எலுமிச்சை அரசியல்


இஸ்ரேலிய திரைப்படமான லெமன் ட்ரீ (Lemon Tree) படத்தை நேற்றிரவு பார்த்தேன். Eran Riklis   இயக்கிய இப்படம் 2008 ல் வெளியாகி இஸ்ரேலின் சிறந்த படமாக இரண்டு தேசிய விருதுகள் பெற்றிருக்கிறது.அரசியல் எலுமிச்சைப் பழங்களை கூட விட்டுவைப்பதில்லை என்பதே படத்தின் அடிச்சரடு. சமகால அரசியல் குறித்து இத்தனை ஆழமான மனபாதிப்பு தரக்கூடிய படம் எதையும் நாம் சமீபத்தில் கண்டதேயில்லை.


இவ்வளவிற்கும் படத்தில் நேரடியான அரசியல் விவாதங்கள்,வசனங்கள் எதுவும் கிடையாது. அரசதிகாரம் தனிநபர் வாழ்க்கையில் நுழைய விரும்பினால் எவ்வளவு பாதிப்பை உருவாக்க முடியும் என்பதற்கு இப்படம் சிறந்த எடுத்துக்காட்டு. இன்னொரு பக்கம் அரசியல் காரணங்களுக்காக அப்பாவி பொதுமக்களின் இயல்புலகம் எப்படி சூறையாடப்படுகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.


சல்மா  நாற்பது வயதைக்கடந்த பாலஸ்தீனப் பெண். விதவையான அவள் தனது எலுமிச்சை தோட்டத்துடன் இஸ்ரேலிய எல்லைப்புற நகரம் ஒன்றில் வசிக்கிறாள். மிகப்பெரிய எலுமிச்சை தோட்டம். திரட்சியான பழங்கள். அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் அவள் வாழ்ந்து வருகிறாள்.


ஒரு நாள் அவளது அருகாமை வீட்டிற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் புதிதாக குடிவருகிறார். அவரது மனைவி மிரா ஒரு யூதப்பெண். அவர்கள் குடியேறிய நாள் முதல் பாதுகாப்பு அமைச்சருக்கு தீவிரவாதிகளிடம் உயிர் ஆபத்திருக்கிறது என்ற காரணத்தை சொல்லி ராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து இறங்குகிறார்கள். அந்த வீட்டைச் சுற்றி காவல் வேலி போடுகிறார்கள். தடுப்பு முகாம் அமைக்கிறார்கள். காவல் கோபுரங்கள். உயர்ரக வயர்லெஸ் கருவிகள். கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படுகின்றன.


அது வரை தன் எலுமிச்சை தோட்டம் மட்டுமே உலகம் என்று நம்பிக் கொண்டிருந்த சல்மா இந்த எதிர்பாரத நெருக்கடியால் அவதிப்படுகிறாள். ஒரு நாள் ராணுவம் அவளது எலுமிச்சை தோட்டம் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி விடக்கூடும் என்பதால் அதை முழுமையாக வெட்டி எறிய போவதாகவும் அதற்கு உரிய ஈட்டு தொகையை பெற்றுக் கொள்ளும்படியாக நோட்டீஸ் அனுப்புகிறது.


தன்னுடைய தாத்தா காலத்திலிருந்து வளர்த்து வரப்பட்ட எலுமிச்சை மரங்களை வெட்ட விடமாட்டேன் என்று மறுக்கிறாள் சல்மா. பாதுகாப்புதுறை விடாப்பிடியாக அதை கைப்பற்ற முயற்சிக்கிறது.


