என் பள்ளி

பள்ளி வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சியான கனவு, அதற்குள் முடிந்துவிட்டதே என்ற ஏக்கத்தைத்  தந்தபடியே இருப்பதே அதன் தனித்துவம்,

கையால் தலையைச் சுற்றி காதைத் தொட்டுவிட முடிகிறது என்ற ஒரு தகுதி தான் என்னைப் பள்ளியில் சேர்க்க உதவியது, அது தான் அன்றைய காலத்தின் நுழைவுத்தேர்வும் கூட, பொதுவாக சரஸ்வதி பூஜை காலத்தில் தான் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும்,

ஆறு வயதில் அப்படி ஒரு சரஸ்வதி பூஜைக்குப் பிறகு கடையில் ஆரஞ்சு மிட்டாய்கள் வாங்கிக் கொண்டு வழியில் தென்படுகின்றவர்களுக்கு எல்லாம் தந்தபடியே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சூலக்கரை அரசினர் உயர்நிலைப்பள்ளி முன்னால் போய் நின்றபோது ஒரு பக்கம் சந்தோஷமாகவும் மறுபக்கம் பயமாகவுமே இருந்தது,

அப்போது தலைமை ஆசிரியராக இருந்தவர் சிந்தாமணி டீச்சர், மிக அன்பானவர், சிலிப்பிக் கொண்டு நிற்கும் என் தலையைத் தடவிவிட்டுச் சிரித்தபடியே நல்லா படிப்பியா என்று கேட்டார், பதில் சொல்லாமல் அப்பாவின் கையைப் பிடித்தபடியே நின்று கொண்டிருந்தேன்,

தலைமை ஆசிரியரின் அருகில் இருந்த உலக உருண்டையின் மீதே கவனம் சென்று கொண்டிருந்தது, உலக உருண்டை போன்ற ஒன்றை அன்று தான் முதன்முதலாக பார்க்கிறேன், மின்விசிறி கூட இல்லாத சிறிய அறை, ஒரு பக்கம் வருகைப் பதிவேடு நோட்டுகள், மர பீரோ, ஒரு நீளமான மரபெஞ்சு, அருகில் ஒரு மண்பானை, சற்று தள்ளி தண்டவாளத் துண்டாகத் தொங்கிக் கொண்டிருந்த மணி,  பெரிய பூக்களாக உள்ள இளமஞ்சள் நிற சேலையைச் சிந்தாமணி டீச்சர் அணிந்திருந்தார்,

தலைமை ஆசிரியர் அறையில் இருந்து சாக்பீஸ் எடுத்துப் போக வந்த ஐந்தாவது வகுப்பு  பரமசிவம் என்னைப் பார்த்து எந்த கிளாஸ்டா என்று கேட்டான், காரணம் ஒன்றாம் வகுப்பில் இரண்டு பிரிவுகள் இருந்தன,

ஏ வகுப்புக்கு சௌந்தரபாண்டியன் சாரும், பி பிரிவிற்கு சுப்புலட்சுமி டீச்சரும் இருந்தார்கள், சுப்புலட்சுமி டீச்சர் எங்கள் வீட்டின் அருகாமையில் குடியிருந்தார்கள் என்பதோடு அவர்கள் வீட்டிலும் என் வயது பையனிருந்தான், டீச்சர் யாரையும் எப்போதும் அடிக்கவே மாட்டார், நன்றாகப் பாடம் நடத்துவார் என்று முன்பே அறிந்திருந்தேன்

அதனால் சுப்புலட்சுமி டீச்சர் வகுப்பில் சேர வேண்டும் என்று மனதிற்குள்ளாக பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தேன், நான் நினைத்தற்கு மாறாக சௌந்திரபாண்டியன் சார் வகுப்பில் சேர்க்கச் சொன்னார்கள்,

வராண்டாவில்  நடந்து கொண்டிருந்தோம், தொலைவில் ஒரு அணில் மரத்தில் இருந்து இறங்கி ஒடிக் கொண்டிருப்பதைக் கண்டேன், பள்ளியின் முன்னால் நாலைந்து வேப்பமரங்கள் இருந்தன, அதை ஒட்டிய சிறிய  மைதானம், நடுவில் ஒரு கொடிக்கம்பம், ஒரமாக சைக்கிள் நிறுத்துமிடம், அதன் அருகில் மதிய உணவு சமைக்குமிடம், பின்னால் ஒரு கிணறு, இது தான் பள்ளி வளாகம்.

