எனக்குப் பிடித்த கதைகள்- 37

சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியு ஷின்-யு (Black Walls – Liu Xin Wu) எழுதிய கருப்புச் சுவர்கள் சிறுகதை இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கிறது. தனிநபரின் விருப்பமும் பொதுப்புத்தியும் கொள்ளும் மோதல் ஒரு குறியீடு போலவே இக்கதையில் சித்தரிக்கபடுகிறது. மிகச்சிறந்த கதை. இந்தக் கதையைச் சீனாவில் குறும்படமாகவும் எடுத்திருக்கிறார்கள்

••

கருப்புச் சுவர்கள்

லியு ஷின்-யு

தமிழாக்கம்: தி.இரா.மீனா

••••

கோடைகாலம். ஒரு ஞாயிற்றுக் கிழமை

ஒரு சந்து. அங்கு ஒரு வீட்டோடு சேர்ந்த முற்றம். மூன்று பழமரங்கள். ஐந்தாறு வீடுகள்.

காலை 7.30 மணி

முற்றத்தின் கிழக்கு மூலையில் உள்ள வீடு ஜியோவுடையது.அவருக்கு முப்பது வயதிருக்கும்.தனியாக வசிக்கிறார்.அவருக்குத் திருமணம் ஆக வில்லை என்று நினைக்கலாம்.திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும் நினைக்க முடியும்.அவர் அந்த முற்றத்தில் நடக்கும் போது யாராவது இளம் பெண்ணைப் பார்த்து விட்டால் தலையைக் குனிந்து கொண்டு எதிர் திசையில் போய் விடுவார். ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? அவர் சமீப காலத்தில் தான் அந்த வீட்டுக்குக் குடி வந்தார். அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர் பெரியதும், கஷ்டமானதும் என்பதால் அக்கம் பக்கத்தினருக்கு எப்படிப் பிழைப்பு நடத்துகிறார் என்பது போன்ற விவரங்கள் தெரியாது. ஏழு வருடங்கள் வேலை பார்த்திருக்கலாம் என்று உத்தேசமாக நினைத்து அவர் வயதைக் கணக்கிடுவார்கள்.அவருடைய மாதவருமானம் எவ்வளவு என்று தெரிந்து கொள்வதில் எல்லாம் அவர்களுக்கு உற்சாகமில்லை. அவரால் இதுவரை யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்ததில்லை. அவரும் எங்கும் போக மாட்டார். யாரும் விருந்தாக வருவதும் இல்லை. அக்கம் பக்கத்தினர் அவரைப் பார்த்தால் முதலில் கேட்பது “எப்படி இருக்கிறீர்கள்? ” என்று தான். அவர் வெட்கம், கர்வமோ இல்லாமல் “நான் நலம். நன்றி” என்பார்; அல்லது அவர்களிடம்”இன்று உங்களுக்கு வேலை முடிந்து விட்டதா?” என்பார். ”கடவுளே ! இல்லை, சிறிது நேரம் காற்று வாங்க நிற்கிறேன்,” என்று அவர்கள் பதில் சொல்வார்கள். ஆனால் அவர் நின்று பேசிக் கொண்டிருக்க மாட்டார். சில சமயங்களில் அவர் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கவோ, துணி துவைக்கவோ, அரிசி களையவோ போனால் அக்கம் பக்கத்தினரைப் பார்க்க வேண்டி வரும். அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேச வேண்டி இருக்கும்.கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும் போது மட்டும் பேசுவார்.தானாகப் போய்க் கேள்வி கேட்க மாட்டார்.நீண்ட காலமாக அங்கே வசிக்கும் குடும்பங்கள் அவரை விரும்புவதும் இல்லை ; வெறுப்பதும் இல்லை.

ஒருநாள் காலை அவர் மும்முரமாக ஏதோ வேலையில் இருந்தார்.முதலில் தன் அறையில் இருந்து எல்லாவற்றையும் வெளியே எடுத்து வைத்தார்.ஒரு பெரிய பேசினில் ஒரு வித திரவத்தைக் கலந்தார்.யாரிடமோ அவர் பிரஷ் வாங்கி இருக்க வேண்டும்.அவர் தன் அறைக்குப் பெயிண்ட் அடிக்கப் போகிறார்.

