எதிர்பாராத முத்தம்

இலக்கிய விமர்சகர் ஜேம்ஸ் உட் தி கார்டியன் இதழின் தலைமை இலக்கிய விமர்சகராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். பின்பு அமெரிக்காவிற்குச் சென்று தி நியூயார்க்கரில் வேலைக்குச் சேர்ந்து அங்கும் தொடர்ந்து இலக்கிய விமர்சனத்தை எழுதி வருகிறார்.

இவரது விமர்சனக் கட்டுரைகள் இலக்கியப் படைப்பின் நுட்பத்தை, சிறப்புகளை அழகாக எடுத்துக் காட்டக் கூடியவை. இவரது கட்டுரைகளின் தொகுப்பான SERIOUS NOTICING: SELECTED ESSAYS, 1997-2019 யை வாசித்தேன். 28 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.

லியோ டால்ஸ்டாய், மெல்வில். பால்சாக், ஆன்டன் செகாவ், வி.எஸ் நைபால். வர்ஜீனியா வூல்ஃப், மர்லின் ராபின்சன், லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய், பிரைமோ லெவி என உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் பலரையும் பற்றி எழுதியிருக்கிறார்

ஜேம்ஸ் வுட் பாசாங்கான இலக்கியப் பிரதிகளைக் கடுமையாக விமர்சிக்கக் கூடியவர். செவ்வியல் இலக்கியங்களின் முக்கியத்துவம் குறித்தும், படைப்பில் எழுத்தாளன் கையாளும் மொழி மற்றும் எழுத்தாளனின் அகப்பார்வை எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றியும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இசையில் தோய்ந்து போய் ரசிப்பவர்கள் அதைப்பற்றி எவ்வளவு பரவசத்துடன் பேசுவார்களோ அது போலவே தான் படித்த நாவல்களை, சிறுகதைகளைப் பேசுகிறார்

இந்தத் தொகுப்பில் ஆன்டன் செகாவின் சிறுகதையான முத்தம் குறித்து இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒரு சிறுகதையை எப்படி வாசிக்க வேண்டும். கொண்டாட வேண்டும் என்பதற்கு இக் கட்டுரைகள் ஒரு உதாரணம்.

செகாவின் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் ஜேம்ஸ் வுட். இந்தக் கட்டுரையில் செகாவ் எழுத்துகளின் அடிப்படை மற்றும் தனிச்சிறப்புகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். ஓவியரைப் போலச் செகாவ் காட்சிகளைத் துல்லியமாக விவரிக்கும் முறையைப் பற்றியும், கதாபாத்திரங்களின் நுணுக்கமான சித்தரிப்பு மற்றும் உணர்ச்சிகளை ஆராயும் முறையைப் பற்றியும் விவரிக்கிறார்

முத்தம் என்ற சிறுகதை செகாவின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்று எனக் குறிப்பிடும் ஜேம்ஸ் வுட் ஏன் அப்படிக் குறிப்பிடுகிறேன் என்பதற்கான விளக்கத்தையும் முன்வைக்கிறார்

ஜேம்ஸ்வுட் குறிப்பிடும் செகாவின் முத்தம் சிறுகதையை நான் முன்பே வாசித்திருக்கிறேன். அதைச் சாதாரணக் கதை என்றே கருதியிருந்தேன். ஜேம்ஸ்வுட் அந்தக் கதையைத் திறந்துகாட்டி அதில் வெளிப்படும் முக்கியமான உளவியல் தன்மையைப் பற்றியும், காலப் பிரக்ஞை எப்படி வெளிப்படுகிறது என்பதை அடையாளம் காட்டியதையும் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

ஜேம்ஸ் வுட்டை வாசித்த பிறகு அந்தக் கதையைத் திரும்பப் படித்துப் பார்த்தேன். ஆமாம். அது வைரமே தான்.

ஆன்டன் செகாவின் முத்தம் சிறுகதையில் படைப்பிரிவு ஒன்று முகாமிற்குச் செல்லும் வழியில் மைஸ்டெட்ச்கி கிராமத்தில் தங்குகிறார்கள். அங்கே ஒரு பணக்கார வீட்டில் விருந்து நடைபெறுகிறது. அதில் ரியாபோவிச் என்ற சிப்பாய் கலந்து கொள்கிறான்.

அவன் கூச்ச சுபாவம் கொண்டவன். விருந்தில் நிறைய இளம் பெண்கள் இருப்பதைக் காணுகிறான். பெண்களுடன் பேசவும் நடனமாடவும் தயங்குகிறவன் என்பதால் எந்தக் கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருக்கிறான். இந்த விருந்தில் பெண்கள் நடனமாடுகிறார்கள், மது அருந்துகிறார்கள், இது ரியாபோவிச்சிற்குச் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குகிறது.

விருந்து நடக்கும் மாளிகையின் இருண்ட அறை ஒன்றுக்குள் அவன் நடக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு இளம்பெண் அவனைக் கட்டி அணைத்து முத்தமிடுகிறாள். அதை அவன் எதிர்பார்க்கவில்லை.

