என்றாவது ஒரு நாள்

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்

(ஆங்கிலத்திலிருந்து தமிழில்: எஸ்.எம்.ஏ.ராம்)

அந்தத் திங்கள் கிழமை மழையின்றி வெதுவெதுப்பாய் விடிந்தது. முறையான மருத்துவப் பட்டம் எதுவுமற்ற பல் மருத்துவர் ஆரிலியோ எஸ்கோவர் விடிகாலையிலேயே எழுந்து விடும் வழக்கமுள்ளவர் என்பதால், சரியாய் ஆறு மணிக்குத் தன் அலுவலகத்தைத் திறந்தார். இன்னமும் பிளாஸ்டர் அச்சிலேயே பொருத்தி இருந்த  சில பொய்ப்பற்களைக் கண்ணாடிப் பெட்டியிலிருந்து  வெளியில் எடுத்தார். பின், கை நிறையப் பல் சிகிச்சைக் கருவிகளை அள்ளி எடுத்து, அவற்றின் நீளங்களுக்கு ஏற்றவாறு, காட்சிக்கு வைப்பது போல் அவற்றை மேஜையின் மீது வரிசையாய்ப் பரப்பி வைத்தார். அவர் ஒரு காலர் இல்லாத, வரிவரியான மேல்சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டார். அதன் கழுத்துப் பகுதி   தங்கக் குமிழால் மூடியிருந்தது. பின்புறத் தோளிலிருந்து தொங்கும், பெல்ட்கள் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் கால் சட்டையையும்  மாட்டிக் கொண்டார். நிமிர்ந்த ஒல்லியான உடல் வாகு அவருடையது. அவரது பார்வை அபூர்வமாய் இருந்தது. அது பார்ப்பதற்குக் காது கேட்காதவர்களின் பார்வையைப் போல் தோன்றியது.   

மேஜை மீது எல்லா உபகரணங்களும் தயார் நிலையில் இருக்க, அவர் பல் நோயாளிகளுக்கான  இருக்கையை  நோக்கித் துளைப்பானை(Driller) இழுத்து உட்கார்ந்து கொண்டு, செயற்கைப் பற்களைப் பாலீஷ் பண்ணத் தொடங்கினார். தான் என்ன செய்கிறோம் என்ற சிந்தனையே அற்றவராய் அவர் தன் பாட்டுக்கு, தேவை இல்லாத தருணங்களிலும்  துளைப்பானைக் கால்களால் பெடல் செய்து கொண்டு, இடைவிடாமால் ஒரே சீராக வேலை செய்தார்.

எட்டு மணிக்குப் பிறகுக் கொஞ்ச நேரம்  தன் வேலையை நிறுத்தி விட்டு ஜன்னல் வழியாய் வெளியே ஆகாயத்தை ஏறிட்டு நோக்கினார். அப்போது, பக்கத்துக்கு வீட்டுக் கூரை முகட்டின் மேல் இரண்டு பருந்துகள் ஆழ்ந்த யோசனையோடு கூடித் தங்கள் உடம்பை வெய்யிலில் உலர்த்திக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். பிற்பகல் உணவுக்கு முன் மறுபடியும் மழை வரக் கூடும் என்று யோசித்த படியே அவர் வேலையைத் தொடர்ந்தார். அவரது பதினோரு வயதுப் பையனின் கீச்சுக் குரல் அவரது கவனத்தைக் கலைத்தது.

“அப்பா”

“என்ன?”

“மேயர் வந்திருக்கார். நீங்க அவர் பல்லைப் பிடுங்குவீங்களான்னு கேக்கறார்.”

“நான் வீட்டில இல்லேன்னு  என்று அவர்கிட்டச் சொல்லிடு.”

அவர் தங்கப் பல்லைப் பாலீஷ் செய்து கொண்டிருந்தார். அந்தப் பற்களை முன்னங்கை தூரத்தில் பிடித்துக் கொண்டுப் பாதி மூடிய கண்களால்  பரிசோதித்தார். சின்ன வரவேற்பறையிலிருந்து அவரது மகன் மீண்டும் உரக்கக் குரல் கொடுத்தான்.

“நீங்க இங்க தான் இருக்கீங்கன்னு  அவருக்குத் தெரியும்னு சொல்றார். ஏன்னா  நீங்க பேசறது  இங்க அவருக்கு நல்லாவே  கேக்குது!”

