எனக்குப் பிடித்த கதைகள் 35

கார்லோவுக்கு எப்படி வாசிப்பது என்று தெரியாது

கியூலியோ மோஸி

ஆங்கிலத்தில்: எலிசபெத் ஹாரிஸ்

தமிழில்: சுகுமாரன்

கார்லோவுக்கு (அது நான்தான்) எப்படி வாசிப்பது என்று தெரியாது. அவன் மாபெரும் புத்தகங்களை வாசிக்கிறான். அந்தப் புத்தகங்களை வாசிக்கும்போது கார்லோவுக்கு ஒரு வார்த்தையும் புரிவதில்லை. அந்தப் புத்தகங்களில் கார்லோ  எதைப் பார்க்கிறானோ  அதையே நினைவில் வைத்துக்கொள்கிறான். கார்லோ வாசிக்கும்போது அடிக்கடி கண்களை  மூடிக் கொள்கிறான். சில சமயங்களில் தூங்கி விடுகிறான். தூங்கும்போது பொருட்களைப் பார்க்கிறான். விழித்தெழுந்ததும்  மறுபடியும்  வாசிப்பைத் தொடர்கிறான்.

எப்போதும் அவன் விட்ட இடத்திலிருந்து வாசிக்கத் தொடங்குவதில்லை. ஏனெனில் தூக்கத்தில் விழும் முன்பு எந்த இடத்தில் நிறுத்தினோம் என்பதை அவனால்  எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. சில சமயங்களில் கார்லோ தூங்கும்போது புத்தகம் மூடிக்கொள்கிறது அல்லது பக்கங்கள் புரண்டுவிடுகின்றன அல்லது நாற்காலிக் கைப்பிடியிலிருந்தோ படுக்கையிலிருந்தோ நழுவிக் கீழே விழுகிறது. சில  புத்தகங்களில் கார்லோ பாதிப் பக்கங்களைக்கூட வாசித்திருக்க மாட்டான்; மற்றவற்றில் வாசித்த பக்கங்களையே   மறுபடியும் மறுபடியும் வாசித்திருப்பான். கார்லோவால் வார்த்தைகளைப் பார்க்க முடிவதில்லை என்பதால் அவற்றை அடையாளம் காணவும் முடிவதில்லை.

‘கதவு’ என்ற வார்த்தையை அந்தப் பக்கம் உள்ளடக்கியிருக்குமானால் கார்லோ ‘கதவு’ என்ற வார்த்தையைப் பார்ப்பதில்லை. ஒரு கதவையே பார்க்கிறான். ‘நீலம்’ என்ற வார்த்தையை அந்தப் பக்கம் உள்ளடக்கியிருக்குமானால் கார்லோ ‘நீலம்’  என்ற வார்த்தையைப் பார்ப்பதில்லை. நீலமான எதையோ பார்க்கிறான். கதவு என்ற வார்த்தை இருக்கும் பக்கத்தைக் கார்லோ மறுவாசிப்புச் செய்யும் ஒவ்வொரு முறையும் கார்லோ பார்க்கும் கதவு ஒரு புதிய கதவு. நீலம் என்ற வார்த்தை இருக்கும் பக்கத்தைக் கார்லோ மறுவாசிப்புச் செய்யும் ஒவ்வொரு முறையும் அவன் பார்க்கும் நீலப் பொருட்கள் நீல நிறத்தின் வெவ்வேறு சாயல்களில் இருக்கும். மாரியோ, ரேமண்ட், லிஸ், எவெலீன், அலியோவா என்பன போன்ற பெயர்கள் – சிறப்புப் பெயர்கள் – புத்தகப் பக்கத்தில் தென்படும்போது மட்டும்  அவன் எதையும் பார்ப்பதில்லை. மாரியோ, ரேமண்ட், லிஸ், எவெலீன், அலியோவா போன்ற வார்த்தைகளை அவன் பார்ப்பதில்லை அல்லது கதவுக்கு, சாதாரணக் கதவுக்குப் பொருந்திப் போகும் கதவு என்ற வார்த்தையைப் பார்ப்பதுபோல  மாரியோ, ரேமண்ட்,லிஸ், எவெலீன், அலியோவா  போன்ற வார்த்தைகளுடன்  தொடர்புகொண்ட எவரையும் அவன் பார்ப்பதில்லை. உதாரணமாக, ரேமண்ட் என்ற வார்த்தை புத்தகத்தில் தென்படும்போது கார்லோவால் அடையாளம் காண  முடிவதில்லை. அந்த வார்த்தையைப் பார்க்க முடிவதில்லை.

