எனக்குப் பிடித்த கதைகள் -37

கடவுளின் பறவைகள் / மியா கூட்டோ (Mia Couto)  (மொஸாபிக் )

தமிழில்: பாலகுமார் விஜயராமன்

••••

மன்னித்துக் கொள்ளுங்கள், ஒரு யாத்ரீகனைப் போல எனக்கு நதியைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. நீரலைகள் முடிவற்ற பயணத்தில் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன. எவ்வளவு காலமாக இப்படி பயணித்துக் கொண்டே இருப்பது, நீரின் வேலையாளாக இருந்திருப்பது? தனது பழைய வள்ளத்தில் தனியாக அமர்ந்திருந்த எர்னெஸ்டோ டிம்பா, தனது வாழ்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

பனிரெண்டாவது வயதில், நதியிலிருந்து மீன்களைப் பிடிக்கும் தொழிலுக்குள் வந்தான். கடந்த முப்பது வருடங்களாக, எப்பொழுதும் அவனது நிழல், நதியின் நீரோட்டத்தின் அலைவுகளிலும், ஒரு நதிவாசியின் விதிமுறைகளையே பிரதிபலித்திருக்கிறது. ஆனால், இது எல்லாம் எதற்காக? பஞ்சம் பூமியை சாரமிழக்கச் செய்துவிட்டது, விதைகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டன. மீன் பிடித்தலில் இருந்து அவன் திரும்பிய பொழுது, தங்கள் பார்வையால் அவனைக் கழுவேற்றும் அவனது மனைவியிடமிருந்தும், குழந்தைகளிமிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள அவனிடம் எதுவுமில்லை. அவர்களின் கண்கள் நாயினுடையதைப் போல இருக்கும். அதனை ஒத்துக் கொள்ள அவன் மனம் விரும்புவதில்லை, ஆனால் உண்மையில், பசி மனிதர்களை மிருகங்களைப் போல ஆக்கிவிடுகிறது.

தனது துயரங்களைப் பற்றி யோசித்தவாறே, டிம்பா லாவகமாகவும் மெதுவாகவும் துடுப்பை இயக்கினான். அவன் தனது சோக எண்ணங்களை மறக்க எண்ணியவனாக, மஃபூர்ரெய்ரா மரத்தின் கீழ், நதி குறுகலாக ஓடும் பகுதியின் கரையில் வள்ளத்தை நிறுத்தினான். துடுப்பு நீரைக் கொந்திபபடி இருக்க, வள்ளம் அசையாமல் நின்றது. ஆனால் அவனால் தனது எண்ணங்களை நிறுத்த முடியவில்லை.

’என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்? தண்ணீர், தண்ணீர், அது தவிர வேறொன்றுமில்லை.’

அந்த நினைவுகள் அவனை முன்னும் பின்னுமாய் அலைக்கழிக்க, வள்ளம் அவனது வேதனையைப் பெருக்குவதாய்த் தோன்றியது.

”ஒரு நாள், இவை நதிக்குள் மூழ்கி, என்னை தண்ணீருக்கு வெளியே தூக்கி எறியத்தான் போகின்றன”

நீரின் வேர்களில் இருந்து கிழித்தெடுக்கப்படுவனைப் போல, அவன் சகதியிலிருந்து இழுக்கப்படுவதை அவனது மனைவியும் குழந்தைகளும் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல முன்னுணர்ந்தான்.

தலைக்கு மேலே மஃபூர்ரெய்ரா, சூரியனின் கடுமையான வெப்பத்தை மறைத்து நின்று கொண்டிருந்தது. ஆனால் டிம்பா மரத்தை கவனிக்கவில்லை, அவனது கண்கள் ஆன்மாவிற்குள் உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அவனது வலி, பார்வையின் ஒளியை மறைக்கும் தூசாகவும், அதனால் அவன் கண்கள் பார்வையிழந்ததைப் போலவும் உணர்ந்தான். பொழுது, இன்னும் மேலே சென்று கொண்டிருந்தது, வானம் அடர் நீலமாய் மாறுவதை அவன் உணர்ந்தான்.

’நான் கடல்வாழ் உயிரனமாக இருந்திருந்தால்,’ அவன் பெருமூச்செறிந்தான்.

