எரிமலையின் முன்னால்.

ஸ்ட்ரோம்போலி 1950ல் வெளியான திரைப்படம். ராபர்டோ ரோசோலினி இயக்கியது. இத்தாலிய நியோ ரியலிச சினிமாவில் குறிப்பிடத்தக்கது.

இங்க்ரிட் பெர்க்மென் நடித்துள்ள இந்தப்படம் இரண்டாம் உலகப்போருக்கு பிறகான காலகட்டத்தில் நடக்கிறது.

லிதுவேனிய அகதியான கரீன் இத்தாலிய அகதி முகாம் ஒன்றில் வசிக்கிறாள். முகாம் வாழ்க்கையிலிருந்து தப்பிச்செல்வதற்காக முகாமின் காவலராக உள்ள ராணுவ வீரனான அன்டோனியோவைத் திருமணம் செய்து கொள்கிறாள். அன்டோனியோவின் பின்புலம் எதுவும் அறியாமலே அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறாள். அவனும் அவளது நிகரற்ற அழகில் மயங்கி உடனே சம்மதிக்கிறான். அவர்களது திருமணம் எளிய முறையில் தேவாலயத்தில் நடக்கிறது.

புதுமணத் தம்பதிகளை ஒரு சிறிய படகு ஸ்ட்ரோம்போலிக்கு அழைத்துச் செல்கிறது அதுவே அவர்களின் புதிய வாழ்க்கையின் துவக்கம். அந்தப் படகு எங்கே செல்கிறது என்று கூடக் கரீனுக்குத் தெரியாது. அவர்கள் அன்டோனியாவின் சொந்த ஊரான ஸ்ட்ரோம்போலியில் போய் இறங்குகிறார்கள்.

இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள சிசிலி தீவில் ஸ்ட்ரோம்போலி என்ற எரிமலை அமைந்துள்ளது . எரிமலை  என்பது ஒரு அழகான மர்மம். அடிக்கடி வெடிக்கக் கூடிய அந்த எரிமலையின் ஆபத்திற்குப் பயந்து பெருமளவு மக்கள் ஊரைக்காலி செய்து வெளியேறி விட்டார்கள். ஆனால் அன்டோனியோ ஒரு மீனவன் என்பதால் தன் பூர்வீக வீட்டில் அங்கேயே வசிக்க முடிவு செய்கிறான்

அன்டோனியோவின் வீடு பரமாரிக்கபடாமல் தூசியும் குப்பையுமாக இருக்கிறது. வீட்டுப்பொருள்களை உறவினர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அந்தப் பொருட்களை மீட்டு தனது வீட்டைச் சுத்தம் செய்கிறான் அன்டோனியோ. கரீன் கனவு கண்ட திருமண வாழ்க்கை ஏமாற்றமாகவே துவங்குகிறது.

அன்டோனியோ நண்பர்களுடன் கடலில் மீன்பிடிக்கச் செல்கிறான். கரீனுக்குப் பகலில் பேச்சுத்துணைக்குக் கூட ஆள் இல்லை. உள்ளூர் பாதிரியார் ஒருவர் தான் அவளுடன் பேசுகிறார். சிறுவர்கள் தான் விளையாட்டு தோழர்கள்.

புதுமணத் தம்பதிகள் தேவாலயத்திற்குச் செல்லும் காட்சியில் அவள் எவ்வாறு முக்காடு அணிய வேண்டும் என்பதை அன்டோனியோ வலியுறுத்துகிறான். அவளுக்கு அந்த ஊரும் மனிதர்களும் பிடிக்கவில்லை.

செய்வதறியாமல் ஒரு நாள் தனது வீட்டைச் சுத்தம் செய்கிறாள். புதிய திரைச்சீலைகள் அணிவிக்கிறாள். ஆட்களை வைத்து வீட்டினை சீர்செய்கிறாள். சுவரில் ஓவியங்கள் வரைகிறாள். அவள் தான் பாதுகாத்து வந்த புனித உருவங்களை அப்புறப்படுத்திவிட்டாள் என்று அன்டோனியோ சண்டையிடுகிறான்.

