எனக்குப் பிடித்த கதைகள் 28

வெல்வெட் தலையணைகளின் கதை

மார்த்தா த்ராபாதமிழில் ரெங்கநாயகி

கிரீச்சிடும் மரப்படிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் மேலேறி, அந்த மேடையின் முன்னால் வந்து, தன் கைகளில் நீட்டியிருந்த அந்த வெல்வெட் தலையணையை விரித்து மேயரிடம் கொடுக்க முன்வரும் வரை நிமியா சான்ஷெஸ் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.

ஏனோ, ஒரு கணம், தன் மனதை மாற்றிக் கொண்டவள்போலத் தோன்றினாள் அவள். ஒரு அரைவட்டமாய்த் திரும்பி ஞாயிற்றுக்கிழமைக்கான சிறப்பான ஆடை அணிந்து கொண்டு மேடையினை முன்புறம் நெருக்கியடித்துக் கொண்டு இருந்த சுற்றுப்புறத்து மக்களைப் பார்த்தாள். பிறகு, எல்லோரும் பார்க்கக்கூடிய வகையில் அந்தத் தலையணையை உயர்த்தினாள். ஏதோ அது ஒரு புனித அப்பம் என்பது போல எல்லோரும் காணும்படியாக முனைப்புடன் அதைக் காட்டினாள். தேவாலயத்தில் இந்தச் செயல் மக்களிடம், எப்படி குழப்பத்தையும் அமைதியையும் ஏற்படுத்துமோ அதே போல இப்போதும் குழப்பத்தையும் அமைதியையும்உண்டாக்கியது.

தலையையும் கண்களையும் தாழ்த்திக் குனிய வைத்துக் கொள்ளுமளவிற்கு அந்தக் காட்சி தந்த ஒரு பயபக்தியான உணர்வை எதிர்க்கத் துணிவில்லாதவர் யாரோ, ஒரு வேளை, அங்கு இருந்திருக்க வேண்டும். பிறகு, விரித்து நீட்டப்பட்டிருந்த உள்ளங்கைகளில் – அதன் முந்தைய இடத்திற்கு உடனே திரும்பியது அந்தத் தலையணை. ஏதோ வேடிக்கை வித்தை காட்டுவது போன்ற ஒரு இனிமையான அசைவை வெளிப்படுத்தினாள், பிறகு மற்றுமொரு அரைவட்டமடித்து, கடைசியில் அந்தப் பரிசை, அதைப் பெற்றுக் கொள்ளவிருந்தவரிடம் தந்தாள். அந்தக் கறுப்பு வெல்வெட் தலையணையின் நடுப்பகுதியில் காணப்பட்ட சித்திரப் பின்னல் வேலைப்பாட்டில், அடர்த்தியான மேகங்களின் அடுக்கு சூரியனை மறைத்திருந்த போதும், அந்தப் பொன் நட்சத்திரங்கள் ஜொலிக்க முடிந்ததையும், கொலம்பியாவின் மரபுச் சின்னம் தாங்கிய மேலங்கியும், குறுக்காக சிலுவைக்குறி போன்ற மிக உன்னிப்பாக பின்னப்பட்ட கொடிகளையும் அருகிலிருந்து கவனித்த மக்கள் பாராட்டினர்.

காலத்தின் சுவடு படியாத, முதுமை ஏற்காத, இன்னார் என்று வகைப்படுத்திச் சொல்ல முடியாதவள் நிமியா சான்ஷெஸ். எப்போதும் யாராவது ஒருவர் கவனித்து வணக்கம் சொல்லும்படி ஓரளவுக்கு மட்டுமே கட்புலனாகாதபடி மற்ற அண்டை அயல் பெண்கள் இருப்பார்கள் என்றால், இவள் முழுமையாக அருவமாக இருக்கக்கூடிய அபூர்வமான வரம் பெற்றிருந்தாள். (ஒரு சிலர்தான், எடுத்துக்காட்டாய் ஃபெலிசா போல, ஒரு குறிப்பிட்ட தொலைவில் புலன்களால் காணத்தக்க வகையில் இருந்தனர்: ஆனால், இந்தச் சுற்றுப்புறம் தோன்றியமைந்ததுடன் பொருந்திப் போகும் இந்தக் கணத்தில்தான் ஃபெலிசா உண்மையில் தன் வளர்இளமைப் பருவத்தில் நுழைந்திருந்தாள், மேலும், மிக அதிகமான கேடுகளை விளைவிக்கக்கூடிய பிரசித்தியான அவளது மின்சாரப் பார்வையை இன்னும் அவள் செலுத்தத் துவங்கியிருக்கவில்லை).