எனவே ஒரு காட்சியில் இடம் பெறும் செயலைப் பார்க்கிறான்; இந்தச் செயலைச் செய்த ரேமண்ட், ரேமண்ட் என்ற வார்த்தையால் அடையாளம் காட்டப்படுகிற வேறு காட்சிகளிலும் தோன்றுகிற அதே ரேமண்ட்தானா என்று அவனுக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவும் முடியாது. எனவே  அவனுக்கு, அதாவது கார்லோவுக்குத் தெரிந்துகொள்ள முடிவது,  தானே அதாவது, கார்லோவே அந்தக் காட்சியில் இந்தச் செயல்களைச் செய்வதாகக் கற்பித்துக்கொள்வதுதான். சுருக்கமாகச் சொல்வதானால், கார்லோ பார்ப்பது அவனுடைய கற்பனையை உபயோகித்து தொடர்ச்சியான செயல்களால் உருவாக்கிய வெளியில் அவனைப் போன்ற ஒருவனைப் பொருத்துவது. நீங்கள் சொல்லலாம், அவனைப் போன்ற ஒருவன் என்பது கார்லோவைப் போன்ற ஒருவனே என்று, அந்த ஒருவன் கார்லோதான் என்று. இவை எல்லாவற்றின் விளைவாக, அதாவது கார்லோவுக்கு   எப்படி வாசிப்பது என்று தெரியாது.

அவன் மாபெரும் புத்தகங்களை வாசிக்கிறான். அவற்றை எப்படி வாசிக்க வேண்டும் என்று விளக்கப்பட்டிருக்கிறதோ அந்த முறையில் வாசிக்கிறான். கார்லோ, ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அந்தக் கட்டமைக்கப்பட்ட வெளிக்குள் தன்னையே பார்க்கிறான்.

அவன் வாசிக்கும்போது உண்டாகும் அனுபவங்களைப் பற்றி நண்பர்களிடம் சொல்லும்போது – ஏனெனில், வாசிக்கும்போது அல்லது கேட்கும்போது அல்லது பார்க்கும்போது தனக்கு ஏற்படும்  அனுபவங்களைப் பற்றி சொல்ல அவனுக்குச் சில நண்பர்கள் இருக்கிறார்கள் – அவர்கள் சொல்லும் ஒரு விஷயம் – ‘சரி, இப்படி வைத்துக்கொள்ளலாம் கார்லோ, நீ ஒரு கதையை வாசிக்கும்போது அதனுடன் உன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறாய்’ – கவனத்துக்கு வருகிறது. இதைக் கேட்கும்போது, அதாவது, ஒவ்வொரு முறை தன்னுடைய வாசிப்பு அனுபவங்களைப் பற்றி நண்பர்களிடம் சொல்லும்போதும் அவன் ‘இல்லை, நான் கதையுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. தொடர்ச்சியான செயல்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு வெளியை என்னால் அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது. என்னால் முடிவதெல்லாம் நான் பொருந்தக்கூடிய  வெளியைப் பார்ப்பது. அதற்குள் என்னை வைத்துக்கொள்வது’ என்று பதில் சொல்கிறான்.

அவன் வாசிக்கும்போது உண்டாகும் அனுபவங்களைப் பற்றி நண்பர்களிடம் சொல்லும்போது, கார்லோ ஒருபோதும் புத்தகத்திலிருக்கும் வார்த்தைகளைக் குறிப்பிடுவதில்லை. குறிப்பாக, அவனால் ஒருபோதும் நினைவு வைத்துக் கொள்ள முடியாதவை என்பதாலும் அவன் ஒருபோதும் பார்த்தேயிராதவர்கள் என்பதனாலும் பாத்திரங்களின் பெயர்களைக் குறிப்பிடுவதில்லை. அதற்குப் பதிலாக  அவன் பார்த்தவற்றைப் பற்றிப் பேசுகிறான். ஏறக்குறைய, எப்போது கார்லோவுக்கு, அவன் புத்தகத்தை வாசிப்பதைப்  பற்றிச் சொல்லும்போது, அவன் புத்தகத்தை வாசிக்கும்போதோ அல்லது அதன் மேல் விழுந்து தூங்கும்போதோ எதைப் பார்க்கிறானோ அதைப் பேசிக்கொண்டிருக்கும்போது, அவன் பலவற்றையும் நினைவு கூர்வதால், பேச்சைத் தொடங்கும்  முன்பு நினைவுகூர முடிவதை விட அவன் நினைவில் பார்ப்பவை பற்றியே பேசுகிறான். அவனுடைய நண்பர்களிடம்  அவன் ஒரு புத்தகத்தைப் பற்றி சொல்லும்போது (நினைவு வலுவாக இருந்தால் சொல்லுவான்; இல்லையென்றால்  குழப்பத்துடனும் தோல்வியுடனும்  ‘என்னால் நினைவு கூர முடியவில்லை’ என்பான்), புத்தகத்தை முதலில் வாசிக்கும்போது கார்லோ எந்த வெளிக்குள் இருந்தானோ அதற்குள் மீண்டும் நுழைவதாகக் கற்பனை செய்து கொள்வான். அங்கேயிருந்து, அந்த வெளிக்குள் அவனைச் சுற்றி நடக்கும் செயல்களிலிருந்து பேசத் தொடங்குவான்.