அவன் தனது வாழ்வின் முப்பது வருடக் களைப்பின் பாரத்தை உணர்ந்தான். அவனுக்கு தைரியத்தைக் கற்றுத் தருவதற்காக அவனது அப்பா சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்த்தான்.

”அங்கே, வேட்டைக்காரனைப் பார், அவன் என்ன செய்கிறான்? மானைப் பார்த்த நொடி, தனது வேல்கம்பில் குறிபார்க்கத் தயாராகிறான். ஆனால் மீனவனால், நதியினுள் இருக்கும் மீனைப் பார்க்க முடியாது. மீனவன் தன்னால் காணமுடியாத ஒன்றை நம்பி களத்தில் இறங்குகிறான்.’

விதிக்கப்பட்ட வாழ்க்கைக்கான பாடமும் அது தான். அவன் தந்தையின் அறிவுரையை இப்பொழுது நினைத்துப் பார்த்தான். நேரமாகிக் கொண்டே இருந்தது, வீட்டுக்குப் போகும் நேரம் ஆகிவிட்டது என்பதை பசி அவனுக்கு உணர்த்தியது. மேகங்களைத் தாண்டி, மேலே வெற்றுப் பார்வை பார்த்தபடி, அவன் கையை அசைக்கத் துவங்கினான். அப்பொழுது, ஒரு பெரிய பறவை ஆகாயத்தில் பறந்தது. ஆளுமை பொருந்திய ஒரு பேரரசனைப் போல அது தோற்றம் கொண்டிருந்தது. உயரே சிறகு விரித்துப் பறந்த பறவை, அவனது பார்வையில் பட்டது. அவனையும் அறியாமல் உள்ளூர ஓர் ஏக்கம் அவனுள் வேர்விட்டது. அவன் நினைத்தான்:

’இப்பொழுது அந்தப் பறவை, எனது வள்ளத்தில் விழுந்தால் எப்படி இருக்கும்!’

அவன் அந்த வார்த்தைகளை உரக்கக் கூறினான். அவன் சொல்லி முடிப்பதற்குள், அந்தப்பறவை தனது பெரிய சிறகுகள் துடிதுடிக்க, வேகமாக சுழன்றபடி, அவனது வள்ளம் நோக்கி கீழ்நோக்கி விழத்துவங்கியது. அது ஏறக்குறைய இறந்ததைப் போல, வள்ளத்தில் விழுந்தது. டிம்பா காயம்பட்ட பறவையை எடுத்துக் கைகளில் ஏந்தினான். இரத்தவோட்டம் இயங்க, பறவை உயிரோடு தான் இருந்தது. சிறிது நேரத்தில், மெதுவாக உடல்நலம் தேறிய அப்பறவை, பிழைத்துக் கொண்டதற்கு அறிகுறியாக, வள்ளத்தின் முன்முனையில் ஏறி நின்றது.

டிம்பா அதனைப் பிடித்து, அதன் மாமிசம் எத்தனை நேர சாப்பாட்டுக்கு வரும்என்று எண்ணியவாறு அதன் எடையை கணக்கிட்டான். நொடியில் அவன் அந்த எண்ணத்தை மனதில் இருந்து அகற்றி, சிறு உற்சாகத்தோடு, அந்தப்பறவை பறந்து செல்ல உதவினான்.

’உன் வாழ்க்கைக்குத் திரும்பிப் போ, பறவையே!’

ஆனால் ஒன்றும் ஆகவில்லை. அந்தப்பறவை அசையக் கூட இல்லை. அதைப்பார்த்து அவன் அதிசயித்தான்: அது பறவையே அல்ல, அது கடவுளின் சமிக்ஞை. ஆகயத்திலிருந்து வரும் எச்சரிக்கை, தனது மன அமைதியை என்றென்றுக்குமாய் அழித்து விடும் என்று நம்பினான்.

அந்த பறவையை எடுத்துக்கொண்டு, அவன் தனது கிராமத்திற்குத் திரும்பினான். அவனது வருகையை அவன் மனைவி கொண்டாடினாள்:

’இந்தப் பறவையை மதிய உணவுக்குத் தயார் செய்யலாம்!’

பரவசமடைந்தவளாய், அவள் குழந்தைகளை அழைத்தாள்:

’குழந்தைகளே, இங்கே வந்து கொழுத்த பறவையைப் பாருங்கள்.’

