கரடி வேட்டை லியோ டால்ஸ்டாய்- தமிழில் :எம்.ஏ.சுசீலா
நாங்கள் கரடி வேட்டைக்காகச் சென்றிருந்தோம். என் கூட்டாளி ஒரு கரடியைச் சுட்டான்; ஆனால் அது ஒரு சதைக் காயத்தை மட்டுமே ஏற்படுத்தியது. பனியின் மீது இரத்தத் துளிகள் படிந்திருந்தாலும் கரடி தப்பித்துப் போய்விட்டது. அந்தக் கரடியை உடனே பின் தொடர்ந்து செல்வதா அல்லது இரண்டு மூன்று நாட்களில் அது தன் இடத்துக்குத் திரும்பியதும் பார்த்துக் கொள்வதா என்பதை முடிவு செய்வதற்காக நாங்கள் எல்லோரும் காட்டில் ஒன்று கூடிப் பேசினோம். அங்கே இருந்த நாட்டுப்புறத்துக் கரடிவித்தைக்காரர்களிடம் அன்றைக்குள் அந்தக் கரடியைச் சுற்றி வளைப்பது சாத்தியம்தானா என்று கேட்டோம்.
வயதான ஒரு கரடி வித்தைக்காரர் “இல்லை… அது முடியாது” என்றார்.
“அந்தக் கரடி கொஞ்சம் சாந்தமடையும் வரை நீங்கள் அதை விட்டு விட வேண்டும்; பிறகு ஐந்து நாட்களுக்குள் அதைச் சுற்றி வளைத்து விடலாம்; இப்பொழுதே அதைப் பின் தொடர்ந்து போனால்,நீங்கள் அதைப் பயம் காட்டி விரட்டுவதைப் போல ஆகி விடும். அப்புறம் அது ஒருபோதும் ஓரிடத்தில் தங்காது”.
ஆனால் வயதில் இளையவனாக இருந்த இன்னொரு கரடி வித்தைக்காரனோ வயதானவர் சொன்ன அந்த வார்த்தைகளை மறுத்தான்.அந்தக் கரடியை இப்போதே சுற்றி வளைக்க முடியும், அது சாத்தியமே என்றான் அவன்.
“இத்தனை பனி இருக்கும்போது மிகவும் பருமனான அந்தக் கரடியால் வெகு தொலைவு செல்ல முடியாது” என்றான் அவன்.
“இன்று மாலைக்குள்ளேயே அது ஓரிடத்தில் தங்கி விடும்.அப்படி இல்லாவிட்டாலும் பனிக் காலணிகளைப் போட்டுக் கொண்டு அதை நான் விரட்டிப் பிடித்து விடுவேன்”
என்னோடு வேட்டைக்கு வந்திருந்த கூட்டாளி,அந்தக் கரடியைப் பின் தொடர்ந்து செல்வதை விரும்பவில்லை.கொஞ்சம் காத்திருந்தால் நல்லதென்றே ஆலோசனை கூறினான் அவன்.
ஆனால் நான் இவ்வாறு சொன்னேன்,
“இதைப் பற்றி நாம் விவாதித்துக் கொண்டிருக்க வேண்டாம்.உன் விருப்பபடி நீ செய்து கொள்.ஆனால் நான் இப்போது அது போன சுவடுகளைத் தொடர்ந்து தமியானோடு செல்லப்போகிறேன்.கரடியை நம்மால் சுற்றி வளைக்க முடிந்தால் நல்லது; இல்லாவிட்டாலும் நாம் எதையும் இழக்கப்போவதில்லை. இன்று அப்படி ஒன்றும் அதிகமான நேரமும் ஆகி விடவில்லை. மேலும் இன்று இதைத் தவிர நாம் செய்வதற்கு வேறு எந்த வேலையும் இல்லை.”
அதன் பிறகு எல்லா ஏற்பாடுகளும் தயாராயின. மற்றவர்கள் ஸ்லெட்ஜ் வண்டியில் கிராமத்துக்குத் திரும்பிச் சென்றனர். தமியானும் நானும் கொஞ்சம் ரொட்டித் துண்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு காட்டிலேயே தங்கி விட்டோம்.
அவர்களெல்லாம் கிளம்பிச் சென்ற பிறகு தமியானும், நானும் எங்கள் துப்பாக்கிகளை சரி பார்த்துக் கொண்டு குளிருக்குக் கதகதப்பான மேல்கோட்டுகளை பெல்டுக்குள் செருகிக் கொண்டு கரடி சென்ற தடங்களைத் தொடர்ந்து செல்லத் தொடங்கினோம்.
உறைபனியுடன் கூடிய பருவநிலை,அமைதியாகவும்,நன்றாகவும் இருந்தபோதும், பனிக் காலணிகள் அணிந்தபடி பனிக்குள் பயணம் செய்வதுதான் மிகவும் சிரமமாக இருந்தது. பனி ஆழமாகவும் மென்மையாகவும் இருந்தது; காட்டில் அது இன்னும் கெட்டிப்படத் தொடங்கியிருக்கவில்லை; முதல்நாள்தான் புதிய பனிப் பொழிவு ஒன்றும் ஏற்பட்டிருந்தது. அதனால் எங்கள் பனிக் காலணிகள் ஆறங்குல ஆழத்திலோ அதற்கும் கூடுதலாகவோ பனிக்குள் புதைந்து போய்க் கொண்டிருந்தன.
கரடி சென்றிருந்த சுவடுகள் மற்றும் தடங்கள் சிறிது தொலைவிலிருந்தே எங்களுக்குப் புலப்பட்டு விட்டதால் அது எந்த வழியில் சென்றிருக்கக் கூடும் என்பதை எங்களால் ஊகிக்க முடிந்தது. இடுப்புப் பகுதி வரை பனிக்குள் அழுந்தியபடி-பனியில் துழாவிக் கொண்டுதான் அது சென்றிருக்க முடியும்.தொடக்கத்தில் பெரிய மரங்களுக்குக் கீழே இருந்த வரை அதன் சுவடுகளை நாங்கள் தொடர்ந்து கொண்டு வந்தோம். சிறிய தேவதாருச்செடிகள் புதராக மண்டியிருந்த இடங்களுக்கு அருகில் வந்ததும் தமியான் நடப்பதை நிறுத்தி விட்டான்.
