எனது அப்பா

ஐசக் அசிமோவ்

விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளரான ஐசக் அசிமோவ் தனது சொந்த தேசமான ரஷ்யாவை விட்டு அமெரிக்காவில் குடியேறியவர். 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் பேராசிரியராகப் பணியாற்றியவர். விஞ்ஞானத்தின் புதிய சாத்தியங்கள் பற்றியும் விண்வெளி மனிதர்கள், மற்றும் ரோபோ பற்றிய இவரது கதைகள் அறிவியல் புனைவிற்குப் புதிய தளத்தினை உருவாக்கியவை. அவர் தன் தந்தையைப் பற்றி எழுதிய சிறப்பான பதிவு.

••

1923 ஜனவரி எனது அப்பாவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையான நாள். அதுவரை அவர் பெற்றிருந்த அத்தனை செல்வங்களையும் இழந்தவராகத் தனது தேசத்திலிருந்து வெளியேறினார்.

எனது தந்தை யூதா அசிமோவ் ருஷ்யாவில் உள்ள பெட்ரோவிஷ்வில் பிறந்தவர். இது மாஸ்கோவில் இருந்து தென் கிழக்காக 250 கிமீ தொலைவிலிருந்தது. அவர் ஒரு யூதர். உலகமெங்கும் யூத எதிர்ப்பும் யூத துவேசமும் பிறந்து உச்சநிலையான காலமது. ருஷ்யாவில் யூதர்களுக்கு எதிராகப் பெரிய வன்முறை எதுவும் நடைபெறவில்லை என்ற போதிலும் கசப்புணர்வு வலுப் பெற்றுக் கொண்டு தானிருந்தது. அப்பா மற்றவர்களோடு இணக்கமான வாழ்வை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் யூதர்களுக்கான வரையறுக்கப்பட்ட வாழ்வு எல்லைக்குள் தான் அவரும் இயங்க வேண்டியிருந்தது. அப்பா வசதியானவர். எனது தாத்தாவிற்குச் சொந்தமாக ஒரு மில் இருந்தது.

அம்மாவின் அப்பாவிற்கும் சொந்தமாக ஒரு ஜெனரல் ஸ்டோர் இருந்தது. இதனால் வசதியான வாழ்க்கை அமைந்திருந்தது. எனது அப்பா ஐரோப்பியமுறை கல்வி பெறவில்லை. மரபான யூத முறைப்படியான கல்வி கற்றவராக ஹீப்ரு பள்ளியில் படித்தார் அங்கே வேதாகமமும் மத்தத்துவங்களும் போதிக்கப்பட்டன. அவர் ஹீப்ரு, யிட்டிஷ் மற்றும் ருஷ்ய பொழிகளில் விற்பன்னராக இருந்தார். அத்தோடு ருஷ்ய இலக்கியங்களையும் கற்று, புத்தகங்கள் படிப்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அத்தோடு தனது தொழிலுக்கான கணிதத்திலும் தேர்ச்சி பெற்றார்.

முதல் உலகப்போரும் ருஷ்ய புரட்சியும் அதன் பிறகு நடைபெற்ற உள் நாட்டுச் சண்டைகளும் பெட்ரோவிச் நகரைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. அது ஒரு தனித்தீவு போல ஒதுங்கியிருந்தது. எனது அப்பா நகரில் ஒரு நூலகம் அமைத்து அங்கு ருஷ்ய கதைகளை வாசித்துக் காட்டுவதும் யிட்டீஷ் மற்றும் ருஷ்ய நாடகங்களை நடிப்பதும் ஒரு கூட்டுறவு நிறுவனம் துவங்கி உணவுப் பொருட்கள் மக்களுக்குச் சீராகக் கிடைக்க உதவி செய்வதுமாக இருந்தார். இவை யாவும் எவ்விதமான சிரமமும் இன்றி 1922 வரை நடை பெற்றது. அப்படியே ஒரு வேளை எனது அப்பா நிம்மதியாக வாழ்ந்திருக்கவும் கூடும். ஆனால் எதிர்பாராத சம்பவமொன்று நடைபெற்றது.

அமெரிக்காவிலிருந்த எனது தாய்மாமா ஜோ ருஷ்யாவில் நடைபெற்றுவரும் அரசியல் மாற்றங்கள் மற்றும் உலக யுத்தம் இவற்றுக்குள் தனது சகோதரியின் குடும்பம் எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் கடிதம் எழுதினார். இந்தக் கடிதம் வந்ததும் எனது அம்மா உடனே பதில் எழுதினார். அதற்கு ஜோ மாமா தனது சகோதரி குடும்பத்தோடு அமெரிக்கா வந்து விடுவதாக இருந்தால் பயண ஏற்பாடுகளையும் அனுமதியையும் தான் வாங்கித் தருவதாகச் சொல்லி கடிதம் எழுதினார்.