பல் மருத்துவர் தங்கப்பல்லைத் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தார். அந்த வேலையை முழுதுமாக முடித்து, அதை மேஜை மீது வைத்த பின்னர் அவர் இப்படிச் சொல்லிக் கொண்டார். “பரவாயில்ல. இது வரைக்கும் நல்லாவே  வந்திருக்கு..”

அவர் துளைப்பானை மீண்டும் இயக்கினார். அவர் இன்னும் வேலை செய்வதற்காக வைத்திருந்த நிறையப் பல் வரிசைகளை ஓர் அட்டைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்துத் தங்கத்தைப் பாலீஷ் பண்ண ஆரம்பித்தார்.

“அப்பா”

“என்ன?”

அவர் தன் குரலின் தொனியை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை.

“நீங்க அவர் பல்லை எடுக்காமப் போனா, உங்களைச் சுட்டுடுவேன்னு சொல்றார்..”

அவர் எந்தச் சலனமும் இன்றி அமைதியாய், துளைப்பானைப் பெடல் பண்ணுவதை நிறுத்தி விட்டு, அதை இருக்கையிலிருந்து விலக்கித் தள்ளினார். மேஜையின் கீழ்-டிராயரை முழுதுமாக வெளியே இழுத்தார். அதில் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. அவர் சொன்னார்: “சரி. அவரை என்னை வந்து சுடச் சொல்லு.”

கை மேஜையின் விளிம்பில் அழுந்திய நிலையிலேயே இருக்க, அவர் இருக்கையைக் கதவுக்கு எதிர்ப்புறமாக உருட்டி நகர்த்தினார். மேயர் கதவுக்கருகில் நின்று கொண்டிருந்தார். அவர் தன் கன்னத்தின் இடது புறத்தை நன்றாக மழித்திருந்தார்.. ஆனால், வீங்கிப் போய் வலி கண்டிருந்த  அவரது  வலது கன்னம் ஐந்து நாட்களாய் மழிக்கப் படாத தாடியோடு காட்சி அளித்தது. மருத்துவர் மேயரின் சோர்ந்த விழிகளில் பல இரவுகளின் வேதனையையும் அவநம்பிக்கையையும் பார்த்தார். அவர் டிராயரை மூடி விட்டு, மென்மையான குரலில் சொன்னார்;

“உக்காருங்க”

“குட் மார்னிங்” என்றார் மேயர்.

“மார்னிங்” என்று சொன்னார் மருத்துவர்.

பல் சிகிச்சைக் கருவிகள் வெந்நீரில் கொதித்துக் கொண்டிருந்தன. மேயர் தன் பின்தலையைப் பல்-நாற்காலியின் ‘தலைதாங்கி*யில் சாய்த்துக் கொண்டபடியே, தன்னைச் சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டார். அவரது மூச்சுக் காற்று சில்லிட்டிருந்தது.

அது ஓர் ஏழ்மையான அலுவலகம்; ஒரு பழைய மர இருக்கை; பெடல் துளைப்பான்; பீங்கான் பாட்டில்கள் வைக்கப் பட்ட கண்ணாடிப் பெட்டி. இருக்கைக்கு எதிர்ப்புறத்தில் தோள் உயரத் திரைச்சீலையோடு கூடிய ஒரு ஜன்னல்.

மருத்துவர் தன்னை சமீபிப்பதை உணர்ந்த மேயர், தன் குதிகால்களை முழு பலத்தையும் பிரயோகித்து  அழுத்தமாய் ஊன்றிக் கொண்டு வாயைத் திறந்தார். ஆரிலியோ எஸ்கோவர் மேயரின் தலையை விளக்கை நோக்கித் திருப்பினார். சொத்தைப் பல்லை ஆராய்ந்த பிற்பாடு, விரல்களில் அளவான அழுத்தத்தைப் பிரயோகித்து மேயரின் தாடையை மூடினார்.

“அனஸ்தீஷியா இல்லாமத்  தான் இதச் செய்யணும்..” என்றார் அவர்.

“ஏன்?’

“ஏன்னா, உங்களுக்குச் சீழ் கோத்திருக்கு.”

