எனக்குப் பிடித்த கதைகள் 4

மணல் புத்தகம்-சிறுகதை : போர்ஹேஸ்

தமிழில் : க.செண்பகநாதன்

…… மணலைக் கயிறாகத் திரித்து …..

(-ஜார்ஜ் ஹெர்பர்ட் – 1593-1623)

கணக்கிலடங்காத புள்ளிகளை ஒருங்கே கொண்டது ஒரு கோடு; எண்ணிக்கையற்ற பல கோடுகளை கொண்டது ஒரு சமவெளி; கணக்கிலடங்கா சமவெளிகள் ஒரு கண பரிமாணம்; எண்ணற்ற கணபரிமாணங்கள் பெருத்த அதிகனமான பரிமாணமாகும்…. இவ்வாறாக கூறுவது சரியானதல்ல – இது நிலவியல் கணக்கைப் போல் இருப்பதால் கதையை கூறுவதற்கு உகந்த முறையல்ல. கற்பனைக் கதையே மெய்யான கதையென்ற சம்பிரதாயம் நிலவிக் கொண்டிருக்கும் வேளையில் என்னுடைய கதை அப்படியானது அல்ல, அது உண்மையாகவே நடந்த ஒன்று.

பெல்கேர்னோ என்ற வீதியில் உள்ள ஒரு ஐந்தடுக்குக் குடியிருப்பில் தான் அப்போது தனியாக வசித்து வந்தேன். சில மாதங்களுக்கு முன் ஒரு மாலைப்பொழுதில் யாரோ எனது வீட்டுக் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. நான் கதவைத் திறந்ததும் ஒரு அந்நியன் உள்ளே நுழைந்தான். அவன் உயரமாக இருந்தான். ஆவி நைந்து போனவன் போல் மிகச் சோர்வுடன் தென்பட்டான். எனது கிட்டப்பார்வைக் குறைபாட்டினால் அவ்வாறு தோன்றியிருக்கலாம். அவனுடைய வெளிப்பாடு பார்ப்பதற்கு வெளிர்ந்த வறுமை கொண்டிருந்தது. அவன் வைத்திருந்த பயணப் பேழை சாம்பல் நிறத்திலிருந்தது. அவன் வெளிதேசத்தவன் என்று அத்தருணத்திலேயே உணர்ந்துவிட்டேன்.

அவனை நாற்காலியில் அமரும்படி கேட்டுக் கொண்டேன். சற்று நேரத்திற்குப் பின் பேசத் தொடங்கினான். அவனிடமிருந்து சோகம் வெளிப்பட்டது. இன்று நானும் சோக வயமாகியிருந்தேன்.

Òநான் பைபிள்களை விற்பனை செய்து வருகிறேன்Ó என்றான்.

‘ஏராளமான பைபிள்களை நான் வீட்டில் வைத்திருக்கிறேன், அதில் பல ஆங்கில பைபிள்களும் இருக்கின்றன, குறிப்பாக வைசீப்பின் பைபிள் முதன்மையானது, மற்றும் சிப் ரோன்டி வெலிரோவின் பைபிள், மற்றும் லூத்தருடையதும் கூட (அதில் இலக்கிய தரத்தைக் கொண்டு நோக்கினால் அபத்தங்கள் பல), வெல்கேடின் லீத்தினிய பதிப்பும் உள்ளது. இதிலிருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும் எனக்கு பைபிள்களின் தேவை இருக்காதென்றுÓ என்று அறிவுச்செருக்குடன் அவனுக்கு பதிலளித்தேன்.

சிறிய மௌனத்துக்குப்பின் அவன் பதிலளித்தான் Òநான் பைபிளை மட்டும் விற்பதில்லை. உங்களுக்கு புனித நூல் ஒன்றை காண்பிக்கிறேன். அது உங்களுக்கு சுவராஸ்யம் அளிப்பதாக இருக்கும். வட இந்திய நகரான பிக்கனரில் எனக்கு கிடைத்த நூல் அதுÓ

தனது பயணப் பேழையைத் திறந்து அந்தப் புத்தகத்தை வெளியே எடுத்தான். அதனை மேஜை மீது வைத்தான். ஒன்றுக்கு எட்டு என்ற அளவிலான அந்த கணப் புத்தகம் பலரது கைகளுக்கு மாறி இருந்தது மட்டும் தெளிவாக புலப்பட்டது. கிறிஸ்துவர் திருமறை என்று புத்தக விளிம்பில் எழுதப்பட்டிருந்தது.