அந்தத் துவக்கவிழாவிற்குப் பிறகு நிமியா சான்ஷெஸின் சித்திரப் பின்னல் வேலைப்பாடுடைய தலையணையை மட்டுமே மக்கள் ஞாபகம் வைத்திருந்தனர் என்பது மட்டும் ஐயத்திற்கிடமின்றி நிச்சயமான ஒன்றாக இருந்தது: அவள், அந்த அற்புதத்தின் உண்மையான படைப்பாளி, அவர்கள் ஞாபகத்திலிருந்து உடனே அழிக்கப்பட்டாள். இú த அளவில்தான், இரண்டு நாட்கள் கழித்து, நிமியா சான்ஷெஸ் வயது என்ன, அவள் எப்படி இருந்தாள். அல்லது எப்படி உடையணிந்திருந்தாள் என்பதும் யாராலும் ஞாபகத்தில் கொண்டு வரமுடியவில்லை. ஆனால் அவளுடைய தலையணையின் மதிப்பு மட்டும் ஆச்சரியத்திற்குரிய வகையில் வளர்ந்து கொண்டேயிருந்தது. தெரு முனைகளிலெல்லாம் அதைக்குறித்து பெண்கள் ஏக்கப்பெருமூச்சு விட்டனர். அந்தப் பெருமூச்சுகளில் ஆசையும், பொறாமையும் மெல்லியதாய் இழையோடின.

விரைவில், அந்த சுற்றுப்புறத்தில் வாழும் பெண்கள் மட்டுமின்றி சில ஆண்களுக்கும் நிமியா சான்ஷெஸ் சித்திரப் பின்னல் வேலைப்பாடு செய்திருந்த தலையணைகளில் ஒன்றை அவரவர் வீடுகளில் வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அவர்களுடைய சிறப்பான விருப்பங்களில் ஒன்றாக இருந்தது. மற்றவர்களைக் காட்டிலும் துணிச்சலான ஒருவனால் அவள் எங்கு வசிக்கிறாள் என்று அறிந்து கொள்ள முடிந்தது. அவன் உண்மையிலேயே அவள் வீட்டிற்குச் சென்று ஒரு தலையணைக்கு ஆர்டர் செய்திருந்தான். மற்றபடி, அவன் சென்று வந்ததைப்பற்றி பேசும்போது, நிமியா சான்ஷெஸ் பற்றியோ, அவள் யாருடன் வசிக்கிறாள் என்பது போன்ற வேறு எந்தத் தகவலையோ அவனால் விளக்கிக் கூறமுடியவில்லை.

மேல் தளத்திலிருந்தோ, குளியலறையிலிருந்தோ அல்லது சமையலறையிலிருந்தோ சத்தம் எதையும் அவன் கேட்கவில்லை என்பதாலும், சாப்பாட்டு அறையில் வேறு எந்த நபரையும் அவன் எதிர் கொள்ளவில்லை என்பதாலும் இந்தச் செய்தியே ஒரு எச்சரிக்கையுணர்வை, பீதியை உண்டாக்கியிருக்க வேண்டும். ஏனெனில், குழந்தைகளுடன் கூடிய குடும்பங்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே அந்த சுற்றுப்புறத்திலே வீடுகள் ஒதுக்கித்தரப்படும், ஆனால் அந்த சித்திரப்பின்னல் வேலைப்பாடுடைய தலையணையை உருவாக்கியவள் என்பதால் சாதாரணமாக கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் அவளுக்குப் பொருந்தவில்லை.

