என்னைப் பற்றி

சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.

அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி.

கடந்த முப்பது ஆண்டுகாலமாகச் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,
குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு
தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறேன்.

நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறேன்.

எனது சிறுகதைகள், கட்டுரைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம் பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன.

இந்தியா முழுவதும் சுற்றியலைந்தவன். எனது இந்தியா மறைக்கபட்ட இந்தியா என இரண்டு வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறேன்.

உலக இலக்கியம் மற்றும் உலக சினிமா குறித்து விரிவான உரைகள் நிகழ்த்திருக்கிறேன். இது முன்னோடியான நிகழ்வு.

2018ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளேன். எனது சஞ்சாரம் நாவலுக்காக இந்த விருது அளிக்கபட்டது.

எனது புத்தகங்களை ஆராய்ந்து இதுவரை 21 பேர் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆறு பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். நான்கு பல்கலைகழகங்களிலும் 12 கல்லூரிகளிலும் எனது நூல்கள் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.

கனடாவின் இயல் விருது, தமிழக அரசின் விருது, சிகேகே இலக்கிய விருது, மாக்சிம்கார்க்கி விருது , முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருது, ஞானவாணி விருது, நல்லி திசை எட்டும் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, பெரியார் விருது, துருவா விருது, எஸ்.ஆர்.வி. இலக்கிய விருது, சேலம் தமிழ் சங்க விருது, விகடன் விருது, கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, இயற்றமிழ் வித்தகர் விருது. இலக்கியச்சிந்தனை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.

முழுநேர எழுத்தாளரான நான் தற்போது தேசாந்திரி என்ற பதிப்பகம் ஒன்றை துவக்கி நடத்திவருகிறேன்.

மனைவி சந்திர பிரபா. மகன்கள் ஹரிபிரசாத், ஆகாஷ்.

சென்னையில் வசித்து வருகிறேன்.