எனக்குப் பிடித்த கதைகள் 21

சிறுவர் விளையாட்டு – வில்லி ஸோரன்ஸன் (டேனிஷ்)

தமிழில்: நகுலன்

ஒரே தாய் தகப்பன்மாருக்குப் பிறந்த விசேஷத்தினால் சகோதரர்களான அவ்விரு சிறுவர்கள், அதே முறையில் பொதுவாக ஒரு மாமனையும் பெற்றிருந்தார்கள். சிறுவர்களுடைய மாமனுக்கு ஒரு காலை முறிக்கவேண்டிய அவசியமேற்பட்டது. இதனால் அவ்விரு சிறுவர்களும், தங்கள் மாமனைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். சிறுவர்களுடைய பரபரப்பைச் சாந்தப்படுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுக்கு இது விஷயமாக விஞ்ஞான ரீதியாக விஷயத்தை விளக்கிக்காட்ட வேண்டுமென்று நிச்சயித்தார்கள்.

அதற்காக அவர்கள் சிறுவர்களிடம் இவ்வாறு சொன்னார்கள். அவர்களுடைய மாமாவுடைய கட்டை விரலில் ஒரு ஓட்டை விழுந்துவிட்டது. அதன் மூலம் ஏராளமான பூச்சிகள் ஏறி கால் முழுவதும் பரவிவிட்டன. இவை கண்ணுக்குத் தெரியாத சிறு கிருமிகள். அவர்களுடைய தகப்பனார் இவைகளைப் பாக்டீரியா என்றும், தாயார் பாஸில்லை என்றும் விவரித்தார்கள்; பாக்டில்லா என்றும், இளையவன் பாட்டரிகள் என்றும், பெயர் சொல்லி நினைவில் வைத்துக் கொண்டார்கள். இந்த விசித்திரப் பூச்சிகள் ஒரு சிவந்த கோடு கிழித்த மாதிரி மாமாவின் கால் மீது சாரியாகச் செல்ல ஆரம்பித்தன; அவை மாமாவின் தேகம் முழுவதும் வியாபித்து விட்டால், மாமா செத்துப்போய் விடுவார். எனவே அவரைக் காப்பாற்ற அவர் காலை வெட்டும்படி நேர்ந்தது. ஆனால், இப்பொழுது நிஜக்காலைப் போலவே ஒரு பொம்மைக் காலை வைத்துக்கொண்டு, உயிரோடு உலாவி வருகிறார். இவ்வாறு தாங்கள் விஷயத்தை விளக்கிச் சொல்லிவிட்டதால் சிறுவர்கள் பரபரப்புத் தீர்ந்திருக்கும் என்றும் பெற்றோர்கள் நினைத்தார்கள்.

ஒரு சிறு பையன் வெற்றுக்காலுடன் ஒரு குதிரை வண்டியின் அருகில் ஓடிவந்து கொண்டிருந்தான். நாலுகால் இருந்தும் குதிரை எவ்வாறு ஓட முடிகிறது என்பதை அறிய அவன் முயன்று கொண்டிருந்தான். ஆனால் திடீரென்று தான் எப்படி ஓடவேண்டுமென்பது அவனுக்கு மறந்துவிட்டது. எதிர்பாராத விதம் அவனுக்குக் கால்கட்டை விரலில் பொறுக்க முடியாத வலி ஏற்பட, தேகம் முழுவதும் அவனுக்கு அந்த வேதனை மயமாகிவிட்டது.

அவன் ஒரு காலால் நொண்டிக்கொண்டு “ஊ’ என்று ஊளையிட்டுக்கொண்டு, தன் துளி முகத்தைச் சுளித்துக்கொண்டான். அவன் தன்னுடைய கட்டைவிரலை, ஒரு பாறாங்கல்லில் தட்டிக்கொண்டதனால், அதிலிருந்து ஒரு துளி ரத்தம் பீறி சாக்கடையில் சிந்தியது… சிந்தியதைப் பார்த்துக்கொண்டு அவனைவிடச் சற்றுப் பெரிய, மேற்கூறிய, இரு சகோதரர்களும் வந்தார்கள்.