அதன் பின் பம்பாய் என்றும் எழுதப் பட்டிருந்தது.

Òபத்தொன்பதாவது நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கும்Ó என்றேன் உற்று நோக்கிவிட்டு.

Òஎனக்கு அதைப்பற்றியெல்லாம் அறவே தெரியாதுÓ, என்று பதிலளித்தான்.

அங்கொன்றும், இங்கொன்றுமாக எடுத்து வாசித்தேன். அதில் இருக்கும் விஷயங்கள் நான் அறிந்திராதவைகளாக இருந்தன. பக்கங்கள் கிழிந்தும், மோசமாக அடுக்கியும் இருந்தன. பைபிளைப் போல அகலவாக்கில் இரு பத்திகளாக அச்சிடப்பட்டிருந்தது. பிரதியின் உள்ளடக்கம் இறுக்கமானதாகவும், குறும் பாக்களாகவும் இருந்தன. ஒவ்வொரு தாளின் மேல் மூலையிலும் அரேபிய எண்களால் பக்கங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. வித்யாசமான அணுகுமுறை என்னை புலன்கொள்ள வைத்தது; இரட்டை இலக்க எண்களைக் கொண்ட பக்கங்களில் 40,514 என்றும், ஒற்றை இலக்கப் பக்கங்களில் 999 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பக்கத்தைப் புரட்டினேன்: அடுத்த பக்கத்தில் எட்டு இலக்கு எண்ணைத் தாங்கி இருந்தது. அகராதியில் உள்ளதுபோல் சிறிய விளக்கப் படமும் இருந்தது: வரைதலில் தேர்ச்சி அடையாத குழந்தை வரைந்திருப்பதைப் போல் மைப் பேனாவால் வரையப்பட்ட நங்கூரத்தின் படம் அது.

குறிப்பிட்ட அந்தத் தருணத்தில் அந்நியன் மீண்டும் பேசத் தொடங்கினான்.

Òநன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அதைக் காணும் வாய்ப்பு மீண்டும் உங்களுக்கு கிட்டப் போவதில்லைÓ.

வார்த்தைகளில் ஒரு வித அச்சுறுத்தும் தொனி வெளிப்பட்டாலும் குரலில் தென்படவில்லை.

அந்தப் பக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு புத்தகத்தை மூடினேன். அத்தருணத்திலேயே மீண்டும் திறந்துப் பார்த்தேன். தேடினேன் அந்த நங்கூரப் படத்தை, தென்படவில்லை. ஒவ்வொரு பக்கமாக தேடினேன். என் பார்வைக்கு வாய்க்காமல் போய் விட்டதை சமாளிக்கும் விதமாக மற்றொரு முறையும் மாற்றித் தேடிப்பார்த்தேன்.

Òஇந்து மதத்திற்குரிய சில சமய அடையாளங்களில் ஒரு பதிப்புருதான் அது இல்லையாÓ என்றேன்.

Òஇல்லைÓ, என்று பதிலளித்தான்.

என்மீது நம்பிக்கை கொண்டதினால் ஒரு ரகசியம் கூறுவதுபோல் என்னிடம் தாழ்ந்த குரலில் பேசினான்.

Òசமவெளியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்தப் புத்தகத்தை கண்டேன். அதை வாங்குவதற்காக கொஞ்ச ரூபாய்களும், ஒரு பைபிளையும் விலையாக கொடுத்தேன். இந்த புத்தகத்தை வைத்திருந்தவனுக்கு அதை வாசிக்க தெரியவில்லை. புத்தகங்களுக்கெல்லாம் மூலப் பிரதியான இதனை ஒரு தாயத்தைப் போல் தான் கருதியிருக்க வேண்டும் என்பதாகவே நான் சந்தேகிக்கிறேன். அவன் கீழ்சாதியைச் சார்ந்தவன்; ஏனைய மனிதர்கள் அவனது நிழலை தோஷம் கழிக்காமல் மிதிக்க மாட்டார்கள். அவனுடைய அப்புத்தகம் மணல் புத்தகம் என்று அழைக்கப் படுவதாக என்னிடம் கூறினான். ஏனெனில் மணலிற்கோ அல்லது இப்புத்தகத்திற்கோ தொடக்கமும் இல்லை முடிவும் இல்லைÓ.