அந்தத் தீவை விட்டு வேறு எங்காவது போய் வசிக்கலாம் என்று சொல்கிறாள் கரீன்.  ஆனால் அன்டோனியோ அதை ஏற்கவில்லை.

அவன் மீதான கோபத்தில் கரீன்  இளைஞன் ஒருவனுடன் நெருங்கிப் பழகுகிறாள். அந்த ஊரிலிருந்து தப்பிப்போகப் பணம் சேர்க்கிறாள்.

ஒரு நாள் புதிய உடைகள் தைப்பதற்காக கரீன் ஒரு பெண்ணின் வீட்டிற்குப் போகிறாள். அந்தப் பெண் ஒரு பாலியல் தொழிலாளி. அவள் வீட்டிற்குப் பெண்கள் யாரும் வருவதில்லை. கரீன் அங்கே செல்வதைக் கண்ட ஊரிலுள்ள ஆண்கள் அவளைத் தவறாகப் பேசுகிறார்கள். இதை அறிந்த அன்டோனியோ அவளைக் கோவித்துக் கொள்கிறான். கரீன் தன்னிஷ்டம் போலத் தான் இருப்பேன் என்று வாக்குவாதம் செய்கிறாள். ஆகவே அவளை வீட்டிற்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டுச் செல்கிறான் அன்டோனியோ.

ஒரு நாள் எரிமலை வெடிக்கிறது. ஊரில் வசிப்பவர்கள் உயிர் தப்பியோடுகிறார்கள். இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கரீனும் அந்தத் தீவிலிருந்து தப்பிப் போக முயல்கிறாள். முடிவு என்னவாகிறது என்பதே படத்தின் கதை

படம் முழுவதும் கரீனின் மனவோட்டத்தை அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். கேமிரா அவளது தனிமையை, தேடுதலை, குழப்பமான உணர்ச்சிகளை மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது. எரிமலை ஒரு அற்புதமான பின்னணியாகவும் உருவகமாகவும் செயல்படுகிறது.

திருமண வாழ்க்கையின் ஏமாற்றம் தான் எரிமலையாக வெடிக்கிறது. திருமணம் செய்து கொண்ட பிறகு ஆணும் பெண்ணும் தனித்தனி உலகில் தான் வாழுகிறார்கள். அவர்களின் இயல்பான விருப்பமும் ரசனையும் மாறிவிடுவதில்லை என்பதை ரோசோலினி எடுத்துக்காட்டுகிறார்

கரீனை சந்தோஷப்படுத்த அன்டோனியோ தன்னால் முடிந்த எல்லா விஷயங்களையும் செய்கிறான். சம்பாதிக்கும் பணம் முழுவதையும் அவளிடமே தந்துவிடுகிறான். ஆனால் அவளுக்கு அந்தத் தீவு வாழ்க்கை பிடிக்கவில்லை.. நகரவாசியாக வாழவே அவள் விரும்புகிறாள்.

சிறிய மாற்றங்களின் மூலம் தனது வாழ்க்கையைச் சந்தோஷப்படுத்திக் கொள்ள முடியாது என்பதை உணருகிறாள். அந்தக் குழப்பமான மனநிலையின் உச்சமாகவே எரிமலை வெடிக்கிறது.

எரிமலைக்குழம்பு வழியெங்கும் பெருகியோடுகிறது. பாறைகள் உருண்டு விழுகின்றன. தப்பிச்செல்லும் கரீன் புகையினுள் மாட்டிக் கொள்கிறாள். அவளுக்கு வாழ்க்கையின் உண்மையை எரிமலை வெடிப்பே புரிய வைக்கிறது.

கரீன் தனது இருபத்தியாறு வயதிற்குள் நிறைய விஷயங்களைச் சந்தித்திருக்கிறாள். அவளது கடந்தகாலம் தான் அவளது பிரச்சனையின் வேர்.