வகுப்பு நடந்து கொண்டிருந்தது, எனக்குச் சௌந்திர பாண்டியன் சார் வகுப்பில் சேர விருப்பமேயில்லை, அப்பா என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் வகுப்பறையினுள் விட்டு ஆசிரியரிடம் பாத்துக்கோங்க என்றபடியே வெளியேறிப் போய்விட்டார், அப்படியே வெளியே ஒடிவிடலாமா என்றிருந்தது,

ஆசிரியர் பேரு என்னடா என்று கேட்டார், பதில் பேசாமல் நின்றிருந்தேன், என்னடா வாய்ல கொழுக்கட்டை வச்சிருக்கியா என்று கேட்டதும் வகுப்பே சிரித்தது, நான் பல்லைக்கடித்துக் கொண்டு நின்றிருந்தேன், கடைசிப் பெஞ்சிலே போய் உட்காரு என்றார், அழுகை முட்டிக் கொண்டு வந்தது, டவுசர் பை நிறைய ஆரஞ்சு மிட்டாய்கள் இருந்தன, ஆனால் ஒருவருக்கும் மிட்டாய் கொடுக்க விருப்பமேயில்லை,

புத்தகம் எல்லாம் பள்ளியில் தருவார்கள் என்பதால் ஒரு குச்சியும் சிலேட்டும் மட்டுமே எனது பையில் இருந்தது, சிலேட்டை வெளியே எடுக்கவேயில்லை,  வகுப்பில் இருந்த யாரையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை, பள்ளியில்  இடைவேளை மணியடிக்கப்பட்டது, அப்படியே எழுந்து பள்ளியை விட்டு ஒடினேன், கண்மாய் கரையைத் தாண்டி. ரயில்வே தண்டவாளத்தை கடந்து ஒடி ஊரின் புறவெளியில் உள்ள பனைமரங்களைக் கடந்து கல்கிடங்கு எனப்படும் பாறைப்பிளவு ஒன்றினுள் போய் உட்கார்ந்து கொண்டேன், செத்தாலும் பள்ளிக்கூடத்துக்குப் போக்கூடாது என்று மனதில் உறுதியாக முடிவு செய்து கொண்டேன்,

யாராவது என்னைப் பின்தொடர்ந்து தேடி வருகிறார்களா என்று எட்டிப்பார்த்தேன், ஆள் அரவமேயில்லை, ஆரஞ்சு மிட்டாய்களை எடுத்துத் தேங்கிக்கிடந்த தண்ணீரில் எறிந்தேன், பள்ளிக்கூடம் சில மணி நேரங்களிலே பிடிக்காமல் போய்விட்டிருந்தது, வெயில் ததும்பும் வெட்டவெளியைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தேன், தொலைதூரத்தில் மேயும் ஆடுகள், தந்திக் கம்பங்களின் உயிங் உயிங் ஒலி.  தட்டழியும் மைனாவின் தாவல். பனையோலையின் விசித்திர சப்தம் என்று ஆழ்ந்து போயிருந்தேன்,

மதியமானதும் எதுவும் நடக்காதவன் போல வீட்டிற்கு போய் சாப்பிட உட்கார்ந்தேன், எப்படி இருந்தது பள்ளிக்கூடம் என்று அம்மா கேட்டதற்கு நான் சுப்புலட்சுமி டீச்சர் வகுப்பில் தான் படிப்பேன், இல்லாவிட்டால் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று கோபமான குரலில் சொன்னேன், அதற்கென்ன நாளைக்கு மாற்றிவிடலாம் என்று அம்மா சொன்னார், மறுநாள் அப்பா தலைமை ஆசிரியரிடம் சொல்லி விடவே சுப்புலட்சுமி டீச்சர் வகுப்பிற்கு மாறியிருந்தேன்,

டீச்சர் என்னை அருகில் அழைத்து எங்கிட்டதான் படிப்பேன்னு முரண்டுபிடிச்சி வந்தியாமே அதனாலே முன்னாலே உட்காரு என்று முதல்வரிசையில் உட்கார வைத்து சிலேட்டில் ஆனா ஆவன்னா எழுதக் கற்றுத்தந்தார்கள், அப்படித்தான் துவங்கியது என் பள்ளி வாழ்க்கை, சுப்புலட்சுமி டீச்சரின் அன்பும் அக்கறையுமே என்னைப் படிப்பில் அக்கறை கொள்ளச் செய்தது, அதே டீச்சரை பின்பொரு நாள் என் பையனோடு விருதுநகரில் பார்த்த போது அவர்  என்னை இன்னமும் ஞாபகம் வச்சிருக்கியா என்று கேட்டுச் சிரித்தார்கள்.