ஒரு சாதாரண வேலையாக இது தொடங்கியது.அவரைப் பொதுக் குழாய் அருகே பார்த்த அக்கம் பக்கத்தினர் ”நீங்கள் இன்று உங்கள் அறைக்குப் பெயிண்ட் அடிக்கப் போகிறீர்களா? என்று கேட்டனர். “ஆமாம். அடிக்கப் போகிறேன்” என்று பதில் சொன்னார்.”உங்களுக்கு ஏதும் உதவி தேவையா?” சிலர் மென்மையாகக் கேட்டனர்.”என்னிடம் பிரஷ் இருப்பதால் வேலை சுலபமாக இருக்கும். நன்றி.”என்று சொல்லி விட்டு தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் விட்டார்.வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தின் வளைந்து தாழ்ந்த ஒரு கிளையில் சிள்வண்டு சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. அது பெரிய சத்தமாக இருந்தாலும் அங்கேயே வசித்து வந்ததால் அது அவர்களுக்குப் பழகிப் போயிருந்தது.

காலை மணி 7.46

’சி–சி.—சி-”

இது வித்தியாசமான சத்தம்.ஆனால் என்ன என்பது தெளிவாகத் தெரிந்தது. ஜியோ தன் அறைக்குப் பெயிண்ட் அடிக்கத் தொடங்கி விட்டார்.

காலை மணி 7.55

அங்குக் குடியிருந்தவர்களில் சிலருக்கு அன்று விடுமுறை என்பதால் ஒவ்வொருவராக வெளியே போய்விட்டனர். ஒவ்வொருவரும் நவீனமாக உடையணிந்திருந்தனர். ஒருவருடையதை விட மற்றொருவருடையது மிக வித்தியாசமாக இருந்தது.வார நாட்களில் மாமிசம் வெட்டும் ஒரு பெண் அன்று இமிடேஷன் காதணிகளையும், ஹை ஹீல்சும் அணிந்து கொண்டு குடையோடு புறப்பட்டுப் போனாள்.வெளியே போகும் போது பூப்போட்ட நைலான் குடையை விரித்துக் கொண்டு போனாள்.தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு இளைஞன் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட ஒரு டீஷர்ட் அணிந்து கொண்டு போனான்.அதையடுத்து ஒரு பெண் போனாள். அவள் தொழில் நிர்வாகம் படிப்பவள். அவர்கள் எல்லோரும் போனபின்பு தான் அங்கு இப்படி நடக்கிறது என்று சொல்லமுடியாது. அவர்கள் போகாம லிருந்தாலும் இது நடந்திருக்கும்.குடியிருப்பில் ஓர் இளைஞன் தனக்கு விடுமுறை என்பதால்அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.அப்போது அவன் அம்மா அங்கு நடப்பதைப் பார்க்கும்படி அவனை அழைத்தாள்.அவன் அதைப் பொருட்படுத்தாமல் படிப்பதைத் தொடர்ந்தான்.

மணி 8.15

முற்றத்தில் சூழ்நிலை உஷ்ணமாகிக் கொண்டிருந்தது. முற்றத்தில் என்று சொல்லக் கூடாது. ’அந்த அறையில்’ என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.அறை என்றால் எல்லா அறையும் இல்லை.முற்றத்தின் மையத்தில் உள்ள வடக்கு அறைதான்.அங்கு ஜாவோவின் குடும்பம் வசித்து வந்தது. அவருக்கு வயது 56 தன் இரண்டாவது மகளைத் தன்னுடைய வேலையில் சேர்த்து விடுவதற்காக அவர் முன்னதாக ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டார்.உடனே அவருக்கு வேறு வேலையும் கிடைத்து விட்டது..இப்போது அந்தப் புதிய கம்பெனி ஆள் நிறுத்தம் செய்து அவரை வேலையிலிருந்து நீக்கி விட்டது.வேறு ஒரு பிரிவில் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.