படத்தின் துவக்க காட்சியில் அவள் இத்தாலிய அகதி முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறாள். அர்ஜெண்டினாவுக்குச் செல்வதற்காக விசா வேண்டி விண்ணப்பிக்கிறாள். ஆனால் அது மறுக்கப்படுகிறது. ஆகவே அந்த முகாமிலிருந்து வெளியேற வேண்டும் என்ற வேட்கையே அவளைத் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைக்கிறது.

உடனடியாகக் கிடைக்கக்கூடிய மாற்று வழி போதும் என அப்போது கரீன் நினைக்கிறாள். ஆனால் ஸ்ட்ரோம்போலிக்கு வந்து இறங்கியவுடனே தான் தவறு செய்துவிட்டோம் என்பதை நன்றாக உணருகிறாள்.

கணவனோடு வாழும் அந்த வாழ்க்கையிலும் அவள் தன்னை ஒரு அகதியைப் போலவே கருதுகிறாள். அவளது கனவுகள், எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறவில்லை. இப்போது நான் விரும்புவது கொஞ்சம் மகிழ்ச்சியே என அடிக்கடி கரீன் சொல்கிறாள்.

அந்தத் தீவில் வசிப்பவர்களைப் போலத் தான் இருக்கக்கூடாது என்பதற்காகவே நாகரீகமான உடைகளை அணிந்து கொள்கிறாள். மீன்பிடிக்கச் சென்ற கணவனைத் தேடி கடலுக்குள் செல்கிறாள். அவளை உள்ளூர் பெண்களுக்குப் பிடிக்கவில்லை. அவளது வீட்டிற்கு வர மறுக்கிறார்கள்.

இந்தத் தீவும் ஒருவகையான முகாம் என்று கரீன் உணருகிறாள். திறந்தவெளி சிறைச்சாலையாக அந்தத் தீவு உள்ளது. அதிலிருந்து தன்னை விடுவிக்க யாராவது வரமாட்டார்களா என ஏங்குகிறாள்.

கரீனைப் பொறுத்தவரை இந்தத் திருமணம் என்பது தற்காலிக தீர்வு மட்டுமே. அதுவே முடிவில்லை. தன்னை ஆண்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆகவே அவர்களைத் தானும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள்

எப்போதெல்லாம் அவளுக்கு ஆதரவு தேவைப்படுகிறதோ அப்போது கலங்கரை விளக்கத்தைப் பராமரிப்பவனுடன் நெருக்கமாகப் பழகுகிறாள்.

சிறுவர்களுடன் இணைந்து கொண்டு அவள் ஆக்டோபஸ் ஒன்றை பிடிக்க முயற்சிக்கிறாள். அதற்கு அவளது காதலனாக உள்ள இளைஞன் உதவி செய்கிறான். ஆக்டோபஸ் போலவே தனிமை அவளை பிடித்துக் கொள்கிறது.

இங்க்ரிட் பெர்க்மென் கரீனாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். வீட்டினை புதிதாக உருமாற்றுவதிலும், உள்ளூர் பாதிரியை சலனப்படுத்திப் பார்ப்பதிலும். கலங்கரை விளக்கத்தின் காவலனுடன் பழகுவதிலும், அன்டோனியோவோடு சண்டையிடுவதிலும் அவளது உணர்ச்சிகள் அபாரமாக வெளிப்படுகின்றன.

ஸ்ட்ரோம்போலி இன்று ஒரு குறியீடாகவே மாறிவிட்டது. பிடிக்காத திருமணத்தால் ஒரு பெண் எவ்வாறு மனக்குழப்பங்கள் அடைவார் என்பதற்கு ஸ்ட்ராம்போலியே சிறந்த உதாரணம்.

இத்தாலிய நியோ ரியலிசப்படங்கள் உலக சினிமாவிற்குப் புதிய அழகியலை அறிமுகம் செய்து வைத்தன. அந்த அழகியலின் சிறந்த உதாரணங்களில் ஒன்றாகவே ஸ்ட்ரோம்போலியைச் சொல்வேன்

••

••

0Shares
0