எனக்குப் பிடித்த கதைகள் 24

கோயில் / கௌ ஷிங்ஜென்.  தமிழில் / நதியலை

நாங்கள் வெகு மகிழ்ச்சியாக இருந்தோம். மிகுந்த நம்பிக்கையுடனும், காதலுடனும், பரிவுடனும் நெகிழ்வோடும் கூடிய தேன்நிலவிற்கேற்ற உற்சாக உணர்வுகளோடு இருந்தோம். திருமணத்திற்கென பத்து நாட்களும் ஒரு வாரம் கூடுதல் விடுமுறையுமென பதினைந்து நாட்களே விடுமுறை இருந்தபோதிலும் ஜியாவும் நானும் இப்பயணத்திற்கென மீண்டும் மீண்டும் திட்டமிட்டோம்.

வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான நிகழ்வு, எங்களுக்கு அதைவிட வேறு எதுவுமே முக்கியமாகப் படாததால் கூடுதல் விடுமுறைக்கு விண்ணப்பித்தால் என்னவென்று தோன்றியது. ஆனால் என் மேலாளர் ஒரு கருமி. யாராவது அவரிடம் விடுமுறைக்கு விண்ணப்பிக்கச் சென்றால் போராடவேண்டும். எப்போதுமே உடன் ஒப்புதல் அளிக்கமாட்டார். நான் விண்ணப்பித்த இரு வாரங்களை திருத்தி ஞாயிற்றுக் கிழமையையும் சேர்த்து ஒரு வாரமென மாற்றிவிட்டு, “சொன்ன தேதியில் மீண்டும் வேலையில் சேருவாயென எதிர்ப்பார்க்கின்றேன்” என்றார் விருப்பமற்று.

“நிச்சயமாக, அதிக நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டால் சம்பளக்கழிப்பை எங்களால் சமாளிக்க முடியாது” என்றேன். அதற்கு பிறகே விடுமுறைக்கான தனது ஒப்புதல் கையெழுத்தை இட்டார்.

இனி நான் தனிமனிதனல்ல. எனக்கென்று குடும்பமுண்டு. இனி சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் நண்பர்களுடன் உணவு விடுதிகளுக்குச் சென்று நினைத்தபடி செலவழிக்க முடியாது. எப்போதும் போல யோசிக்காமல் செலவழித்து பின் மாத இறுதியில் சிகரெட் வாங்கக்கூட பணமில்லாமல் பாக்கெட்டிலும் அலமாரிகளிலும் சில்லரைகளை தேடிக்கொண்டிருக்க முடியாது. அந்த விவரத்திற்குள் எல்லாம் இப்போது நுழையவில்லை. இப்போது என்ன சொல்கிறேன் என்றால் நான் – நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தோம்.

திருமணத்திற்கு முன் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. இருவருமே சில சிரமமான நாட்களை கடந்திருக்கின்றோம், வாழ்க்கை பாடங்களை அனுபவித்து அறிந்திருக்கின்றோம். இந்நாட்டில் நிலவிய அழிவுக்குரிய காலகட்டங்களில் எங்கள் குடும்பங்கள் பல இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்திருக்கின்றன. இப்போதும் கூட எங்கள் முன்னோர்களின் விதிகளை நினைத்து மனக்கசப்பு உண்டாகும். ஆனால் அதைப்பற்றியும் இப்போது பேசப்போவதில்லை. நாங்கள் மிக மகிழ்ச்சியானவர்கள் என்பதே இப்போது முக்கியம்.

எங்களுக்கிருந்தது அரை மாத விடுமுறையே. அது அரைத்தேனிலவு தான் என்றாலும் அதைவிடவும் இனிமையானதாக இருந்திருக்க முடியாது. எவ்வளவு இனிமையாக இருந்தது என்பதைப் பற்றிப் பேசப்போவதில்லை. உங்களுக்கே தெரிந்திருக்கும் நீங்கள் எல்லோருமே அதை அனுபவித்திருப்பீர்கள், ஆனால் இந்த குறிப்பிட்ட இனிமை எங்களுக்கே உரியது. உங்களிடம் மிக கச்சிதமான ஒரு அறத்தின் கோயிலைப் பற்றிச் சொல்ல வேண்டும். கோயிலின் பெயர் அத்தனை முக்கியமில்லை. மேலும் அது ஒரு பாழடைந்த கோயில், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் புகழ்வாய்ந்த ஸ்தலமுமில்லை. அப்பகுதிகளில் வாழும் மக்களைத் தவிர்த்து வெளியுலகம் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. அங்கு இருப்பவர்களிலும் கூட வெகு சிலருக்கே அக்கோயிலைப் பற்றி தெரிந்திருக்கக் கூடுமெனத் தோன்றியது.