“ஐயோ இவனுக்கு ரத்தம் நாறி விஷமாகிவிட்டது, உடனே, பையா, நீ உடனே போய் ஒரு டாக்டரிடம் இதைக் காண்பிக்க வேண்டும்” என்று இளைய சகோதரன் அவனிடம் கூறினான்.

“மாட்டேன்! டாக்டர் கிட்ட நான் போகமாட்டேன்!”

“உனக்கு ஒன்றும் தெரியாதுபோலத் தோன்றுகிறது. உன்கால் கட்டை விரலில் நீ ஒரு ஓட்டை வருத்தி வைச்சிண்டிருக்கே; இதிலிருந்து பல பூச்சிகள் பரவி கால்வரை ஏறிடும்!”

அந்தச் சிறு பையன் தன் கால் பெரு கட்டை விரலைச் சுவாரஸ்யமாக ஏதோ காணாததைக் கண்டததைப்போல பார்த்துக்கொண்டிருந்தான்.

“நீ என்னைச் சும்மா கேலி செய்யறே. என் கட்டை விரலில் ஒரு பூச்சியும் இல்லை.”

“ஆமாம், இருக்காது. அவை ரொம்ப ரொம்ப சின்ன பூச்சிகள். கண்ணுக்குத் தெரியாத சின்னப் பூச்சிகள். இதைப் பாட்டரிகள் என்று சொல்லுவார்கள்!”

“இல்லை, பாக்டில்லா” என்று மூத்தவன் புத்திசாலித்தனமாக இளையவனைத் திருத்தினான். மேலும் அவன் தொடர்ந்தான்: “”இந்தப் பூச்சிகள் உன் உடல் பூரா வந்தா, நீ செத்துப்போயிடுவே. அதனாலே காலை வெட்டிவிடவேண்டும்.”

“எனக்கு என் கால் வேணும். என்னுடைய கால் எனக்குத்தான் சொந்தம்” என்று கூறிக்கொண்டு அப்பையன் தன் காலைத் தன் இரு கைகளாலும் பிடித்துக்கொண்டான்.

“உனக்குச் சாகணும் என்று ஆசையா இருக்கா?”

“ஆமாம்” என்று அந்தச் சிறுபையன் சொன்னான். மற்றவர்களைப்போல் அவனும் சாவு எப்படி இருக்கும் என்று பரிக்ஷித்துப் பார்த்ததே இல்லை. ஆதலால் அவனுக்கு அது அவ்வளவு முக்கியமாகத் தோன்றவில்லை.

“இவனுக்குச் சாகிறது என்றால் என்ன என்று தெரியாது. வெறும் அசடு, செத்தா, அப்புறம் உயிரோடு இருக்க முடியாது; இதுகூட உனக்குத் தெரியாதா?”

“இருக்க முடியாவிட்டால் வேண்டாம்!”

“நீ உயிரோடு இல்லாவிட்டால் உன்னாலே சாப்பிட முடியாது; விளையாட முடியாது.”

“அப்படியானால் பரவாயில்லை; நான் குதிரை!”

“செத்துப் போயிட்டா, நீ குதிரையாகக்கூட இருக்க முடியாது.”

“நான் சாகல்லையே.”

“நீ சுத்த முட்டாள். உன் காலை வெட்டி எடுக்காவிட்டால், நீ செத்துப் போய்விடுவாய். உன் ரத்தம் நாறி விஷமாயிடுத்து. இப்பவே ஏராளமாகப் பாக்டில்லா வெல்லாம் உன் முழங்கால் வரை பரவியிருக்கும். நீ டாக்டர் கிட்டப்போய், உன் காலை வெட்டிவிட வேண்டும்.”

“நான் டாக்டர் கிட்டப்போகமாட்டேன். அவர் ஊசி போடுவார்.”