அண்டை வீட்டுக்காரர்கள் அங்குக் கூடினார்கள்.ஜியோவ் தன் சுவருக்குக் கறுப்புப் பெயிண்ட் அடிக்கிறார் என்று ஜாவோவிடம் சொன்னார்கள்.கறுப்புப் பெயிண்ட்! எந்த வகையான பெயிண்ட் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.ஆனால் அது பேனா மையின் நிறத்தில் இருந்தது!அட்டைக் கறுப்பு!

ஜாவோவுக்கு ஒரே சமயத்தில் குழப்பமாகவும் ,திருப்தியாகவும் இருந்தது.பத்து வருடங்களுக்கு முன்னால் அவர் தொழிலாளிகள் பிரச்சாரக் கலைக் குழுவின் உதவித் தலைவராக இருந்தவர். ஜனங்கள் அந்த நாட்களில் அவரைத் தேடி வந்து புதிய விஷயங்களைச் சொல்லிவிட்டுப் போவார்கள், இப்போது இவர்கள் வந்திருப்பது போல. இது திருமதி ஜாவோவுக்கும் சந்தோஷம் தான் கணவரைப் போல.எட்டு வருடங்களுக்கு முன்னால் அவள் சுற்றுப்புறக் கமிட்டியின் தலைவியாக இருந்தவள்.பேரிச்ச மரத்திற்குப் பின்னால் உள்ள சுவரில் அவர்களுக்கு எதிரான ஒரு விளம்பரத்தை யாரோ எழுதி விட அன்று சூழ்நிலை இன்று போலத்தான் பரபரப்பாகி இருந்தது.பத்து வருடங்களுக்கு முன்னால் நடந்தது போன்ற விஷயம் இன்றும் நடந்து, இழந்து விட்ட சுவையான வாழ்க்கையை மீண்டும் அவர்களுக்குத் தருமா? யார் கண்டார்கள்?

“அது கொஞ்சமும் சரியில்லை” ஜாவோ அறிவிப்பது போலச் சொன்னார்.

“என்ன தைரியம்,”திருமதி ஜாவோ ஆமோதித்தார்.

மணி 8.25

’ச்.சி.சி…சி..’

ஜியோ தன் அறையில் இன்னமும் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார்.

அவசரச் செய்தி : உத்தரத்தையும் கறுப்பாக்கி விட்டார்.

ஜாவோ எல்லோரையும் உட்காரச் சொன்னார். ஹால் ஒரு சந்திப்பு அறை போலத் தோற்றம் தந்தது.சந்திப்புகள் பலவேறு வகையானவை: சில எல் லோருக்கும் வெறுப்பூட்டுவதாக இருக்கும்:சில உங்களுக்கு மட்டும் பிடித்ததாக இருக்கும்.சில உங்களுக்கு வெறுப்புத் தருபவையாக இருக்கும். இந்தச் சந்திப்பு ஜாவோவுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ”இந்த மாதிரியான சூழ்நிலையை நாம் உடனடியாகப் போலீஸுக்குத் தெரிவிக்க வேண்டும்”என்று ஜாவோ கருத்துத் தெரிவித்தார்.

எட்டு, பத்து வருடங்களுக்கு முன்னால் இது போல நடந்திருந்தால் அவர் ஆலோசனையாக இதைச் சொல்லாமல் முடிவாகவே சொல்லி இருப்பார்:ஒரு மனிதனின் அபிப்ராயமாக இல்லாமல், ஒரு தலைவனின் முடிவாக…

ஆனால் இது கடந்தகாலமல்ல .நிகழ்காலம்.”நாம் உடனடியாக அதிகாரிக ளிடம் போகக் கூடாது.நமக்கு எந்த உரிமையும் இல்லை.நாம் போலீசிடம் என்ன சொல்லமுடியும்?”என்று அவர் சொன்னதற்குக் குவாயின் உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஜாவோவும் ,அவர் மனைவியும் அவரை முறைத்தார்கள்.சாதாரணத் தையல்காரன்!சில வருடங்களுக்கு முன்பு வாயே திறக்காதவன், எந்த எதிர் பையும் காட்டாதவன் இப்போது எதிர்த்துப் பேசுகிறான். வீட்டிலேயே சிறு வியாபாரம் செய்யும் வசதி வந்திருக்கிறது.கலர் டீவி வீட்டில் இருக்கிறது அதனால் தான் குரல் ஏறுகிறது என்று இருவரும் நினைத்தனர்.