கார்லோ சுற்றிலும் பார்க்கிறான். பொருட்களைப் பார்க்கிறான். வாசித்துக்கொண்டிருந்தபோது கவனிக்காமல் விட்ட,  அங்கே இருப்பவற்றைக் குறித்துக்கொள்கிறான். பிறகு அவற்றுக்குப் பெயரிடுகிறான். வார்த்தைகளுடன் வருகிறான். கார்லோவைப் பொறுத்தவரை பேசப்படும் வார்த்தைகள் எழுதப்படும் வார்த்தைகளிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டவை. எனவே, அந்தப்  பொருட்களை அணுஅணுவாகப் பார்க்கிறான். அவை அங்கே இருப்பதை உணர்கிறான். அவனுடைய நண்பர்கள் குறுக்கிடாமலிருந்தால் – சில சமயங்களில் அவனுடைய நண்பர்கள் ‘நானும் அதை வாசித்தேன். இதிலிருக்கும் எதுவும் அந்தப்  புத்தகத்தில் இல்லை’ என்றோ ‘அதைப் பற்றி ஒற்றை வாக்கியம் மட்டுமே இருக்கும்போது நீ எப்படி முழுக்காட்சியையும் எங்களிடம் விவரிக்கிறாய். . .’ என்றோ குறுக்கிடுவார்கள்.

அவனுடைய நண்பர்கள் குறுக்கிடாமலிருந்தால்  கார்லோ அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ  அந்த அறைக்குள் என்ன இருக்கிறது என் பதைப் பற்றி – அறைகலன்கள், தட்டுமுட்டுச் சாமான்கள், உண்கலன்களுக்குக் கீழே விரிக்கப்படும் மேஜை விரிப்புகள், விளக்குகள், திரைச்சீலைகள், ஜன்னல்கள், தரை, படம் தொங்க விடப்பட்டிருந்த சுவரின் வெற்றிடம், சீனக் கைவினைக் கோப்பைகளில் பதிந்திருக்கும் விரல் ரேகைகள், கதவுக்கு அப்பாலிருக்கும் மூலையில் படிந்திருக்கும் தண்ணீர்க் கறை, கதவின் பிடி எப்போதும் மோதுவதால் சுவர்ப் பூச்சில் ஏற்பட்டிருக்கும் பள்ளம், அலமாரியின் அடியிலிருந்து எட்டிப் பார்க்கும் புழுதிச் சுருள், அலமாரி மேல் வைத்திருக்கும் சின்னப் பீங்கான் சிற்பத்தின் அடிப்பகுதியிலுள்ள விரிசல், நாற்காலி மேல் விசிறப்பட்டிருக்கும் மங்கிய மழைக் கோட்டின் பையில் விடுபட்டுப் பிரிந்திருக்கும் தையல் எல்லாவற்றையும் பற்றி – விளக்கமாகப் பேசிக்கொண்டிருப்பான்.