“இனிமேல் நாம் அதன் தடங்களைத் தொடர்ந்து செல்ல வேண்டியதில்லை”என்றான் அவன்.”அது இங்கேதான் எங்காவது ஒளிந்து கொண்டிருக்கும்; இங்கே இருக்கும் பனியைப் பார்த்தாலே அதில் அளைந்து கொண்டுதான் அது போயிருக்கும் என்பதை உங்களால் கண்டு கொள்ள முடியும். இனிமேல் அதன் தடங்களை விட்டு விட்டு இங்கே சுற்றி வந்து பார்ப்போம். ஆனால் நாம் சத்தமே காட்டாமல் மிகவும் அமைதியாகப் போக வேண்டும். இருமவோ இரைச்சல் போடவோ செய்யாதீர்கள்..! அப்படியெல்லாம் செய்தால் அதைப் பயமுறுத்தி விரட்டுவதைப் போலாகி விடும்.”
அவன் அவ்வாறு சொன்னதால், அதன் தடங்களைத் தொடர்வதை விட்டுவிட்டு இடப்புறமாகத் திரும்பிச் செல்லத் தொடங்கினோம்.ஆனால் 500 கஜதூரம் செல்வதற்குள்ளேயே மீண்டும் அந்தக் கரடியின் தடங்கள் எங்கள் முன் தென்பட்டு விட்டன.அவற்றைத் தொடர்ந்து கொண்டே சென்றபோது அவை அங்கிருந்து வெளியேறி, ஒரு சாலைக்கு எங்களைக் கொண்டு வந்து சேர்த்தன.
அங்கே சற்று நேரம் நின்றபடி, அது எந்த வழியில் சென்றிருக்கக்கூடும் என்று அந்தச் சாலையைச் சற்று ஆராய்ந்து பார்த்தோம். பனிக்குள் கரடியின் பாதங்கள், நகங்கள் ஆகியவை ஆங்காங்கே பதிந்திருந்த சுவடுகள் இருந்தன; ஒரு கிராமத்தானின் முரட்டுத் தோல் காலணிகளின் தடங்களும் அங்கங்கே தென்பட்டன. அந்தக் கரடி நிச்சயம் அந்த கிராமத்தை நோக்கித்தான் போயிருக்க வேண்டும்.
நாங்கள் அந்த சாலையில் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தபோது தமியான் இவ்வாறு குறிப்பிட்டான்.
“இனிமேல் சாலையைப் பார்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை; சாலையின் இரண்டு பக்கங்களிலும் படிந்திருக்கும் பனியிலுள்ள அடையாளங்களை வைத்து அது வலப்புறம் சென்றிருக்கிறதா இடப்புறம் சென்று விட்டதா என்று பார்க்க வேண்டும். அது ஏதாவது ஒரு பக்கம் திரும்பிப் போயிருக்குமே தவிர நிச்சயம்..அது கிராமத்துப் பக்கம் போயிருக்காது.”
நாங்கள் கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் அந்தச் சாலை வழியாகவே சென்றோம்; அதன் பிறகு அந்தக் கரடியின் தடங்கள் சாலையை விட்டு விலகிப் போயிருந்ததைப் பார்க்க முடிந்தது. அதைச் சோதித்துப் பார்த்தோம்; ஆனால் என்ன ஆச்சரியம்?அது கரடியின் கால்தடம் என்பதில் சந்தேகமில்லைதான்; ஆனால்..அந்தத் தடம் சாலையிலிருந்து காட்டுக்குப் போனது போலவும் இருக்கிறது; காட்டிலிருந்து சாலையை நோக்கி வந்தது போலவும் இருக்கிறது. அதன் கால்விரல்நுனிகள் சாலையை நோக்கி நீண்டிருந்தன.
“அது வேறொரு கரடியாக இருக்கலாம்”என்றேன் நான்.
தமியான் அதை நன்றாகப் பார்த்த பிறகு சற்று யோசித்தான்.
“இல்லை..இது அதுவேதான்…”என்றான்அவன்.”அது நம்மிடம் தந்திரமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. சாலையை விட்டுச் செல்லும்போது பின்பக்கமாக நடந்து போயிருக்கிறது.”
தடங்களைத் தொடர்ந்து சென்று அது உண்மைதான் என்பதைக் கண்டு கொண்டோம். அந்தக் கரடி, பின் புறமாகவே பத்து அடி நடந்து போயிருக்கிறது; பிறகு ஒரு தேவதாரு மரத்திற்குப் பின்னால் திரும்பி நேரே சென்று விட்டிருக்கிறது.
தமியான் கொஞ்ச நேரம் அப்படியே நின்றான்; பிறகுஇவ்வாறு சொன்னான்.
“இப்போது நிச்சயம் நாம் அதை வளைத்து விடலாம். அங்கே – நமக்குச் சற்று முன்னால் ஒரு சதுப்பு நிலம் இருக்கிறது; அங்கேதான் அது பதுங்கியிருக்கும். நாம் போய் அதை வளைத்து விடலாம்.”
தேவதாரு மரங்களின் புதர்கள் மண்டிக் கிடந்த பாதைக்குள் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்; இம் முறை நான் மிகவும் களைப்படைந்து போயிருந்ததால் தொடர்ந்து செல்வது சிக்கலாகவே இருந்தது. இப்போது நான் எப்போதும் பசுமையாக இருக்கும் ’ஜூனிபர்’ புதர்களின் மீது சறுக்கியபடி இருந்தேன்; என் பனிக் காலணிகள் அவற்றில் சிக்கிக் கொண்டு விட்டன. தேவதாரு மரத்தின் மெல்லிய மரக் கிளை ஒன்று என் கால்களின் குறுக்கே வந்தபோது – அதிகம் பழக்கமில்லாததால் என் காலணிகள் நழுவிவிட்டன. பனிக்குள் அமிழ்ந்து கிடந்த பெரிய மரக்கட்டை ஒனறு இப்போது எனக்குப் புலப்பட்டது. நான் தொடந்து சோர்ந்து போய்க் கொண்டே இருந்தேன்; என் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்து விட்டதால் நான் அணிந்திருந்த கம்பளிக் கோட்டைக் கூடக் கழற்றி விட்டேன்.