குவாயின் தன் கருத்தை வலுவாக்கத் தொடர்ந்து பேசினார்.”ஜியோ ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இது போன்ற நோய்கள் பற்றி .நான் செய்தித்தாளில் படித்திருக்கிறேன்.மன அழுத்தம் காரணமாக அவர்கள் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள்…போன வாரம் ஜியோ தன் மெத்தையை வெயிலில் காயப் போட்டிருந்தார்.அதன் மேல் பக்கம் கரும்சிவப்பாகவும், அடிப்பகுதி மங்கிய சிவப்பிலும் இருந்தது. யாரும் இதைக் கவனித்திருக்க மாட்டார்கள்.இது மிகவும் வித்தியாசமானது!அதனால்தான் சொல்கிறேன் போலீசிடம் போகவேண்டாம். மருத்துவரிடம் போகலாமென்று இந்த மாதிரியான நோய்களுக்குப் பாரம்பரிய மருந்துகள் உதவி செய்யாது என்று கேள்விப்பட்டிருந்தாலும், மருத்துவரை கலந்து ஆலோசிப்பதில் எந்தத் தவறும் இல்லையே ”என்று நிறுத்தினார்.

அவர் பேச்சிற்கு யாரும் அவ்வளவு மதிப்புத் தரவில்லை.ஜன்னல் வழியாக வெளியே நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.ஜியோ அமைதியாக, நிதானமாகச் சுவருக்குப் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார்.அவர் பாடிக் கொண்டிருப்பதும் அவர்களுக்கு லேசாகக் கேட்டது.ஒரு நோயாளி இப்படி இருப்பானா?

கதவருகே உட்கார்ந்திருந்த சன் முடியைக் கோதியபடி “ஏன் கருப்புப் பெயிண்ட் அடிக்கிறாய் என்று கேட்கலாம் அதற்கு அவனால் பதில் சொல்ல முடியாவிட்டால் மன்னித்து விடலாம்.இப்படிச் செய்யக் கூடாது என்று சொல்லலாம் —அதைச் செய்யவே கூடாது என்று அறிவுரையும் சொல்லலாம்” என்றார்.

“நீங்களே ஏன் போய்க் கேட்கக் கூடாது?”என்று லி கேட்டார்.

எல்லோரும் அதை ஆமோதித்தார்கள்.

மணி 8.36

ஜாவோவும்,அவர் மனைவியும் போய்ப் பேசுவார்கள் என்ற எண்ணத்தில் தான் சன் இந்த யோசனையைச் சொன்னார்.தன்னையே போகச் சொல்வார்கள் என்று அவர் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை.அங்கே உட்கார்ந்ததற்காக வருத்தப்பட்டார்.அவர் ஒரு ஆரம்பப் பள்ளியில் பொதுப் பணி தலைமை நிலையில் இருப்பவர். அவர் ஒரு வகுப்பு கூட நடத்தியதில்லை.ஆனால் ஓர் ஆசிரியரைப் போல எல்லாப் பாவனைகளும் செய்வார். இப்போது ஒரு நூதனமான சம்பவத்தை விசாரணை செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டார்.கட்டாயமாக ஒரு சொற்பொழிவு கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவது போல உணர்ந்தார்.

மணி 8.37

சி..சி..சி—தொடர்ந்தது.”

’ப்ச்ச்’என்று அறைக்குள்ளேயே மெதுவாகப் பேசிக் கொண்டனர்.