அமெரிக்காவிற்குப் போவதா வேண்டாமா என முடிவு செய்யக் குடும்ப ஆலோசனை நடைபெற்றது. இந்த ஊரிலே பிறந்து வசதியாக வாழ்ந்து நிம்மதியாக இருப்பதைவிட்டுப் போகக் கூடாது என ஒரு தீர்மானமும், இல்லை யூதர்களுக்கு நெருக்கடி அதிகமாகிவிடும் அமெரிக்கா போய்விடலாம் என ஒரு தீர்மானமும் வந்தது. போவதாக இருந்தாலும் அதற்குச் சோவியத் அரசு அனுமதி வேண்டும். அரசு இதை நன்றி கெட்ட செயலாக நினைத்து அனுமதிக்காது என்ற வாதங்கள் வந்தன. மாமா அமெரிக்காவில் வாழ அனுமதி தன்னால் எளிதாக வாங்க முடியும் என்றார்.

அமெரிக்கா பற்றிய தங்கக் கனவு வீட்டில் விரிந்தது. ஏதேதோ சண்டைகள் விவாதங்கள் வீட்டில் நடைபெற்றன. கடைசியில் அமெரிக்கா போவது என முடிவானது. சொந்த ஊரை மனிதர்களை நிலத்தை விட்டு இனி போதும் திரும்பி வரப்போவதில்லை என்ற துக்கத்தோடு பிரிந்து போவது என முடிவு செய்தார்கள். இது வரை அறிந்திராத ஒரு தேசத்தை நோக்கிய பயணம் முடிவானது. இதற்கு அப்பாவின்  நண்பர் ஒருவர் உதவி செய்தார்.

ஜனவரி 1923 அப்பா அம்மாவோடு மூன்று வயது சிறுவனான நானும் எனது தங்கையும் அமெரிக்கா நோக்கி பயணமானோம். குறிப்பிட்ட தூரம் வரை படகில் பயணமாகி அங்கிருந்து ரயிலிலும் பிறகு கப்பலிலும் என மாறி ஒரு மாத காலப் பயணத்தின் பிறகு 1923 பிப்ரரரி 3ம் தேதி அமெரிக்கா அடைந்தோம். பயணத்தில் நாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்தோம்.

நியூயார்க் நகரில் எனது அப்பா கையில் பைசாகாசு இல்லாதவராக முகம் தெரியாத ஒரு வேற்றாளாக அலைந்தார். அவருக்கு என்ன செய்யப் போகிறோம் என்றே தெரியவில்லை. புதிய தேசத்தின் நிலவியலும் பரபரப்பும் அவரைத் திகைக்கவைத்திருந்தது. அமெரிக்கா பிரஜையாவதற்கு விண்ணப்பித்துச் சில வருஷங்களில் அவர் உரிமை பெற்றுக் கொண்டு விட்டார். ஆனால் அமெரிக்கா வந்த நாளிலே அவருக்குத் திடீரெனத் தான் ஒரு படிப்பறியாதவன் எனப் பட்டது அவருக்குத் தெரிந்தவை ரஷ்யன் மற்றும் ஹீப்ரு. இந்த இரண்டு பாஷைகளும் அமெரிக்காவில் செல்லுபடியாகாதவை.

மொழியறியாத் தன்னை ஒரு படிக்காத முட்டாள் போலவே உணர்ந்தார். இதனால் எவரோடும் பேச முடியாத ஊமையைப் போல வாழ நேரிட்டது. இன்னொரு பக்கம் தனக்குத் தெரிந்த வேலையைக் கொண்டு இங்கே பிழைக்க முடியாது எனவும் தெரிந்து போனது. இனி எப்படி வாழப்போகிறோம் எனத் தவித்தவராக இருந்தார். அம்மா மட்டுமே வாழ்வைத் துவங்கிவிட முடியுமெனச் சுய நம்பிக்கை கொண்டிருந்தார்.

வீட்டில் நாங்கள் பேசிக் கொள்வதும் குறைந்து போனது. அப்பா கிடைக்கும் வேலைகளைச் செய்து பணம் சேர்க்கத் துவங்கி மூன்று வருடத்தில் சிறிய இனிப்புபண்டங்கள் கடை ஒன்றைத் துவங்கினார்.