தமியானும் முழுநேரமும் என்னுடன்தான் இருந்தான்; ஆனால் ஒரு படகில் மிதந்து போவதைப் போல அவன் சறுக்கிக் கொண்டிருந்தான். அவனது பனிக் காலணிகள் எதிலும் அகப்பட்டுக் கொள்ளவில்லை; கழன்று போகவுமில்லை; அவை தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. என்னுடைய கோட்டையும் வாங்கித் தனது தோளில் போட்டுக் கொண்ட அவன் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தான். நாங்கள் மேலும் இரண்டு மைல் தூரம் அவ்வாறே சென்று அந்தச் சதுப்பு நிலத்தின் மறுபகுதியை அடைந்தோம். நான் சற்று பின்தங்கிப் போயிருந்தேன்; என் பனிக் காலணிகள் கழன்று கொண்டே இருந்தன. என் கால்களும் தள்ளாடின. எனக்கு முன் சென்று கொண்டிருந்த தமியான் திடீரென்று நின்று என்னைப் பார்த்துக் கையசைத்தான். நான் அவன் அருகே நெருங்கியதும் என்னருகே குனிந்து மண்டியிட்டபடி தன் கரங்களால் ஏதோ ஒன்றைச் சுட்டிக் காட்டி இவ்வாறு என்னிடம் கிசுகிசுத்தான்.
“அதோ அந்தப் புதருக்கு மேலே ’மேக்பீ’ பறவைகளின் சலசலப்புச் சத்தம் கேட்கிறது பாருங்கள்..சற்றுத் தொலைவில் ஒரு கரடி இருப்பதை அது மோப்பம் பிடித்திருக்கிறது. அதனல்… அது..அங்கேதான் இருந்தாக வேண்டும்.”
நாங்கள் வந்த வழியிலேயே மீண்டும் திரும்பி அரை மைல் நடந்து சென்றோம்; பழைய பாதைக்கே நாங்கள் மறுபடி வந்து சேர்ந்து விட்டிருந்தோம். முதலில் நாங்கள் விட்டுவிட்டுப் போன பழைய தடத்திற்குள்ளேயே கரடி இருப்பதை அறிந்து அதனருகே இப்போது நெருங்கியிருந்தோம். நாங்கள் அங்கேயே நின்றோம்; நான் என் தொப்பியை எடுத்து விட்டு என் உடைகளையெல்லாம் தளர்த்திக் கொண்டேன். ஏதோ நீராவிக் குளியல் செய்தது போலிருந்தது; நனைந்த எலியைப் போல ஈரமாகிக் கிடந்தேன் நான்.
தமியானும் வியர்த்துப் போயிருந்தான்; தன் சட்டையாலேயே முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
“நல்லது ஐயா….நாம் செய்ய வேண்டியதைச் செய்து விட்டோம். இப்போது நமக்குக் கட்டாயம் சிறிது ஓய்வு தேவை” என்றான்.
மாலைச் சூரியன் காட்டிற்குள் செந்நிறமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. பனிக் காலணிகளைக் கழற்றி அவற்றின் மீதே அமர்ந்துகொண்ட நாங்கள் கொஞ்சம் ரொட்டித் துண்டுகளையும், உப்பையும் எங்கள் பையிலிருந்து வெளியில் எடுத்தோம். முதலில் கொஞ்சம் பனியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு விட்டுப் பிறகு ரொட்டியைச் சாப்பிட்டேன் நான்; அப்போது அந்த ரொட்டித் துண்டு அத்தனை சுவையாக இருந்தது; அது போல ஒன்றை என் வாழ்நாளில் நான் சுவைத்ததே இல்லை என எண்ணிக் கொண்டேன். இருட்ட ஆரம்பிக்கும் வரை நாங்கள் அங்கேயே அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம். பிறகு, அங்கிருந்து கிராமம் வெகு தொலைவில் இருக்கிறதா என்று தமியானைக் கேட்டேன்.
“ஆமாம்”என்றான் அவன்.”நிச்சயம் எட்டு மைலாவது இருக்கும். இன்று இரவு அங்கே போகலாம்; ஆனால் இப்போது நாம் கட்டாயம் ஓய்வெடுத்தாக வேண்டும். உங்கள் கம்பளிக் கோட்டைப் போட்டுக் கொள்ளுங்கள் ஐயா..இல்லையென்றால் உங்களுக்குச் சளி பிடித்து விடும்.”
பனிக் குவியலைச் சமனப்படுத்தி அதன் மீது தேவதாரு மரக்கிளைகளை ஒடித்து அவற்றால் ஒரு படுக்கை அமைத்தான் தமியான். நாங்கள் எங்கள் கைகளையே தலையணையாக வைத்தபடி, அருகருகே படுத்துக் கொண்டோம். நான் எப்போழுது உறங்கினேன் என்பதே எனக்கு நினைவில்லை. இரண்டு மணிநேரம் கழித்து ஏதோ முறிந்து விழுவதைப் போன்ற ஓசையைக் கேட்டுக் கண் விழித்தேன்.
ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து கிடந்ததால் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்ற பிரக்ஞை கூட என்னிடமில்லை. என்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்தேன்.வெண்மை நிறத்தில் பளிச்சிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தூண்கள் நிறைந்த ஒரு மண்டபத்தில் நான் இருக்கிறேன்; மேலே நிமிர்ந்து பார்த்தபோது மெலிதான சல்லாத் துணியால் போர்த்தப்பட்ட ஒரு கறுப்புப் பெட்டகம்; அது முழுவதும் பொட்டு வைத்தாற்போன்ற வண்ண விளக்குகள். சற்று நிதானப்படுத்திக் கொண்டு பார்த்த பிறகுதான் நாங்கள் காட்டில் இருக்கிறோம் என்பதும், நான் மண்டபம் என்றும் தூண்கள் என்றும் எண்ணியவை உண்மையில் காடும், அங்கிருந்த உறைபனி படர்ந்திருந்த மரங்களுமே என்பது தெளிவாகியது. மரக் கூட்டங்களுக்குநடுவே மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களே என் கண்ணுக்கு வண்ண விளக்குகளாகத் தோன்றியிருக்கின்றன.
இரவு நேரத்து உறைபனி படியத் தொடங்கியிருந்தது. அங்கிருந்த மரக் கிளைகளிலெல்லாம் அது அடர்த்தியாகப் படிந்திருந்தது. தமியானும் அதனால் போர்த்தப்பட்டிருந்தான். எனது கம்பளிக் கோட்டிலும் அது படிந்திருந்தது; மரங்களிலிருந்தும் அது சொட்டிக் கொண்டிருந்தது. நான் தமியானை எழுப்பினேன். நாங்கள் இருவரும் பனிக் காலணிகளை அணிந்தபடி கிளம்பினோம். காடு மிகுந்த அமைதியுடன் இருந்தது. மென்மையான பனிக்குள் துழாவியபடி செல்லும் எங்கள் காலணிகளின் ஓசையைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. அவ்வப்போது பனியின் கடுமையால் முறிந்து கொண்டிருக்கும் மரங்களின் சத்தம் மட்டுமே காட்டுக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஒரே ஒரு தடவை மாத்திரம் உயிருள்ள ஒரு ஜந்துவின் சத்தத்தை நாங்கள் கேட்டோம். எங்களுக்கு மிகவும் அருகாமையில் ஒரு சலசலப்புச் சத்தத்தை ஏற்படுத்தி விட்டு அது ஓடி விட்டது. அது அந்தக் கரடியாக இருக்கக் கூடுமென்றே நான் உறுதியாக நினைத்தேன். ஆனால் அந்தச் சத்தம் எழுந்த இடத்திற்கு நாங்கள் சென்றபோது முயலின் காலடித் தடங்களே அங்கு தென்பட்டன; பனி உருகித் தண்டு முழுவதும் நனைந்து கிடந்த பல இளம் ’ஆஸ்பென்’ மரங்களையும் அங்கே நாங்கள் கண்டோம். அங்கே இரை தேடிக் கொண்டிருந்த பல முயல்கள் எங்களைக் கண்டு துணுக்குற்று ஓடின.
நாங்கள் இப்போது சாலைக்கு வந்து சேர்ந்திருந்தோம்; பனிக் காலணிகளை எங்களுக்குப் பின்னாகப் பிடித்து இழுத்தபடியே நாங்கள் அதில் நடந்து கொண்டிருந்தோம். எங்களைத் தொடர்ந்து இருபுறமும் இழுபட்டபடி வந்து கொண்டிருந்த பனிக் காலணிகள் கரடு முரடான அந்தச் சாலையில் உராய்ந்து சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன. காலணிகளில் மிதிபட்டுத் தெறித்த உறைபனி, மிருதுவான இறகுகளைப் போல எங்கள் முகங்களில் அப்பிக் கிடந்தது.மரக்கிளைகளின் வழியே பார்த்தபோது – ஒருகணம் மின்னிக் கொண்டும், அடுத்த கணமே மறைந்து ஒளிந்து கொண்டும் இருந்த நட்சத்திரங்கள் எங்களைச் சந்திக்க விரைந்தோடி வந்து கொண்டிருப்பதைப் போலிருந்தது. வானம் முழுவதுமே நகர்ந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.
என்னுடைய வேட்டைக் கூட்டாளி உறங்கிக் கொண்டிருந்தான்; ஆனாலும் அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பி, அந்தக் கரடியை நாங்கள் எவ்வாறு நெருங்கி விட்டோம் என்பது பற்றிக் கூறினேன். நாங்கள் அங்கே தங்குவதற்கான வசதி செய்து கொடுத்திருந்த கிராமத்தானிடம் விலங்குகளை எழுப்பப் பறை அடிப்பவர்களை மறுநாள் காலையில் வரவழைத்து வைக்குமாறு சொல்லி விட்டு இரவு உணவைச் சாப்பிட்டு உறங்கினோம்.
என் கூட்டாளி மட்டும் என்னை எழுப்பாமல் விட்டிருந்தால் மறுநாள் மதியம் வரையிலும் கூட நான் உறங்கியிருப்பேன்; அந்த அளவுக்கு நான் களைத்துப் போயிருந்தேன். திடுக்கிட்டுத் துள்ளியெழுந்து பார்த்தபோது கிளம்புவதற்கு ஆயத்தமாக அவன் உடை அணிந்திருந்ததையும், தன் துப்பாக்கியை மும்முரமாகத் தயார் செய்து கொண்டிருந்ததையும் கண்டேன்.
“தமியான் எங்கே?”என்றேன்.
“அவன் வெகு நேரம் முன்பே காட்டுக்குச் சென்று விட்டான். நீங்கள் சென்ற தடங்களின் வழியே ஒரு தடவை பார்த்து விட்டு இங்கே திரும்பி வந்தான்; இப்போது பறை முழக்குபவர்களின் பின்னால் போயிருக்கிறான்.”
நான் குளித்து உடையணிந்து என் துப்பாக்கியை நிரப்பிக் கொண்டேன். பிறகு நாங்கள் ஒரு ஸ்லெட்ஜ் வண்டியில் ஏறிக் கிளம்பினோம்….