நாங்கள் செல்ல நேர்ந்த கோயில், விளக்குகளும் ஊதுவத்திகளும் ஏற்றி பிரார்த்திக்கும் பிற கோயில்களைப் போலில்லை. கல்லில் பதித்திருந்த மறைந்துக் கொண்டிருக்கும் எழுத்துக்களை வெகு துல்லியமாக கவனித்தாலன்றி கோயிலின் பெயரையும் கூட அறிந்து கொண்டிருக்க முடியாது. அங்கு இருப்பவர்கள் அதனை பெரிய கோயிலென்றழைத்தனர். ஆனால் பிற பெரிய கோயில்களுடன் ஒப்பிடுகையில் அது பெரிய கோயிலே அல்ல. நகரத்திற்கப்பாலுள்ள மலையிலிருக்கும் அக்கோயில் ஒரு இரண்டுமாடி வீட்டை விட சற்றுப் பெரியதாக இருக்கக்கூடும். சிதிலமடைந்து அதன் மேற்கூரைகள் காற்றில் ஆடிக்கொண்டும், சிதைவுகளில் எஞ்சிய வாயிற் கல்கதவுகளுடனும், சரிந்த சுற்றுக்கட்டுச்சுவர்களுடனும் காட்சியளித்தது. அச்சுவர்களின் செங்கற்கள் விவசாயிகளின் வீட்டுச்சுவர்களாகவோ அல்லது அவர்களின் பண்ணையின் வேலியாகவோ மாறியிருக்கக்கூடும். வெகு சில செங்கற்களே தென்பட்டன. எங்கும் புதர்கள் மண்டிக்கிடந்தன.

எனினும் தூரத்தில் அவ்வூரின் சிறு தெருவிலிருந்து காணும் போது சூரிய ஒளியில் மினுங்கும் மஞ்சள் ஓடுகள் எங்கள் கண்களை ஈர்த்தன. நாங்கள் அவ்வூருக்கு தற்செயலாக வந்து சேர்ந்தோம். எங்கள் ரயில்வண்டி புறப்பட வேண்டிய நேரம் கடந்தும் பளாட்பார்மிலேயே இருந்தது. ஏதேனும் தாமதமாகிய விரைவு வண்டி கடப்பதற்காக காத்திருக்க நேர்ந்திருக்கலாம். ரயிலில் ஏறியிறங்கிக் கொண்டு சிதறிக்கிடந்த பயணிகள் அனைவரும் இருக்கைகளில் வந்து அமர்ந்திருந்தனர்.

வாயிலின் அருகில் பேசிக் கொண்டிருந்த பரிசோதகர்களைத் தவிர்த்து நடைமேடையில் யாரும் நின்றிருக்கவில்லை. ஸ்டேஷனிற்கு அப்பால் சாம்பல் நிறம் போர்த்தி விரிந்த பள்ளத்தாக்கு தெரிந்தது. அதற்கப்பால் அடர்ந்த மரங்களை கொண்ட மலைகள் சூழ்ந்த அசாத்திய அமைதியுடன் ஒர் பழைய ஊர் தென்பட்டது.

திடீரென எனக்கொரு எண்ணம் உதித்தது. “இவ்வூரை சுற்றிப்பார்த்தாலென்ன?” என்றேன். எதிரில் அமர்ந்து அன்பாய் பார்த்துக்கொண்டிருந்த ஜியா மெலிதாக தலையசைத்தாள். அவள் கண்கள் பேசுவதாகத் தோன்றியதெனக்கு, ஒருவருக்கொருவர் உணர்வுகளை ஒத்திசைவுகளோடு பரிமாறிக்கொண்டோம். ஒரு வார்த்தை கூட பேசாமல் எங்கள் பைகளை எடுத்துக்கொண்டு ரயில்பெட்டியின் கதவருகே விரைந்தோம். நடைமேடையில் குதித்து இருவரும் சிரித்தோம்.

அடுத்த ரயிலில் கிளம்பிவிடலாம் என்றேன். கிளம்பாமல் இங்கேயே தங்கிவிட்டாலும் பரவாயில்லை என்றாள் ஜியா. நம் தேனிலவில் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஓரிடம் நமக்குப் பிடித்திருந்தால் அங்கு செல்வோம், தொடர்ந்து பிடித்திருந்தால் அங்கேயே சில நாட்கள் தங்குவோம் என்றாள். எங்கு சென்றாலும், புதுமணத் தம்பதியரின் குதூகலமும் மகிழ்ச்சியும் எங்களோடிருந்தது. உலகத்திலேயே மிக சந்தோஷமானவர்களாக இருந்தோம். ஜியா என் கைகளைப் பற்றியிருந்தாள், நான் பைகளைப் பிடித்துக்கொண்டிருந்தேன். நடைமேடையிலிருக்கும் பரிசோதகர்களும், ரயில் வண்டியின் சாளரம் வழி எங்களை பார்க்கும் எண்ணற்ற ஜோடிக் கண்களும் பொறாமைப்பட வேண்டுமென்று நினைத்தோம்.

