஜென்டினாவின் சலாஸிலிருந்து ஒரு கடிதம் வந்துள்ளதாக நூரியா காட்டுகிறார். நாற்பது ஆண்டுகள் தன் சொந்த ஊரை மறந்திருந்த டேனியலுக்கு ஒருமுறை போய்வரலாமே என்ற ஆசை பிறக்கிறது. நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொள்கிறார். ஆனால் தான் எந்த ஆடம்பரமும் இன்றித் தனியே பயணம் செய்ய விரும்புவதாகவும், பத்திரிக்கை, தொலைக்காட்சி என எந்தத் தொல்லையும் இருக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார். அதன்படி தனியே சலாஸை நோக்கிப் பயணம் செய்கிறார்

அவரை வரவேற்க உள்ளூர் ஆள் ஒருவரை காரோடு விமானநிலையம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவருக்கு முறையான லைசன்ஸ் கிடையாது. காரும் மிகப் பழையது. குறுக்கு வழி ஒன்றில் அழைத்துப் போவதாகச் சொன்ன அந்த நபர் கரடுமுரடான பாதையில் காரை ஒட்டுகிறான். பாதி வழியில் கார் டயர் வெடித்துவிடுகிறது. இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். கையில் செல்போன் கிடையாது. உதவிக்கு ஆள் கிடையாது.
தன் நாவலின் பக்கங்களைக் கிழித்துத் தீமூட்டி குளிர்காய்கிறார் டேனியல். மறுநாள் காலையில் அந்த நாவலின் இரண்டு பக்கங்களைக் கிழித்து மலம் துடைக்கப் பயன்படுத்துகிறான் காரோட்டி. வேறு வழி கிடையாது என்பதை உணர்ந்து கண்களை மூடிக் கொள்கிறார்

உதவிக்கு வேறு கார் வரும்வரை காத்திருக்கிறார்கள். சலாஸ் நகரின் சிறிய விடுதி ஒன்றில் அவருக்கு ஒரு அறையை ஒதுக்கியிருக்கிறார்கள். மிகச்சிறிய அறை. நகர மேயர் அவரைக் காண விரும்புவதாகத் தெரிவிக்கிறார்கள். தானே நடந்து போய் மேயரை சந்திக்கிறார்.

ஊரின் அழைப்பை ஏற்று வருகை தந்ததிற்கு மேயர் மிகுந்த சந்தோஷம் அடைகிறார். அவரை ஒரு தீயணைப்பு வண்டியில் நிற்க வைத்து இளம்பெண் ஒருத்திக்கு ராணி போல
வேஷம் அணிய செய்து ஊர்வலம் அழைத்துப் போகிறார்கள். உள்ளூர் கேபிள் டிவி ஆள் ஒருவன் அவருக்காகச் சிறப்பு வீடியோ ஒன்றை உருவாக்கித் தந்திருக்கிறான். அதைத் திரையிடுகிறார்கள். தன்னோடு பள்ளியில் படித்த நண்பன் அன்டோனியோவைச் சந்திக்கிறார் டேனியல். பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஊர் நிறைய மாறியிருக்கிறது. நடந்தே ஊரைச் சுற்றி வருகிறார். அவரை யாரும் பொருட்படுத்தவேயில்லை. விடுதியில் வரவேற்பாளராக உள்ள இளைஞன் தான் கதைகள் எழுதுவதாகச் சொல்லி தனது கதைகளை வாசித்துப் பார்க்கும்படி ஒரு பைலை அவரிடம் தருகிறான்.

சக்கர நாற்காலியிலுள்ள தன் மகனை அழைத்துக் கொண்டுவந்து நிதி உதவி வேண்டும் என மன்றாடுகிறார் ஒருவர். தான் NGO எதையும் நடத்தவில்லை என்று டேனியல்
கோவித்துக் கொள்கிறார்

கேபிள் டிவி சேனல் ஒன்றில் அவரை நேர்காணல் செய்கிறார்கள். அங்கே வேலை செய்யும் ஒருவன் அவர் பெயர் என்ன வேலை செய்கிறார் என்று விசாரிக்கிறான். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது லோக்கல் பழச்சாறு கம்பெனி ஒன்றுக்கான விளம்பரமாகப் பாட்டிலை தூக்கிக் காட்டுகிறார்கள். மிக வேடிக்கையாகக் காட்சியது

தன் பெற்றோர்கள் வசித்த வீடு இப்போது உருமாறியிருக்கிறது. அதைக் காணச் செல்லும் டேனியலை துரத்திவிடுகிறார்கள்.

உள்ளூர் மக்கள் முன்னால் டேனியல் உரை நிகழ்த்துகிறார். தன் பழைய காதலி ஐரீனை மீண்டும் சந்திக்கிறார். அவள் இப்போது தனது பள்ளி நண்பன் அன்டோனியோவை மணந்திருப்பதை அறிந்து கொள்கிறார். ஆனால் ஐரீன் மனதில் இன்னமும் தன் மீதான காதல் இருப்பதை உணருகிறார். இருவரும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். அன்டோனியோ தன் வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கிறான். டேனியல் ஒத்துக் கொள்கிறார்

இதற்கிடையில் அவரது கதையில் தன் தந்தையைப் பற்றி எழுதியதற்காக ஒரு ஆள் நன்றி தெரிவிக்கிறான். தன் வீட்டிற்குச் சாப்பிட வரும்படி அழைக்கிறான். அவனே நேரத்தையும் குறிக்கிறான். இது டேனியலை எரிச்சல் படுத்துகிறது.

