சென்னை புத்தகத் திருவிழாவில் கிடைக்க கூடிய சில அரிய புத்தகங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

ஜிலானி பானு எழுதிய கவிதாலயம் நாவல் மிகச்சிறப்பானது. ஒரு கூட்டுக்குடும்பத்தின் கதையை சுதந்திரப் போராட்ட கால வரலாற்றின் பின்புலத்தில் அற்புதமாக எழுதியிருக்கிறார். இந்த நூலின் குறைவான பிரதிகள் நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பகத்தில் கிடைக்கின்றன. இந்தப் பதிப்பு தீர்ந்துவிட்டால் அவர்கள் மறுபதிப்பு வெளியிட பல ஆண்டுகள் ஆகும்.

பதேர் பாஞ்சாலி நாவலை எழுதிய விபூதிபூஷண் எழுதிய நாவல். நீண்ட காலத்திற்குப் பிறகு மறுபதிப்பு வெளியாகியுள்ளது. இந்த நாவல் இந்திய இலக்கியத்தின் முக்கிய நாவல்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது

மலையாள இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் கோவிலன் எழுதிய நாவல் தட்டகம். இதனை நிர்மால்யா சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது.

கிரண் நகர்க்கர் எழுதி சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல் கனவில் தொலைந்தவன்
அக்களூர் இரவி மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
மேவார் ராஜ்ஜியத்தை பற்றிய வரலாற்று நாவல். சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது.

சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பாஜின் எழுதிய குடும்பம் நாவலை அலைகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நாமக்கல் சுப்ரமணியம் இதனை மொழியாக்கம் செய்துள்ளார்.
உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.

புகழ்பெற்ற எழுத்தாளர் பிரேம்சந்தின் கோதான் நாவல் இந்திய கிராம வாழ்வினை மிக உண்மையாகச் சித்தரித்துள்ளது. அன்னம் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. சரஸ்வதி ராம்நாத் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார்.