பதிலேதும் சொல்லாமல், டிம்பா பறவையை விரிப்பின் மீது வைத்து விட்டு, வீட்டின் பின்புறம் சென்று மரத்தட்டிகளையும், கம்பிகளையும், நாணல்களையும் சேகரித்தான். பின் அவற்றைக் கொண்டு, ஒரு மனிதன் தாராளமாக நிமிர்ந்து நிற்கும் அளவிற்கான பெரிய கூண்டு ஒன்றைத் தயாரித்தான். அவன் அந்தப்பறவையை கூண்டிற்குள் விட்டு, அன்று பிடித்து வந்த மீனை அதற்கு உணவாகக் கொடுத்தான்.

அவனது செய்கை கண்டு அவனது மனைவி திடுக்கிட்டாள்: அவனுக்குப் பைத்தியம் தான் பிடித்து விட்டது. நேரம் கடந்தது, டிம்பா மட்டுமே அந்தப்பறவையை கவனித்துக் கொண்டான்.

அந்தப்பறவையைப் பார்த்தவாறு அவனது மனைவி கேட்பாள்:

’பசி நம்மை எப்படி வாட்டி வதைக்கிறது. இதனைக் கொன்று உணவாக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?’

டிம்பா வேகமாக கையை ஓங்குவான், ‘ஒரு போதும் இல்லை! பறவை மீது யார் கை வைக்கிறார்களோ, அவர்கள் கடவுளால் தண்டிக்கபடுவார்கள், வாழ்க்கை முழுதும் அவர்கள் சீரழிவார்கள்.’

நாட்கள் சென்றன, மீனவன் தெய்வீக எண்ணங்களுக்கான புதிய சமிக்ஞைகளுக்காக காத்திருந்தான். எண்ணற்ற தடவைள், வியர்க்கும் மதிய வெப்பத்தில், அமைதியான நதியின் முன் அமர்ந்து, மருகியபடி இருந்தான். சூரியன் மறைந்த பிறகு, அவன் கூண்டிற்கு அருகில் சென்று, பறவை நன்றாக வளர்ந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருப்பான். சிறிது சிறிதாக, அந்தப் புனதப்பறவையின் மேல், சோகத்தின் நிழல் படிவதை அவன் கவனித்தான். பறவை, தனிமையினால் அவதியுறுவதை அவன் புரிந்து கொண்டான். ஓர் இரவு அவன் கடவுளிடம், தனித்திருக்கும் பறவைக்கு ஒரு துணையை அனுப்புமாறு வேண்டினான்.

அடுத்த நாள், கூண்டுக்குள் ஒரு புதிய பெண் பறவை இருந்தது. டிம்பா அந்த புதிய பரிசிற்காக கடவுளுக்கு மனதுக்குள் நன்றி கூறினான். அதே நேரம் பதட்டம் அவனுள் வேர்விட்டது: இந்தப்பறவைகளை பாதுகாக்கும் பொறுப்பை கடவுள் ஏன் தன்னிடம் ஒப்படைத்தார்? அவை கொண்டுவந்திருக்கும் செய்தி என்னவாயிருக்கும்?

அவன் யோசித்துக் கொண்டே இருந்தான். அந்த சமிக்ஞை, அந்த பளிச்சிடும் வெள்ளை இறகுகள், அவை எல்லாம் கடவுளின் விருப்புவெறுப்புக்கூறு மாறப்போவதை உணர்த்துவதாகவே தோன்றியது. மனிதர்கள் ஆகாயத்திலிருந்து வந்திருக்கும் அந்தத் தூதுவர்களிடம், தங்கள் கருணையைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயாரானால், பஞ்சம் முடிவுக்கு வந்து, மழைக்கான பருவம துவங்கி விடும். நதியின் ஏழை மீனவன், கடவுளின் தூதுவர்களுக்கான பாதுகாவலனாக நியமிக்கப்பட்டிருக்கிறான். மனிதர்கள் இன்னும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள் என்று நிரூபிக்க வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது. ஆம், இத்தையை உண்மையான நற்குணங்கள், செழிப்பாக இருக்கும் நேரங்களில் அளவிடப்படுவதில்லை, மாறாக மனிதர்களின் உடல்களில் பசி நாட்டியமாடும் பொழுது தான் கணக்கிடப்படுகின்றன.

வயலில் இருந்து திரும்பி வந்த அவனது மனைவி, அவனது எண்ணங்களை இடைமறித்தாள்:

’என்ன, இப்பொழுது இரண்டு பறவைகளாகி விட்டதா?’