அந்தப் பெண் தவறான ஒருவரை முத்தமிட்டுவிட்டோம் என உணர்ந்து பதற்றமாக ஒடுகிறாள். யாரோ ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய முத்தத்தை ரியாபோவிச் பெற்றுவிடுகிறான்.

அந்த முத்தம் ரியாபோவிச்சை உலுக்கிவிடுகிறது. யார் அவள். எதற்காகத் தன்னை முத்தமிட்டாள். இதைத் தற்செயல் என்று எடுத்துக் கொள்வதா, அல்லது கடவுள் அளித்த பரிசா, ஒரு முத்தம் இவ்வளவு இன்பம் அளிக்கக் கூடியதா என்று அவனது மனதிற்குள் எண்ணங்கள் அலைமோதுகின்றன.

அந்தப் பெண் யார் எனக் கண்டுபிடிக்க வேண்டி இளம்பெண்கள் நடனமாடுகிற அறைக்குள் செல்கிறான். இருட்டில் வந்த பெண் யாரெனக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மறக்க முடியாத அந்த முத்தம் அவனுக்குள் புதிய ஆசையை, கனவுகளை உருவாக்கிவிடுகிறது. அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறான்

விருந்துக்குப் பிறகான நாட்களில், அவன் முத்தத்தைப் பற்றித் தொடர்ந்து சிந்திக்கிறார், மேலும் ஒரு சிப்பாயின் அன்றாடச் செயல்கள் தரும் சலிப்பை கடந்து செல்ல அந்த இனிமையான நினைவு உதவுகிறது.

தனது நண்பர்களிடம் எதிர்பாரத முத்தம் பற்றிய நிகழ்வை கதையைப் போலச் சொல்லத் துவங்குகிறான். அப்படிப் பேசுவது கற்பனையான போதையைத் தருகிறது. அதுவரையான அவனது வாழ்க்கையில் என்ன குறைவு என்பதை அந்த முத்தமே காட்டிக் கொடுக்கிறது.

ரியாபோவிச்சின் தனிமையான மனநிலையினையும் எதிர்பாராத முத்தம் உருவாக்கிய மகிழ்ச்சியினையும் செகாவ் சிறப்பாக எழுதியிருக்கிறார். எதிர்பாராமல் கிடைத்த முத்தம் உண்மையில் அற்பமானது என்றும், அதைத் தீவிரமாகச் சிந்திப்பது முட்டாள்தனம் என்றும் ரியாபோவிச் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள முயலுகிறான். ஆனால் அந்த நினைவு மறையவில்லை. மாறாக அவனைக் காதலில் விழுந்தது போல் உணரவைக்கிறது. .

ஜேம்ஸ் வுட்டின் சிறப்பு அவரது உரைநடையில் வெளிப்படும் உணர்ச்சிகரமான தன்மை. இலக்கியக் கோட்பாடுகளை, சித்தாந்தங்களைச் சார்ந்து அவர் இலக்கிய விமர்சனம் செய்வதில்லை. மாறாக வாசிப்பில் தோய்ந்து போய் எழுத்தின் நுட்பங்களை, ரகசியங்களை வியந்து பாராட்டி எழுத்தாளனின் ஆளுமையை அடையாளம் காட்டுகிறார். அதே நேரம் எழுத்தில் வெளிப்படும் போதாமைகளை, குறைகளைச் சுட்டிக்காட்டவும் தயங்குவதில்லை. வி.எஸ். நைபாலை சந்தித்துப் பேசிய நிகழ்ச்சி பற்றிய கட்டுரை இதற்குச் சிறந்த உதாரணம்.

இன்றும் நம்மிடம் உள்ள இலக்கிய விமர்சகர்களில் ஜேம்ஸ் வுட்டே முதன்மையானவர். அவர் எழுத்தாளர்களின் புகழை வைத்து அவர்களின் புத்தகங்களை எடைபோடுவதில்லை. கறாராக, தங்கத்தை உரசிப்பார்த்து எடை போடுகிறவரைப் போல, தனது ஆழ்ந்தவாசிப்பின் மூலம் இலக்கியப் பிரதிகளை அணுகி மதிப்பீடு செய்கிறார். அது சில எழுத்தாளர்களுக்கு எரிச்சலை உருவாக்குகிறது. அவர்கள் ஜேம்ஸ் வுட்டை கடுமையாகத் திட்டுகிறார்கள். அவற்றைக் கடந்து தீவிரமாகவும், உண்மையாகவும் ஜேம்ஸ் வுட் தொடர்ந்து எழுதி வருகிறார் என்று பேட்ரிக் மேக்ஸ்வெல் குறிப்பிடுகிறார்.

இது சரியான மதிப்பீடு என்பதை SERIOUS NOTICING: SELECTED ESSAYS கட்டுரை தொகுப்பு உறுதி செய்கிறது.

0Shares
0