ஊசிகுத்துவது போன்ற பனிப் பொழிவு இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது. எங்கும் அமைதி. சூரியன் சுத்தமாய்த் தென்படவே இல்லை. அடர்த்தியான பனி மூட்டம் எங்களுக்கு மேல் படர்ந்திருந்தது; இன்னும் கூட எல்லாவற்றின் மீதும் உறைபனி போர்த்தியபடிதான் இருந்தது. அந்தச் சாலையின் வழியாகவே இரண்டு மைல் தூரம் பயணம் செய்தபிறகு,நாங்கள் காட்டுக்கு அருகில் வந்து சேர்ந்தோம்.
அங்கே ஏதோ ஒரு துளையின் வழியே புகைமூட்டம் வருவது கண்டோம். அதன் அருகே சென்றபோது கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அங்கே கூடியிருந்தார்கள். அவர்கள் எல்லோருமே கைத்தடி வைத்திருந்தார்கள்.
நாங்கள் அவர்களை நெருங்கிச் சென்றோம். அங்கே அமர்ந்திருந்த ஆண்கள், உருளைக் கிழங்குகளைச் சுட்டபடி பெண்களோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். தமியானும் அங்கேதான் இருந்தான். நாங்கள் அந்த இடத்துக்குச் சென்றதும் அவர்கள் எழுந்து கொண்டார்கள். முதல்நாள் நாங்கள் போட்டு வைத்திருந்த வட்டத்தில் நிறுத்துவதற்காக தமியான் அவர்களை அழைத்துச் சென்றான். முப்பது பேர் கொண்ட அந்த ஆண்களும்,பெண்களும்- எல்லோரும் ஒன்றாக ஒரே வரிசையில் நடந்து சென்றனர். பனியின் ஆழம் கூடுதலாக இருந்ததால் அவர்களை இடுப்பளவு மட்டுமே பார்க்க முடிந்தது. அவர்கள் காட்டுப் பக்கமாகத் திரும்பிச் சென்றார்கள்; நானும் என் நண்பனும் அவர்கள் சென்ற பாதையிலேயே பின் தொடர்ந்தோம்.
முன்னால் சென்ற அவர்கள் ஒரு வழியை அமைத்துக் கொடுத்திருந்தபோதும் அதில் நடப்பது மிகவும் சிரமமாகவே இருந்தது. ஆனால், அங்கே விழுவதற்கான சாத்தியம் ஏதுமில்லை. பனியாலான இரண்டு சுவர்களுக்குள் நடப்பது போலவே அது இருந்தது. அதே பாதையில் நாங்கள் கிட்டத்தட்ட அரைமைல் தூரம் சென்றோம்; அப்போது திடீரென்று வேறு திசையிலிருந்து எங்களை நோக்கித் தனது பனிக் காலணிகளுடன் தமியான் ஓடி வந்து கொண்டிருந்ததைக் கண்டோம்; தன்னோடு வந்து சேர்ந்து கொள்ளுமாறு எங்களை அழைத்தான் அவன். நாங்கள் அவனை நோக்கிச் சென்றதும் எந்த இடத்தில் நாங்கள் நின்று கொள்ள வேண்டும் என்பதை அவன் எங்களுக்குக் காட்டினான்
நான் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் நின்றபடி சுற்றுமுற்றும் பார்த்தேன். எனது இடதுபுறத்தில் இருந்த உயரமான தேவதாரு மரங்களின் கிளைகளுக்கு இடையே இருந்த இடைவெளியில் என்னால் கொஞ்சம் தெளிவாகப் பார்க்க முடிந்தது; மரங்களுக்குப் பின்னால் கறுப்புப் பட்டை போல ஏதோ தெரிந்தது; பறை முழக்குபவன்தான் அங்கே நின்று கொண்டிருந்தான். எனக்கு முன்பாக இளம் தேவதாரு மரங்கள் ஆளுயரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்தன; அவற்றின் கிளைகள் பனியின் பாரம் தாங்காமல் வளைந்து ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடந்தன. அந்தக் காட்டுப் புதர்கள் வழியே நீண்டு சென்ற பனி படர்ந்த பாதை ஒன்று மிகச் சரியாக நான் இருக்கும் இடத்தை வந்து சேர்ந்தது. என் வலது பக்கம் விரிந்து கிடந்த புதர் ஒன்று, மிகச் சிறிய ஒரு இடைவெளியோடு முடிவடைந்திருந்தது. அந்த இடத்தில் என் கூட்டாளியை தமியான் நிறுத்தி வைப்பதை நான் கண்டேன்.
எனது இரண்டு துப்பாக்கிகளையும் ஒரு முறை பரிசீலித்துப் பார்த்தபின் நான் எங்கே நின்று கொள்வது நல்லது என்று யோசித்தேன். எனக்கு மூன்றடி பின்னால் உயரமான ஒரு தேவதாரு மரம் இருந்தது.
“அங்கேதான் நின்று கொள்ள வேண்டும்’என்று முடிவெடுத்தேன். அப்போதுதான் என்னுடைய இன்னொரு துப்பாக்கியை மரத்தின் மீது சாய்த்து வைக்க முடியும்.
மரத்தை நோக்கி நான் நகர்ந்தபோது நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் என் முழங்கால்கள் பனிக்குள் சறுக்கி விழுந்து கொண்டே இருந்தன. தரையில் கிடந்த பனியை நகர்த்திவிட்டு நான் நிற்பதற்கு வசதியாக ஒரு கஜ அளவிலான ஒரு சதுரத்தை ஏற்படுத்திக் கொண்டேன். ஒரு துப்பாக்கியைக் கையில் பிடித்திருந்தேன்; மற்றொன்றைச் சுடுவதற்கு ஆயத்தமாகக் குண்டுகளைக் கெட்டித்து மரத்தின் மீது சார்த்தி வைத்திருந்தேன். தக்க சமயத்தில் எடுக்க வசதியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உறையிலிருந்த கத்தியை உருவிப் பார்த்து விட்டு மீண்டும் உறைக்குள் வைத்தேன். இந்த ஏற்பாடுகளையெல்லாம் நான் செய்து முடித்த மறு கணமே காட்டிலிருந்து தமியான் இவ்வாறு குரல் கொடுப்பது கேட்டது.