துணிச்சலாய் அந்தத் தலையணைக்கு ஆர்டர் செய்துவிட்டு வந்திருந்த அந்த நபருக்கு நிமியா சான்ஷெஸ் வீட்டிலிருக்கும் மேஜை, நாற்காலி என தட்டுமுட்டுச் சாமான்களைத் தவிர வேறு எதைப்பற்றியும் சொல்ல எதுவும் இருக்கவில்லை. கீழ்த்தளத்தின் இரண்டாவது அறையின் பாதி திறந்திருந்த கதவின் பின்புறமாக ஒரு கணம் பார்க்க நேர்ந்ததில், ஒரேயொரு விதிவிலக்காக, தரையெங்கும் சிதறியிருந்த, கந்தல் துணிகளால் செய்யப்பட்ட எண்ணற்ற பொம்மை மிருகங்கள் தவிர, மற்ற அனைவருடைய வீடுகளிலும் இருப்பதைப் போலவே, அதே மேஜை, நாற்காலிகள், பழைய சிதைந்து போன அடுக்குப் பலகை என்றுதான் அவளும் வைத்திருந்தது போலத் தோன்றியது.
பெருகிக் கொண்டிருந்த ஆர்வம் அனைவரையும் வளைத்துப் போட்டு சிக்க வைத்திருக்க, ஆறு நாட்கள் கழித்து, நிமியா சான்ஷெஸ் அவளுடைய வாடிக்கையாளருக்கு கறுப்பு வெல்வெட் துணியில் பின்னல்வேலைப்பாடு செய்யப்பட்ட புதுத் தலையணையை அளித்தாள். அவனை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து, அந்த சாப்பாட்டு அறை வழியே நடத்தி உள்ளே அழைத்து, அந்தத் துவக்க விழாவன்று செய்த அதே மாதிரியான அங்க அசைவுகளை திரும்பவும் செய்யத் துவங்கினாள். தனது உள்ளங்கைகளின் குறுக்கே மென்மையாகக் கிடந்த அந்த தலையணையுடன் அவனை நோக்கி வந்தாள், பிறகு, அந்த பின்னல்வேலைப்பாடு தெரியும்படியாக அதன் இரண்டு ஓரங்களையும் உயர்த்திப் பிடித்துக் காட்டினாள். பின், அதை அவனிடம் ஒப்படைத்தாள். பிறகு, சட்டென்று அந்த வாடிக்கையாளருக்கு வாசல் கதவைச் சுட்டிக் காட்டினாள்.

சுற்றுப்புறத்திலிருந்த மற்ற அனைவரும் அந்தத் தலையணையைப் பார்த்தபின், நிமியா சான்ஷெஸ் பணியின் பிரசித்தம் சட்டென்று கூடிப்போனது. இலைகள், அடிமரம், நடுத்தண்டு என்பதுவரை அத்தனை லக்ஷ்ணங்களையும் உடைய ஓர் புதர்க்காட்டின் நடுவே ஒரு ஒட்டகச்சிவிங்கி இருப்பதைக் காட்டியது அந்தப் பின்னல் வேலைப்பாடு. குறிப்பாக, அசாதாரண விஷயம் என்னவென்றால், ஒரு இடத்தில் கூட பச்சை வர்ணமே இல்லாதபடி இலைகள் அத்தனையுமே மிக அழுத்தமான வர்ணங்களில் பின்னப்பட்டிருந்தன; லைலக் மலர் வர்ணம் போல இளஞ்சிவப்பு, ஊதா, மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு இலைக் கொத்துகள் என்று, இவற்றில் அந்த ஒட்டகச்சிவிங்கி ஆரஞ்சுக்கு மிகச் சரியான நேர்மாறான வர்ணமாக நல்ல வயலட் நிற இலைகளைத் தேர்ந்து பசிக்கு உண்டு கொண்டிருந்தது.

இதனைப் பார்க்க அணிவகுத்து வந்த அண்டை அயலாரை பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அந்தப் பின்னல் வேலைப்பாடடைய தலையணையை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வந்திருந்த அந்த நபர். மேலும், மூன்றே நாட்களில் பதினான்குக்கும் மேல் புதிய ஆர்டர்கள் வந்து குவிந்தன நிமியா சான்ஷெஸøக்கு.