“டாக்டர் ரொம்ப கெட்டிக்காரர். பாட்டரிகளால் உனக்கு ஆபத்து வராமல் இருக்க அவர் உன் காலை முறித்துவிடுவார்” இவ்வாறு இளையவன் தொடர்ந்தான்.

“பாட்டரிகள் இல்லை, பாக்டில்லா” என்று மூத்தவன் அவனைத் திருத்தினான்.

இதற்குள், அந்தச் சிறுவனுடைய கால்கட்டை விரலில் ரத்தம் கசிவது நின்றுவிட்டது. ஆனால் பையன் மிகவும் பயந்துவிட்டான். அவன் தன் தலையை உள்ளே போகும் அளவிற்குத் தன் வாயைப் பிளந்துகொண்டு, உரக்க ஊளையிட ஆரம்பித்துவிட்டான். மற்ற இரு பெரிய பையன்களும் } அவர்களை விடப் பெரிய சிறுவர்கள் பக்கத்தில்தான் அவர்கள் சிறு பையன்கள் என்ற உணர்வு அவர்களுக்குத் தோன்றும் } அவனுக்காக இரக்கப்பட்டார்கள்.

“பரவாயில்லை. நாங்களே செய்துவிடுகிறோம். இவனை நாம் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய், இவன் காலை முறித்துவிடலாம். நம்முடைய சிறிய அரம் இதற்குப் போதும்” என்று மூத்தவன் சொன்னான்.

“ஆனால்… நம்மால் எப்படிச் செய்ய முடியுமா?” என்று இளையவன் தயங்கினான்.

“ஏன், நாம் தாராளமாகச் செய்யலாம். நேற்று அந்த மரத்தின் அடிப்பாகத்தை அவ்வளவு லாகவமாக அறுத்த எனக்கு, இந்த ஒல்லிக்காலை அறுப்பதா கஷ்டம்? ஏன் தம்பி, உன் பெயரென்ன?”

“பீட்டர்” என்று அந்தப் பையன் சொன்னான். அவன் அழுத அழுகையில் அவனால் பேசக்கூட முடியவில்லை.

“சரி, பீட்டர், நீ என்னோடே வா. நீ டாக்டர் கிட்டப் போகவேண்டாம். உனக்காக நானே உன் காலை முறித்து விடுகிறேன்.”

“எனக்கு என் கால் வேணும்” என்று அந்தப் பையன் உரக்கக் கத்தினான்.

“எனக்கு உன் கால் கூட வேணும்; ஏன் என்றால், நான் ஒரு குதிரை!”

“உன் கால் உன் கிட்டத்தான் இருக்கும். அதைத் தவிர உனக்கு நிஜக்கால் மாதிரியே ஒரு பொம்மைக்கால் கூடக் கிடைக்கும். உனக்கு ஆக மொத்தம் மூணு கால் கிடைக்கும். ஆனால் நாம் சீக்கிரம் போக வேண்டும்; ஏனென்றால் இந்தப் பாக்டில்லாப் பூச்சிகள் ரொம்ப சீக்கிரம் உன் மாதிரிப் பையன்களுடைய சின்னக்கால் முழுவதும் பரவிவிடும்.”

“ஆனால், என் காலை, நானே வைத்துக்கொள்ளலாமா?”

“ஆமாம். அதற்கென்ன சந்தேகம். ஏன், நீ அதை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சென்று, அதனுடன் விளையாடக்கூடச் செய்யலாம்.”

“”நான் பெரியவனானால் ஒரு குதிரையாகப் போவேன்” என்று அந்தச் சிறு பையன் அவ்விருவர்களுடன் சுவாதீனமாகப் பேசிக்கொண்டு சென்றான். “”ஒரு குதிரை எவ்வளவு வேகமாக ஓடும் தெரியுமா?”