“இதோ …அது வந்து விட்டது…..வந்து விட்டது.”
தமியான் இவ்வாறு கூச்சலிட்டதும் வட்டத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த கிராமத்து ஆட்கள் வெவ்வேறு குரல்களில் அதற்கு மறுமொழியளித்தபடி கூவினர்.
“ம்…ம்..வா..வா…வா…ஓ..ஓ….ஒ…”
என்று பலவிதமாக ஆண்கள் சத்தமிட்டனர்.
“அய்..அய்….” என உச்ச ஸ்தாயியில் பெண்களும் கிறீச்சிட்டனர்.
கரடி, அந்த வட்டத்துக்குள்ளேதான் இருந்தது. தமியான் அதை விரட்டத் தொடங்கியதும் சுற்றியிருந்த அனைவரும் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே இருக்கத் தொடங்கினர். நானும் என் நண்பனும் மட்டுமே அந்தக் கரடி எங்களை நோக்கி வரும் தருணத்தை எதிர்பார்த்தபடி-அசையாமல் அமைதியாக நின்றிருந்தோம். அதை மட்டுமே கவனமாக வெறித்தபடி நின்று கொண்டிருந்தபோது என் இதயம் பயங்கரமாய்ப் படபடத்தது. நடுக்கத்தோடு இருந்த நான் என் துப்பாக்கி நழுவி விடாதபடி அதை விரைவாகப் பற்றிக் கொண்டேன்.
‘இதோ…இப்போதே..அது திடீரென்று விரைந்து வந்துவிடப்போகிறது…நான் அதைக் குறிபார்த்துச் சுட்டதும் அது விழுந்து விடும்’என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
என் இடப் புறமாகச் சிறிது தூரத்தில் சட்டென்று பனியில் ஏதோ விழும் ஓசை கேட்டது. உயரமான தேவதாரு மரங்களுக்கு நடுவே எட்டிப் பார்த்தேன். ஐம்பது தப்படிகள் தாண்டி மரக்கட்டைகளுக்குப் பின்னால் கறுப்பு நிறத்தில் பெரிதாக ஏதோ ஒன்று இருப்பது கண்ணில் பட்டது. நான் அதைக் குறி வைத்தபடி, இன்னும் சற்று அருகில் வருமென்று எண்ணியபடி காத்திருந்தேன். நான் காத்திருந்த அந்த நேரத்தில் அது தன் காதுகளை ஆட்டியபடி திரும்பிச் செல்வதைப் பார்க்க முடிந்தது. அப்பொழுது கணநேரம் அந்த உருவத்தை முழுவதுமாகப் பார்த்தேன். அது மிகப் பெரிய ஒரு மிருகம். எனக்கிருந்த பரபரப்பில் நான் அதைச் சுட்டபோது என் குண்டு குறி தவறிச் சென்று ஒரு மரத்தில் பட்டு விட்டது. அது எழுப்பிய புகைப்படலத்திற்குள் ஊடுருவிப் பார்த்தபோது என்னுடைய அந்தக் கரடி அந்த வட்டத்திற்குள்ளேயே திரும்பி விரைவாக ஓடுவதும், பிறகு மரங்களுக்கிடையே மறைந்து போவதும் தெரிந்தது.
‘சரி…எனக்குக் கிடைத்த வாய்ப்பு நழுவிப் போய்விட்டது’ என்று நான் நினைத்துக் கொண்டேன்.
‘அது என்னிடம் இனிமேல் திரும்பி வரப்போவதில்லை; ஒன்று என் கூட்டாளி அதைச் சுட்டு விடுவான்; இல்லாவிட்டால் வரிசையாக நின்று கொண்டிருக்கும் பறை கொட்டுபவர்களுக்கு நடுவே புகுந்து அது தப்பிச் சென்று விடும். எப்படியோ இன்னொரு சந்தர்ப்பத்தை அது எனக்குத் தரப்போவதில்லை.’
நான் என் துப்பாக்கியை மீண்டும் குண்டுகளால் நிரப்பியபடி கவனமாக நின்று கொண்டிருந்தேன். சுற்றிலும் இருந்த கிராமத்தார்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால்…வலது புறத்தில் என் கூட்டாளி நின்று கொண்டிருந்த இடத்துக்கு அருகிலிருந்த பெண் மட்டும் இவ்வாறு ஆவேசமாகக் கூச்சலிட்டாள்.
“இதோ..இங்கே..இங்கே இருக்கிறது…வாருங்கள்..இங்கே வாருங்கள்…! ஓ ஓ ஓ..அய் ..ஏய்…ஏய்…”அவளால் அந்தக் கரடியை மிகவும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. நான் அதை எதிர்பார்ப்பதை விட்டு விட்டு வலப்புறமிருந்த என் கூட்டாளியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, தன் பனிக் காலணிகளைக் கூட அணிந்து கொள்ளாமல்-கையில் ஒரு கம்பை ஏந்தியபடி தமியான் என் நண்பனை நோக்கித் திடீரென ஒரு ஒற்றையடிப்பாதையில் ஓடி வருவதைப் பார்த்தேன். பிறகு எனது நண்பனின் அருகே குனிந்து தன் கையிலிருந்த கம்பால் அவன் எதையோ சுட்டிக் காட்டுவதையும், அதே திசையை நோக்கி என் நண்பன் தன் துப்பாக்கியை உயர்த்துவதையும் கண்டேன்.
இதோ ஒரு வெடிச் சத்தம்..! அவன் சுட்டு விட்டான்.
ஆனால் என் கூட்டாளி உடனே அந்தக் கரடியின் அருகே ஓடவில்லை என்பதை நான் கவனித்தேன்; அவன் குறியைத் தவற விட்டிருக்க வேண்டும்; அல்லது அந்த குண்டு அதை முழுமையாகத் தாக்காமல் இருந்திருக்க வேண்டும்.