முதல் அடுக்கில் வந்த தலையணைகள் ஒட்டகச்சிவிங்கி சம்பந்தப்பட்டதாகவே பின்னல் வேலை செய்யப்பட்டு, வியப்பிலாழ்த்தும் ஒரு அசுர வேகத்தில் வந்தன நிமியா சான்ஷெஸிடமிருந்து. திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான பின்னல் வேலை செய்பவளாகத் தன்னை காட்டிக் கொள்வதைத் தவிர்க்க, அந்த ஒட்டகச் சிவிங்கிகளை மிகவும் பொருத்தமற்ற சூழல்களில், பின்புலங்களில் அமைத்திருந்தாள். புதர்க்காட்டில் முதலில் அமைத்துவிட்டபின், அதை ஒரு பெரிய பொன்மயமான சூரியனுடன் சமவெளி ஒன்றில் வைத்தாள். பிறகு, எண்ணிலடங்கா சூரியன்களுக்கிடையிலும், நிலவுகளுக்கிடையிலும் வைத்தவள் கிட்டதட்ட சாத்தியமான அனைத்தும் ஆப்பிரிக்க நிலக் காட்சிகளும் தீர்ந்து விட்டிருந்ததாய் அவள் உணர்ந்த சமயம், நதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் நடுவில் அதை வைத்தாள். கடைசியாய் அவள் வசித்து வந்த சுற்றுப்புறத்திலேயே அதை இருத்தினாள்.

இந்தக் கடைசித் தலையணை அதன் சொந்தக்காரரையும் அதன் பார்வையாளர்களையும் மிகத் தெளிவாகக் குழப்பியது. எப்போதுமே பக்கவாட்டுத் தோற்றத்தில் காணப்படும் அந்த ஒட்டகச்சிவிங்கியின் மேல் அடுக்கி வைத்தது போன்ற தோற்றத்துடன், அந்த சுற்றுப்புறத்தில் இருக்கும் கட்டிடங்களின் உருவரைகளை நினைவுபடுத்துவது போன்று அமைந்திருந்த வீடுகளுக்கிடையில் ஏதோ சிறைபடுத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது போல அமைந்திருந்தது அந்த ஒட்டகச்சிவிங்கி. அந்தப் பகுதியிலேயே இல்லாத ஒன்றாக ஜன்னல்களுக்கு வயலட் பூக்களால் திரைகள் போட்டிருந்தாள் நிமியா சான்ஷெஸ், ஆனால், அதை முழுவதுமாக மறைக்க அவளால் முடியவில்லை.

ஆப்பிரிக்க நிலக்காட்சிகள், காடுகள் அல்லது சமவெளிகள் என்று அந்தத் தலையணையின் சொந்தக்காரரை கற்பனையிலேயே வேறு ஒரு பொய்மை நிலைக்கு இடம் பெயர்த்து எடுத்துச் செல்லக்கூடிய மாயத்தன்மையை அந்தத் தலையணைகள் கொண்டிருந்ததால், இப்போது, இந்த வாடிக்கையாளர் தான் ஏமாற்றப்பட்டதைப் போல உணர்ந்தார்.

வீடுகளுக்கிடையில் இருக்கும் ஒட்டகச்சிவிங்கியைக் கொண்டிருந்த தலையணையை அந்த வாடிக்கையாளர் ஒருவித அச்சத்துடன் திருப்பித்தந்தார். மறுநாள் அந்த பின்னல் வேலைப்பாடு செய்பவரிடம் தன்னிலை விளக்கம் அளிக்க அவள் திரும்பி வந்த போது, நிமியா சான்ஷெஸ் உள்ளேதான் இருந்தாள் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், அந்தக் கதவு ஒருவித மூர்க்கத்துடன் மூடியவாறே இருந்தது. மற்ற வாடிக்கையாளர்கள் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தும் அவள் அதை திறக்கவில்லை, என்றாலும், ஒளிக்காமல், வெளிப்படையான ஒரு பகையுணர்வுடன் அவர்களுக்கு முகமன் சொன்னாள்.