அப்புத்தகத்தின் முதல் பக்கத்தை கண்டு பிடிக்கும்படி என்னைத் தூண்டினான்.

இடதுகையால் மேல் அட்டையை எடுத்து புத்தகத்தைத் திறந்தேன். எனது கட்டை விரலும், ஆட்காட்டி விரலும் கூட அதன் மீது தொட்டுக்கொண்டிருந்தன. இயலாமல் போயிற்று: பல பக்கங்கள் அட்டைக்கும் கைக்கும் இடையே, அந்த புத்தகத்திலிருந்து தான் அவைகள் வளர்ந்ததுப் போல் ஒரு போக்கு.

Òஇப்போது கடைசிப் பக்கத்தைக் கண்டு பிடியுங்கள்Ó.

அதைப் போல் இதிலும் தோல்வியைத் தழுவினேன்.

Òகண்டுபிடிக்க முடியவில்லைÓ, இயல்பி லிருந்து தடுமாறி குரல் நடுங்கிற்று.

Òஅது இயலாது, ஒரு போதும் இயலாதுÓ என்றான் பைபிள் விற்பனையாளன் சற்றுக் கூடுதலான விம்மிய குரலில். Òபுத்தகத்தில் உள்ள பக்கங்களில் அச்சிடப்பட்டிருக்கும் எண்கள் முறையற்று குறிப்பிடப்பட்டிருப்பதால் அதில் முதல் பக்கம் என்று ஒன்று இல்லை ; கடைசிப் பக்கம் என்றும் ஒன்று இல்லை. எதற்காக அவர்கள் எண்களை வரிசையாக குறிப்பிடாமல் இஷ்டத்திற்கு அச்சிட்டிருக்கிறார்கள் என்றும் எனக்கு புரியவில்லை. ஒருவேளை வாசகர்களின் போக்கிற்கே விட்டிருக்கலாம், முறையற்ற வரிசைகளை புரிதலுக்கேற்ப எவ்வகையிலும் கணக்கிட்டுக் கொள்ள அனுமதித்திருக்கலாம்.Ó

அதன் பின் அவன் ஆழ்ந்த சிந்தனைக்கு ஆட்பட்டு விட்டு பேசினான்.

Òவெற்றுவெளி எல்லையற்றதாக இருக்கும் பட்சத்தில் நாம் அந்த வெற்றுவெளியில் எந்த திசைப் புள்ளியிலும் இருக்கலாம். காலமும் எல்லையற்றதாக இருக்கும் பட்சத்தில் நாம் காலத்தின் எந்த நுண்மையிலும் இருக்கலாம்Ó.

அவனது மேதாவித்தனமான வார்த்தைகள் என்னை வெறுப்பேற்றியது.

Òநீங்கள் மத நம்பிக்கை கொண்ட மனிதரா, இல்லையா?Ó என்றேன்.

Òஆம், நான் பிரஸ் பைபேரியன்  எனது மனசாட்சி தூய்மையானது. சூனியம் கொண்ட புத்தகத்திற்கு மாற்றாக கடவுளின் வேதவாக்கைத் தருவதில் ஐரோப்பியராக இல்லாத ஒருவரை ஏமாற்றுவதில்லை என்று உறுதியாக இருக்கிறேன்Ó.

அவனை தவறாகக் கருதுவதற்கு ஏதும் இல்லை என்பதை உறுதிப்படக் கூறினேன். பயணம் மேற்கொள்ளும் போது இந்நாட்டை எதேச்சையாக கடந்து செல்கிறாயா என்று கேட்டேன். சில நாட்களில் அவனது நாட்டுக்கு திரும்ப திட்டமிட்டிருப்பதாக பதிலளித்தான். பிறகுதான் அறிந்துகொண்டேன். அவன் ஸ்காட்லாந்து நாட்டவன் என்றும், அவனது இருப்பிடம் மட்டுமே ஆக்கினே என்றும், ஸ்காட்லாந்து மீது எனக்கு உள்ள பிடித்தத்தை அவனிடம் கூறினேன். அதற்குக் காரணமாக ஸ்டிவன்சன் மற்றும் ஹியும் மீதும் உள்ள பற்றுதலைக் குறிப்பிட்டேன்.

