எண்கள் இல்லாத மொழி


அமேசான் காடுகளுக்குள் வாழும் பிரஹா என்ற ஆதிவாசி இனக்குழுவைப்பற்றிய டேனியல் எவரெட் எழுதிய புத்தகத்தை பற்றி வாசித்து கொண்டிருந்தேன்.


நவம்பரில் வெளியாக உள்ள புத்தகமது. பிரஹா என்ற ஆதிவாசி பற்றி அறிந்து கொள்வதற்கு தூண்டுதலாக இருந்தது இந்த புத்தக அறிமுகம்.
 


இன்னும் கானகத்தில் வாழ்ந்து வரும் வேட்டையாடும் ஆதி இனங்களில் ஒன்றான பிரஹா மக்களோடு தங்கி அவர்களின் வாழ்க்கை மற்றும் மொழி குறித்து எழுதப்பட்ட புத்தகமிது.


ஆதிவாசிகளை பற்றிய ஆய்வுகளில் பெரும்பாலும் விசித்திரமான தகவல்கள் செய்திகள் நிரம்பியிருக்கும். அரிதாகவே அழமான பார்வையுடன் ஆய்வுகள் வெளியாகின்றன. மற்றவை பரபரப்பிற்கான முயற்சிகளே.


பழங்குடியினரின் வாழ்வை தேடிச் சென்று ஆய்வு செய்வது மேற்கத்திய உலகின் தொடர்ச்சியான ஆர்வங்களில் ஒன்று.  இந்த ஆய்வுகளின் நோக்கம் பெரிதும் பல்கலை கழக ஆய்வுகள் தொடர்பானது. மற்றொன்று தங்காள் அறியாத இனக்குழுக்கள் மலைகுகைகளுக்குள் கூட வசிக்க முடியாது என்ற மேலை ஆதிக்க மனப்பாங்கும் காரணம். நூற்றாண்டுகளாக அடர்ந்த கானகங்களுக்குள் கூட கிறிஸ்துவ மதபிரச்சாரம் செய்தவற்கான மிஷனரிகள் சென்று வருகிறார்கள். இந்த மிஷனரிகளின் சாதகபாதக அம்சங்கள் இன்று வரை விவாதிக்கபட்டு வருகின்றன. ராபர்ட் டி நீரோ நடித்த தி மிஷன் போன்ற திரைப்படங்கள் இதற்கு சிறந்த உதாரணம்.


பிரஹா என்ற பழங்குடியில் இப்போது முந்நூறு பேர்களே இருக்கிறார்கள். அவர்கள் அமேசான் காடுகளில் வேட்டையாடி பிழைக்கும் ஆதி இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களது மொழியின் பெயரும் பிரஹா தான்.


இன்று உலகின் கண்களில் பிரஹா ஒரு பரிசோதனை பொருள். காரணம் இந்த இனக்குழுவிடம் உள்ள மொழி மற்றும் நம்பிக்கைகள் இதுவரை உலகம் அறியாதவை.


குறிப்பாக இந்த மொழியில் எண்ணிக்கைகளை குறிக்கும் தனிச்சொற்கள் கிடையாது. ஒன்று இரண்டு நிறைய என்ற மூன்று சொற்களே இருக்கின்றன. இந்த சொற்களில் ஒன்று என்று குறிப்பது தனித்துவமானது என்ற அர்த்ததிலும் இரண்டு என்று குறிப்பது பல என்ற அர்த்தத்திலும் நிறைய என்ற சொல்லானது கூட்டத்தையும் குறிக்கிறது. மற்றபடி 3, 4, 5,6, 7, 8,9,0 போன்ற எண்கள் குறித்து அவர்கள் அறிந்திருக்கவேயில்லை. அவர்கள் அதை  பயன்படுத்துவதுமில்லை.


வேட்டைக்கு செல்லும் போது ஒரு மான் கண்ணில் தென்படுகிறது. இரண்டு மான்களுக்கு மேல் வந்தால் கூட்டமாக கருதப்பட்டுவிடுகிறது. இப்படி தான் அவர்கள் எண்ணிக்கையை உபயோகிக்கிறார்கள். பொதுவில் கணிதத்தின் உபயோகமே அறியாதவர்கள் இந்த ஆதிவாசிகள். இவ்வளவிற்கும் அவர்கள் வணிகத்திற்காக அடிக்கடி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வந்து போகும் ஆதிவாசிகளே. அவர்களின் வணிகம் என்பது கிட்டதட்ட பண்டமாற்று போன்றதே.


இந்த மக்களை ஆய்வு செய்த மொழியியல் குழுவினர் அவர்களுக்கு அடிப்படை கணித அறிவை பயிற்சி தந்த  போதும் அவர்களால் அதை கற்றுக் கொள்ளவோ நினைவில் வைத்துக் கொள்ளவோ முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


இந்த மொழிக்கு வரிவடிவம் கிடையாது. பேச்சு என்பது கூட விசில் அடிப்பது போன்ற ஒலி தான். அந்த ஒலியை வைத்து சொற்களை அறிந்து கொள்ள வேண்டும்.