முதலில் இதை பற்றி உள்ளுர் நிர்வாகத்திடம் புகார் கொடுக்கிறாள். அவர்களோ ராணுவத்தை மீறி எதையும் செய்ய இயலாது என்கிறார்கள். அடுத்து அவளது மகன், மகள், மருமகன் உதவியை நாடுகிறாள். அவர்களும் எலுமிச்சை மரத்திற்காக அரசாங்கத்தை எதிர்த்து கொள்வதா என்று கோபம் கொள்கிறார்கள்.உறவினர்கள் அவள் ஒரு பைத்தியம் என்று கேலி செய்கிறார்கள்.  பையன் அமெரிக்காவில் வசித்தபடியே அந்த மரங்களை கைவிட்டுவிட்டு அமெரிக்கா வந்துவிடு என்கிறான். சல்மா எலுமிச்சை மரங்களை காப்பாற்ற போராடுவது என்று முடிவு செய்கிறாள்


இதற்காக வழக்கறிஞர் ஒருவரை சந்திக்கிறாள். ஜியாத் தாவுத் என்ற அந்த வழக்கறிஞர் ரஷ்யாவில் படித்தவன். அவன் ஆரம்பத்தில் தயக்கம் காட்டுகிறான். சல்மாவின் விடாப்பிடியான வற்புறுத்தல் காரணமாக வழக்கை பதிவு செய்கிறான். நீதிவிசாரணை துவங்குகிறது.


இன்னொரு பக்கம் பாதுகாப்பு அமைச்சரின் மனைவி மிரா தன்னுடைய வருகையின் காரணமாகவே அடுத்த வீட்டுப் பெண் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறாள் என்பதை உணர துவங்குகிறாள். சல்மாவோடு ஸ்நேகமாக பேச விரும்புகிறாள். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதை தடுத்துவிடுகிறார்கள். பாதுகாப்புதுறை அமைச்சரோ தன் மீது அடுத்த வீட்டு பெண் வழக்கு தொடர்ந்திருக்கிறாள். அவளது தோட்டத்தை நிர்மூலம் செய்யாமல் விடமாட்டேன் என்று ஆத்திரப்படுகிறான். அது மிராவிற்கு ஆழ்ந்த வருத்தம் தருகிறது.


எலுமிச்சை மரங்களோ இந்த அரசியல் விவாகரம் எதுவும் அறியாமல் எப்போதும்  போல காற்றில் அசைந்தபடியே தன் இயல்பில் பழங்களை வாறி சொறிந்தபடி இருக்கிறது.


நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. அதில் சல்மா தோற்று போகிறாள். நீதிமன்றம் எலுமிச்சை தோட்டம் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி விட முடியும் என்று கருதி அதை சுற்றி பெரிய வேலி உருவாக்கி அதற்குள் சல்மா ஒரு போதும் நுழையக்கூடாது என்று உத்தரவிடுகிறது. சல்மா அந்த தீர்ப்பை ஏற்க மறுப்பதாக சொல்லி தான் உச்ச நீதிமன்றத்திற்கு போவதாக சொல்கிறாள். அது அவளது இஷ்டம் என்று நீதிபதி கடிந்து சொல்கிறார்


மறுநாளே அவளது எலுமிச்சை தோட்டத்தை சுற்றிலும் கம்பிவேலி போடப்படுகிறது. அவள் உள்ளே நுழைய முடியாதபடியே தடுப்பு அமைக்கிறார்கள். பெரிய இரும்பு கதவு போட்டு பூட்டுகிறார்கள். சல்மாவிற்கு அதை கண்டதும் உறக்கமே வருவதில்லை. அவள் எலுமிச்சை மரத்தை தனது பிள்ளைகளை போல அன்பாக வளர்த்திருக்கிறாள். பல வருசமாக அவளது அப்பாவின் நண்பரும் அவள் மீது அதிக அன்பு கொண்டவருமான ஒரு முதியவர் அவளுடன் எலுமிச்சை தோட்டத்தினை பராமரித்து வருகிறார். இருவரும் எலுமிச்சை மரங்களை ஏன் வெட்ட துடிக்கிறார்கள் என்று கவலைப்படுகிறார்கள்.