நகரத்திற்குத் திரும்புவதைப் பற்றி இனி எங்களை நாங்களே குழப்பிக்கொள்ள வேண்டாம். பெற்றோர்களிடத்தும் உதவிகேட்டு நிற்க வேண்டாம். வேலையைப் பற்றியோ இன்ன பிறவற்றைப் பற்றியோ கவலைகொள்ளவும் தேவையில்லை. எங்களுக்கென்று சொந்த வீடு உண்டு. எங்களுக்கேயான சொந்த வீடு, ரொம்பப் பெரிய வீடில்லை என்றாலும் அது மிக வசதியான வீடு. நான் உனக்கானவன் நீ எனக்கானவள், ஜியா நீ என்ன சொல்ல நினைக்கின்றாயென எனக்குத்தெரியும் : இனி நம் உறவு நிலையானது. அப்படியென்றால் என்ன? எங்கள் சந்தோஷத்தில் எல்லோருக்கும் பங்குண்டு என்று தானே அர்த்தம்.

எங்களுக்கிருந்த ஏராளமான பிரச்சனைகளால் உங்கள் எல்லோரையும் தொந்தரவு செய்திருக்கின்றோம், எங்களால் நீங்கள் எல்லோரும் வருத்தப் பட்டிருக்கிறீர்கள். இதற்கு என்ன கைமாறு செய்வது? எங்கள் திருமணத்திற்கு பின் அருமையான விருந்து வைத்து உபச்சாரம் செய்தா? இல்லை, எங்கள் சந்தோஷத்தை கொண்டு உங்களுக்கு கைமாறு செய்கிறோம். நான் சொல்வதில் எந்தத் தவறும் இல்லைதானே?

இப்படித்தான் மலைப்புரத்திலிருக்கும் அவ்வூருக்கு சென்றடைந்தோம். ஆனால் தொலைதூர ரயில்பெட்டியின் ஜன்னலிலிருந்து பார்த்ததைப்போன்று அமைதியான சூழலிற்கு, துளியும் சம்பந்தமில்லாமலிருந்தது அவ்வூர். சாம்பல் நிற மேற்கூறைகளுக்கு அடியில் வீதிகளும் சாலைகளும் சலசலத்திருந்தன. காலை ஒன்பது மணி, மக்கள் காய்கறிகளையும், கிர்ணிப்பழங்களையும், மரத்திலிருந்து அப்போது தான் பறிக்கப்பட்ட ஆப்பிள்களையும் பேரிக்காய்களையும் விற்றுக்கொண்டிருந்தனர்.

அது போன்ற ஊரிலிருக்கும் தெருக்கள் அகலமாக இருப்பதில்லை, மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் டிரக்குகளும் அடைத்துக் கொண்டிருந்தன. ஓட்டுனர்கள் பலவகையான ஒலிகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். காற்றில் தூசு பறந்துக் கொண்டிருந்தது, அழுக்கு நீர் காய்கறிக் கடைகளிலிருந்து ஒரு புறம் வழிந்து கொண்டிருந்தது, பழத்தோல்கள் வீதிகளெங்கும் சிதறிக்கிடந்தன, கோழிகள் வாங்கியவர்கள் கைகளில் படபடத்துக் கொண்டிருந்தன. இக்காட்சிகள் தான் அந்த ஊரை மிக நெருக்கமாக உணரச்செய்தது.

பட்டப்படிப்பை முடித்து விட்டு அப்படியான புறநகர் ஊர்களுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தபோது உணர்ந்ததை போலல்லாமல் வித்தியாசமாக உணர்ந்தோம். இப்போது நாங்கள் வெறும் ஊர் சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள். அவ்வூர் மக்களிடையே நிலவும் சிக்கலான உறவுகளுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவ்வெண்ணமே நகர்வாழ் மக்களான நாங்கள் சற்று மேலோங்கியவர்களாக உணரச்செய்தது. ஜியா என் கைகளை இறுக பற்றினாள், அவளருகில் சாய்ந்தேன், மக்களின் விழிகள் எங்கள் மேல்விழுந்ததை உணர்ந்தோம். ஆனால் நாங்கள் அவ்வூரை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எங்களைப்பற்றிப் பேசவில்லை அவர்களுக்கு தெரிந்தவர்களைப் பற்றியே கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.

இப்போது அதிக காய்கறிக்கடைகள் இல்லை, மக்கள் நடமாட்டமும் வெகு குறைவாகவே இருந்தது. சந்தை இரைச்சலையும் அமளிகளையும் தாண்டி வந்திருக்கின்றோம். கடிகாரத்தை பார்த்தபோது ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அந்த நீளமான தெருவை கடக்க அரைமணி நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கின்றோமெனத் தெரிந்தது. இத்தனை சிறிய கால அவகாசத்தில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷனிற்குள் நுழைந்து அடுத்த ரயிலிற்காக காத்திருப்பது நன்றாக இருக்காது. மேலும் ஜியா இரவை அவ்வூரில் தங்கி கழிப்பதை பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்றாள். அவள் அப்படி கூறவில்லை என்றாலும் அவள் முகத்தில் படர்ந்திருந்த ஏமாற்றம் அதை விளக்கிற்று. கைகளை பகட்டாக வீசிக்கொண்டு எங்களை நோக்கி ஒரு மனிதர் நடந்து வந்தார். ராணுவ அதிகாரியாக இருக்கக்கூடும்.