‘அந்தக் கரடி போய் விடப் போகிறது’ என்றே நான் எண்ணினேன். ‘அது திரும்பிப் போய் விடும்;இரண்டாவது முறை என்னிடம் அது வராது…..ஆனால்…ஆனால்…என்ன இது?’
சூறைக் காற்றைப்போலத் தன் மூக்கால் உறுமிக் கொண்டே ஏதோ ஒன்று என்னை நெருங்கி வந்து கொண்டிருந்தது; அது வந்த வேகத்தில் அங்கிருந்த பனியெல்லாம் கிளர்ந்து என்னருகே பறப்பதைக் கண்டேன். நான் எனக்கு நேர் எதிரே பார்த்தேன்…அது, அந்தக் கரடியேதான்! என் வலப்பக்கத்தில் இருந்த புதர் மண்டிய பாதைக்குள் அது விரைந்தோடிக் கொண்டிருந்தது. அந்தக் கரடி பயத்தில் மிரண்டு போயிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. அது என்னிடமிருந்து ஆறு தப்படி தூரத்தில் இருந்ததால் அதை என்னால் முழுமையாகப் பார்க்க முடிந்தது. அதன் கறுத்த மார்புப் பகுதியும் குருதிச்சிவப்பில் கறை படிந்த மிகப் பெரிய தலைப் பகுதியும் எனக்குத் தெளிவாகப் புலப்பட்டன. வழி தவறிக் குளறுபடி செய்தபடி, பனியையெல்லாம் என் மீது வாரித் தெறித்துக் கொண்டு,அது என்னை நோக்கியே வந்து கொண்டிருந்தது. அதன் பார்வை என் மீது பதியவே இல்லை என்பதை அதன் கண்களைக் கொண்டே நான் தெரிந்து கொண்டேன். அச்சத்தின் மிகுதியால் பைத்தியம் பிடித்ததைப் போல அது அங்குமிங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அது ஓடி வந்து கொண்டிருந்தபாதை- மிகச் சரியாக நான் நின்றுகொண்டிருந்த மரத்தின் அடியிலேயே அதைக் கொண்டு வந்து சேர்த்து விட்டிருந்தது. நான் என் துப்பாக்கியை உயர்த்தி அதைச் சுட்டேன். இப்போது அது எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தபோதும் நான் குறி தவற விட்டு விட்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன்; என் குண்டு அதைத் தாண்டிச் சென்று விட்டிருந்தது. நான் அதைச் சுட்டது கூட அதற்குக் கேட்டிருக்கவில்லை. அது..நேராக என்னை நோக்கியே வந்து கொண்டிருந்தது. நான் என் துப்பாக்கியைத் தாழ்த்திக் கொண்டு- கிட்டத்தட்ட அதன் தலையைத் தொடுவது போலவே மீண்டும் சுட்டேன். வெடிச் சத்தமும் கேட்டது. ஆனாலும் நான் அதைத் தாக்க மட்டும்தான் செய்தேனே தவிர அதைக் கொன்றிருக்கவில்லை. அது தன் தலையை உயர்த்திக் காதுகளைப் பின் தள்ளியபடி பல்லைக் காட்டிக் கொண்டு என் மீது பாய்ந்து வந்தது.
நான் என் இன்னொரு துப்பாக்கியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளப் போனேன்; ஆனால் அதை நான் தொடுவதற்கு முன்பே கரடி என் மீது பாய்ந்து கீழே தள்ளிப் பனிக்குள் வீழ்த்தி விட்டு என் மீதே நடந்து சென்று விட்டது.
‘நல்லகாலமாக அது என்னை விட்டு விட்டது’என்று நினைத்துக் கொண்டேன்.
நான் எழுந்து கொள்ள முயற்சி செய்தபோது ஏதோ ஒன்று என்னை அழுத்திக் கீழே தள்ளியபடி நான் எழுந்து கொள்ள விடாமல் தடுத்தது. அந்தக் கரடி வேகமாக ஓடோடிச் சென்றபோது என்னைத் தாண்டித்தான் போயிருக்கிறது; ஆனால் அது திரும்பியபோது தன் உடல் பாரம் முழுவதையும் என் மீது சாய்த்துக் கொண்டு விழுந்து விட்டிருக்கிறது.
மிகவும் கனமான ஒன்று என்னை அழுத்திக் கொண்டிருப்பதும், என் முகத்துக்கு நேர் மேலே வெம்மையாக ஏதோ ஒன்று இருப்பதும் என் உணர்வுக்குப் புலனாகியது. பிறகுதான் என் முகம் முழுவதையும் அது தன் வாய்க்குள் பிடித்திழுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். ஏற்கனவே என் மூக்கு அதன் வாய்க்குள் போயிருந்தது; அதன் வெம்மையை உணர்ந்த நான் அதிலிருந்த ரத்த வாடையையும் நுகர்ந்தேன். நான் சற்றும் நகர முடியாதபடி தன் பாதங்களால் என் தோள்களை அழுத்தமாகப் பிடித்தபடி அது என்னைக் கீழே அழுத்திக் கொண்டிருந்தது. தலையை மார்புப் பக்கமாகத் தாழ்த்திக் கொண்டு அதன் வாயிலிருந்து என் கண்களையும் ,மூக்கையும் விடுவித்துக் கொள்ள நான் போராடிக் கொண்டிருந்தேன். ஆனால் அதுவோ தன் பற்களை அவற்றின் மீது பதிக்கத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தது. கீழ்த்தாடைப் பற்களால் என் தலைமுடிக்குக் கீழிருந்த என் முன் நெற்றியை அது பிடித்திழுத்துக் கொண்டிருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். கண்களுக்குக் கீழே இருந்த சதைப் பகுதியைத் அது தன் மேல்தாடையால் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தது. என் முகம் முழுவதுமே கத்தியால் துண்டாடப்படுவது போலிருந்தது. நான் அதன் பிடியிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ளப் பெரிதும் போராடியபடி இருந்தேன். அதுவோ ஒரு கடி நாயைப்போலத் தன் தாடைகளால் என்னைக் கவ்விப் பிடிப்பதிலேயே குறியாக இருந்தது. என் முகத்தை முறுக்கித் திருப்பிக் கொள்ள முயன்றேன்; ஆனால் அதுவோ தன் வாய்க்குள்ளேயே அதை மீண்டும் பிடித்துத் திணித்துக் கொள்ள முற்பட்டது.