இந்த மொழியில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன.  வண்ணங்களுக்கு என்று தனியான சொற்கள் கிடையாது. நிறம் என்ற ஒரு சொல்லால் எல்லா வண்ணங்களையும் குறிப்பிடுகிறார்கள். அது போலவே பிரஹா இன மக்கள் தங்கள் பெயர்களை அடிக்கடி மாற்றி வைத்துக் கொண்டுவிடுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் வான் உலகிலிருந்து தங்கள் பெயர்களை அடையாளம் வைத்து யாராவது தாக்க கூடும் என்ற பயமே


இது போலவே இந்த குழுவிடம் சேகரிக்கபட்ட குழுநினைவுகள் கிடையாது. அதனால் பழங்கதைகள் நம்பிக்கை எதுவும் அவர்களிடம் இல்லை. அது போலவே அவர்கள் மொழியில் கடந்த காலத்தை குறிக்கும் சொற்களே கிடையாது. கடந்த காலம் என்பதை பற்றி அவர்கள் விவாதிப்பதேயில்லை.


அதே நேரம் ஆண்கள் பேசுவதற்கும் பெண்கள் பேசுவதற்கும் இடையில் எப்போதும் ஒரு சொல்வேறுபாடு இருக்கிறது. பெண்கள் ஒரு சொல் குறைவாகவே பேசுகிறார்கள்.


இந்த குழுவினர்கள் தங்களை தவிர மற்ற பாஷைகள் பேசுகின்றவர்களை வேடிக்கையாக பார்ப்பதோடு அது போன்ற சப்தங்களை அவர்கள் எப்படி எழுப்புகிறார்கள் என்று கேலியும் செய்கிறார்கள்.


வெளியாட்களை அவர்கள் தங்களோடு இணைத்து கொள்வதோ, அவர்களின் ஆளுமைக்கு கட்டுபடுவதோ கிடையாது. இந்த குழுவினர்களிடம் கிறிஸ்துவ மதமாற்றம் செய்ய வந்த பாதிரி இரண்டு ஆண்டுகள் ஒரு வார்த்தை கூட அவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாமல் தவித்திருக்கிறார்.


வெளிவிஷயங்களை தங்களுக்குள் அனுமதிப்பதில்லை என்பதில் அவர்கள் கறாராக இருக்கிறார்கள். பழைய முறைப்படி விவசாயம் செய்வது வேட்டையாடுவது என்பதில் அவர்கள் மாறுதல் அடையவேயில்லை.
ஆனால் ஆய்வாளர்களின் கண்ணில்பட்ட பிறகு இந்த மக்களை படம் எடுக்கவும் பதிவு செய்யவும் அவர்களிடம் தங்களது சோதனைகளை மேற்கொள்ளவும் பல்வேறு ஆய்வு குழுக்கள் தொடர்ந்து போய்வந்தபடி இருக்கிறார்கள்.


அப்படி சென்று வந்த டேனியல் அந்த மக்களோடு தங்கி அவர்களின் மொழியை கற்றுக்கொண்டு அது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.


என்னை வசீகரித்த விஷயம் கடந்த காலத்தை குறிக்கும் சொற்கள் இல்லாத மொழியாக இது இருப்பதே. 


அழிந்து வரும்  மொழிகள் பற்றிய இன்று தீவிர கவனம் உலகம் எங்கும் பரவி வருகின்றது.


இது குறித்து அ.முத்துலிங்கம் எழுதிய கதை ஒன்று செப்டம்பர் உயிர்மை இதழில் வெளியாகி இருந்தது. மிகச்சிறப்பான கதைகளில் ஒன்று. அது போலவே நாகர்ஜூனன் தனது வலைப்பதிவு ஒன்றில் அழிந்து வரும் மொழிகளின் பட்டியலையும் அது குறித்த பார்வைகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.  அதுவும் மிக முக்கியமான கட்டுரையாகும்


அழிந்து வரும் மொழிகளில் சீனாவில் பெண்கள் மட்டுமே பேசிக்கொள்ளும் ரகசிய மொழியான Nushu அழிந்து போனது பற்றிய தகவல்கள் என்னை பெரிதும் யோசிக்க வைத்தன. ஆயிரம்வருடங்களுக்கு முன்பாக அடிமைகளாகவும் சுகப்பெண்களாகவும் ஒடுக்கபட்ட சீனப்பெண்கள் தங்களுக்குள் பேசிக்  கொள்ள உருவாக்கபட்ட மொழியது. 2004 ல் அந்த மொழி பேசும் கடைசி பெண் இறந்து போனாள். அத்தோடு பெண்களுக்கான ரகசிய மொழி அழிந்து போனது


இந்தியாவில் பேச்சுமொழியாக இல்லாது போன மொழிகளாக AHOM ,AKA-BEA  ,AKA-BO ,AKA-CARI ,AKA-JERU ,AKA-KEDE ,AKA-KOL ,AKA-KORA AKAR-BALE ,A-PUCIKWAR ,INDO-PORTUGUESE ,KHAMYANG ,OKO-JUWOI ,PALI ,TURUNG   போன்றவை அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.


இதை பற்றி வாசித்து கொண்டிருந்த போது தமிழ் அகராதியும் அதில் உள்ள உபயோகிக்கபடாத பல ஆயிரம் சொற்களும் நினைவிற்கு வந்தன. இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் சொற்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. எழுத்திலும் பேச்சிலும் நம்மிடையே இருந்து இன்று பயன்படுத்தபடாமல் போன சொற்களுக்கான தனி அகராதி ஒன்றை உருவாக்கினால் அது மிகப்பெரியதாக இருக்கும் என்றே தோன்றுகிறது.


இல்மொழி என்ற என் குறுங்கதை இத்தோடு இணைத்து வாசிக்கபட வேண்டியது.


விருப்பமிருந்தால் அதையும் வாசித்து பாருங்கள்.


**


 


 

0Shares
0