தங்கும் விடுதிக்கு செல்லும் வழி காட்ட முடியுமா ? என்று கேட்டேன்.

ஜியாவையும் என்னையும் ஒரு நொடி பார்த்தார், பிறகு அந்தப்பக்கமாக சென்று இடதுபக்கம் திரும்புங்கள் என்று உற்சாகமாக வழி காட்டினார். அங்கு தெரியும் சிகப்பு மூன்று மாடி கட்டிடம் தான் தங்கும் விடுதி என்றார். யாரையாவது அங்கு சந்திக்க வேண்டுமா என்று அக்கறையாக கேட்டார். அவரே எங்களை அங்கு கூட்டி சென்று காண்பிக்க வேண்டுமென்ற அக்கரையோடு இருந்தது அவருடைய தொனி. நாங்கள் சுற்றுலா பயணிகள் என்றும் அங்கு சுற்றிப்பார்ப்பதற்கான பிரதான இடங்கள் இருக்கின்றதாவெனவும் கேட்டேன். அவர் தலையை தடவுவதைப் பார்த்தால் அப்படி ஒன்றும் பெரிதாக இருப்பதாக தோன்றவில்லை எனக்கு.

சற்று யோசித்தப்பிறகு குறிப்பாக அவ்வூரில் அப்படி ஒரு இடமும் இல்லை, ஆனால் ஊருக்கு மேற்கில் இருக்கும் மலையில் ஒரு பெரிய கோயில் உள்ளது, அங்கு செல்ல வேண்டுமென்றால் செங்குத்தான மலையை ஏறவேண்டுமென்றார்.

அது ஒரு பிரச்சனையே இல்லை, நாங்கள் மலையேறுவதற்காகவே வந்திருக்கின்றோம் என்றேன்.

ஆமாம், மலையேறுவதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்றாள் ஜியா.

தெருக்கோடிக்கு கூட்டிச்சென்றார். மலையும் அதன் உச்சியில் உள்ள பழைய கோயிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கும் அதன் ஓடுகளும் என் கண்ணுக்கு நேரெதிராக தெரிந்தது. ஜியா அணிந்திருக்கும் உயரமான காலணிகளை கவனித்த அவர், நீங்கள் நதியை கடந்து செல்ல வேண்டுமே என்றார்.

“ஆழமானதா?” என்று கேட்டேன்.

“முட்டிக்கு மேலிருக்கும்”

ஜியாவை பார்த்தேன்

என்னை சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்து “அது பரவாயில்லை, நான் சாமாளித்துக்கொள்வேன்” என்றாள்.

அவருக்கு நன்றி கூறிவிட்டு அவர் காட்டிய திசையில் நடக்கத்துவங்கினோம். புழுதி நிறைந்த தெருவிற்குத் திரும்பிய பிறகு உயரமான காலணிகளை அணிந்திருக்கும் ஜியாவைப் பார்த்து சங்கடப்படாமலிருக்க முடியவில்லை. ஆனால் அவள் என் முன் திடமாக நடந்துச் சொன்றாள்.

அவள் வேகத்திற்கு ஈடுகொடுத்துக்கொண்டே “நீ நிஜமாகவே ஒரு லூசு” என்றேன்.

“உன்னுடன் இருக்கும்வரை” நினைவிருக்கின்றதா ஜியா, என்னை உரசி நடந்துக் கொண்டே இதைச்சொன்னாய் நீ.

நதிக்கரைக்கு செல்லும் பாதையில் தொடர்ந்தோம். மனித உயரத்திற்கும் மேல் இருபுறமும் சோளம் நீண்டு வளர்ந்திருந்தன. பசுமையான நிழல்வெளியில் நடந்துச் சென்றோம். எங்களுக்கு முன்னும் பின்னும் ஆள் நடமாட்டமே இல்லை. ஜியாவை கைகளில் ஏந்தி மென்மையாக முத்தமிட்டேன். அதனால் என்ன? இதை பற்றி அவள் பேச வேண்டாமென்கின்றாள். அதனால் நாம் மீண்டும் அறக்கோயிலைப் பற்றிய பேச்சிற்கு போவோம். நதியின் அக்கரையில் மலையின் உச்சியிலிருந்தது அந்தக் கோயில். இங்கிருந்து பார்க்கும் போது மினுங்கும் மஞ்சள் ஓடுகளுக்கிடையில் கொத்துக் கொத்தாக வளர்ந்திருக்கும் களைச்செடிகளை பார்க்க முடிந்தது.