பின்வந்த வருடங்களில் நிமியா சான்ஷெஸ் பற்றி மேற்கொண்டு யாரும் எதுவும் கேள்விப்படவில்லை. மேலும், எல்லோரும் அவளை மறந்து போனார்கள். மனநிறைவுடன் இருந்த அந்தத் தலையணைகளின் சொந்தக்காரர்கள் அவற்றை அரிய பொக்கிஷமாக மற்றவர்களுக்குக் காட்டினார்கள். கிட்டதட்ட மோசமான சரிவு நிலைமையிலிருந்து அவர்களை காப்பாற்றிக் கொண்டிருந்தவை அவை மட்டுமே.

நாற்காலிகளின் கால்கள் உடைந்தபோதும், கீறல்கள் மற்றும் கறைகள் படிந்தபடி வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள் இருந்த போதும், எறும்புகளின் கரிசக்காடிக் கசிவுகள் மேஜைகளை உரித்தெடுத்திருந்த போதும், அந்தத் தலையணைகள் பிரகாசமானவைகளாக அப்படியே இருந்தன, கெட்டியான தங்க வெள்ளி சரிகை நூல்கள் இருட்டிலும் பளபளப்பாக ஒளிர்ந்து மினுங்கிக் கொண்டேயிருந்தன. இதற்கிடையில், அந்த சுற்றுப்புறத்தில் வாழும் மற்ற நபர்களைப் போலவே நிமியா சான்ஷெஸøம் வந்து போனாள். ஆனால், நல்லவேளை அவளுடைய அருவநிலைக்கு நன்றி, யாரும் அவளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. மங்கலான, இருண்ட ஃபெலிசாவின் ஆவி தோற்றத்தைப் பற்றியும், அந்தக் குழந்தை நலக்காப்பகம் பற்றியும் அவதூறு கிளம்பிய சமயம்தான் அவள் பெயர் அடுக்களை வம்பில் மறுபடியும் ஒலித்தது.

அந்த நலக்காப்பக கட்டிடத்தின் உச்சிக்குச் செல்வதற்காக ஜன்னலில் ஏறிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அது பகல் வேளையாதலால், ஓய்வு நேரத்தில், இன்னாளைய விலைமகளிர் மனையும் அன்னாளைய நலக்காப்பகமும் ஆன அதை அந்தச் சிறுவனால் தூண்டித்துருவிப் பார்க்க முடிந்தது. திறந்த வாய் மூடாமல், குழப்பத்தினூடேயே மேல் தளத்திற்கும் கீழ்த்தளத்திற்குமாகப் போய் வந்தான். இரண்டாவது தளத்தில் நெருக்கிப் போடப்பட்டிருந்த கட்டில்கள் உள்ள அறைகளைக் குறும்புத்தனமாகப் பார்த்தவன், திகைப்புடன் நின்றான் இந்த இடத்தில். ஒரு சாதாரண, பொதுவான காட்சியையே அந்த நான்கு கட்டில்களும் அவனுக்குக் காட்டின, ஏனெனில் எல்லா வீடுகளிலும் இதேதான் நடந்தன என்று அவனுக்குத் தெரியும்.

ஆயினும், மிகச்சிறிய பையனாக இருந்ததால், அதைப் புரிந்து கொள்ளும் திறனற்று இருந்தான் அவன். கிழிந்த போர்வைகளாலும், விரிப்புகளாலும் மூடப்பட்டிருந்த கட்டில்களின் மீது, ஏதோ இந்த உலகத்திற்கு சம்பந்தப்படாதவை போல ஒளிர்ந்து கொண்டிருந்த, பின்னல் வேலைப்பாடுடைய கறுப்பு வெல்வெட் தலையணைகள், அடுக்கடுக்காக ஏராளமாக இருந்தன என்பதுதான் அசாதாரணமான ஒன்றாக இருந்தது.