பெரிய பையன்கள் இருவரும் அவனுடன் ஆமோதித்தார்கள்; இவ்வாறு செய்வதில் அவர்கள் தாங்கள் என்னவோ அவனைக் கெளரவித்த மாதிரி கர்வம் அடைந்தார்கள்.

“”நமது இருவருடைய பெயர்களையும் பத்திரிகைகளில் பிரசுரிப்பார்கள்” என்று மூத்தவன் இளையவனிடம் ரகசியமாகச் சொன்னான்.

அதிர்ஷ்டவசமாக, அவர்கள் சென்றபொழுது வீட்டில் ஒருவருமில்லை. அவர்கள் பீட்டரைச் சமையலறை மேஜை மேல் கிடத்தினார்கள். பிறகு பெரியவன் அரத்தைத் தேடிக்கொண்டு எடுத்துவரச் சென்றான். பீட்டர் குதிரைகள் எவ்வளவு வேகமாக ஓடும் என்பதைப் பற்றி வார்த்தைகளைக் கொட்டி அளந்துகொண்டிருந்தான்; இளையவன் அவன் நிக்கரை அவிழத்தபொழுதும், பெரியவன் அரத்தை எடுத்துக்கொண்டு தன் வேலைக்கு ஆயத்தமானபோதும்கூட அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் அரத்தினுடைய கூர்மையான பற்கற் அவன் காலில் உரசின பொழுதுதான் வீட்டுக்குப் போக வேண்டுமென்று கூக்குரலிட்டுக் கத்த ஆரம்பித்தான். மற்ற இரு பையன்களாலும் அவனை என்ன சொல்லியும் சாந்தப்படுத்த முடியவில்லை.

எனவே, அவனைத் துணி உலர்த்துவதற்குக் கட்டியிருந்த கயிற்றைக் கொண்டு மேஜையுடன் சேர்த்துக் கட்ட வேண்டி வந்தது. சின்னப் பையனாக இருந்தாலும் அவனிடம் அதிசயிக்கும்படியான பலம் இருந்தது. அவன் தேகம் முழுவதும் கயிற்றைக் கட்டிப் பிடித்துப் பிறகு அவன் தேகத்தை அசையாமல் மேஜையில் வைத்துக் கட்டுவதற்கு ஒரு கற்பாந்த காலம் என்று சொல்லும்படி அதிக நேரம் பிடித்தது. கடைசியாக அங்குமிங்கும் நகர முடியாதபடி அவனைக் கட்டிவிட்டார்கள்.

சிறுவன் பிரமை பிடித்தவன் மாதிரி அலறிக்கொண்டிருந்தான். அவன் எழுப்பின கூக்குரலில் பெரியவன் சின்னவனுக்கு அவன் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதைச் சின்னவனால் கேட்க முடியவில்லை. எனவே கடைசியாக அவன் அப்பையனின் சப்தத்தை அடக்குவதற்கு அவன் அலறிக் கொண்டிருக்கும் வாயில் ஒரு கைக்குட்டையைத் திணிக்க வேண்டி வந்தது. அவன் இவ்வாறு செய்கையில் அவன் கைகளை அந்தச் சிறுவன் கடித்தகடியில் அவன் விரல்களிலிருந்து ரத்தம் பொத்துக்கொண்டு வெளியே வந்தது. ஆனால் அந்தப் பையன் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. அவன் திடசாலி.

அச்சிறுவன் முழங்காலுக்கு மேல், அவன் காலில் அதிரும்படி நன்றாக அரத்தை அழுத்தி வைத்தான். அவ்வளவு சிறிய காலிலிருந்து அவ்வளவு அதிகமாக ரத்தம் வந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது; ஆனால் சகோதரர்கள் இருவரும் ரத்தம் முழுவதும் எவ்வளவு விரைவாக விஷம் பரவிவிட்டது என்பதற்கு அத்தாட்சியாக அதைக் கருதினார்கள். இனிமேலும் விஷம் பரவாமல் சீக்கிரம் தடுக்க வேண்டும். அவன் அரத்தால் காலை அறுத்துக் கொண்டிருந்தான்; ரத்தம் தோய்ந்த சதை துண்டு துண்டாகப் பிய்த்துக் கொண்டு, அவன் அறுத்த இடத்திலிருந்து வந்துகொண்டு இருந்தது. அறுத்த இடம் சரியாக இல்லாமல் சற்றுக் கோணலாகவே இருந்தது.