சன் நகத்தைப் பிய்த்தபடி யோசித்தார்.அவருக்கு ஜியோவிடம் போய்க் கேட்க விருப்பமில்லை.நேரடியாக மறுத்து விட்டால் மறுபடி அவர் முகத்தை எப்படிப் பார்க்க முடியும்?தன் தோல்வியை எப்படி ஒப்புக் கொள்வது?அந்த முட்டாள் ஏதாவது பேசிவிட்டால்?அவர் பேசுவதை அப்படியே அவர்களுக்குச் சொல்லி விட்டு நடப்பவைகளை எதிர்கொள்ள வேண்டுமா அல்லது ஜியோவைக் காப்பாற்றுவதற்குத் தெரிந்த விவரத்தைத் தனக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமா ?எதிர்காலத்தில் இது தொடர்பான ஆதாரம் ஏதாவது வெளியே வந்தால்…

தீவிரமாக யோசித்தார்.வியர்வை வழிந்தது.”எனக்குப் பதிலாக ஜாவோ போய்ப் பேசட்டுமே?”

யாருக்கும் இந்த வேலையைச் செய்ய விருப்பமில்லை.எனவே எல்லோரும் ஒரு மனதாக ”ஆமாம்.!ஜாவோவே போகட்டும்!”என்று குரல் கொடுத்தனர்.

ஜாவோ அமைதியாக இருந்தார்.கத்துவதை நிறுத்தி விட்டு அவர்கள் தன்னிடம் கெஞ்ச வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்.பின்பு “நான் போய்க் கேட்கிறேன்”என்று சொல்லி விட்டு நடந்தார்.

எல்லோரும் ஜன்னல் வழியாக ஜாவோ போவதைப் பார்த்தபடி இருந்தனர்.அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலைக் கேட்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர்.மரம் காற்றில் அசையும் சத்தம் தவிர வேறு எதுவும் அவர்கள் காதில் விழவில்லை.

மணி 8.41

வெளுத்த முகத்தோடு ஜாவோ திரும்பினார்.”வேலையை முடித்து விட்டு வந்து விளக்கம் சொல்கிறேன் என்று அவன் சொல்கிறான். ஏதாவது தில்லுமுல்லு செய்வான் என்று எனக்குத் தெரியும்.அவன் அக்கம் பக்கத்தவர்களான நம்மையெல்லாம் மதிக்கவில்லை.”

“அதோ அந்த மனிதன் தானே நம் தண்ணீர் மீட்டர் பார்க்க வருபவன்?அவன் ஜியோவின் அறையைப் பார்ப்பான்.நம் குடியிருப்பில் நடக்கும் விஷயங்களை எல்லாம் வாய்க்கு வந்தபடி எல்லோரிடமும் சொல்வான். நமக்குக் கெட்ட பெயர்தான் வரும்” என்று ஜன்னலின் வெளியே பார்த்தபடி திருமதி ஜாவோ சொன்னாள்.

“கறுப்புப் பெயிண்ட்டை கோட்டிங் போல அடித்து இருக்கலாம் .அது காய்ந்த பிறகு அதன் மேலே வெள்ளை பெயிண்ட் அடிக்கலாம் ”இயற்கையாகவே மென்மையான குணம் உள்ள திருமதி லீ அவர்களைச் சமாதானப் படுத்துவது போலப் பேசினாள்.

மணி 8.43

’சி..சி..சி..சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.அறையைப் பார்க்கும் போதே கறுப்பைச் சுற்றிலும் உணர முடிந்தது.யாரும் திருமதி.லீயின் விளக்கத்தை நம்பவில்லை.

என்ன சொல்ல முடியும்? கறுப்புச் சுவர் ! இந்தக் குடியிருப்பில்! ஜியோ கெட்ட காரியங்களைத் தனக்குச் செய்து கொள்ளலாம் ஆனால் மற்றவர்கள் அதனால் பாதிக்கப் படக்கூடாது. அதில் அவர்களைத் தொடர்புபடுத்தக் கூடாது.