ஆசிரியர்களுக்கு மாணவர்களின் முகம் மறந்து போய்விடும், ஆனால் மாணவர்களுக்கு விருப்பமான ஆசிரியர்களின் முகம் ஒரு போதும் மறப்பதேயில்லை,

சூலக்கரை அரசினர் உயர்நிலைப்பள்ளி தான் என்னை உருவாக்கியது, பள்ளியின் முன்பாக ஒரு வேப்பமரமிருந்தது, காலையில் அதில் ஏறி உட்கார்ந்து கொண்டு படிப்போம், மாணவர்கள் ஆளுக்கு ஒரு மரம் என்று பிரித்து வைத்திருப்பார்கள், மரத்தோடு பேசுவோம், வேப்பம்பூ உதிரும் காலங்களில் அதை அள்ளிப் பையில் நிரப்பிக் கொள்வோம், வேப்பம்பழத்தை பறித்து ஆசையோடு பிதுக்கித் தின்போம், கசப்பைக் கூட ருசியாக்குவது தான் பால்யம் போலும்,

சிறிய கிராமப்பள்ளி என்பதால் பெரும்பான்மை ஆசிரியர்கள் வெளியூரில் இருந்து தான் வருவார்கள், ஆகவே ஆசிரியர்கள் சைக்கிள் வருகின்றதா என்று பார்ப்பதற்காகவே ரயில்வே கேட் அருகே ஒரு பையன் நின்று கொண்டேயிருப்பான், ஆசிரியர் வராவிட்டால் அந்த வகுப்பு கிடையாது, உடனே அருகில் உள்ள கண்மாயில் விழுந்து நீந்திக் குளிப்போம், ஐஸ் விற்கும் அண்ணாச்சியிடம் ஐந்து பைசாவிற்கு சேமியா ஐஸ். பால்ஐஸ் வாங்கித் தின்போம், அதில் கடன் வைப்பதும் உண்டு, பள்ளியில் ஒரேயொரு கால்பந்து மட்டுமே இருந்தது, அதனால் பந்துவிளையாடப் பெரிய போட்டி நடக்கும், பந்து கிடைக்காத நாங்கள் கிளியந்தட்டு. செதுக்கு முத்து, கோலி. கிட்டி. பம்பரம் விளையாடுவோம்,

மற்றபடி பள்ளியில் உளிமண்டை சார் தலையில் கொட்டி புளிய விளாறால் அடித்து ரத்தம் வரவைப்பார், ரசாக் சார் வட்டம் போட்டு அதற்குள்ளாக நிறுத்தி வைத்து குச்சியால் அடிப்பார், சுப்பையா சார் தொடையில் கையில் கிள்ளி வைத்து சதையை கன்னிப்போகச் செய்து விடுவார், ரசிதா டீச்சருக்கு அடிப்பதற்கு ஸ்கேல் வேண்டும், கையால் ஒருவரையும் அடிக்க மாட்டார், பொன்வண்டு சாருக்கோ காலில் சுற்றிசுற்றி அடிப்பது தான் பிடித்தமானது, சௌந்திர பாண்டியன் சார் காதைப் பிடித்து திருகி கன்னத்திலே மாறிமாறி அடிப்பார்,

இப்படி ஒவ்வொரு ஆசிரியரும் தனக்கென ஒரு அடிமுறையை வைத்திருந்தார்கள், வசைமொழிகளில் விற்பன்னர்களாகவும் இருந்தார்கள், ஆசிரியருக்கு டீ வாங்கி தருவது. சைக்கிளைத் துடைப்பது. டிபன் பாக்ஸைக் கழுவி தருவது. மிக்சர். முறுக்கு. மசாலா மொச்சை வாங்கி வருவது இவை அத்தனையும் மாணவர்களின் எழுதப்படாத வேலைகள், தினம் ஒருவர் செய்தே ஆக வேண்டும்,  ஆனாலும் அந்த ஆசிரியர்கள் மாணவர்கள் படிப்பில் காட்டிய அக்கறையும் தனிக்கவனமும் நன்றிக்கு அப்பாற்பட்டது.

