எட்வர்ட் ஹாப்பர்

ஒவியத்தில் உறைந்து போன காட்சிகளை உயிரோட்டமாகத் திரையில் மறுஉருவாக்கம் செய்வது மிகப்பெரிய சவால். அதுவும் எட்வர்ட் ஹாப்பர் போன்ற அமெரிக்காவின் மிக முக்கிய ஒவியரின் ஒவியங்களை அதே வண்ணங்களுடன் காட்சிக்கோணங்களுடன் திரையில் உருவாக்கிக் காட்டுவது எளிதானதில்லை.
Shirley: Visions of Reality (2013) என்ற Gustav Deutsch இயக்கிய திரைப்படம் எட்வர்ட் ஹாப்பரின் 13 ஒவியங்களை ஒன்றிணைந்து காட்சிப்படுத்தியிருக்கிறது. இயக்குனரான குஸ்தாவ் ஒரு ஒவியர் என்பதால் எட்வர்ட் ஹாப்பரை மிகவும் ஆசையுடன் திரையில் மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்
பிரபல ஒளிப்பதிவாளர்கள் பலருக்கும் ஆதர்சமான ஒவியர் எட்வர்ட் ஹாப்பர். Road to Perdition, Days of Heaven, Blade Runner போன்ற படங்கள் ஹாப்பரின் ஒவியங்களையே முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கபட்டிருக்கின்றன. Shirley: Visions of Reality தனிமையை உணரும் ஷெர்லி என்ற நடிகையின்  வாழ்க்கைத் தருணங்களைக் காட்சிப்படுத்துகிறது. இதன் ஊடாக அமெரிக்க வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல் இடைவெட்டாக வந்து போகின்றன.
1931 முதல் 1963 வரையான எட்வர்ட் ஹாப்பரின் 13 முக்கிய ஒவியங்கள் அப்படியே காட்சியாக விரிவு கொள்வதே இப்படத்தின் தனிச்சிறப்பு.
ஹாப்பரின் ஒவியங்களுக்கு மாடலாக இருந்தவர் அவரது மனைவி Josephine Nivison. அடர்வண்ணங்களைப் பயன்படுத்தும் விதத்திலும் காட்சிக்கோணத்தில் புதுமையை உருவாக்கியதிலும் ஹாப்பர் முக்கியமானவர். ஹாலிவுட்டில் ஒவியர்கள் குறித்த நிறையத் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் Shirley: Visions of Reality போல வியப்பூட்டக்கூடிய ஒன்றை நான் இதுவரைக் கண்டதில்லை.
நவீன ஒவியத்தில் உங்களுக்கு விருப்பமிருந்தால் அவசியம் இப்படத்தைப் பார்த்துவிடுங்கள். ஒவியத்திலிருந்து காட்சிகளை எப்படி உருவாக்குவது என்பதற்கு இப்படம் உருவாக்கபட்டவிதம் குறித்த தகவல்கள், வீடியோ காட்சிகள் பெருந்துணை புரிகின்றன.
0Shares
0