சலாஸ்வாசிகளுக்குள் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி ஒன்றின் நடுவராகப் பணியாற்றும் டேனியல் எந்த ஓவியமும் சிறப்பாக இல்லை என்று ஒதுக்கித் தள்ளுகிறான். அடையாளம் தெரியாத ஒருவர் வரைந்த ஓவியத்தை முதல் பரிசிற்குத் தேர்வு செய்கிறான். இது உள்ளூர் ஓவியர் ஒருவருக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. அவர் நேரடியான டேனியலுடன் சண்டையிடுகிறார். டேனியல் அவரைத் துரத்திவிடவே தன் ஆட்களை வைத்துக் கொண்டு டேனியலுக்கு எதிரான போராட்டத்தைத் துவக்குகிறார். அது பெரிய பிரச்சனையாக உருமாறுகிறது

இன்னொரு பக்கம் பழைய காதலியின் மகள் டேனியலை தேடி வந்து நெருக்கமாகப் பழக ஆரம்பிக்கிறாள். இது அன்டோனியோவிற்குத் தெரிய வரவே அவன் கோபம் கொள்கிறான்.

ஐரீன் வீட்டிற்கு விருந்திற்காக டேனியல் செல்லும் காட்சி முக்கியமானது. அதில் ஐரீன் நடந்து கொள்ளும் முறையும், அன்டோனியோ வேண்டுமென்றே அவளை அணைத்து இறுக்கமாக முத்தமிடுவதும். வேட்டையாடுவதைப் பற்றி விரிவாகப் பேசுவதும், பாருக்கு அழைத்துப் போய் நடனமாடுவதும் மறக்கமுடியாத காட்சிகள்.
ஊரும் மக்களும் அவரைப் புரிந்து கொள்ளவில்லை என்பதோடு அவருக்கு எதிராகச் செயல்படவும் துவங்குகிறார்கள். அந்த மக்களின் அறியாமையை நினைத்து வருந்தும் டேனியல் அது தன் மீது வன்முறையாக உருமாறுவதை ஏற்க முடியாத நிலையை அடைகிறார். இதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே படத்தின் மீதக்கதை.

படம் துவங்கிய சில நிமிஷங்களிலே நோபல் பரிசு பெற்ற போர்த்துகீசிய எழுத்தாளரான யோசே சரமாகோவின் சாயலில் டேனியல் உருவாக்கபட்டிருப்பதை உணர முடிகிறது. சரமாகோ நாத்திகர். இதில் வரும் டேனியலும் நாத்திகர். சரமாகோ தன் உதவியாளரை தான் திருமணம் செய்து கொண்டார். அவளது சாயலில் தான் நூரியா உருவாக்கபட்டிருக்கிறார்

ஒரு காட்சியில் டேனியல் சரமாகோவின் நாவல் ஒன்றின் சுருக்கத்தை அப்படியே சொல்லவும் செய்கிறார். சரமாகோ மட்டுமின்றிப் புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான மானுவல் புய்க் சொந்த ஊர் மக்களுடன் சண்டைபோட்ட நிகழ்வுகளும் இதில் வந்து போகின்றன.

டேனியலின் நினைவில் உள்ள அவரது ஊரும் நிஜமான அவரது ஊரும் வேறுவேறாக உள்ளன. அவர் தன் கதைகள் உள்ள நிலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பார்சிலோனியாவில் அவர் வசித்த போதும் அவரது மனது சொந்த மண்ணில் தான் உலவிக் கொண்டிருந்தது. ஆகவே தான் ஊரின் அழைப்பை ஏற்று விழாவில் கலந்து கொள்ள ஒத்துக் கொள்கிறார். ஆனால் அது இத்தனை கசப்பான அனுபவமாக உருமாறும் என்று அவர் நினைக்கவேயில்லை. தான் பிறந்து வளர்ந்த ஊர் இப்போது அந்நியமாக இருப்பதை அவர் மெல்ல உணர ஆரம்பிக்கிறார்.

இறந்து போய்விட்ட தனது தந்தை டேனியலின் கதை வழியாக ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக ஒருவர் சந்தோஷப்படுகிறார். இன்னொருவரோ கதையில் கொத்தனார் ஒருவரைத் தவறாகச் சித்தரித்து அவமானப்படுத்திவிட்டீர்கள். அவர் இறந்து போய்விட்டாலும் அந்த அவமானம் தொடருகிறது என்று சண்டைபோடுகிறார்.
கதையில் வருபவர்கள் நிஜமானவர்களில்லை. அவர்கள் என் நினைவில் வாழும் மனிதர்கள். நீங்களாகத் தேவையற்ற கற்பனை செய்ய வேண்டாம் என அவர்களுடன் டேனியல் வாதிடுகிறார். ஆனால் மக்கள் ஏற்கவில்லை

நோபல் பரிசு பெறுவது கூட எளிதானது. ஆனால் சொந்த ஊரில் மக்களின் மனதில் இடம் பிடிப்பது எளிதானதில்லை என்பதை டேனியல் உணர்ந்து கொள்கிறார். அவரது பெயரையும் புகழையும் கண்டு மக்கள் வியக்கிறார்கள். அதே நேரம் பொறாமைப்படவும் செய்கிறார்கள் என்கிறார் மேயர். அது தான் நிஜம்.

சொந்த ஊரின் நினைப்பு என்பது ஒரு போதை. பேசிப்பேசி ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியது தான். ஆனால் அங்கே திரும்பச் சென்றால் நம்மால் சந்தோஷமாக வாழமுடியாது என்று புதுமைப்பித்தன் சொல்கிறார். அது தான் இப்படத்திலும் வெளிப்படுகிறது.

0Shares
0