எல்லை நோக்கிய பயணம்

பறவைகள் வானில் தடயமில்லாமல் பறந்து செல்வது போல மனிதர்களும் சில வேளைகளில் பயணிப்பதுண்டு. அப்படியான ஒரு பயணத்தின் கதையைத் தான் Hit The Road திரைப்படம் விவரிக்கிறது.

ஈரானின் புகழ்பெற்ற இயக்குநர் ஜாபர் பனாஹி அரசிற்கு எதிராகச் செயல்பட்டார் என்று வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மகன் பனாஹ் பனாஹி டெஹ்ரானில் உள்ள திரைப்படப் பள்ளியில் பயின்றவர், குறும்படங்களை உருவாக்கி விருது பெற்றிருக்கிறார். தந்தை இயக்கிய திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இது பனாஹ் பனாஹி இயக்கியுள்ள முதல்படம்.

நெடுஞ்சாலையோரம் ஒரு SUV கார் நின்று கொண்டிருக்கிறது. அதில் கால் உடைந்து கட்டுப்போட்ட ஒருவர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரது ஏழு வயது மகன் கால்கட்டில் பியானோவின் படம் வரைந்து அதில் இசை எழுப்புகிறான். அழகான காட்சியோடு படம் துவங்குகிறது. சாலையில் கார்கள் கடந்தவண்ணம் உள்ளன. அவர்கள் எதற்காகக் காத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பையனின் அம்மா விளையாட்டுதனமிக்க மகனைக் கடிந்து கொள்கிறான். அவன் வைத்துள்ள செல்போனை பறித்துக் கொண்டு போய்ச் சிம் கார்டை அகற்றிவிட்டு யாரும் அறியாமல் மண்ணில் புதைத்து வைக்கிறாள். அவர்களின் மூத்த மகன், 20 வயதான ஃபரித் குழப்பமும் கவலையுமாகக் காரை ஒட்டுகிறான். ஜெஸ்ஸி என்ற நாயும் அவர்களுடன் காரிலிருக்கிறது. ஈரானின் வடக்கு எல்லையை நோக்கி அந்தக் குடும்பம் பயணிக்கிறது.

யார் அவர்கள், எங்கே போகிறார்கள், வழியில் ஏதாவது விபத்து நடந்து அதை மறைக்கிறார்களா என்று பார்வையாளர்கள் யோசிக்கும் போது கதை கொஞ்சம் கொஞ்சமாக விரிகிறது.

அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் உண்மையான நோக்கத்தை இறுதியில் தான் அறிந்து கொள்கிறோம். அதுவரை நான்கு வேறுபட்ட மனநிலை கொண்டவர்கள் ஒன்றாக மேற்கொள்ளும் பயணத்தில் ஏற்படும் சிக்கல்கள் பிரச்சனைகள் நம்மை சுவாரஸ்யமாகப் பின்தொடர வைக்கிறது.

பயணத்திற்கான உண்மையான காரணத்தை விடவும் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது நாம் அடையும் வேறுபட்ட உணர்ச்சிகளையும் குழப்பத்தையும் தடுமாற்றத்தையுமே படம் முதன்மையாக விவரிக்கிறது.

ஈரானில் கார் என்பது இரண்டாவது வீடு போன்றது. காரிலே உறங்குவது. காரில் நீண்ட தூரம் பயணிப்பது எங்கள் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சம் என்கிறார் பனாஹ் பனாஹி. இந்தப் படத்திலும் அந்த அனுபவமே வெளிப்படுத்தப்படுகிறது

படத்தில் வரும் சிறுவன் நம்மைக் கவர்ந்துவிடுகிறான். சூழலின் நெருக்கடி அவனது குறும்புத்தனத்தை மாற்றவில்லை. துருதுருவென அலைபாய்கிறான். நிறையக் கேள்விகள் கேட்கிறான். சில வேளைகளில் பெரியவர்களைப் பேசுகிறான். நடந்து கொள்கிறான்.