நதி மிகவும் குளுமையாகவும் தெளிந்தும் இருந்தது. எங்கள் காலணிகளை ஒரு கையிலும் ஜியாவின் கையை மற்றொரு கையிலும் படித்துக்கொண்டேன், ஜியா தன் உடையை மற்றொரு கையால் தூக்கிக்கொண்டாள். வெற்றுக் கால்களுடன் தொடர்ந்தோம். வெறுங்கால்களுடன் நடந்து வெகு காலம் ஆகிவிட்டது, ஆற்றுப் படுகையிலிருக்கும் மென்மையான கற்களும் கூட கால்களை உறுத்தின.

“பாதத்தில் ரொம்ப குத்துதா” என்று ஜியாவிடம் கேட்டேன்.

“பிடித்திருக்கின்றது” என்றாய் நீ மென்மையாக. நம் தேனிலவில் கால் நோக நடப்பதும் இனிமையாகவே இருந்தது. உலகின் எல்லா இன்னல்களும் ஆற்று நீரில் கரைந்து விடுவதாய் தோன்றியது. ஒரு நொடி சிறுவர்களாய் மாறினோம். சுட்டிப் பிள்ளைகளாய் நீரில் துள்ளிக்குதித்து விளையாடினோம்.

ஜியாவின் கையை இறுக பற்றிக்கொள்ள அவள் ஒவ்வொரு பாறையாக தாவிக் கொண்டிருந்தாள் இடையிடையே பாடல்களையும் முணுமுணுத்தபடி. ஆற்றைக் கடந்த பிறகு சிரித்துக் கொண்டும் கத்திக் கொண்டும் ஓடியபடியே மலை ஏறினோம். ஜியாவின் காலில் அடிப்பட்டுவிட்டது, எனக்கு மிகவும் சங்கடமானது. என்னைத் தேற்றினாள். இதனாலென்ன பரவாயில்லை, காலணிகளை மாட்டியவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்றாள். என்னுடைய தவறு என்றேன். என்னை மகிழ்விக்க என்ன வேண்டுமானாலும் செய்வேனென்றாள், தன் பாதங்களில் வெட்டுப்பட்டாலும் பரவாயில்லையென்றாள். சரி சரி இதைப்பற்றி மேற்கொண்டு பேசவில்லை. ஆனால் நாங்கள் பெரிதும் மதிக்கும் நண்பர்கள் நீங்கள், எங்கள் கவலைகளையும் ஏக்கங்களையும் பகிர்ந்துக் கொண்டதைப்போல் போல் சந்தோஷங்களையும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.

இப்படித்தான் ஒருவழியாக மலையுச்சிக்கு ஏறி கோயிலின் முன்னிருந்த புறவாயிலிற்கு வந்தடைந்தோம். சரிந்திருந்த முற்றத்தின் வேலிச்சுவற்றிற்கு இடையிலிருந்த சிறுகால்வாயில் நீர்வாங்கு குழாயிலிருந்து தூய்மையான நீர் ஓடிக்கொண்டிருந்தது. முற்றமாக இருந்த இடத்தில் யாரோ காய்கறிச் செடிகளைப் பயிறிட்டிருந்தனர். அதற்கடுத்து எருக்குழி இருந்தது. முன்பெப்போதோ உற்பத்தி குழுவினருடன் சேர்ந்து கிராமங்களில் உரமிட்டதை நினைவு கூர்ந்தோம். அந்த கடுமையான கால கட்டங்கள் ஓடும் நீர் போல கடந்து சில துக்கங்களையும் மகிழ்ச்சியான நினைவுகளையும் எங்களிடையே விட்டுச் சென்றிருக்கின்றன. நம் அன்பும் கூட அதில் அடங்கும். கீர்த்திவாய்ந்த சூரிய ஒளியின் அரவனைப்பில் எங்கள் பாதுகாப்பான அன்பினில் யாருமே இடையிட முடியாது. இனி யாருமே எங்களை துன்புறுத்தவும் முடியாது.

பெரிய கோயிலிற்கு பக்கத்தில் சாம்பிராணி ஏற்றுவதற்கான இரும்பாலான விளக்கு இருந்தது. அது நகர்த்துவதற்கோ அல்லது உடைப்பதற்கோ முடியாத அளவிற்கு மிகப்பெரியதாக இருந்ததால் பழைய கோயிலிற்கு துணையாகவும் வாயிலிற்கு முன் நிற்கும் காப்பாளனாகவும் அங்கேயே தங்கிவிட்டிருக்கின்றது. கதவு தாழிடப்பட்டிருந்தது. விரிசல் விழுந்த ஜன்னல்களில் பலகைகள் ஆணிகளால் அடிக்கப்பட்டிருந்தன. ஆனால் அதுவும் இப்போது தகர்ந்துப்போயிருந்தது. அங்கு பயிர்செய்வோர்கள் பெரும்பாலும் அவ்விடத்தை தற்போது கிடங்காகப் பயன்படுத்தக்கூடும்.