மேயர் அவரது கண்களுக்குள் நோக்கினார். “சரி” என்று சொல்லி விட்டுப் புன்னகைக்க முயன்றார். மருத்துவர் திரும்பப் புன்னகைக்கவில்லை. நன்றாகக் கொதிக்க வைத்துக் கிருமிகள் அழிக்கப் பட்ட கருவிகளைப் பாத்திரத்தோடு எடுத்துக் கொண்டு வந்து, மேஜை மீது வைத்தார். இப்போதும் எந்த வித அவசரமும் இன்றி, அந்தக் கருவிகளைக் குளிர்ந்த இடுக்கியால் பற்றி வெளியே எடுத்தார். பிறகு உமிழ்கலத்தைத் (spitton) தன் ஷூவின்  முனையால் தள்ளி விட்டு, எழுந்து போய் வாஷ் பேசினில் கை கழுவினார். அவர் இத்தனையையும் மேயரின் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமலேயே செய்தார். ஆனால், மேயர் மட்டும் தன் விழிகளை மருத்துவரின் மீதிருந்து அகற்றவே இல்லை.

அது கீழ்த்தாடைக் கடைவாய்ப் பல். பல் மருத்துவர் தன் கால்களை அகட்டி நின்று கொண்டார். அந்தப் பல்லை சூடான இடுக்கிகளால் இறுகப் பற்றினார். மேயர்  நாற்காலியின் கரங்களை அழுத்திப் பிடித்துக் கொண்டார். பலம் கொண்ட மட்டும் கால்களை ஊன்றித் தன்னை ஸ்திரப் படுத்திக் கொண்டார். அவரது அடி வயிறு சில்லிட்டு உறைகிற மாதிரி இருந்தது. ஆனாலும் அவர் சத்தம் எதுவும் எழப்பவில்லை. மருத்துவர் தன் மணிக்கட்டுகளை மட்டும் அசைத்தார். குரலில் கோபத்தையும் வெறுப்பையும் காட்டிக் கொள்ளாமல் ஒரு கடுமை கலந்த கரிசனத்தை வரவழைத்துக் கொண்டார்.

“இப்ப நீங்க செத்துப்போன எங்க இருபது பேருக்கான விலையக் கொடுக்கப் போகிறீங்க.”

மேயர் தன் தாடை எலும்புகள் நொறுங்குகிற மாதிரி உணர்ந்தார். அவர் கண்களில் நீர் பெருகி நிரம்பியது. பல் ஒரு வழியாய் வெளியே வந்து விட்டதை உறுதிப் படுத்திக் கொள்கிற வரை அவர் மூச்சை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருந்தார். தன் கண்ணீர்த் திவலைகளின் ஊடாக அந்தப் பல்லைப் பார்த்தார். அந்தப் பல், அவர் ஐந்து இரவுகளாக அனுபவித்த வலிக்கும் வேதனைக்கும் துளியும் சம்பந்தமற்ற ஏதோ ஓர் அந்நிய வஸ்துவைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

முகம் வியர்த்துப் பெருமூச்சு வாங்கிய நிலையில் துப்புவதற்காக  உமிழ் கலத்தை நோக்கிக் குனிந்தவர், தன் சட்டைப் பித்தான்களைக் கழற்றி விட்டுக் கொண்டு, பேன்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுப்பதற்காகக் கைகளை நீட்டித் துழாவினார்.  மருத்துவர் அவரிடம் ஒரு சுத்தமான துணியை நீட்டினார்.

“உங்க கண்ணைத் துடைச்சுக்குங்க”

மேயர் அப்படியே செய்தார். அவர் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. மருத்துவர் கைகளைக் கழுவிக் கொண்டிருந்த போது, அவர் உடைந்து கொண்டிருக்கும் மேற்கூரையையும், சிலந்தி முட்டைகளோடு கூடிய ஓர் அழுக்கேறிய சிலந்தி வலையையும், இறந்த பூச்சிகளையையும் கண்டார். மருத்துவர் தன் கைகளை உலர்த்திய படியே திரும்பி வந்தார். “படுக்கப் போங்க. அதுக்கு முன்னால உப்புத் தண்ணியால வாய்  கொப்புளியுங்க.” என்று அவர் சொன்னார். மேயர் எழுந்து நின்றார். வழக்கமான ராணுவ சல்யூட்டுடன், “குட் பை” என்று சொல்லிவிட்டு, சட்டைப் பித்தான்களைத் திரும்ப மாட்டிக் கொள்ளாமலேயே காலை நீட்டி வாசலை நோக்கி நடந்து போனார்.

“‘பில்’லை அனுப்பி வையுங்க”

“யாருக்கு, உங்களுக்கா, இல்ல ஊராட்சிக்கா?”

“ரெண்டு எழவும் ஒண்ணு தான்..”

                              ____________________

நன்றி -தளம், டிசம்பர், 2015

0Shares
0