தனது பெற்றோர் எதையோ தன்னிடம் மறைக்கிறார்கள் என்பது அவனுக்குப் புரிகிறது. அந்த விஷயம் அவனது அண்ணனைப் பற்றியது என்பதைக் கூடத் தெரிந்து கொள்கிறான். ஆனால் பிரச்சனையை நினைத்து ஏன் இவ்வளவு பதற்றமாக நடந்து கொள்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. அவன் விளையாட்டுத் துணையின்றித் தவிக்கிறான். ஒரு கடையில் அவனாகச் செல்போனை விலை கேட்பது அழகான காட்சி.

உடைந்த காலுடன் வரும் தந்தை படம் முழுவதும் தனது உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு பயணத்தினைத் திட்டமிடுகிறார். ஆலோசனைகள் வழங்குகிறார். ஊன்றுகோலுடன் தடுமாறி நடந்து செல்கிறார். சாலையைக் கடக்க முற்பட்டு தவிக்கிறார். அவரது உடைந்த கால் ஒரு குறியீடு போலவே உணர்த்தப்படுகிறது.

குழப்பத்தில் தவிக்கும் பெரிய மகனை ஆறுதல் படுத்த அம்மா பாட்டுப் பாடுகிறாள். வேடிக்கை செய்கிறாள். ஈரானிய பாப் இசையினை ரசித்தபடியே செயற்கையான மகிழ்ச்சியின் வெளிப்படுத்துகிறாள் . அதைச் சகிக்க முடியாமல் ஃபரித் கோபம் கொள்கிறான். அவனது நலனிற்காகத் தாங்கள் எதையும் செய்வோம் என்கிறாள் அம்மா. தந்தையோ தாங்கள் ஒரு கரப்பான்பூச்சியைப் போல உணர்வதாகச் சொல்கிறார்.

அவர்கள் பயணம் செய்யும் நிலக்காட்சி மாறிக் கொண்டேயிருக்கிறது. பரந்த நிலவெளியில் வளைந்து வளைந்து செல்லும் மண்சாலை ஒன்றில் பைக்கில் முகத்தை மறைத்துக் கொண்ட ஒருவன் வரும் காட்சி அபாரமானது.

நெடுஞ்சாலையில் தங்களை யாராவது பின்தொடர்கிறார்களோ என்ற கவலை அவர்களை வாட்டுகிறது. சைக்கிள் பந்தயம் செல்லும் ஒருவன் காரின் மீது மோதி அடிபடுவதும் அவனைக் காரில் ஏற்றிக் கொண்டு அழைத்துக் கொண்டு போவது சிறப்பான காட்சி.

ஃபரித் தனக்காகத் தனது குடும்பத்தினர் எவ்வளவு தியாகம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறான். இவ்வளவு பிரச்சனைக்கும் தானே காரணம் என்று வருந்துகிறான்.

சிறுவன் களங்கமின்மையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் தோற்றம் தருகிறான்.

வடமேற்கு ஈரானின் வளைந்த நெடுஞ்சாலைகள், பாலைவனம் மற்றும் அழகிய பள்ளத்தாக்கின் விரிந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள விதம் அற்புதமானது. ஒளிப்பதிவாளர் அமீன் ஜாபரியின் ஒளிப்பதிவு மிகுந்த கவித்துவமானது. காருக்குள்ளே கேமிரா செயல்படும் விதம் மற்றும் சாலைக்காட்சிகள். தனித்த பாதையினைக் கேமிரா பின்தொடர்வது என மிகச்சிறப்பான ஒளிப்பதிவு.

சொல்லப்படாத உண்மை தான் கதையை முன்னகர்த்திச் செல்கிறது. ஒரு வீட்டின் சுவர்களுக்குள் நடந்திருக்க வேண்டிய கதையை இப்படிப் பயணத்தின் வழியே சொன்னது தான் இயக்குநரின் புதுமை. அதன் காரணமாகவே இப்படம் கொண்டாடப்படுகிறது.

0Shares
0