மிக அமைதியாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை யாருமேத் தென்படவில்லை. கோயிலிற்கு முன்னிருந்த பழைய மரங்களுக்கிடையில் புகுந்து மலைக்காற்று உறுமிக்கொண்டிருந்தது. எங்களுக்கு இடையூறு செய்ய எவருமில்லை. மரநிழலிலிருந்த புல்வெளியில் படுத்து ஓய்வெடுத்தோம். என் கைகளில் தலைவைத்து ஜியா படுத்திருந்தாள். மெல்லிய இழையோடே சட்டென நீல வானில் மறையப்போகும் மேகத்தை பார்த்தபடி படுத்துக்கிடந்தோம். விவரிக்க முடியா மகிழ்ச்சியிலும் நிறைவோடும் நிறைந்திருந்தோம்.

சூழ்ந்திருந்த அமைதியில் ஆழ்ந்து அங்கேயே படுத்துக்கிடந்திருந்திருப்போம், ஆனால் காலடியோசையை கேட்டு ஜியா சட்டென எழுந்து உட்கார்ந்தாள். நானும் எழுந்து நின்று யாரென பார்க்க வேண்டியதாயிற்று. கற்கள் பதித்த பாதையில் ஒருவர் கோயிலை நோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தார். தலையில் சடைமுடியுடனும் நீண்டு வளர்ந்த தாடியுடனுமான தடிமனான மனிதராக இருந்தார். கடுகடுப்புடன் இருந்தார். அடர்ந்து வளர்ந்த புருவங்களுக்கடியிலிருக்கும் முறைப்பான கண்களால் எங்களை அளந்தார். காற்று மிக குளுமையாய் வீசியது. நாங்கள் ஆர்வமாய் பார்ப்பதை கவனித்தவர் தன் பார்வையை கோயில் பக்கம் சற்றுத் திருப்பினார். காற்றில் மினுங்கும் ஓடுகளுக்கு இடையில் அசையும் செடிகளை ஓரக்கண்ணால் பார்த்தார்.

சாம்பிராணியேற்றும் இரும்பு விளக்கின் முன் நின்று அதை ஒரு கையால் தட்டி ஒலியெழுப்பினார். அவருடைய முறுக்கேறிய கடினமான விரல்களும் பார்ப்பதற்கு இரும்பால் ஆனதைப்போன்றே இருந்தன. அவருடைய மற்ற கையில் நைய்ந்துப்போன கதர் பையை வைத்திருந்தார். அங்கு காய்கறிகளை பயிரிட தொடர்ந்து வருபவர்களைப்போல் அவர் தோன்றவில்லை. புல்தரையின் மேல் கிடக்கும் ஜியாவின் உயரமான காலணிகளையும் எங்கள் பயணப்பைகளையும் கவனித்தவர் மீண்டும் எங்களைப் பார்த்தார். ஜியா உடனே தன் காலணிகளை மாட்டிக்கொண்டாள். எதிர்ப்பாரா வண்ணம் எங்களிடம் பேசத் துவங்கினார்.

வெளியூரிலிருந்து வந்திருக்கிறீர்களா? இந்த இடம் பிடித்தமானதாக இருக்கின்றதா? நான் தலையசைத்தேன். நல்ல கால நிலை என்றார். அவர் மேலும் பேசத்துடிப்பதை போன்று தோன்றியது. அடர்ந்து வளர்ந்த புருவங்களுக்கடியிலிருக்கும் கண்களில் தீவிரத்தன்மை சற்று குறைந்தார்ப்போன்று தோன்றியது. பார்ப்பதற்கு நியாயமானவராகவும் இருந்தார். தோலாலான காலணிகளை அணிந்திருந்தார். அதன் அடிப்பகுதி ரப்பர் டயர்களால் ஒட்டப்பட்டிருந்தது. அது இடையிடையே கிழிந்தும் போயிருந்தது. அவருடைய காலுரைகள் ஈரமாக இருந்ததால் ஊரிலிருந்து ஆற்றை கடந்துதான் அங்கு வந்திருக்கின்றார் என்பது புரிந்தது.

பார்ப்பதற்கு எழில் நிறைந்ததாகவும் மிகக்குளுமையாக இருக்கின்றது இங்கு என்றேன்

உட்காருங்கள், நான் சற்று நேரத்தில் கிளம்பிவிடுவேன் என்றார். எங்களுக்கு இடையூறாக வந்துவிட்டதாக நினைத்து மன்னிப்புக்கோறும் வகையிலிருந்தது அவருடைய தொனி. அருகிலிருந்த புல்தரையில் அவரும் அமர்ந்துக்கொண்டார். அவர் பைகளை திறந்தபடி முலாம்பழம் சாப்பிடுகிறீர்களா? என்றார். இல்லை வேண்டாம் என்றேன் உடனே. ஆனால் என்னிடம் ஒன்றை எறிந்துவிட்டார். நான் அதை பிடித்து உடனே திருப்பி எறியப்பார்த்தேன்.