இரண்டு நாட்களின் பின்பாக எலுமிச்சை செடிகள் தண்ணீர் இன்றி வாடிப்போயிருப்தையும் எலுமிச்சை பழங்கள் தரையெங்கும் உதிர்ந்து கிடப்பதையும் சல்மா கவனிக்கிறாள். வேலியின் மீதேறி குதித்து மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாள். உடனே ராணுவ அதிகாரிகள் வந்து அவளை வெளியே துரத்துகிறார்கள். அவள் எலுமிச்சை மரங்கள் உயிருள்ளவை. அவற்றோடு நாம் பேசமுடியும். அதை இப்படி கொடுமைப்படுத்தாதீர்கள் என்று கத்துகிறாள்.


ராணுவ வீரர்கள் அதை கண்டு கொள்ளவேயில்லை. அவளை வெளியே இழுத்துக் கொண்டு போகிறார்கள். இதை மிரா கவனித்தபடியே இருக்கிறாள். தனக்காக அந்த பெண் பேசமறுக்கிறாளே என்று சல்மாவிற்கு மிகுந்த கோபமாக வருகிறது. அவளை முறைக்கிறாள்.


உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு போகிறது.  விசாரணை நடக்கிறது. அங்கே எலுமிச்சை மரங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் அந்த இடம் விளைச்சலுக்கு ஏற்றதில்லை என்றும் அரசு அதிகாரிகள் சாட்சி சொல்கிறார். அத்துடன்  எலுமிச்சை மரங்கள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ சல்மா உதவி செய்வதாக குற்றம் சாட்டுகிறார்கள். சல்மா சோர்ந்து போகிறாள்.


அரசாங்கத்துடன் அவளால் எதிர்த்து சண்டை போட முடியவில்லை. ஆனால் பின்வாங்க மறுக்கிறாள். கடைசி வரை போராடி பார்ப்பது என்று நம்பிக்கையில் இருக்கிறாள்


இதனிடையில் பாதுகாப்பு துறை அமைச்சர் வீட்டில் ஒரு விருந்து நடக்கிறது. அதில் பிரதமர் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு கெடுபிடி மிக அதிகமாக இருக்கிறது. விருந்திற்காக தேவைப்படும் எலுமிச்சை பழங்கள் வாங்க மறந்து போனதை கண்டு ராணுவ வீரர்கள் சல்மாவின் எலுமிச்சை தோட்டத்தில் புகுந்து பழங்களை பறிக்கிறார்கள்.


அதை கண்ட சல்மா தன் தோட்டத்தில் புகுந்து எலுமிச்சை பழங்களை திருடுவது வெட்கமாக இல்லையா என்று பாதுகாப்பு அமைச்சரை நோக்கி கூச்சலிடுகிறாள். வீரர்கள் பறித்த எலுமிச்சைபழங்களை பிடுங்கி போடுகிறாள். விருந்திற்கு வந்தவர்கள் அவளது கோபத்தை வேடிக்கை பார்க்கிறார்கள். ஆத்திரத்தில் சல்மா பாதுகாப்பு அமைச்சர் மீது எலுமிச்சைபழங்களை வீசுகிறாள்.


அமைச்சரின் மனைவி மிரா தன்னுடைய விருந்திற்கு தேவை என்று சில பழங்களை பறிக்கும்படி சொன்னது தவறு மன்னித்துவிடுங்கள் என்று சொல்கிறாள். சல்மாவிற்கு அவளது மன்னிப்பு முதல் வெற்றி போல அமைகிறது. அவளது நடையே மாறிவிடுகிறது. இந்த சம்பவம் பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பாகிறது.


பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவிற்கு செல்கிறார். அங்கே எலுமிச்சைமரங்களை வெட்ட போகிறீர்களா என்று அமைச்சரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது தான் ஒரு போதும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரியில்லை. ஆனால் எலுமிச்சை மரங்களை வெட்டும்படியாக பாதுகாப்பு துறை கேட்கிறது. கட்டயாம் அது நடந்தேறும் என்கிறார். நீதிமன்றம் அரசின் சார்பாகவே செயல்படுகிறது என்று சல்மா குற்றம் சாட்டுகிறாள்


இந்த சூழலில் வழக்கறிஞர் ஜியாத் சல்மாவின் மீது காதல் கொள்கிறான். அவளோடு சேர்ந்து வாழ விரும்புகிறான். அவள் மனைவி குழந்தைகளை பிரிந்து வாழும் ஜியாத் மீது இரக்கம் கொள்கிறாள். ஆனால் அவனோடு சேர்ந்து வாழ தயக்கம் காட்டுகிறாள். இந்த உறவை பற்றி அறிந்த உள்ளுர் பெரிய மனிதர்கள் அவள் ஒழுக்கம் கெட்டவள் என்று கட்டுகதை பரப்புகிறார்கள். வீடு தேடி வந்து மிரட்டி போகிறார்கள்.


ஒரு நாள் பாதுகாப்பு அமைச்சர் வீடு அருகே ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெறுகிறது. அந்த தீவிரவாதிகள் சல்மாவீட்டிற்குள் தான் ஒளிந்திருக்கிறார்கள் என்ற பொய் குற்றசாட்டின் கீழ் அவள் வீட்டை ராணுவம் தலைகீழாக்குகிறது. இந்த செய்தியை ஊடகங்கள் பெரிதாக்கி எலுமிச்சை மரங்களை வெட்ட இந்த ஒரு காரணம் போதும் என்கிறது. சல்மா இது தன்னை வெளியேற்றுவதற்கான அரசின் நாடகம் என்று கதறுகிறாள். அந்த குரல் எவருக்கும் கேட்கவேயில்லை.


ஒரேயொரு பெண் பத்திரிக்கையாளர் மட்டும் சல்மாவை நேரில் சந்தித்து என்ன நடந்தது என்பதை முழுமையாக அறிந்து கொள்கிறாள். அவள் பாதுகாப்பு அமைச்சரின் மனைவியையும் சந்திக்கிறாள்.  இருவரது மனதில் அந்த எலுமிச்சை தோட்டம் வெட்டப்படக்கூடாது என்ற ஒரே எண்ணம் இருப்பதை அறிகிறாள். அதை பற்றி தனது நாளிதழில் பெரிய கட்டுரை எழுதுகிறாள்.


மறுநாள் ஊடகங்கள் சல்மா வீட்டை படையெடுக்கின்றன. பல்வேறு அரசியல் அமைப்புகள் இதில் நுழைகின்றன. பிரச்சனையை பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் இடையில் நடக்கும் போராட்டத்தின் இன்னொரு முகமாக மாற்றுகின்றன. அவளுக்காக போராட்டம் செய்ய போவதாக சொல்கின்றன.


 பாதுகாப்பு அமைச்சர் தன் மனைவி தனக்கு எதிராக பேட்டி கொடுத்ததை தாங்க முடியாமல் அந்த பேட்டியை அவள் கொடுக்கவில்லை என்று மறுப்பு தெரிவிக்க கட்டாயப்படுத்துகிறார். மிரா மறுக்கிறாள். அது அவர்கள் குடும்பத்தில் பிளவை உருவாக்குகிறது. வேறு வழியின்றி அவள் அந்த பேட்டியை தான் தரவில்லை என்று எழுதி தருகிறாள். இப்போது ஊடகங்கள் சல்மாவை குற்றவாளியாக்குகின்றன. அவள் நடத்தை கெட்டவள். மோசமான பெண் என்று அவள் மீது சேற்றை வாறி இறைக்கின்றன.


ஒரு நாள் மிரா தானே நேரடியாக சல்மாவை ஒரு முறை சந்தித்து தன்னுடைய தவறு அதில் எதுவும் இல்லை என்று சொல்வதற்காக வேலி தாண்டி குதித்து அவள் வீட்டு கதவு அருகே வந்து நிற்கிறாள். அதற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அவளை மிரட்டி வீட்டிற்கு அழைத்து போய்விடுகிறார்கள். அவள் கூண்டில் அடைப்பட்ட பறவை போல வாழ்கிறாள்.


