லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளில் மோசமான மேயரின் கதாபாத்திரம் தொடர்ந்து இடம்பெறுகிறது. அங்குள்ள அரசியல் சூழலின் அடையாளமது. Herod’s Law திரைப்படம் அதிகாரத்திற்கு வரும் எளிய மனிதர் எப்படி மோசமானவராக மாறுகிறார் என்பதை விவரிக்கிறது.
லூயிஸ் எஸ்ட்ராடா இயக்கிய Herod’s Law மெக்சிகோவின் PRI கட்சியின் ஆட்சியின் போது நடந்த ஊழல் பற்றிய அரசியல் நையாண்டி படமாகும்.
1940 களில் சான் பெத்ரோ நகரின் மேயர் மிக மோசமான முறையில் கொல்லப்படுகிறார். அங்கிருந்து படம் துவங்குகிறது. அந்த நகரில் குறுகிய காலத்திற்குள் மூன்று மேயர்கள் தலைவெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆகவே அது குறித்த கடுமையான விமர்சனத்தை அரசு சந்திக்கிறது.
பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சியின் மீதான விமர்சனத்தைத் தடுக்கும் வகையில், உடனடியாக ஒருவரை மேயராக நியமிக்க மாநில ஆளுநர் சான்செஸ் முடிவு செய்கிறார்.
இதை நிறைவேற்றும்படியாகத் தனது துணைச் செயலர் லோபஸுடம் உத்தரவிடுகிறார். அவரோ இதனைத் தன்னிடம் பணியாற்றும் ராமிரெஸுடம் ஒப்படைக்கிறார். அவர் நீண்ட காலம் கட்சிக்கு பணியாற்றிய அப்பாவியான யுவான் வர்கஸ் என்பவரைச் சிபாரிசு செய்கிறார்.
இங்கிருந்தே படத்தின் அரசியல் நையாண்டி துவங்கி விடுகிறது. கட்சியில் யாரும் எதற்கும் பொறுப்பு எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார்கள்.
கட்சியின் தீவிர விசுவாசியான வர்கஸ் இதுவரை எந்தப் பொறுப்பிற்கும் வந்தது கிடையாது. அடிமட்ட நிலையில் கட்சிக்கு பணியாற்றியவர். தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறார்.
வர்கஸால் தனக்கு அளிக்கப்பட்ட பதவியை நம்ப முடியவில்லை. அவரது மனைவி குளோரியா புதிய வாழ்க்கை துவங்கி விட்டது என மகிழ்ச்சி அடைகிறார். அவர்கள் ஒரு காரில் சான் பெத்ரோ நகரை நோக்கி செல்கிறார்கள்.
சான் பெத்ரோ மிகவும் பின்தங்கிய பகுதி. பூர்வ குடி விவசாயிகள் வாழும் மலைநகராகும். அங்கே மின்சாரம் கிடையாது. குடிநீர் வசதி, பள்ளி, மருத்துவமனை என எதுவும் கிடையாது. நூற்றுக்கும் குறைவான மக்கள் வசிக்கும் புழுதியும், தூசியும் நிறைந்த அந்நகரம் கைவிடப்பட்ட பாழ்நிலம் போலக் காட்சியளிக்கிறது.
மேயர் அலுவலகத்தைச் சேர்ந்த பெக் அவர்களை வரவேற்று அழைத்துப் போகிறார். அந்தக் காட்சியில் வர்கஸ் அடையும் திகைப்பு அழகானது. அந்த ஊரே வேண்டாம் என ஒடிவிட நினைக்கும் அவனைக் குளோரியா தான் கட்டாயப்படுத்திப் பதவி ஏற்க வைக்கிறாள்.
மேயரின் அலுவலகம். வீடு. அங்கு நடைபெறும் நிகழ்வுகள் யாவும் வேடிக்கையாக உள்ளன.
காலியான கஜானாவை வைத்துக் கொண்டு எப்படி நகரை நிர்வாகம் செய்வது என வர்கஸிற்குப் புரியவில்லை. ஆனால் சண்டை சச்சரவுகள் இல்லாத இடமாகவும், சகல வசதிகளும் கொண்ட நவீன நகரமாகவும் மாற்றிக் காட்டுவேன் என்று உறுதியளிக்கிறான். அந்த வாக்குறுதியை ஊர்மக்கள் எவரும் பொருட்படுத்தவில்லை.
அடுத்தச் சில நாட்களில் அங்கு வசிக்கும் பூர்வகுடி விவசாயிகளையும் முந்தைய மேயர்கள் செய்த ஊழல்களையும் பற்றி வர்கஸ் அறிந்து கொள்கிறான்.
சான் பெத்ரோவில் ஒரு விபச்சார விடுதி நடைபெறுகிறது. அதை டோனா என்ற நடுத்தரவயதுப் பெண் நடத்துகிறாள். அந்த ஊரிலுள்ள பாதிரியார் பேராசை பிடித்தவர். அவர் ஒரு பாவத்திற்கு ஒரு பெசோவை வசூலிக்கிறார். ஊரில் ஒரு டாக்டர் இருக்கிறார். அவருக்கு வர்கஸை பிடிக்கவில்லை.