முதலில், ஆர்வக் கோளாறில், தங்க, வெள்ளி உருவரைகள் மற்றும் படிவங்கள் தவிர வேறு எதையும் அவன் பார்க்கவில்லை. பிறகு, அடையாளம் தெரிந்து அவன் அணுகிச் சென்ற உருவங்களைப் பற்றிய கருத்து விளக்கம் மட்டும் அவனிடமிருந்து நழுவிச் சென்றது. எல்லா தர்க்கவாதிகளுக்கும் முரணாக ஊதா மற்றும் பச்சை நிறங்களில் அத்தனை உடல்களும் நிர்வாணமாக இருந்தது அவனுடைய கவனத்தை ஈர்த்தது. பிற்பாடு, தட்டுத் தடுமாறி, அவனுடைய தயக்கமான சொற்களில் சமையலறையில் அவன் தன்னுடைய அம்மாவிடம் விளக்கிக்கூற முயற்சி செய்தான். நல்ல அந்த மஞ்சள் கைகள் தங்களுக்கு நடுவே மிகச் சரியாகப் பிடித்துக் கொண்டு  வருணித்துக் கொண்டு வந்தவன் இந்த இடத்தில் குழம்பிப் போனான், அவன் தாயாரின் நெரிப்புகளுக்குப் பிறகும் தொடர்ந்து அவனால் சொல்ல முடியவில்லை.

மூச்சுத்திணற வைக்கும் அவனுடைய குழப்பமான பேச்சிலிருந்து அந்த அண்டை அயலார் இரண்டு விஷயங்களை ஊகித்துக் கொண்டனர். ஒன்று, ஏராளமான அளவில் தலையணைகள் இருந்தன என்பதிலிருந்து நிமியா சான்ஷெஸ் ஒரு ஜøர வேகத்தில் அவளுடைய பணியை செய்திருக்கிறாள் என்பது. இரண்டு, அந்த பின்னல் வேலைப்பாட்டினூடே இரகசியமான, அருவருப்பான ஏதோ ஒன்று நுழைந்திருக்கிறது என்பதும். அந்தச் சமவெளிகளில் நதிகளோ, காடுகளோ, ஒட்டகச்சிவிங்கிகளோ இனியும் இல்லை. மாறாக, அவர்களால் உள்ளுணர முடியாத, வெளிப்படையாக, தெளிவாக அவர்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வேறு ஏதோ ஒன்று இருக்க வேண்டும். மற்றவரைவிட மிகவும் பக்தி சிரத்தையுள்ள ஒரு பெண் இந்தச் சூழ்நிலையை வெளியே தெரியப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தன் கடுமையான குரலில் வற்புறுத்தினாள். மேலும், திருச்சபையின் மதகுருவை பார்க்கச் சென்றாள் அவள். தன்னுடைய வருகைக்கான காரணத்தை விளக்க ஆரம்பித்த பிறகு அவள் பின் வாங்கவேயில்லை: மதகுரு, கோபத்துடன், சாபம் இடுவது போல, தொடர்பற்ற முறையில் முணுமுணுத்துக் கொண்டு, வீறாப்பாய், திருக்கோயிலின் புனிதப்பொருட்கள், அங்கிகள் இவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கும் திருப்பூட்டறையை நோக்கி நடந்தார்.

எப்படியும் அவர் அதை யூகித்திருக்க வேண்டும். ஏறக்குறைய விடிந்திருந்த பொழுதில், அந்தத் திருக்கோயிலின் புனிதப் பொருட்களை காப்பவரான மணியக்காரர், நிமியா சான்ஷெஸின் வீட்டுக் கதவைத் தட்டியதை அந்தப்பகுதி மக்கள் பார்த்தார்கள். உள்ளே நுழைந்தவர் சற்றுநேரம் அங்கே இருந்தார். அதற்குப் பின் அவரிடம் என்ன கேட்டிருந்தாலும் பிரயோசனப்பட்டிருக்காது. ஏனெனில், இந்த நடப்பு உலகத்துடனான அவரது சம்பந்தம் மிகவும் சொற்பம். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை, நிமியா சான்ஷெஸின் வீட்டை கண்காணிக்கும் செயலை தங்களுடைய பொழுதுபோக்காக ஆக்கிக்கொண்டார்கள்.

