எழுதத் தெரிந்த புலி

குறுங்கதை மரபு உலகெங்கும் உள்ளது. நான் விரும்பி படிக்கும் போர்ஹே குறுங்கதைகள் எழுதுவதில் கில்லாடி. காப்கா, ஹென்ரிச் ப்யூல், யாசுனரி கவாபதா, மார்க்வெஸ், கால்வினோ என்று பலரும் சிறந்த குறுங்கதைகள் எழுதியிருக்கிறார்கள். அவ்வப்போது எழுதிய சில குறுங்கதைகளை ஒன்றாக தொகுத்து வெளியிடலாம் என்று நினைக்கிறேன். இக்கதை அதில் ஒன்று


**


எழுதத் தெரிந்த புலி


காட்டிலிருந்து பிடிபட்டு கொண்டுவரப்பட்ட புலி ஒன்று சர்க்கஸ் கூண்டிற்குள் அடைக்கபட்டிருந்தது. கூண்டில் அடைக்கப்பட்ட மற்ற மிருகங்களைப்போல இல்லாமல் பகலும் இரவும் அந்தப்புலி  நடந்து கொண்டேயிருந்தது.


ஏன் அப்படி கூண்டிற்குள் அலைகிறது என்று எவருக்கும் தெரியவில்லை.


ஒரு நாள் எங்கிருந்தோ ஊர்ந்து வந்த நத்தையொன்று புலிக்கூண்டின் மீது உட்கார்ந்தபடியே அதை பார்த்துக் கொண்டிருந்தது. புலி ஒய்வில்லாமல் வட்டமாக சுற்றிக் கொண்டிருப்பதைக்கண்டு எதற்காக இப்படி சுற்றிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டது. அதற்கு புலி பதில் சொல்லவில்லை.


உடனே நத்தை  கூண்டிற்குள் அடைபட்டு கிடப்பது பயமாக இருக்கிறதா என்று கேட்டது. அதற்கு புலி நான் சுற்றிக் கொண்டிருக்கவில்லை. எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றது.


நத்தைக்கு அது புரியவில்லை. எப்படி என்று கேட்டது. கூண்டிற்குள் அடைபட்ட பிறகு வாழ்க்கையில் எதுவும் மிச்சமிருப்பதில்லை.  பூஜ்யமாகி விடுகிறோம்.  இப்போது நான் வெறும் பூஜ்யம் என்பதை ஒவ்வொரு முறையும் எனக்கு நானே நினைவு படுத்திக் கொள்ள வேண்டியதிருக்கிறது.


இல்லாவிட்டால் இந்தக் கூண்டு பழகிப்போகும், அதன் உணவு பழகிப் போகும் வேடிக்கை பார்ப்பவர்கள் முகம் பழகிப்போகும். பிறகு நான் கூண்டுபுலியாக சுகமாக வாழப் பழகிவிடுவேன். அது கூடாது. அது ஒரு இழிவு.


இப்போது முடக்கபட்டு நான் அடையாளமற்று போயிருக்கிறேன் என்ற உண்மை மனதில் இருந்து கொண்டேயிருந்தால் மட்டுமே விடுதலையை பற்றிய நினைவு வளர்ந்து கொண்டேயிருக்கும், அதற்காகவே பகலும் இரவும்  வட்டமாக சுற்றி வந்தபடியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றபடி புலி நடக்க துவங்கியது.


அதைக்கேட்ட நத்தை சிரித்தபடியே சொன்னது.


நல்லவேளை  நத்தைகளை எவரும் பிடித்து கூண்டில் அடைப்பதில்லை


உடனே ஆத்திரமான புலி சொன்னது


நானாவது  பிடிபட்டு ஒடுங்கிகிடக்கிறேன். நீ பிறப்பிலிருந்தே கூட்டில் அடைபட்டு கிடக்கிறாய். கூண்டில் அடைக்கபடுவது தற்காலிகம், கூண்டிற்குள்ளே பிறந்து வளர்ந்து பயந்து சாவது அற்பமானது. நத்தைகள் வெறும் ஊமை. நான் அடைபட்டு கிடந்த போதும் என் குரல் அடைக்கபடவில்லை. கேள் என் ரௌத்திரத்தை என்றபடியே புலி உறுமியது.


அந்த குரலின் ஆழத்தில் அடர்ந்த கானகம் உக்கிரமாக நடனமாடிக் கொண்டிருந்தது.


நத்தை வெளியேறும் போது சொன்னது , பிடிபட்டதை விடவும் அதை நினைத்துக் கொண்டிருப்பது தீராதவலி. பிடிபட்டதிலிருந்து மௌனமாக இருப்பதால் தான் உனக்குள் கோபம் நிரம்பியிருக்கிறது. மௌனத்தை கைக்கொள்வது எளிதானதில்லை. பல நேரங்களில்  மௌனம் வாழவைக்கிறது. பல நேரம் நம்மை சாகடிக்கிறது.


புலியாக இருப்பதா, நத்தையாக இருப்பதா என்பதில் இல்லை பிரச்சனை, அதை பிடித்து அடைப்பவன், அழித்து ஒழிக்க நினைப்பவனின் அதிகாரத்தில் தானிருக்கிறது.


நீயும் நானும் ஏன் நண்பா கோபம் கொள்ளவேண்டும் என்றபடியே  மெதுவாக  கடந்து போக துவங்கியது  யோசிக்க தெரிந்த நத்தை.** 

0Shares
0