உச்ச நீதிமன்றம் முடிவில் தீர்ப்பளிக்கிறது. தாங்களும் இயற்கை மீது அக்கறை கொண்டவர்கள் என்பதால் எலுமிச்சை மரங்களை முழுமையாக வெட்டி அகற்றபட வேண்டியதில்லை. துôரை விட்டு மற்றவற்றை வெட்டிவிடுங்கள் என்று உத்தரவிடுகிறது. சல்மா மரங்கள் உயிருள்ளவை என்று ஏன் எவருக்குமே புரிவதில்லை என்று கத்துகிறாள். அந்த உயிரை விட அதிகாரத்தில் இருப்பவர்களின் உயிர் முக்கியமானது என்கிறது நீதிமன்றம். 


மறுநாள் எலுமிச்சை மரங்கள் வெட்டி வீழ்த்தபட்டு அந்த இடம் வெறுமையாகிறது. சல்மாவின் போராட்டம் தோல்வியடைகிறது. இந்த வழக்கில் ஏற்பட்ட புகழ் காரணமாக வழக்கறிஞர் உள்ளுர் பிரமுகர் ஒருவரின் மகளை திருமணம் செய்து கொண்டு அதை தனக்கான ஆதாயமாக மாற்றிக்கொண்டுவிடுகிறான்


எலுமிச்சை மரங்கள் இல்லாத அந்தவெறுமையை தாங்கமுடியாமல் வீட்டிலே அடைந்துகிடக்கிறாள் சல்மா. தங்களது வருகையின் காரணமாகவே இந்த எலுமிச்சை மரங்கள் வெட்டப்பட்டன என்பதை உணர்ந்த மிரா அந்த வீட்டிலிருந்து வெளியேறி செல்கிறாள். அது கணவனை பிரிந்து செல்கிறாள் என்பது போலவே உணர்த்தப்படுகிறது.


காலியான அந்த எலுமிச்சை தோட்டம் பெரிய மயானம் போல காட்சியளிக்கிறது. மிகப்பெரிய தடுப்பு சுவர் ஒன்று உருவாக்கபட்டிருக்கிறது. அதில் சல்மாவின் வீடும் இருப்பும் வெளித்தெரியாமல் ஒளிந்துகிடக்கிறது என்பதோடு படம் நிறைவுபெறுகிறது.


பாதுகாப்பு அமைச்சர் உங்களது அடுத்த வீட்டுக்காரர் ஆன ஏற்படும் விளைவுகள் அன்றாட வாழ்வை எப்படி புரட்டி போட்டுவிடும் என்பதையும், அதிகாரத்தின் முன்பு மனித ஆசைகள், நம்பிக்கைகள் அர்த்தமற்றவை என்பதையும் படம் தெளிவாக விளக்குகிறது


படம் முழுவதும் எலுமிச்சை மரங்களை காப்பாற்ற வேண்டி சல்மா கொள்ளும் போராட்டம் வலி நிரம்பியது. அவளது நிலையில் தான் பாதுகாப்பு அமைச்சரின் மனைவியும் இருக்கிறாள். அவளால் தன் கணவனை எதிர்த்து போராட முடியவில்லை. இரண்டு பெண்களும் ஒருவரோடு ஒருவர் நெருங்கி பழக சந்தர்ப்பம் ஏற்படவில்லை. ஆனால் ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்.


இன்னொரு பக்கம் இவ்வளவு போராட்டம் பிரச்சனைக்கு நடுவிலும் சல்மா அந்த வழக்கிறஞரின் மீது அன்பு செலுத்துகிறார்கள். அவனுக்காக வருத்தபடுகிறாள். அவனது அறையை சுத்தப்படுத்தி அவனுக்காக உணவு தயாரித்து தந்து அவனை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சிக்கிறாள்.