“”ப்பா; ராவுவதற்கு இசையாது போலிருக்கு, இது; நீ சற்று ராவிப் பார்” இவ்வாறு மூத்தவன் இளையவனிடம் சொன்னான்.

தம்பி, ஒரு நிச்சயமில்லாத, மனதுடன், வேலையைத் தொடங்குவதற்கு ஆரம்பித்தான். ஏனென்றால் இதற்கு முன்னர் அவன் அண்ணன் அந்த அரத்தைக் கடனுக்குக்கூட அவனுக்குக் கொடுக்க மாட்டான். அவனுக்கு அரங்கொண்டு அறுத்துப் பழக்கமில்லாததால், “”அரத்தைக் கொண்டு ராவுவது சுவாரஸ்யமாக இருக்கிறது” என்றான்.

“”ஆனால் உன்னாலே ஒன்றும் பண்ண முடியாதுபோல் இருக்கு. நீ மாறு; நானே செய்து பார்க்கட்டும்.”

பெரியவன் மீண்டும் அரத்தைக் கொண்டு ராவ ஆரம்பித்தான்; சின்னவன் சந்தோஷத்தால் ரத்தக் களரியான அந்த அறையின் தரை மீது அங்குமிங்குமாக பிலம் சாடிக் கொண்டிருந்தான்.

“”இது ஒரு உதவாக்கரைக் கால்… அறுத்து எடுக்க வராது போலிருக்கு” என்று பெரியவன் சொன்னவுடன் சின்னவனுக்கு அது பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது.

“”என்னிடம் அரத்தைக் கொடு; நான் பார்க்கட்டும்.”

அவனிடம் ஒன்றும் பேசாமல் பெரியவன் அரத்தைக் கொடுத்தான். ரத்தம் மழை மாதிரி விடாமல் தரையில் சொட்டிக் கொண்டிருந்தது. கொட்டின ரத்தம் பெரிய பாம்பு மாதிரி தரை மீது வளைந்து சென்றது.

“”அம்மா வருவற்குள் நாம் இதையெல்லாம் சரிப்படுத்திவிட வேண்டும்.”

சின்னவன் அரத்தால் அறுப்பதை நிறுத்திவிட்டுத் தன் அண்ணனை ஆச்சரியத்துடன் பார்த்தான். அண்ணன் தேகம் வியர்த்துக் கொட்டுவதை அவன் கண்டான்.

“”ஆனால்… அவன் ரத்தம் விஷமாய் விடாதா?”

“”ஆனால், எனக்கென்ன?அப்பா வீட்டுக்கு வந்ததும், நம்மை அடிப்பார்.”

“”பிறகு, நமது பெயர் பத்திரிகையில் வராதா?”

“”நம்மைத் தூங்கப் போகச் சொல்லுவார்கள்.” சின்னவன் மூக்குத் துறுதுறுவென்றது. அவன் அரத்தைக் கீழே போட்டான். அது விழுந்து ரத்தத்தை அவர்கள் மீது வாரி இறைத்தது.

“”கால் ஓட்டை, இப்பொழுது அந்தப் பாட்டரியே வெளியே வரக்கூடிய அளவிற்குப் பெரிதாய்விட்டது, இல்லையா?”