ஒருமுறை புத்தகக் கடையில் கார்லோவின் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரின் புத்தக வாசிப்பு நடந்தது. செல்வாக்கான விமர்சகர் ஒருவர் எழுத்தாளரை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து எழுத்தாளர் தன்னுடைய புத்தகத்திலிருந்து சிறு பகுதியை வாசித்தார். பிறகு, பார்வையாளர்கள் (எப்போதும்போல அதிகம் யாருமில்லை) கேள்வி கேட்க அழைக்கப்பட்டார்கள்.  கார்லோ, அநேகமாகக் காலியாக இருந்த அந்தச் சின்ன  அறைக்குள் எழுந்து நின்று பிரிந்த தையலைப் பற்றி எழுதியதற்காக எழுத்தாளரைப் பாராட்டிவிட்டு அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான இந்த எழுத்தாளரின் புத்தகத்தில் ஒரு காட்சியில் இடம் பெறும் மழைக் கோட்டில் பிரிந்திருக்கும் தையலைப் பற்றி நீளமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

கடைசியாக. விமரிசகர்  அவனை இடைமறித்து அவனுக்கு நன்றி கூறிவிட்டு பார்வையாளர்களில் வேறு யாராவது பேச விரும்பினால் பேசலாம் என்று குறிப்பிட்டார்.  தர்மசங்கடம்  அடைந்தவராகத் தோன்றிய (கார்லோவின் அபிமானத்துக்குரியவர்களில் ஒருவரான) எழுத்தாளர்  சற்று எரிச்சலுமடைந்து கார்லோவிடம் ‘எதில் எந்தத் தையல் தைக்காமல் விட்டிருக்கிறது  என்பது நிஜமாகவே எனக்கு நினைவில்லை. தவிர, அதில் ஏதும் சுவா ரசியம் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை’ என்றார். இந்த நிகழ்ச்சிதான் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச் சில நண்பர்களை அவனாகவே தேடும்படி   கார்லோவைக் கிளறிவிட்டது.

இதுபோன்ற விவாதங்களில் (போக்கியோ ருஸ்கோ ரயில் நிலையத்துக்கு அருகில் போக்கியோ ருஸ்கோவிலிருந்து சிலரும் சுற்றுப்புற நகரங்களிருந்து சிலருமாக நிம்மதியையும் அமைதியையும் தேடி நண்பர்கள் வரும் மதுபான விடுதியின் பின் அறை ஒன்றில்தான் வழக்கமாக விவாதங்கள் நடக்கும்)அவனால் உண்மையில் வாசிக்க முடியாது; பார்க்க மட்டுமே முடியும் என்றும் நண்பர்களால் புத்தகங்களை வாசிக்க முடியும்; பார்க்க முடியும்; அவற்றைப் படிக்க முடியும்; வார்த்தைகளை, ‘கதவு’, ‘நீலம்’ போன்ற வார்த்தைகளையும் ‘ரேமண்ட்’, ‘எவெலீன்’ போன்ற சிறப்புச் சொற்களையும் படிக்க முடியும் என்றும் அவனுடைய நண்பர்கள் அவற்றையெல்லாம் செய்ய முடிந்தாலும் உண்மையில் அவர்களால்  அவற்றைப் பார்க்க முடியாது என்றும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதுதான் கார்லோ உணர்ந்தான். ஒரு நண்பன் கார்லோவிடம் சொன்னான்: “ஒரு புத்தகத்தைப் பற்றி நீ சொல்லும்போது ஒரு கனவைப் பற்றிச் சொல்வதுபோல இருக்கிறது. நீ என்ன கண்டாய் என்று விளக்கிக்கொண்டிருந்தால் கனவுகளைப் பற்றிச் சொல்வது எப்போதும் கடினம் அல்லது ஒரு கனவை விளக்க முயற்சித்துக்கொண்டிருப்பது உன்னுடைய கற்பனையைப் புதிய திசைக்குத் திருப்பும். அதனால் உனக்கு நினைவிலிருக்கும் விஷயங்களுடன்  உண்மையில் புதிய விஷயங்களையும் நீ சேர்த்துவிடுகிறாய். என்ன செய்கிறோம் என்றுகூடத் தெரியாமல் எல்லாம் கலந்து ஒன்றாகி விடும்படியும் நீ கனவு காணும் விஷயங்களை அந்த இடத்திலேயே சேர்த்துவிடுகிறாய். கனவிலிருந்து எதை நினைவில் வைத்துக்கொள்ளுகிறாய் என்பதையும் கனவைச் சுற்றியிருப்பதிலிருந்து எதைக் கண்டுபிடிக்கிறாய் என்பதையும் உன்னால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