இல்லை ரோபி மெர்னஸ், என்று திருத்தினான்.

பேசிக் கொண்டிருக்கும் போதே புரிதற்கரிதான அப்புத்தகத்தை உற்றாய்ந்தேன்.

இந்த அரியப் புத்தகத்தை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு அளிக்கும் எண்ணம் ஏதும் உங்களுக்கு உள்ளதா? என்று பாசாங்கு இல்லாமல் கேட்டேன்.

இல்லை, இதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன், என்று கூறிய அவன் அதற்கு பெரும் தொகையை என்னிடம் கோரினான்.

நான் மிக நேர்மையாகவே கூறினேன். அவ்வளவு தொகையை கொடுக்கும் நிலைமையில் நான் இல்லை என்று ; இருந்தாலும் எனது மனம் அதன் மீது ஈடுபாடு கொண்டது ; சில நிமிடங்களில் எனது திட்டத்தை இறுதி யாக்கினேன்.

Òநான் வியாபாரத்திற்குத் தயார். நீ இதை வாங்கும்போது கொஞ்சம் ரூபாய்களும், புனித நூல் ஒன்றையும் அளித்திருக்கிறாய்; நான் எனது மாதாந்திர பென்ஷன் முழுவதையும் தருகிறேன், இப்போது தான் அதை பெற்று வந்தேன், மற்றும் வைகிலிப்பின் கருப்பு எழுத்து பைபிளையும் தருகிறேன். அது எனது பெற்றோர்களால் எனக்கு விட்டுச் செல்லப்பட்டதுÓ என்றேன்.

வைகிலிப்பின் கருப்பெழுத்து பைபிளா, என்று முணுமுணுத்தான்.

எனது படுக்கை அறைக்கு பணம் மற்றும் புத்தகத்தை எடுத்துவர சென்றேன். புத்தக ஆர்வலர்களுக்கு இருக்கும் பற்றார்வத்துடனே அவன் பக்கங்களை புரட்டினான். புத்தகத்தின் பைன்டிங்கில் உள்ளதை வாசித்தான்.

சரி வியாபாரத்தை நடத்துவோம், என்றான். அவன் பேரம் பேசாததைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனேன். இந்த புத்தகத்தை விற்க வேண்டுமென்று ஏற்கனவே முடிவெடுத்து விட்டு தான் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான் என்பதை பிறகுதான் உணர்ந்தேன். பணத்தை அவன் எண்ணிப் பார்க்கவில்லை.

இந்தியாவைப் பற்றியும், ஆர்க்நைப் பற்றியும், ஒரு காலத்தில் அந்த தீவுகளை ஆண்டு வந்த நார்வே நாட்டு குழுத் தலைவர்களைப் பற்றியும் அளவளாவினோம். வைக்கிலிபின் பைபிள் இருந்த இடத்தை இட்டு நிரப்ப மணல் புத்தகத்தில் வைக்கும் எண்ணத்தில் இருந்தேன், ஆனால் ஒழுங்கற்ற தொகுப்புகளை கொண்ட ஆயிரத்தியரு இரவுகளுக்குப் பின்னால் மறைத்து வைத்தேன்.

படுக்கைக்கு சென்று உறங்கப் பார்த்தேன். தூக்கம் வரவில்லை. அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி இருக்கும் விளக்கை ஏற்றினேன். விளங்குவதற்கு அரிய அப்புத்தகத்தின் ஏடுகளைப் புரட்டினேன். ஒரு பக்கத்தில் முகமூடியின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. அந்த பக்கத்தில் ஓர் ஓரத்தில் ஏதோ எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தது – அது என்னவென்று ஞாபகத்திற்கு வரவில்லை – ஒன்பதின் கூறுகளைக் கொண்ட சிறப்பு எண்.