அவன் பீட்டரின் காலில் இருந்த குழம்பிக்கிடந்த காயத்தைச் சுட்டிக்காட்ட முயற்சி செய்தான். ஆனால் அவன் தோள் ஒரே கனமாக இருந்ததால் அவனால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

இப்பொழுது இந்தக் காரியத்தில் சுவாரஸ்யத்தையிழந்த அண்ணன், “”இருக்கலாம்” என்று பதில் சொன்னான். அவன் பீட்டரின் வாயிலிருந்து கைக்குட்டையை முரட்டுத்தனமாக வெளியிலே எடுத்தான்; ஆனால் பீட்டரின் வாய் மறுபடியும் மூடிக் கொள்ளவில்லை. அந்தச் சிறுவன் கண்கள் உத்தரத்தை நோக்கிப் பார்த்தவண்ணம் கிடந்தான்; அவன் தன் வாயை மூடிக் கொள்ளக்கூடக் கஷ்டப்படவில்லை.

“”வெறும் முட்டாள் மாதிரி இல்லையா பார்க்க இருக்கிறான்” என்று பெரியவன் மிக வெறுப்புடன் கூறினான்.

“”ஆனால் அவன் அசடுதானே, அவன் குதிரையைப் பற்றிப் பேசினதெல்லாம்…”

“”நீ இப்பொழுது வீட்டுக்குப் போகலாம். வேண்டிய அளவு உன் காலை முறித்தாகி விட்டது?” என்று பெரியவன் பீட்டரிடம் சொன்னான்.

“”ஆனால் நாம் முதலில் அவன் கட்டை அவிழ்க்க வேண்டும்.”

“”அவன் என்ன சின்னக் குழந்தையா?” தன்னைத்தானே அவனால் தன்னுடைய கட்டை அவிழ்த்துக் கொள்ள முடியாதா?”

பெரியவன் பீட்டர் கட்டப்பட்ட கயிற்றை வெகு கெட்டியாக இழுத்தான். அது அவனையும் பீட்டரையும் சுற்றி ஒரு பிடி கயிறு மாதிரி வளைத்துக்கொண்டது. அவன் கோபத்தில் ஒரு மிகக் கெட்ட வசவு வார்த்தையைச் சொல்வதைக் கேட்ட, அவன் தம்பி அவனைப் பெருமை பொங்கி மிளிரும் கண்களுடன் பார்த்தான். கடைசியாக அவர்கள் கட்டை அவிழ்த்தார்கள்; ஆனால் பீட்டர் தன் ஓட்டை கண்களுடன் பிளந்த வாயுடனும் மேஜை மீது கிடந்தான்.

“”அவன் அசையக்கூட மாட்டேங்கறானே” என்று இளையவன் ஒரு புரியாத குரலில் கூறினான்.

“”அவன் ஏன் அசைவான். அவன் செத்து விறைச்சுன்னா கிடக்கான்.”

“”நிஜம்மா… அவன் செத்துட்டானா?”

“”அவன் செத்தாச்சு என்பது என்னவோ வாஸ்தவம். அவன் மாத்திரம் அசையாமல் இருந்திருந்தான் ஆனால்… நாம்ப அவனை } அந்த முட்டாளை மேஜையுடன் சேர்த்துக்கட்டுகிற வரையில் பாக்டில்லா சும்மாக் காத்திண்டுருக்குமோ?”

“”ஆனா…இன்னமே அவன் பிழைக்கமாட்டானா?”

“”ரத்தம் விஷமாகிச் செத்தவன் எங்கெயாவது பிழைத்து எழுந்திருப்பானா? மேஜை மேலேயும், இங்கு அறை இருக்கிற கோலத்தையும் பாரேன்.”

சின்னவன் பார்த்தான். பார்த்த உடனே அவன் அரையிலேயே மூத்திரம் பெய்துவிட்டான். அவன் மூத்திரம் அவன் கால் மீது ஒழுகி, ஒரே தரை மீது உள்ள ரத்தத்தில் சொட்டிக் கலந்தது. இதைத் தன் அண்ணனிடமிருந்து மறைக்க, அவன் பலமாக அழ ஆரம்பித்தான்.