கனவின் காட்சிக்குள்ளேயே அல்லது புத்தகத்தின் காட்சிக்குள்ளேயே நீ சுற்றித் திரிகிறாய். கார்லோ, உன்னைப் பொறுத்தவரை, நீ நினைவுக்குள் சுற்றித் திரிவதில்லை; முற்றிலும் புதிய சமாச்சாரங்கள் நிரம்பிய முற்றிலும் புதிய இடத்தில் தேடிக்கொண்டிருக்கிறாய்.” அதேதான் உண்மை என்றான் கார்லோ. அப்போதிலிருந்து, அவன், (முந்தைய இரவுகளில் கண்ட கனவுகளைப் பற்றி விளக்க முடியாமல் – ஏனெனில், அவற்றை அவனால் நினைவு வைத்துக்கொள்ள முடிவதில்லை – ஒரு கனவு டயரியை வருடக் கணக்காக வைத்துக்கொண்டிருந்தான். கார்லோ, கனவுகளை  ஒருபோதும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத, அதற்குப் பதில், படுக்கையிலிருந்து உருண்டு விழுந்து முதலில் எழுந்ததும் அவனுடைய உடம்பு எப்படி இருந்தது என்றும் படுக்கை எப்படி இருந்தது என்றும், தலையணை,  படுக்கை விரிப்புகள், போர்வைகள் எப்படி இருந்தன என்றும் விளக்கிக்கொண்டிருக்கும் ரகத்தைச் சேர்ந்தவன்) அதாவது கார்லோ,  ஒரு வாசிப்பு டயரியை வைத்துக்கொள்வது என்று தீர்மானித்தான்.

அவன் வாசிக்கும்போது என்ன அனுபவத்தை அடைகிறான் என்று அதில் குறித்து வைத்தான். ஆனால் வார்த்தைகளில் அல்ல; அவற்றை அவன் பார்ப்பதில்லை. எனவே, படங்களாக வரைந்து வைத்தான். போக்கியோ ருஸ்கோ ரயில் நிலையத்துக்கு அருகிலிருக்கும் மதுபான விடுதியில் நண்பர்களுடன் இருக்கும்போது கார்லோ அவனுடைய வாசிப்பு டயரியை அவர்களிடம் காட்டினான். அவனுடைய நண்பர்கள் சற்று நேரம் சிரித்தார்கள். பிறகு கார்லோ எப்படி வாசிக்கிறான் என்பதைப் பார்த்து நெகிழ்ந்தார்கள். எப்படி வாசிப்பது என்று தெரியாத கார்லோ புத்தகங்களை எப்படி எடுத்துக்கொள்கிறான் என்பதையும் அவற்றை  எப்படி நிகழ்வுகளின் தொடராக மாற்றுகிறான் என்பதையும் பார்த்தார்கள். புத்தகத்திலிருக்கும் மூலப் பொருட்கள் – கதவுகள், நீல நிறச் சங்கதிகள், சட்டைகள், தொலைபேசிகள். சீட்டாடும் மனிதர்கள், தண்ணீரிலிருந்து வந்து மறுபடியும் நீரில் விழும் மீன்கள், ஒளிரும் ஜன்னல்கள், மழை, மாலையில் முகப்பு விளக்குகள் எரிய வரும் கார்கள் – எப்படி மீண்டும் திரும்புகின்றன என்பதைப் பார்த்தார்கள். கதையை உருவாக்கிய, கதைச் சம்பவத்துக்குள் இயக்கத்தை உண்டு பண்ணிய  இந்தப் பொருட்களெல்லாம் எப்போதும் அங்கேயே இருந்த அதே பொருட்கள்தாம் என்பதில் கேள்வியில்லை. ஆனால்  அவை ஒருபோதும் அதே பொருட்களாகவுமில்லை. கதவு கதவுதான்; ஆனால் ஒருபோதும் அதே கதவல்ல; ஒரு மாலை நேரம் மாலை நேரம்தான்; ஆனால் ஒருபோதும் அதே மாலை நேரமல்ல. சமையலறை மேஜை சமையலறை மேஜைதான்; ஆனால் ஒருபோதும் அதே சமையலறை மேஜையல்ல; தட்டுக்குப் பக்கத்திலிருக்கும் முள்கரண்டி, தட்டுக்குப் பக்கத்திலிருக்கும் முள்கரண்டிதான்; ஆனால், ஒருபோதும் தட்டுக்குப் பக்கத்திலிருக்கும் அதே முள்கரண்டியல்ல.