மணி 8.45

அறையில் இருந்த எல்லோரும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார்கள்:கறுப்புநிறப் பெயிண்டை அறைச்சுவருக்கு அடிக்கக்கூடாது! சுவருக்கும், உத்தரத்துக்கும் எப்படி ஒருவர் கறுப்புப் பெயிண்டை அடிக்க முடியும்? பெரும்பான்மையானவர்கள் இப்படி யோசிக்கக் கூடமாட்டார்கள் .ஆனால் அவன் யோசிப்பது மட்டுமில்ல, செயல்படுத்தியும் காட்டி விட்டான்! இது அசாதாரணமானது ! வினோதமானது ! கிறுக்குத்தனம் !

போலீசுக்குத் தெரிவித்து விட வேண்டும் என்று ஜாவோ நினைத்தார்.அப்படி முடிவு செய்த போது அவருக்குள் மற்றொரு எண்ணம் வந்தது:எட்டு,பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்தது போல இப்போது போலீஸ் ஸ்டேஷன்கள் இல்லை.[ அந்தக் காலத்தில் போலீஸ் ஸ்டேஷன்கள் என்பது . அடித்து நொறுக்கும் ஒரு கூட்டம் போல இருந்தது ]ஆனால் இன்று போலீஸ்காரர்கள் அவ்வளவு தீவிரமாக இல்லை.தவிர அன்று போலத் தங்களை முக்கியமானவர்களாக நினைக்கவுமில்லை.எப்போதும் ’புத்தகத் தில் உள்ளபடி’ செயல்படுவது பற்றியே பேசுகிறார்கள்.ஆனால் புத்தகத்தின்படி போனால் கறுப்புச் சுவரைப் போன்ற பிரச்னைகள் இழுத்துக் கொண்டே போகும். முடிவே கிடைக்காமலும் போகலாம்.ஜாவோ தயங்கினார்.அவர் அதைப் புகார் செய்ய விரும்பினார். தள்ளிப் போடாமல் அவர் விரைவாக முடிவு எடுக்க வேண்டிய விஷயம் அது,அவர் தன்னுடைய நலனுக்காகச் செய்கிறாரா? இதைப் புகார் செய்வதால் என்ன பலன் கிடைக்கும்?

தன் கணவர் என்ன நினைக்கிறார் என்பதும், எவ்வளவு வெறுப்பு அடைந்து இருக்கிறார் என்பதும் அவர் மனைவிக்குப் புரிந்தது.எட்டு,பத்து வருடங்க ளுக்கு முன்னால் எப்படி இருந்தது?அவரிடம் இருந்த சக்தி போய் விட்டது.அவரால் இப்போது ஓர் உதவியாளராக மட்டுமே இருக்க முடியும்.அவர் வியாபாரம் எதையும் கற்றுக் கொள்ளாததுதான் இதற்குக் காரணமா? நிச்சயமாக இல்லை.கடந்த 30 வருடங்களில் வேறுவேறு வேலைகளுக்காகப் பல இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.இன்று சாதாரண வருமானமே கஷ்டமாக இருக்கிறது.இப்போது திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆனால் அவருடைய சோர்வான கண்கள்,சுருங்கிய முகம்,அவருடைய தயக்கத்தைக் காட்டுகின்றன.ஏன்? இன்றைய செயல்களின் வெளிப்பாடு என்ன? அவருடைய குடும்பத்திற்கு மட்டும்தான் இதனால் பலன் கிடைக்குமா?

ஜியோ நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜாவோ நம்பினார். பாரம்பரிய மருத்துவர்களுக்கு இந்த மாதிரியான நோய்களுக்கு மருந்து தர முடியாது. மருத்துவச் சோதனை செய்ய ஏன் அனுமதிக்கக் கூடாது?அவருக்கு ஒரு மருத்துவர் வேண்டும்.ஆனால் மருத்துவர்கள் இந்த நாளில் வீடுகளுக்கு வருவதில்லை.அது மிகவும் கஷ்டமாகும்.யார் ஜியோவை மருத்துவரிடம் போகச் சொல்ல முடியும்?