“”சரிதாண்டா, நிறுத்து, அம்மா வரத்துக்கு முன்னாடி இதெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும்; பையனை எடுத்து தெருவிலே போடு; இன்னமே அவனால ஒருத்தருக்கும் உபயோகமில்லை. நான் தரையை மெழுகிச் சுத்தம் படுத்தணும். உன்னாலே அதைச் செய்ய முடியாது.”

“”ஆனா, நான் அவனைத் தனியாத் தூக்க முடியாதே… நீதானே இதை ஆரம்பிச்சே… உன்னுடைய அரம்தானே…”

“”வாயை மூடுடா, அழுகுணி, காலைப் பிடிச்சு, இழுத்துண்டு போ. ஆனா ஒருத்தரும் ஒன்னைப் பார்க்காமே கவனிச்சுக்கோ… பார்த்தா நாம்பதான் அனைக் கொன்னுட்டோம்னு நினைப்பார்கள்… அப்புறம் நம்மை ஜெயிலுக்கு அனுப்பிச்சிடுவார்கள்.”

“”ஆனா… அவன் ரத்தம் விஷமானதால் அல்லவா இறந்தான்.”

“”அது அவர்களுக்குப் புரியும் என்று நீ நினைக்கிறாயா? சரி, ஆரம்பி வேலையை.”

அவன் மேஜை மீதிருந்த சவத்தை எடுத்தான். அது தரையில் விழுந்ததால், ரத்தம் சுவரின் மீது பட்டையாக விழுந்தது; அவன் பயத்தினால் அலறினான்.

“”வக்குத் தெரியாத கழுதை” என்று சின்னவன் அவனை நோக்கிக் கத்தினான்.

“”இவ்வளவுதானா?” என்று அவன் திரும்பி வந்ததும் தன் அண்ணனை நோக்கிக் கேட்டான். அவன் சகோதரன் குனிந்து தரையை அழுத்திச் சுத்தம் செய்துகொண்டிருந்தான்.

“”நான் இப்பொழுது என்ன செய்வது?” இதைச் சொன்னவுடன் பெரியவன் குரல் துடித்தது. அவன் கண்களில் அழுகை முட்டிக்கொண்டு நிற்பதைப் பார்த்தா சின்னவன் உள்ளம் வெற்றியுணர்ச்சியுடன் துள்ளிற்று.

“”என்னை ஒருத்தரும் பார்க்கவில்லை. நான் அவனைத் தெருவில் வீசி எறிந்துவிட்டேன். அவன் ஒன்றுமே பேசவில்லை. ஆனால் அவன் குதிரைகளைப் பத்தி அசட்டுப் பிசட்டு என்று பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டே நிற்பதற்கு நான் என்ன சின்னக் குழந்தையா என்ன?”

அவர்கள் ரத்தம் படிந்த ஜலம் இருந்த வாளியை ஜலதாரையில் கவிழ்க்க எடுத்தார்கள். அப்பொழுது வாசற் கதவை யாரோ தட்டுவது அவர்கள் காதில் கேட்டது.

“”நாம்ப திறக்கக் கூடாது!” சின்னவனுக்கு மறுபடியும் அரையோடு மூத்திரம் வந்துவிடவே, அவன் தன் அண்ணனைப் பரிதாபமாகப் பார்க்க, அவனும் அரையுடன் விஸர்ஜனம் செய்தான். ஆனால் கதவை வெளியிலிருந்து தட்டுவது ஓயவில்லை. சின்னவன் போய் ஜன்னல் திரைகள் மூலம் எட்டிப் பார்த்துவிட்டு உடனே திரும்பி வந்தான். “”வந்து…வந்து போலீஸ்காரன்.”

“”உன்னிடம் நான் என்ன சொன்னேன்?” என்று அவன் அண்ணன் பல்லைக் கடித்துக்கொண்டு பலமாக உறுமினான். இவ்வாறு கோணி விகாரமுற்ற வாயுடன் தோன்றிய தன் சகோதரன்தான் அதுவரையில் கண்டிராத ஒரு புதுச் சகோதரனாக அவனுக்குத் தோன்றியது.