வருசம் தோறும் பள்ளியில் இருந்து சுற்றுலா போவோம், சுற்றுலா கிளம்பும் நாளில் நள்ளிரவில் தான் பஸ் வரும் என்பதால் பள்ளியிலே படுத்துக்கிடப்போம், பகலில் பார்த்த வகுப்பறை இரவில் வேறு போலத் தெரிவதைப் பற்றி வியந்தபடியே வகுப்பறையில் படுத்து கிடந்து பஸ்ஸில் ஜன்னல் சீட்டுப் பிடிக்க சண்டையிட்டு கொடைக்கானல் போன நினைவு பசுமையாக இருக்கிறது

யாராவது பையன் வகுப்பிற்கு வராமல் லீவு போட்டுவிட்டால் அவன் வீட்டில் என்ன செய்கிறான் என்று பார்த்து வர பள்ளியில் இருந்து எட்டாம் வகுப்பில் படிக்கும் முத்துவை அனுப்பி வைப்பார்கள், அவன் முரட்டு உருவம் கொண்ட குண்டன், அவனும் சி.கணேசனும் கிளம்பிப் போய் பொய்யாக லீவு போட்ட பையனைப் பிடித்து தரதரவென புழுதியில் இழுத்துக் கொண்டு வருவார்கள், அந்த சிறுவனின் கதறல் தெருவெல்லாம் கேட்கும்.

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் போது உடன் படித்த மணி ஒரு நாள் தோளில் கைபோட்டு ரகசியம் பேசுவது போல தனியே அழைத்து போய் உன் தங்கச்சியை நான் கட்டிகிடுறேன் என் தங்கச்சியை நீ கட்டிக்கிடுறயா என்று கேட்டான், சரியெனத் தலையாட்டினேன்,

நீ இதை பற்றி உன் தங்கச்சிகிட்டே பேசு நானும் பேசுறேன் என்றான், நான் அதைப்பற்றி என் தங்கையிடம் பேசவேயில், ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு ரெட்டை ஜடை போட்ட மணியின் தங்கச்சி என்னிடம் வந்து நீ என்னை கட்டிகிடுறேனு எங்க அண்ணன்கிட்டே சொன்னயா என்று கோபத்துடன் கேட்டாள், உங்க அண்ணன் தான் அப்படி சொன்னான் என்றேன், அவள் உன்முகரைக்கு இதுவேற கேக்குதா என்று வகுப்பு முழுவதும் சொல்லிவிட்டாள், உளிமண்டை சார் அதுக்குள்ளே கல்யாணப்பேச்சு ஆரம்பமாகிருச்சா என்று சொல்லி புளியவிளாறால் மாறிமாறி அடித்தார், வலி தாங்க முடியவில்லை, இவ்வளவு நடந்த  மாலையில் மணி என்னிடம் வந்து உன் தங்கச்சிகிட்டே என்னைப் பத்தி பேசினயா என்று கேட்டான், போடா நாயி என்று அவனை அடித்து விரட்டிய நினைவு அப்படியே இன்றும் இருக்கிறது,

எட்டாம்வகுப்பு கணக்குப் பரிட்சை அன்று காலையில்  கணிதத்தில் எப்போதும் முதல் மாணவனாக வரும் திலகர் தன் வீட்டின் அருகாமையில் ஒரு கல்லில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த போது ஒரு கருந்தேள் கடித்து சில மணிநேரங்களில் செத்துப் போனதும். அவன் இல்லாத  காரணத்தால் கணிதத்தில் நான் முதல்மாணவனாக வந்த மனஉறுத்தலும் இன்றைக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது.

சமீபத்தில் ஒரு இரவு அழியாத கோலங்கள் திரைப்படம் பார்த்த போது பள்ளி நினைவுகள் கொப்பளித்து பீறிட என்னை அறியாமல் அழுது தவிக்க நேர்ந்தது, பள்ளிவாழ்க்கை இனிமையாக சிறகடித்த நாட்கள், இனி அவை சாத்தியமேயில்லை

பள்ளி நாட்களில் நான்கு சிறுவர்கள் பிரிக்கமுடியாத நட்போடு ஒருவர் தோள்மீது மற்றவர் கைபோட்டுக் கொண்டு ஒன்றாக நடப்போம், இன்று தோளில் கைபோட்டு நடக்கும் நண்பர் ஒருவருமில்லை, அந்த இழப்பு ஏக்கமாக இருந்து கொண்டேயிருக்கிறது, ஒருவேளை அது தான் பள்ளி நினைவுகளின் மாறாத வலி போலும்.

••

2011 ஆகஸ்ட் மாத புதிய தலைமுறை இதழில் வெளியானது.

0Shares
0