ஒன்றுதானே, என் பாதி பையை இப்பழம் தான் நிறைத்திருக்கின்றது என்று கணமான தன் பையை தூக்கி காண்பித்தார். பேசிக்கொண்டே அடுத்த முலாம்பழத்தை கையில் எடுத்தார். என்னால் வேண்டாமென்று சொல்ல முடியவில்லை. அதனால் என்னிடமிருந்த நொருக்குத்தீனி பொட்டலத்தை பயணப்பையிலிருந்து எடுத்து திறந்து அவரிடம் நீட்டினேன். எங்கள் திண்பண்டங்களை சாப்பிட்டுப்பாருங்கள் என்றேன். ஒரு சிறிய கேக் துண்டை மட்டும் எடுத்து தன் பையில் வைத்துக்கொண்டார். இதுபோதுமெனக்கு என்று சொல்லிவிட்டு எங்களைச் சாப்பிடச்சொன்னார். முலாம்பழத்தோல்களை உறிக்கத்துவங்கினார். “சுத்தமானமவை, ஆற்றில் இவற்றை கழுவிக் கொண்டு வந்தேன்” பழத்தோலை ஒரு பக்கம் தூற எறிந்துவிட்டு கதவுப் பக்கம் நோக்கி குரல் எழுப்பினார். “போதும், சிறிது ஓய்வெடுத்துக்கொள், இங்கு வந்து கொஞ்சம் பழம் சாப்பிடு.”

“இங்கு நீளமான கொம்புடைய வெட்டுக்கிளிகள் இருக்கின்றன” கதவிற்கப்பாலிருந்து சிறுவனின் குரல் கேட்டது. பிறகு கையில் கூண்டுடன் சரிவில் சிறுவன் தென்பட்டான்.

ஏராளமானவைகள் இருக்கின்றன. நான் உனக்குப் பிறகு பிடித்துத்தருகின்றேன் என்று பதிலளித்தார்.

சிறுவன் எங்களை நோக்கித் துள்ளி குதித்து ஓடிவந்தான்.

இப்போது பள்ளி விடுமுறையா? என்றேன். அவர் உறித்ததைப்போன்றே நானும் முலாம்பழத்தை உறித்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை, அதனால் இவனை வெளியில் கூட்டிவந்தேன் என்றார். என்ன கிழமை என்று கூட மறந்துப்போய் எங்கள் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தோம். முலாம்பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு என்னை பார்த்து புன்முறுவலித்தாள் ஜியா, அவர் நல்ல மனிதர் என்ற அர்த்தத்தில். சொல்லப் போனால் இவ்வுலகில் பல நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.

சாப்பிடு, அந்த அங்கிளும் ஆண்டியும் இதை தந்தார்கள், என்றார் கேக்கையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம். இந்த ஊரிலேயே வளர்ந்த சிறுவன் இதைப்போன்றதொரு கேக்கை இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை. உடனே எடுத்து சாப்பிட்டான்.

உங்கள் மகனா? என்றேன்.

அவர் பதிலளிக்கவில்லை. முலாம்பழங்களை எடுத்துக்கொண்டு விளையாடச்செல், பிறகு வெட்டுக்கிளிகளைப் பிடித்துத்தருகின்றேன் என்றார் சிறுவனிடம்.

“எனக்கு ஐந்து வெட்டுக்கிளிகள் பிடிக்க வேண்டும்” என்றான் சிறுவன்.

“சரி பிடிச்சிடலாம்”

கையில் கூண்டுடன் சிறுவன் ஓடிச்சென்றதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய கண்களின் ஓரத்தில் ஆழ்ந்த சுருக்கங்கள் இருந்தன.

ஒரு சிகரெட்டை எடுத்தபடி அவன் என்னுடைய மகன் இல்லை என்றார். சிகரெட்டை பற்றவைத்து ஆழ்ந்து புகைத்தார். எங்களுடைய அதிர்ச்சியை உணர்ந்து, அவன் எனக்கு மிகவும் நெருக்கமான என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியின் மகன். அவனை தத்தெடுத்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன், ஆனால் என்னுடன் வந்து தங்க இவன் விரும்புவானாவெனத் தெரியவில்லை என்றார்.

அவர் உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றார் என்பது புரிந்தது.

“உங்கள் மனைவி?” என்றாள் ஜியா இதை கேட்பதை தவிர்க்க இயலாதவாறு. ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. சிகரெட்டை ஆழ்ந்து புகைத்தவாறு எழுந்து சென்றுவிட்டார்.