“”நம்மைத்தான் அவர்கள் சந்தேகிப்பார்கள்.”

அவன் சகோதரன் பதில் பேசவில்லை. அவன் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“”நாம் இதை அப்புறப்படுத்த வேண்டும்” என்று திடீரென்று சொல்லிக்கொண்டு, அவன் மீண்டும் தரை மீது அப்பிப் பிடித்திருந்த ரத்தக் கறையை பேய் பிடித்தவன் மாதிரி தேய்த்து அழிக்கப் பாடுபட்டான்.

வெளியில் வாசலில் தட்டுவது நின்றபாடில்லை.

“”அவர்கள் இங்கே வந்துவிடுவார்கள். கதவை உடைத்துக்கொண்டு வருவார்கள்.” தன் தம்பியைச் சமையலறையிலிருந்து வெளியே தள்ளிக்கொண்டு வந்து, பிறகு, சமையலறைக் கதவை நன்றாக அழுத்திச் சாத்தினான்.

***

“”கடவுள் புண்ணியம்” என்று அவர்கள் தாயார் அவர்களைப் பார்த்ததும் வாய்விட்டுச் சொல்லி, அவர்களை உச்சி மோந்தாள். அப்பொழுதுதான் அவள் மீதும் கொஞ்சம் ரத்தம் படிந்தது.

“எவ்வாறு நீங்கள் இந்தக் கோலத்தில் நிற்கிறீர்கள்?” என்று அவன் அவர்களைக் கேட்டாள். பையன்கள் ஒன்றும் பேசவில்லை.

“”நீங்கள் ஏன் ஒரே ரத்த மயமாக இருக்கிறீர்கள். என்ன நடந்தது… காயம் பட்டு வலிக்கிறதா?”

பையன்கள் அவள் கேட்டதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை.

“”என்னிடம் சொல்லுங்கள்; நீங்கள் உயிரோடெ இருக்கிறீர்களா?… உங்கள் மேலேதான் கார் ஏறினதா?”

“”ஆமாம், ஆமாம்” என்று பெரியவன் சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தான்.

“”என் மேலேயும் ஏறிடுத்து அம்மா, நல்லா ஏறிடுத்து” என்று சின்னவனும் சொல்லிட்டு அவனும் அழ ஆரம்பித்தான்.

“”இரண்டு பேரும் என்னோடெ வாங்க; நான் உங்களைக் குளிப்பாட்டி விடுகிறேன்.”

அவர்களுடைய தாயார் சமையலறைக் கதவைத் தள்ளித் திறந்தாள். அவள் காலைச் சுற்றிலும் ரத்தம் குளம் கட்டி நின்றது; சுவரெல்லாம் ரத்தம் கட்டிப் பிடித்திருந்தது.

“”இங்கேயா கார் உங்க மேலே ஏறினது?”

“”ஆமாம், அம்மா!” என்று சொல்லிப் பெரியவன் அழுதான்.

“”இரண்டு பேர் மேலயும் ஒரே சமயத்தில் ஏறிவிட்டது அம்மா” என்று சின்னவன் அழுதான்.

கதவருகில் திடீரென்று அந்தப் போலீஸ்காரன் வந்து சேர்ந்தான், அவன் கையில் அவர்கள் அரம் இருந்தது. “”இது என்ன?”

“”எனக்கு என்ன தெரியும்? சரி, நான் இவர்களைக் குளிப்பாட்டட்டும்” என்று அந்தத் தாயார் சொன்னாள்.

அவள் அவர்களைத் தெய்வத்தைப் போல் தூய்மையாகும்படி நீராட்டி, அவர்கள், “பயந்தபடி’ அவர்களைத் தூங்க வைத்தாள். என்றாலும் அடுத்த நாள் பத்திரிகைகளில் அவர்கள் இருவரின் பெயரும் வந்துவிட்டது.

Thanks :  https://thavaram.blogspot.in

0Shares
0