அவள் அவன் அருகே வந்து, அவன் உட்கார்ந்திருந்த அதே பாயில் தானும் உட்கார்ந்து, அவன் கண்களை ஆழமாக ஊடுருவிப் பார்த்தபடி கேட்டாள்:

’இங்கே பார், வெறும் பானை அடுப்பில் காய்கிறது. இதில் ஒன்றைக் கொடுத்தாலும் சமையலாக்கி விடலாம், ஒன்றே ஒன்று.’

அது வெறும் நேர விரயம். யாராவது அந்த தெய்வீகப் பறவைகளை மோசமாக நடத்தினால், அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்குமென்று அவன் எச்சரித்தான்.

சிறிது நாட்களில் அந்த ஜோடிப்பறவைகளுக்கு குஞ்சுகள் பொரித்தன. மொத்தம் மூன்று குஞ்சுகள், அவை அருவருப்பாகவும், அசிங்கமாகவும் தோற்றமளித்தன. அவற்றின் அலகுகள் எப்பொழுதும் உணவுக்காக திறந்தபடியும், நதியையே உட்கொள்ளும்படியான பசியோடும் இருந்தன. அந்தக் குஞ்சுகளின் பெற்றோர்கள் சார்பாக, டிம்பா கடுமையாக உழைத்தான். ஏற்கனவே தட்டுப்பாடாய் இருந்த வீட்டு உணவுப்பொருட்கள் அனைத்தையும் பறவைகளுக்கே அளித்தான்.

கிராமம் முழுவதும் வதந்தி பரவியது: எர்னெஸ்டோ டிம்பா முற்றிய பைத்தியமாகிவிட்டான். அவனது சொந்த மனைவியே பல எச்சரிக்கைகளுக்குப் பிறகு, குழந்தைகள் அனைத்தையும் அழைத்துக் கொண்டு, வீட்டை விட்டு சென்றுவிட்டாள். குடும்பம் தன்னுடன் இல்லாததைக் கூட டிம்பா கவனிக்கவில்லை. அவன் பறவைகளைப் பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். அவன் தன்னைச்சுற்றி வஞ்சம் தெறிக்க, பொறாமையின் நிழல் படிவதை உணர்ந்தான். அவன் தேர்ந்தெடுக்கப்பட்டது அவனுடைய குற்றமா? அவனுக்குக் கிறுக்குப்பிடித்துவிட்டதென ஊரார் கூறினர். ஆனால் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன், எப்பொழுதும் தனிவழியே சஞ்சரிப்பவனாகவே இருப்பான்.

பிறகு, ஒரு மதியப்பொழுதில் அவன் நதியில் தன் வேலையை முடித்தபிறகு, நிலையாமையின் எண்ணம், அவன் மனதில் கொழுந்து விட்டு எரிந்தது: பறவைகள்! அவன் வீட்டிற்கு விரைந்து செல்ல முடிவெடுத்தான். அவன் கரையை நெருங்குகையில், அவன் வீட்டைச் சுற்றியிருந்த மரங்களிலிருந்து புகை மேல் எழும்பி வருவதைப் பார்த்தான். அவன் நதிக்கரையை நோக்கி வேகமாக வள்ளத்தை துடுப்புப் போட்டு இயக்கினான். கரையை அடைந்ததும், வள்ளத்தைக் கூட கட்டாமல், வேகமாக குதித்து, துயர நிகழ்வை நோக்கி ஓடினான். அவன் வீட்டை அடைந்ததும், அங்கே பார்க்கக் கிடைத்ததெல்லாம், வெறும் சிதைவுகளும், சாம்பலும் மட்டுமே. மரத்தட்டிகளும், கம்பிகளும் தீயினால் முற்றிலுமாக அழிந்து போயிருந்தன. எரிந்து போன மரத்துண்டுகளுக்கு நடுவே, ஒரே ஒரு இறக்கை மட்டும், நெருப்பு தீண்டாமல், தன்னைக் காத்துக் கொண்டது போலக் கிடந்தது. பறவை நெருப்புப் பிழம்பிலிருந்து தப்பிப்பதற்காக தன் உடலை உதறியிருக்கலாம், அதில் ஒரு இறக்கை மட்டும் தனியே விழுந்திருக்கும், அதிலொரு சிறகு கெடுநிமித்தமாக பேரழிவைக் குறிப்பது போலக் கிடந்தது. இறந்த உயிர்களின் மன உறுத்தலைப் போல, அது இங்குமங்கும் அசையாமல், விறைப்போடு, நிண்ணயத்தை போதிப்பது போலக் கிடந்தது.