எனது இந்தச் சொத்தை எவர் ஒருவரிடமும் காண்பிக்கவில்லை. இந்த உவகையூட்டும் பொக்கிஷத்தை யாராவது களவாடி விடுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருந்தது. எதனால் அந்த ஐயுறவு விளைந்தது என்பதனை அறிய முடியாமல் இல்லை. எனக்கு இருந்த நண்பர்களில் சிலர் மட்டுமே எஞ்சி இருந்தார்கள், அவர்களையும் சந்திப்பதை நிறுத்திவிட்டேன். அந்தப் புத்தகத்தினால் கைதிபோல் ஆகிவிட்டேன், மிக அரிதாகவே வீட்டை விட்டு வெளிச் செல்வேன். அதன் நைந்த பைண்டிங் மற்றும் அட்டையில் உள்ளவைகளை உருப் பெருக்கி கண்ணாடியின் மூலம் ஆராய்ந்தேன், அதில் எந்தவித கலைத்திறங்களும் இல்லாதிருந்தது. சிறிய அளவு வரைபடங்கள் இரண்டாயிரமாவது பக்கத்தைத் தாண்டியே இடம் பெற்றிருந்ததை நான் கண்டு பிடித்தேன். அவைகளை அகர வரிசைப்படி ஒரு குறிப்பேட்டில் குறிக்கத் தொடங்கினேன். விரைவில் அது முழுவதுமாக நிரம்பி விட்டது. வரைபடங்கள் ஏதும் திரும்ப அச்சிடப்பட வில்லை. இரவில் தூக்கமின்மையின்போது ஏற்படும் அரிய கால இடைவெளியில் கூட அந்த புத்தகத்தைப் பற்றிய கனவு என்னை ஆட்கொண்டு விடும்.

கோடை நெருங்கிக் கொண்டிருக்க அப்புத்தகம் அமானுஷ்யமானது (ஒரு முரணானது) என்பதையும் உணர்ந்துகொண்டேன். அந்தப் புத்தகத்தை கண்களால் பாவித்தும், விரலின் சதையும் எலும்பும் அதனோடு பின்னிப் பிணைந்து கிடக்க, எந்த வகையில் நான் அதனைவிட அமானுஷ்யத்தில் குறைந்தவன் என்பதை சிந்திப்பதற்கு அவ்வளவு உகந்தது இல்லை. அது ஒரு பீதி தரும் பொருள், அசிங்கமான பொருள், உண்மையை சீரழித்தது மட்டுமல்ல அது தீண்டத்தகாதது.

முடிவற்ற அப்புத்தகத்தை தீயிட்டெரிக்க எண்ணினேன், ஆனால் அதனை எரித்து, அதனைப் போலவே தீயும் முடிவற்று இருந்தால் இந்தப் பூமி புகையினால் திணறிவிடும் என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது.

ஒரு இலையை மறைத்து வைப்பதற்கு உகந்த இடம் வனம் என்று எப்போதோ படித்திருந்தது நினைவுக்கு வந்தது. நான் ஓய்வுப் பெறுவதற்கு முன் தேசிய நூலகத்தில் வேலை பார்த்து வந்தேன். அங்கு தொள்ளாயிரம் மடங்கு ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன; முகப்பறையின் வலதுப் பக்கத்தில் கீழ்தளத்துக்கு செல்வதற்கான சுழல் படிக்கட்டுகள் உள்ளன, அங்கே தேசப்படங்களும், பத்திரிகைகளும் வைக்கப்பட்டிருக்கும் என்று எனக்கு தெரியும். அங்கிருந்த நூலகனின் கவனக் குறைவினை எனக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டேன். மணல் புத்தகத்தை நூலக பழுதடைந்த புத்தக அடுக்கில் மறைத்து வைத்தேன்; அதன் உயரத்தையும், கதவிலிருந்து எத்தனை தூரத்தில் அது உள்ளது என்பதையும் நான் கவனிக்க முயலவில்லை.

நான் இப்போது ஒரு சிறிய நிறைவுடன் இருப்பதாய் உணர்கிறேன். அந்த நூலகம் இருக்கும் தெருவில் கூட நான் நடந்து செல்வதில்லை.

0Shares
0