திருமதி லீ தன் வீட்டுக்குப் போக விரும்பினார். மகன் எப்போதும் நாவல்கள் படித்துக் கொண்டிருப்பான். அவனைத் தடுக்க வேண்டும்.அவன் ஒரு வேளை ஜியோவை வழிக்குக் கொண்டு வர முடியும். வெள்ளைப் பெயிண்டை அடிக்கக் கூட உதவமுடியும்.வெள்ளை மிக அருமையான நிறம்.மனிதர்கள் எதற்கு வித்தியாசமான ஒன்றை விரும்ப வேண்டும்?

சன்னுக்கும் வீட்டுக்குப் போக வேண்டும் போல இருந்தது.ஆனால் அதைச் செய்யவும் தயக்கமாக இருந்தது.இந்த மாதிரியான சமயத்தில் ஒருவன் தன் முடிவைத் தெளிவாக விளக்கி விடவேண்டும். அது எதிர்காலத்தில் அவன் அந்த இடத்தில் எதுவும் சொல்லாமல் இருந்தான் என்பது போன்ற எந்தப் பிரச்னையும் தராது. அதே நேரத்தில் தவறான வழக்கில் பேசினான் என்ற பழியும் வரக்கூடாது.எந்தக் காலத்திலும் விமர்சனத்தைத் தவிர்ப்பதுதான் சரியான கொள்கை. ஜாவோவிடம் தன் கருத்தையும் சொல்லியாகி விட்டது. அதனால் போவதில் தவறில்லை. ஆனால் யாரும் பார்க்காமல் இருக்கும் போது போவதும் ஆகாத செயல்..

மணி 8.48

ஜாவோவின் பேரனுக்குப் பத்து வயதிருக்கும். ’லிட்டில் பட்டன்’என்று செல்லமாகக் கூப்பிடுவார்கள்.இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது தன் அறையில் விளையாடிக் கொண்டிருந்தான்.வெளியே பெரியவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.எட்டிப் பார்த்தான்.அந்த அறை கூட்டமாக, ஒழுங்கு முறையில்லாமல் இருந்தது.ஏன் இப்படிப் பெரியவர்கள் தங்களையே சித்திரவதை செய்து கொள்கிறார்கள்?

அறையில் இருந்தவர்கள் திரும்பவும் அதைப் பற்றிப் பேசத் தொடங்க சூழ்நிலை கனமானது.லிட்டில் பட்டன் தன் தாத்தாவின் அருகே வந்து நின்றான்.”தாத்தா! இங்கு எல்லோரும் என்ன செய்கிறீர்கள்? ”என்று கேட்டான்.

“போய் விடு இங்கிருந்து !போய் விளையாடு!உனக்கு இங்கு வேலை இல்லை” ஜாவோ கோபமாகச் சொன்னார்.

லிட்டில் பட்டனுக்கு அவர் பதிலில் திருப்தி இல்லை.”ஜியோ மாமா தன் அறைக்குப் பெயிண்ட் அடிப்பதில் உங்களுக்குக் கோபமா?அவர் நல்ல மனிதர். வேடிக்கையானவர். ஒருமுறை என்னை அவர் அறைக்குக் கூப்பிட்டார். மேஜையிலிருந்து சில கார்டுகளை எடுத்தார். மாலையில் வரும் செய்தித்தாளை விட அவை அளவில் பெரியதாக இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். என்னால் எல்லா நிறங்களையும் பார்க்க முடியும் என்று அவர் கார்டுகளை மாற்றி மாற்றி என் கண்ணருகே வைத்தார்.பிறகு என்னிடம் ’உனக்கு இது பிடித்திருக்கிறதா இல்லையா?இது குளிர்ச்சியாக இருக்கிறதாஅல்லது உஷ்ணமாக இருக்கிறதா? ஈரமா அல்லது காய்ந்ததா? வாசனையா அல்லது நாற்றமா?இதைப் பார்த்ததும் உனக்குத் தூக்கம் வருகிறதா?அல்லது வெளியே போய் விளையாட ஆசை வருகிறதா?இதைப் பார்த்து என்ன நினைக்கிறாய்?அல்லது எதையும் நினைக்கவில்லையா? இதைப் பார்த்து பயமா அல்லது அமைதியா? இது தாகத்தை ஏற்படுத்துகிறதா இல்லையா? உனக்கு இதைப் பார்க்க வேண்டுமா,வேண்டாமா?என்று வரிசையாகக் கேட்டார் .நான் சொன்ன எல்லாப் பதில்களையும் எழுதிக் கொண்டார்.பாருங்கள்! அவர் எவ்வளவு வேடிக்கையானவர்! நீங்கள் என்னை நம்பவில்லையென்றால் அவர் அறைக்குப் போய் நீங்களே போய்ப் பாருங்கள் ! என்று நீண்டதாக நினைத்தபடி தனக்குள் சொல்லிக் கொண்டான்.