எலுமிச்சை பழங்கள் பொதுவில் மனஅமைதி தரக்கூடியவை என்று சொல்வார்கள். பெரிய மனிதர்களை சந்திக்க செல்லும்போது எலுமிச்சை பழங்களை கொண்டு செல்வதற்கான காரணம் அந்த எலுமிச்சை முகர்ந்து பார்த்தால் அவர்களது மனம் சாந்தம் கொண்டுவிடும் என்பதே. ஆனால் இங்கே எலுமிச்சை தோட்டமே அருகில் இருந்தும் ஒரு அரசியல்வாதியின் மனம் சாந்தம் கொள்ளவேயில்லை. அந்த பாதுகாப்பு அமைச்சர் படம் முழுவதும் இரட்டை வேஷம் போடும் மனிதனாகவே சித்தரிக்கபடுகிறார் இரண்டு கலாச்சாரங்களுக்கும் இடையிலான நுண்மையான கசப்புணர்வும். வெறுப்பும் படம் முழுவதும் அடையாளப்படுத்தபடுகிறது. இரண்டிலும் பெண்களே அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.


ஒரு பக்கம் மதம் மறுபக்கம் அரசு அதிகாரம் இரண்டுமே தனிநபர் வாழ்வில் தொடர்ந்த அத்துமீறலையும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்துகின்றன என்பதை படம் அடிக்கோடிட்டு சுட்டிகாட்டுகிறது. மறுபக்கம் ஒரு பெண் போராடும் போது எவ்வளவு இடர்பாடுகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்கிறாள். அவை எதற்கும் எந்த ஆதரவும் அக்கறையும் கிடைப்பதில்லை என்பதையும் சொல்கிறது.


ஒளிப்பதிவு படத்தொகுப்பும் அற்புதமானவை. குறிப்பாக சல்மா எலுமிச்சை தோட்டத்தை இழந்துவிடப்போகிறார் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவது போன்ற காட்சிக் கோணங்களும் நீதிமன்றம் எளிய மனிதர்களுக்கு ஒரு போதும் நெருக்கமானதில்லை என்பதை உணர்த்துவது போல மிக தூரமான காட்சியாக காட்டப்படுவதும் இரண்டு பெண்களையும் ஒரு எல்லை பிரித்து வைத்துகிறது என்பது போல பரஸ்பரம் கேமிரா நகர்வு இருப்பதும் மிகுந்த பாராட்டிற்குரியது.


நிசப்தமான காட்சிகள் வழியாக மனவேதனையை வெளிப்படுத்தும் அரிய தருணங்கள் இப்படத்திலிருக்கின்றன


இதே இயக்குனரின் முந்தைய படமான The Syrian Bride  பார்த்திருக்கிறேன். நேர்த்தியான படமது. சமகால இஸ்ரேலிய இயக்குனர்களில் எரான் ரிக்லிஸ் முக்கியமானவர். இந்த படம் உண்மை சம்பவம் ஒன்றிலிருந்து உருவாக்கபட்டிருக்கிறது. ஆன்டன் செகாவின் நாடகமான The Cherry Orchard யை பெரிதும் இப்படம் நினைவுபடுத்துகிறது. ஆனால் செகாவின் நாடகம் அரசியல் சார்ந்தது அல்ல.Lemon tree very pretty and the lemon flower is sweet


but the fruit of the poor lemon is impossible to eat.என்ற பாடல் படத்தில் பலமுறை பயன்படுத்தபட்டிருக்கிறது. 1960களில் வெளியான Peter, Paul and Mary யின் இப்பாடல் படத்தின் மையக்கதையை சொல்வதை போலவே இருக்கிறது. சல்மாவாக நடித்துள்ள Hiam Abbass  பெருமூச்சிடுவதில் கூட தனது வலியை வெளிப்படுத்துகிறாள். அவரது முகத்தில் உறைந்துள்ள அன்பு ஆச்சரியமளிக்ககூடியது.


எலுமிச்சை பழங்கள் பிரார்த்தனையோடு சம்பந்தப்பட்டவை. ஒருவகையில் இந்தபடமும் எளிய பிரார்த்தனையே.


 

0Shares
0