குளுமையான மலைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. மஞ்சள் நிற ஓடுகளுக்கிடையில் செடிகளின் உயரத்திற்கு வளர்ந்திருந்த பசுமையான புற்களும் சேர்ந்து காற்றில் அசைந்துக் கொண்டிருந்தன. நீல வானில் மிதந்து வந்த மேகங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்த மேற்கூரைக்கு அருகில் இருந்தைப் பார்ப்பதற்கு கோயிலே சாய்வாக இருப்பதைப்போன்றுத் தோன்றியது. மேற் கூரையின் ஓரத்திலிருந்த ஓர் உடைந்த ஓடு விழுந்து விடுவதைப்போன்று தொங்கி ஆடிக்கொண்டிருந்தது. அது பல ஆண்டு காலம் விழாமல் அங்கேயே அவ்விதம் தங்கிவிட்டிருக்கவும் கூடும்.

முன்னெப்போதோ சுவராய் இருந்த சிதிலங்களின் மீது அவர் நின்று வெகுநேரம் மலைத்தொடர்களையும் பள்ளத்தாக்குகளையும் பார்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் இருக்கும் மலையை விட தூரத்தில் தெரிந்த மலைத்தொடர்கள் உயரமாகவும் செஞ்குத்தாகவும் இருந்தன. ஆனால் அந்த மலைச்சரிவுகளில் எந்த படிமுறை வேளாண்மையோ வீடுகளோ தென்படவில்லை.

நீ அவரிடம் அப்படி கேட்டிருக்கக்கூடாது என்றேன்

“சரி நிறுத்து” ஜியா வருத்தத்துடன் இருந்தாள்.

“இங்க ஒரு வெட்டுக்கிளி இருக்கு” என்ற பையனின் குரல் மலையின் மறுபக்கத்திலிருந்து ஒலித்தது. ரொம்ப தூரத்திலிருந்து கேட்பதைப்போன்று இருந்தாலும் மிகத்தெளிவாகக் கேட்டது.

முலாம்பழம் நிறைந்திருந்த பை அசைந்தபடியே அத்திசை நோக்கி நடக்க ஆரம்பித்தவர் எங்கள் கண்பார்வையிலிருந்து மறைந்தார். ஜியாவின் தோளில் கை வைத்து என்பக்கம் இழுத்தேன்.

வேண்டாம் என்று திரும்பிக்கொண்டாள்.

உன் தலைமுடியில் புல் ஒட்டிக்கொண்டுள்ளது என்று விளக்கி காய்ந்த சருகை அவள் தலையிலிருந்து எடுத்தேன்.

அந்த ஓடு இப்போது விழப்போகிறது என்றாள். சற்று தொங்கலாக ஆடிக் கொண்டிருக்கும் உடைந்த ஓட்டை அவளும் கவனித்திருக்கின்றாள். அது இப்பவே விழுந்து விட்டால் நல்லது இல்லையென்றால் யாரையாவது காயப்படுத்திவிடும் என்று முணுமுணுத்தாள்.

அது விழ இன்னும் சற்று காலமாகும் என்றேன்.

அவர் நின்றிருந்த இடத்திற்கு சென்றோம். பள்ளத்தாக்கின் ஒரு பகுதியில் பயிர்நிலம் பரந்து விரிந்திருந்தது. அடர்ந்த பயிர்கள் அறுவடைக்காகக் காத்திருந்தன. எங்களுக்கு கீழிருந்த சரிவின் சமமான பகுதிகளில் சில மண்குடிசைகள் இருந்தன. அதன் அடிப்பாதி சுவர்களில் புதிதாக பளிச்சென சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. அவர் சிறுவனின் கையை பிடித்தபடி கீழிறங்கிக் கொண்டிருந்தார். சட்டென கடிவாளத்தில் இருந்து விடுபட்ட குதிரையைப் போன்று சிறுவன் தாவிக்குதித்து முன் ஓடிச்சென்று மீண்டும் திரும்பி ஓடிவந்தான். அவனுடைய கூண்டை அவரிடம் ஆட்டிக்காட்டுவதைப்போன்று இருந்தது.

“அவர் சிறுவனுக்கு வெட்டுக்கிளிகளை பிடித்துத் கொடுத்திருப்பார் என்று தோன்றுகிறதா? ஜியா நீ என்னிடம் இதை கேட்டது நினைவிருக்கின்றதா?

“நிச்சயமா” என்றேன். “நிச்சயமா”

ஐந்து வெட்டுக்கிளிகளை பிடித்துக்கொடுத்தார் என்றாய் நீ துடுக்காக.

இதுதான் நாங்கள் எங்கள் தேன்நிலவில் போய்வந்த அறக்கோயில், இதை பற்றித்தான் உங்கள் எல்லோருக்கும் விவரிக்கவேண்டுமென்றேன்.

••

நன்றி   https://nathiyalai.wordpress.com

0Shares
0