டிம்பா திகைத்துப் போய் பின்வாங்கினான். அவன் மனைவியை, குழந்தைகளை நோக்கிக் கத்தினான். பின் அங்கு ஒருவரும் இல்லையென்பதை உணர்ந்து, தாரை தாரையாக கண்ணீர் வழிய, கண்கள் ரணமாகும் வரை அழுதான்.

ஏன்? ஏன் அவர்கள் அந்தப்பறவைகளைத் துன்புறுத்தினார்கள்? அவை எவ்வளவு இனிமையாக இருந்தன? பிறகு அவன், அங்கே சாம்பலுக்கும் புகைக்கும் நடுவில் நின்றபடி, கடவுளிடம் மன்றாடத்துவங்கினான்:

‘நீங்கள் கோபமாகத் தான் இருப்பீர்கள், எனக்குத் தெரியும். நீங்கள் உங்கள் குழந்தைகளை தண்டிக்கப்போகிறீர்கள். ஆனால், இங்கே பாருங்கள்: நீங்கள் அவர்களை மன்னிக்க வேண்டுமென்று நான் வேண்டுகிறேன். அவர்களுக்காக நான் இறக்கிறேன், நான்… ஏற்கனவே துன்பத்தில் உழழும் அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். நீங்கள் மழையைக் கூட பொழியாமல் செய்யுங்கள், புழுதி படிந்து வறண்ட நிலம் கூட அப்படியே கிடக்கட்டும், ஆனால் தயவுசெய்து நீங்கள் மட்டும் இந்த மண்ணின் மக்களை தண்டித்துவிடாதீர்கள்.’

மறுநாள், அதிகாலைப் பனிமூட்டத்தினூடாக, எர்னெஸ்டோ நதியின் நீரோட்டத்தைக் கட்டியணைத்தபடி கிடப்பதை ஊரார்கள் பார்த்தனர். அவர்கள் அவனைத் தூக்க முயற்சிக்கும் பொழுது, அவன் மிக கனமானவனாகத் தோன்றினான். அவர்களால் அவனை நீரில் இருந்து பிரிக்க முடியவில்லை. ஊரிலுள்ள பலமிக்க மனிதர்கள் வந்து முயற்சித்த பொழுதும், அவர்கள் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. நதியின் நீர்ப்பரப்பில் அவனது உடல் நன்றாக ஒட்டிப்போய் இருந்தது. பேரச்சத்தின் விநோத உணர்ச்சி, அங்கிருந்தவர்களின் மத்தியில் பரவியது. தங்களது பயத்தை மறைத்துக் கொள்ள, யாரோ ஒருவன் கத்தினான்:

’போய், இவன் மனைவியிடம் கூறுங்கள். ஊர் மக்களிடமும் கூறுங்கள், கிராமத்தின் பைத்தியக்காரன் இறந்துவிட்டான் என்று.’

பின்னர் அவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர். அவர்கள் நதியை விட்டு கரையேறும் பொழுது, மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன, வித்தியாசமான நிகழ்வாக வானம் திடீரென இருட்டத் துவங்கியது. மற்ற சமயங்களாய் இருந்திருந்தால், மழை வரப்போவதை எண்ணி அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது அவர்கள் மனநிலை அவ்வாறில்லை. முதன் முறையாக, அவர்களின் நம்பிக்கைகள் ஒன்று கூடி, மழை பெய்ய வேண்டாம் என்று பிரார்த்திக்கத் துவங்கின.

மெதுவான, நெடுந்தூரப் பயணத்திலிருந்த நதி, மனிதர்களின் அறியாமையை எண்ணி புன்னகைத்தது. எர்னெஸ்டோ டிம்பா, நீரோட்டத்தின் இதமான தாலாட்டில், நீர்வழிதிசையில், தனது கனவுகளில் மட்டும் மங்கலாய் கண்ட தனிவழியில் கொண்டு செல்லப்பட்டான்.

நன்றி :

மலைகள் இணையதளம்

0Shares
0