கார்லோ கூட, போக்கியோ ருஸ்கோ ரயில் நிலையத்துக்கு அருகிலிருக்கும் மதுபான விடுதியில் ஒருநாள் மாலை நண்பர்கள் சந்தித்த கார்லோ கூட, அதே கார்லோ அல்ல என்று நண்பர்கள் உணர்ந்தார்கள். உண்மையில் அவன் அதே கார்லோ அல்ல; அவன் எப்போதும் கார்லோதான்; ஆனால் அதே கார்லோ அல்ல; இல்லை, அவன் உண்மையில் அதே கார்லோ அல்ல; அவன்  எப்போதும் கார்லோதான்; ஆனால் ஒருபோதும் அதே கார்லோ அல்ல. அவர்கள் கார்லோ என்று அடையாளம் தெரிந்து வைத்திருக்கும் அவர்களுக்குத் தெரிந்த அதே கார்லோதான்; ஆனால், ஒவ்வொரு முறையும் அவனை அடையாளம் காணும் முன்போ,  முனைப்புடன் எழுந்து ‘வணக்கம், கார்லோ’ என்று சொல்லும்போதோ அல்லது  மற்றவரிடம் ‘இதோ  கார்லோ இங்கே இருக்கிறான்; இதோ கார்லோ வருகிறான்’ என்று சொல்லும்போதோ, அடையாளம் தெரிந்து சொல்கிறோமா  அல்லது அடையாளம் தெரியாமல் சொல்கிறோமா என்று அவர்கள் (இது ஒரு நொடியின் துளி  நேரம்தான்) தயங்கினார்கள்.

கார்லோவின் ஏதாவது செய்கையை வைத்து, அவன் ஏதாவது சொல்வதை வைத்து அல்லது  அவன் அணிந்திருக்கும் உடையின் வித்தியாசமான பகுதியை வைத்து அவனுடைய நண்பர்கள், தங்கள் முன்னால் நிற்பதும் மேஜைகளுக்கு இடையில் தங்களை நோக்கி நடந்துகொண்டிருப்பதும் தாங்கள் எப்போதும் ‘கார்லோ’ என்று  அழைப்பதுதான் என்று  கடைசியாக அவனை அடையாளம் தெரிந்துகொண்டார்கள். இந்தக் கார்லோ, தந்திரோபாயமாக  அலைந்துகொண்டிருக்கும் அவர்களை நெருங்கி அதற்கு முன்பு வரைக்கும் வெறுமையாக இருந்த இடத்தை நிரப்பிய பின்னர்தான் நண்பர்களால் ‘கார்லோ’ என்று சொல்ல முடிகிறது; இந்தப் பொருளுக்குப் பெயரிட முடிகிறது; கார்லோ என்று  இந்தப் பொருளுக்குப் பெயரிட்ட பின்புதான் அதனுடன் உறவு கொள்ள முடிகிறது; எல்லாருக்கும் கார்லோவான கார்லோவை வாரக் கணக்காகவும் மாதக் கணக்காகவும் வருடக் கணக்காகவும்  கார்லோ என்றே அவர்கள் அழைத்தார்கள்.  இந்த அடையாளம் தெரிந்து கொள்ளல் மூலமாகத்தான், கார்லோ என்ற பெயர் மூலமாகத்தான், கார்லோ அவர்களுக்கு ஏதோ அந்நியனல்லாமல் ஆகிறான். மேஜைகளுக்கு இடையிலும் சீட்டாடிக் கொண்டிருக்கும் ஆட்களுக்கு இடையிலும்  தோன்றும் ஆவியல்ல; அவர்களுடைய நண்பன் ஆகிறான்;  அவன் கார்லோ ஆகிறான். அவர்களுக்கு அவனை நன்றாகத்  தெரியும்; அவனுடன் அவர்கள் ஆயிரக்கணக்கான முறை பேசியிருக்கிறார்கள்; அவர்கள் அவனை நேசிக்கிறார்கள்; உண்மையாகவே நேசிக்கிறார்கள்; ஏனெனில் கார்லோ, அதீதனான கார்லோ, குழப்பம் மிகுந்தவனான  கார்லோ, தலை நிமிர்த்தி நடக்கும் கார்லோ எப்போதும் கார்லோதான்.

கார்லோ, அவர்களுடைய கற்பனையை முன்னோக்கிச் செலுத்துகிறான். அவன் இல்லாமல், கார்லோ இல்லாமல், அவர்கள், அவனுடைய நண்பர்கள், அவர்கள் பற்றுக் கொண்டிருக்கும்  வாழ்க்கையில் அவர்களிடம் வெறும் பெயர்களும் வார்த்தைகளும்தான் இருக்கும். ஒருபோதும் எந்த தரிசனமும் இருக்காது.

••

நன்றி

கவிஞர் சுகுமாரன்

உயிர்மை

0Shares
0