அந்தக் கடையில் எனது அப்பாவும் அம்மாவும் தினமும் 16 மணி நேரம் வேலை செய்வார்கள். குழந்தைகளான நாங்களும் இனிப்புத் தயாரிப்பதில் உதவி செய்வோம். பைசா பைசாவாக வருமானம் வந்தது. இதற்கிடையில் வீட்டில் குழந்தைகள் பிறந்தனர். அப்பா இந்தச் சூழலில் கூடத் தர்ம காரியங்களுக்கும் தேவாலயத்திற்கும் உதவுவதற்காகப் பணம் தந்தார். எங்களை அமெரிக்கப் பள்ளியில் படிக்கவைத்தார். தனிமையும் வருத்தமும் அப்பாவைப் பீடித்த போதும் இந்த வாழ்வை அவர் எந்தச் சலிப்புமின்றித் தொடர்ந்து வந்தார்.

நாங்கள் படித்து வேலைக்குப் போன பிறகே அந்த மிட்டாய்க் கடையை விற்றுவிட்டு பகுதி நேர வேலையொன்றில் சேர்ந்து கொண்டார். அவர் என்னிடமோ எனது சகோதரனிடமிருந்தோ பணம் பெறுவதை ஒரு போதும் விரும்பாதவர். தனது வயதான காலத்தில் ஆங்கிலம் அறிந்த பிறகும் கூடக் கடைசி நாள் வரை அவர் தன்னை ஒரு கல்வியற்ற மனிதனாகவே கருதிவந்தார்.

யாரையும் சாராத அவர் ஓய்வு பெற்றுப் புளோரிடாவில் வாழ்ந்து 73 வயதில் இயற்கையாக மரணமடைந்தார். அப்போதும் எனது அம்மாவிற்குத் தேவையான பணமும் வீடும் வசதியும் தந்து விட்டவராகவே இறந்து போயிருந்தார்.

தான் வாழ்வில் நொடித்துப் போன போதும் கூடத் தனது பிள்ளைகள் எப்படியாவது வாழ்வில் முன்னேறிவிட வேண்டும் என ஆசைப்பட்டு அதை நிறைவேற்றியவர். அதிலும் நான் ஒரு பேராசிரியராக 100க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியவனாக இருப்பதைக் கண்டு சந்தோஷபட்டவர். யூதர்கள் கல்வியைத் தான் பெரிய செல்வமாகக் கருதுகிறார்கள்.அறிவாளிகளை உண்டாக்குவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். (அதற்காக எல்லா யூதர்களும் அறிவாளிகள் அல்ல) இதை எனது அப்பா முழுமையாக நம்பியவர்.

நான் எழுதுகிறேன் இதைப் பலரும் படிக்கிறார்கள் என்பதைப் பெரிய காரியமாக நினைத்தார் அதிலும் விஞ்ஞானம் என்பதை மிக மரியாதைக்குரிய ஒன்றாக மதித்தார்.

நான் கேட்ட எதையும் வாங்கித் தருமளவு அவரிடம் ஒரு போதும் பணம் இருந்ததேயில்லை. ஆனாலும் ஒரு முறை அவர் எனது பிறந்த நாளுக்காக எனக்கு ஒரு பேஸ்பால் பரிசாக வேண்டும் எனக் கேட்டதற்கு மறுத்துவிட்ட அவர் பதிலாகக் கலைக்களஞ்சியத்தின் தொகுதி ஒன்றைப் பரிசாகத் தந்தார்.

நான் எழுதத் துவங்கிய காலத்தில் ஒரு டைப்ரைட்டர் தேவைப்பட்டது. அதை வாங்கித் தர அவரால் முடியவில்லை. நானே கதை எழுதி வாங்கிக் கொள்வதாக முடிவு செய்தேன். ஆனால் அவர் எப்படியோ சிரமப்பட்டு வாங்கித் தந்தார். சில வருடங்களில் புத்தகங்களுக்கு மேல் புத்தகமாக நான் எழுதி வருவதைக் கண்ட அவர் ஒரு நாள் என்னிடம் கேட்டார்.

“ஐசக். இத்தனை புத்தகங்களை எழுத எங்கிருந்து கற்றுக் கொண்டாய்?“

“உங்களிடமிருந்து தான் அப்பா“ என்றேன்.

அவருக்கு எதுவும் புரியவில்லை.

என்னிடமிருந்தா, நீ சொல்வது எதுவும் எனக்குப் புரியவில்லை என்றார்.

“அப்பா நீங்கள் தான் கற்றுக் கொள்வதன் மகத்துவத்தை எனக்குப் புரிய வைத்தீர்கள், இது தவிர மற்றவை எல்லாம் சின்ன விஷயங்கள் தானே “என்றேன்.

••••

0Shares
0