இந்த நிலையில் வர்கஸ் சான் பெத்ரோவின் மேம்பாட்டிற்கான நிதி கேட்டு தலைநகருக்குப் புறப்படுகிறான். வழியில் அவனது கார் பழுதடைந்து நிற்கிறது. அந்த வழியில் தனது வாகனத்தில் வந்த ஸ்மித் என்ற அமெரிக்கன் உதவி செய்கிறான். காரை பழுது நீக்கி கொடுத்ததிற்கு ஸ்மித் அதிகப் பணம் கேட்கிறான். கையில் பணமில்லாத வர்கஸ் தான் சான் பெத்ரோவின் மேயர் என்பதால் அங்கே வந்து வாங்கிக் கொள்ளும்படி உத்தரவிடுகிறான். ஸ்மித் அந்த நகருக்கு வந்து சேர்ந்து வர்கஸிற்கு மோசமான ஆலோசனைகள் வழங்குகிறான்
மெக்சிகோ அரசிற்கு அமெரிக்க ஆலோசகர்கள் பரிந்துரைக்கும் திட்டங்களைக் கேலி செய்வதற்காகவே ஸ்மித் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
தலைநகரில் அவன் கேட்ட நிதியை தருவதற்குப் பதிலாக அரசியல் அமைப்பு சட்ட நூலையும் ஒரு ரிவால்வரையும் பரிசாக அளிக்கிறார்கள்.
இதில் உள்ள சட்டத்தைப் பயன்படுத்தித் தேவையான நிதியை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்கிறார்கள்.
சட்டப்புத்தகமும் துப்பாக்கியும் இருந்தால் போதும் எந்த ஊரையும் நிர்வாகம் செய்துவிடலாம் என்பதை வர்கஸ் உணருகிறான். மெக்சிக அரசியல் அமைப்பு சட்டத்தின் “பயனற்ற” பக்கங்களைக் கிழித்து, எழுதப்பட்ட சட்டத்தை விரிவுபடுத்தித் தனக்கான சட்டங்களை வர்கஸ் உருவாக்கிக் கொள்கிறான்.
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவன் விவசாயிகள் மற்றும் விபச்சார விடுதி பெண்ணிடம் லஞ்சம் பெறத் துவங்குகிறான். அதற்கு அவன் சொல்லும் காரணங்கள் வேடிக்கையானவை. பணம் கொடுக்க முடியாதவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறான். நாட்கள் செல்லச் செல்ல வர்கஸ் சர்வாதிகாரி போல உருமாறுகிறான்
அவனும் அவனது மனைவியும் ஊழல் செய்வதற்குப் பல்வேறு தந்திரமான வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களிடம் பணம் கொட்டுகிறது.
சான் பெத்ரோவில் அவன் வைத்தது தான் சட்டம். அவனைப் பதவியை விட்டு நீக்க வேண்டும் என டாக்டர் அரசிற்குப் புகார் அளிக்கிறார்.
டாக்டர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டினை உருவாக்கி அவரைக் கைது செய்கிறான். உயிர் பிழைக்க வேண்டி டாக்டர் அவனிடம் சமரசம் செய்து கொள்கிறார்.
அவனை மதிக்காத டோனா அடியாளை வைத்து அவனை அடித்துப் போட முயலுகிறாள். ஆத்திரத்தில் அவளைச் சுட்டுக் கொன்றுவிடுகிறான் வர்கஸ் . அந்தக் கொலையை மறைக்க குடிகாரனான ஃபைல்மோனை கொலைகாரனாக மாற்றுகிறான். இந்தச் சதிக்கு திட்டமிட்டவர் டாக்டர் என்று கதை கட்டுகிறான். பின்பு தான் கைது செய்துள்ள ஃபைல்மோனை காரில் சிறைக்குக் கொண்டு செல்லும் போது அவனையும் கொன்றுவிடுகிறான்.
அப்பாவியாக அந்த நகருக்கு வந்த வர்கஸ் மிக மோசமான மேயராக உருமாறுவதுடன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யத் துவங்குகிறான். முயல் போல வந்தவன் ஓநாயாக மாறுவதை நகைச்சுவையாகப் படம் சித்தரிக்கிறது.
அவனது பதவியைப் பறிப்பதற்கான முயற்சி நடக்கிறது. ஆனால் அதைத் தந்திரமாக முறியடிக்கிறான். வர்கஸ் போன்றவர்களை அழிக்கவே முடியாது. அவர்கள் எதையாவது செய்து அதிகாரத்தின் மேல்மட்டத்தை நோக்கி சென்றுவிடுவார்கள் என்பதைப் படம் உண்மையாகச் சித்தரிக்கிறது.
பெக் என்ற நகராட்சி செயலாளர் அரியதொரு கதாபாத்திரம். மேயர்கள் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர் மாறுவதேயில்லை. அவரது வரவேற்பும் மாறுவதில்லை.
படத்தின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியானது. டாமியன் அல்காசர் வர்கஸாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அதிகாரத்திற்கு வந்தவுடன் உருமாறிப் போகும் வர்கஸின் கதாபாத்திரம் மெக்சிகோவிற்கு மட்டும் உரியதில்லை. உலகெங்கும் இவரைப் போன்ற அரசியல்வாதிகள் பதவிக்கு வருகிறார்கள். ஊழல் செய்கிறார்கள். பின்பு பதவி நீக்கபடுகிறார்கள். ஆனால் அவர்கள் செய்த அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலை இன்னொருவர் அதைவிடக் கூடுதலாக. மோசமாகச் செய்ய ஆரம்பிக்கிறார் என்பதே மாறாத நிதர்சனம்.