தன் கையை உயர்த்தியபடி “தாத்தா, உங்கள் பேச்சு இன்னமும் முடியவில்லையா? நீங்கள் சோர்வு அடைந்திருக்க வேண்டும்.நான் ஒன்று சொல்லட்டுமா?” கத்திக் கேட்டான்.

எல்லோரும் பேச்சை நிறுத்தினார்கள்.அவனைப் பார்த்தார்கள்.

“சரி ,சரி! சொல்லு “ என்றார் ஜாவோ

“ஜிவோ மாமா தன் அறைச் சுவருக்குப் பெயிண்ட் அடித்த பிறகு எல்லா வீடுகளுக்கும் வந்து அடிப்பாரா? ” என்று லிட்டில் பட்டன் கேட்டான்.

மணி 8.49

எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மணி 8.50

“கண்டிப்பாகச் செய்வான்” ஜாவோ சொன்னார்.”அவன் கண்டிப்பாக முயற்சிப்பான் ” திருமதி ஜாவோவும் ஆமோதித்தாள். ’இல்லை, அவர் அப்படிச் செய்ய மாட்டார் ”என்று திருமதி லீயும், சன்னும் உடனடியாக மறுத்தனர் ”அவர் பிரச்னை செய்பவராகத் தெரியவில்லை.ஏதோ நோய் காரணமாகத் தான்.. ”குவாயின் சொன்னார்.

மணி 8.51

லிட்டில் பட்டன் தன் பெரிய கருப்புக் கண்களைச் சுழற்றியபடி பார்த்தான். அவன் கண்கள் மின்னின.சுவரை விடக் கறுப்பாக இருந்தன. ”ஓ! எல்லாம் சரியாகி விட்டது. ஜியோ மாமா தன் அறைக்குப் பெயிண்ட் அடிக்கிறார். நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.பிறகு அதைப் பற்றி நீங்கள் எல்லோரும் ஏன் பேச வேண்டும்?” சிரித்துக் கொண்டே அப்பாவித்தனமாகக் கேட்டான்.

மணி 8.52

எல்லோரும் அமைதியானார்கள்.

சி..சி..சி …என்று சுவற்றில் பிரஷ்ஷைத் தேய்க்கும் சத்தம் வந்து கொண்டிருந்தது . அது சிள்வண்டுகளின் சப்தத்தோடு சேர்ந்து ஒலித்தது.

•••

லியு ஷின் –யு ஸூச்வான் மாகாணத்தில் பிறந்தவர்.ஆசிரியராகவும்,பத்திரிகை ஆசிரியராகவும் பணியாறியவர். 1958ல் எழுதத் தொடங்கியவர். 1978 ல் ’தி பார்ம் டீச்சர்’ என்ற சிறுகதை தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. ’ ஐ லவ் எவ்ரி லீஃப் இன் கீரின்’ என்ற சிறுகதைக்கு அடுத்த ஆண்டும் பரிசு கிடைத்தது. சீனமொழியின் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புக்குத் தரப்படும் ’மாவ்டன் விருதை ’1984ல் ’தி கிளாக் டவர்’ என்ற நாவலுக்காகப் பெற்றிருக்கிறார்.

நன்றி :

சொல்வனம் – ஜூன் 19, 2016

0Shares
0