அவள் மூன்று நாட்கள் தெருவில் தன் முகத்தைக் கூடக் காட்டவில்லை என்பதை கவனித்தார்கள். நான்காம்நாள், அவளுக்கே உரிய தனித்துவமான பாணியில், செய்தித்தாளில் சுற்றப்பட்ட, சந்தேகமில்லை, ஒரு தலையணையைக் கொண்டிருந்த ஒரு பெரிய மூட்டையை எடுத்துக் கொண்டு வெளியேறியதை கவனித்தார்கள். அதைச் சுற்றி, மூடி எடுத்துச் சென்றதுதான் ஆச்சரியமான, அசாதாரண விஷயமாக இருந்தது. அவளுடைய வாடிக்கையாளர்களில் ஒருத்தியான அண்டை வீட்டுப் பெண் அவளை நிறுத்தி, அந்தத் தலையணையை தனக்குக் காட்ட முடியுமா என்று பணிவான குரலில் கேட்க, நிமியா சான்ஷெஸ் வெறுமனே அவளை உறுத்துப் பார்த்துவிட்டு, நேரே தேவாலயம் நோக்கித் தொடர்ந்தாள்.

மதகுரு இருக்குமிடமான அந்த இருட்டான குகைக்குள் சென்றவள் ஒரு சில மணித்துளிகளுக்கு மேல் தங்காமல் அங்கிருந்து வெளியேறினாள்.

அன்றுஞாயிற்றுக்கிழமை.வழக்கமான நேரத்தில் பிரார்த்தனைக்காக மக்கள் கூடினர். பெண்கள், அவர்களுக்கு இடையிடையே நிறைய, சிறிய குழந்தைகள், ஒரு சில வயதானவர்கள் நுழைவாயிலில் அமர்ந்திருந்தனர். நீண்ட நேரமாயிற்று, மதகுரு காட்சி தரவில்லை. பகலாயிற்று, பெண்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு என்னமோ ஏதோ என்று தோள்களை குலுக்கிக் கொண்டனர். ஒருவித அச்சத்துடன், கடைசியில் இரண்டு பேர் எழுந்தனர். மதகுருவின் இருப்பிடத்திற்கும் திருப்பூட்டறைக்கும் இட்டுச்செல்லும் அந்த இருட்டான நடைபாதையைக் கடந்து சென்று, கதவைத் தட்டினார்கள். நீண்ட நேரம் தட்டினார்கள், பதில் கிடைக்காமல். இறுதியில், லேசாக அந்தக் கதவு திறந்தது. அகலத் திறந்த கண்களுடன், எச்சில் ஒழுகவிட்டுக் கொண்டு, விளங்கிக் கொள்ள முடியாதபடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்கும் திருக்கோயில் மணியக்காரர் தோன்றினார். பிறகு, அந்தக் கதவை மூடி, உள்ளே அவர் தாழ்ப்பாள் போடுவதை கேட்கும் வரை அவரை விளங்கிக் கொள்வது அசாத்தியமாய் இருந்தது. ஏதேதோ விளக்கங்களுடன் பயத்துடனேயே மக்கள் வெளியே திரும்பிச் சென்றனர்.

பதினைந்து நாட்களுக்கு அந்த மதகுரு பற்றிய எதுவும் புலப்படவில்லை. இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுக்குப் பிறகு, அந்தத் திருக்கோயிலின் பிரசங்க மேடை மீது அவர் ஏறிய போது, ஏதோ கல்லறைக்குள் ஒரு காலை வைத்திருந்துவிட்டு வந்ததைப் போலத் தோன்றினார். நரக பீதியை மக்களிடம் நீக்கி நிறுத்தியிருந்த தெய்வீக அருட்கடாட்சத்தின் தன்மையை, பிரயோசனமில்லாதபடி, கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போகச் செய்திருந்த அது, இறுதிக்கால முதுமையின் தளர்ச்சி போல, ஒரு சிதைவு திடீரென அவரை மீறிச் சென்று அவரை ஆட்கொண்டிருந்தது.

அதன் பின், சிறிது காலத்திலேயே அவர் இறந்தார். அவர் ஆவி பிரியச் செய்திருந்தது எது என்பது யாருக்கும் தெளிவாகப் புரியவில்லை. என்றாலும், அது, எவராலும், எப்போதும் பார்க்க முடியாத – நிமியா சான்ஷெஸின் கறுப்பு வெல்வெட் தலையணையுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று மட்டும் எல்லோரும் கருதினர்.

நன்றி : புது எழுத்து ஜனவரி 07

https://keetru.com/

0Shares
0