‘அவ்வளவுதான்..இதோடு என் கதை முடிந்தது….’என்று எண்ணிக் கொண்டேன்.
அதன் பிறகு என் மீதிருந்த பாரம் அகன்றது போல உணர்ந்ததால் நான் சற்று நிமிர்ந்து பார்த்தபோது அது அங்கே இல்லை…அது என் மீதிருந்து குதித்தோடி விட்டிருந்தது.
அந்தக் கரடி என்னைக் கீழே தள்ளிச் சித்திரவதை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு என் கூட்டாளியும், தமியானும் என் உதவிக்காக விரைந்து வந்திருக்கின்றனர். அவசரத்தில் குழப்பமடைந்த என் நண்பன், ஏற்கனவே வந்து பழகியிருந்த பாதையில் செல்வதற்குப் பதிலாக ஆழமான பனிப்பகுதிக்குள் சென்று விழுந்து விட்டிருக்கிறான். பனிக்குள்ளிருந்து வெளியே வருவதற்கு அவன் போராடிக் கொண்டிருந்தபோதுதான் அந்தக் கரடி என்னைக் குதறிக் கொண்டிருந்திருக்கிறது. ஆனால் கையில் துப்பாக்கி ஏதுமின்றி ஒரு கம்பை மட்டுமே வைத்துக் கொண்டிருந்த தமியான் அந்தப் பாதை வழியாகக் கத்திக் கொண்டே ஓடி வந்திருக்கிறான்.
“ஐயோ…அது எஜமானைக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது…அது ஐயாவைக் கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறது…”
ஓடி வரும்போதே கரடியை நோக்கியும் அவன் குரல் கொடுத்திருக்கிறான்..
“ஏ முட்டாளே….என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய் நீ….விட்டு விடு..ம்..விட்டு விடு..”
கரடியும் அவன் பேச்சுக்குப் பணிந்து என்னை விட்டுவிட்டு ஓடிப்போய் விட்டது.
நான் அங்கிருந்து எழுந்து கொண்டபோது- ஏதோ ஒரு வெள்ளாடு கொலையுண்டதைப் போல அவ்வளவு மிகுதியான இரத்தம் பனியின் மீது சிந்திக் கிடந்தது. என் கண்களுக்கு மேலே உள்ள சதைப்பகுதிகள் நார்நாராய்க் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஆனாலும் அப்போது எனக்கிருந்த பரபரப்பான மனநிலையில் வலி எதுவும் தெரியவில்லை.
அதற்குள் என் நண்பன் என்னருகே வந்து சேர்ந்திருந்தான்; மற்றவர்களும் என்னைச் சுற்றிக் கூடி விட்டனர். அவர்கள் என் காயத்தைப் பார்த்து விட்டு அதன் மீது பனியை எடுத்து அப்பினர். ஆனால் நானோ என் காயங்களையெல்லாம் மறந்தவனாய்..இதை மட்டுமே கேட்டேன்.
“அந்தக் கரடி எங்கே?அது எந்த வழியாகப் போனது?”
திடீரென்று..”அது இங்கிருக்கிறது..இதோ இங்கே இருக்கிறது”என்ற சத்தம் கேட்டது.
அந்தக் கரடி மீண்டும் எங்களை நோக்கி ஓடி வருவதைப் பார்த்தோம். எங்கள் துப்பாக்கிகளையும் தயாராக வைத்துக் கொண்டோம். ஆனால் எவரும் சுடுவதற்கு நேரம் தராமல் அது மிக விரைவாக ஓடி விட்டது. மிகுந்த மூர்க்காவேசத்துடன் இருந்த அது என்னை மறுபடியும் கடித்துக் குதறுவதற்காகவே அங்கே வந்திருக்கிறது ; ஆனால்…அவ்வளவு பேரை அங்கே பார்த்தவுடன் அது மிரண்டு போய் விட்டது. அது சென்ற தடத்தை வைத்துப் பார்த்தபோது அதன் தலையிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்; அதை மேலும் தொடர்ந்து செல்லவே நாங்கள் விரும்பினோம்; ஆனாலும் எனக்கு ஏற்பட்டிருந்த காயங்களின் வலி மிகுதியாக இருந்ததால் நாங்கள் மருத்துவரைத் தேடி நகரத்திற்குச் சென்று விட்டோம். மருத்துவர் பட்டுநூல் கொண்டு என் காயங்களைத் தைத்தார்; அவையும் விரைவிலேயே ஆறி விட்டன.
ஒரு மாதத்திற்குப் பிறகு நாங்கள் மீண்டும் அந்தக் கரடியை வேட்டையாடுவதற்காகச் சென்றோம். ஆனால் அதன் கதையை முடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. தான் இருந்த வட்டத்தை விட்டு அது வெளியே வரவே இல்லை; பயங்கரமான குரலில் உறுமியபடி அதற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.
தமியான் அதைக் கொன்றான். அதன் கீழ்த் தாடை உடைந்திருந்தது. அதிலிருந்த ஒரு பல்லை என் துப்பாக்கிக் குண்டு துளைத்திருந்தது. மிகவும் பிரம்மாண்டமான ஜந்து அது என்பதால் அதன் உடலில் அற்புதமான கறுப்பு ரோமங்கள் அபாரமாக இருந்தன.
நான் அதன் உடலைப் பதப்படுத்திப் பாடம் செய்து வைத்தேன். இப்பொழுது அது என் அறையிலேதான் தொங்கிக் கொண்டிருக்கிறது. என் முன் நெற்றியிலிருந்த காயங்கள் ஆறி விட்டன. தழும்புகள் மட்டும் லேசாகத் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன.
Thanks : https://solvanam.com/