எழுதுவது ஏன்?
















இத்தாலிய யூத எழுத்தாளரான பிரைமோ லெவி (primo levi) நாஜிகளின் சித்ரவதைக்கு உள்ளான எழுத்தாளர். ஆஸ்விட்ஸ் முகாமில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அவர் தனது வேதியல் அறிவின் காரணமாக நாஜிமுகாமில் சாவிலிருந்து தப்பினார். வேதியல் பேராசிரியரான அவர் குறிப்பிடத்தக்க நாவல்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளில் மிகவும் பிரசித்திபெற்றது எழுதுவது ஏன் என்ற கேள்விக்கு லெவி தந்த பதில்.

எழுதுவதற்கு ஒன்பது காரணங்கள் இருக்ககூடும் என்று வரையறுக்கும் பிரைமோ லெவி அதைப்பற்றி விரிவாக விளக்குகிறார்



1) எழுதுவதற்கான அவசியத்தையும் உந்துதலையும் உணர்வதால்
தனக்குள்ளிருந்து தன்னை யாரோ எழுதும்படியாக வற்புறுத்துவது போல ஒருவன் அடையும் நிலையில் தான் இந்த வகை எழுத்து உருவாகிறது. மிதமிஞ்சிய வேதனையை. தனிமையை பகிர்ந்து கொள்வதற்கு யாருமற்ற நிலையில் கதையோ, கவிதையோ எழுதுவது உருவாகிறது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இந்த வகையில் தான் துவங்குகிறார்கள்.



2) தன்னையும் மற்றவர்களையும் மகிழ்விக்க.
மிகச்சிறந்த இலக்கியவாதிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. வாழ்வின் ஞானமும், சரளத்தன்மையும், அன்பையும் வெளிப்படுத்தவே அவர்கள் எழுதுகிறார்கள். தங்களது அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு சந்தோஷமாக முன்வருகிறார்கள். வாசிப்பவனும் எழுத்தாளனைப் போலவே அந்த அனுபவத்தை துய்த்து உணருகிறான். உதாரணத்திற்கு லு¡யி கரோல் எழுதிய ஆலிஸின் அற்புத உலகம் அவரை சந்தோஷப்படுத்தியதோடு நு¡ற்றாண்டுகளாக குழந்தைகளை, பெரியவர்களைச் சந்தோஷப்படுத்திவருகிறது. இந்த வகை எழுத்து எதையும் போதிப்பதோ, கட்டாயப்படுத்துவதோ இல்லை.



3) யாருக்காவது எதையாவது கற்றுக் கொடுக்க
விற்பன்னர்களும், அறிஞர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் வாசகனை தங்களை விடவும் அறிவில் குறைந்தவன் என்ற கருத்தில் தான் எழுதுகிறார்கள். அது சமையற்கலையாக இருந்தாலும் அணுவிஞ்ஞானமாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.
இந்த வகை எழுத்தில் எழுத்தாளனின் விருப்பம் நிறைவேறுவது அவனது அறிவின் திறன் அளவில் தான் சாத்தியமாகிறது. பலநேரங்களில் அதுவே படிக்கமுடியாமலும் செய்துவிடுகிறது. எளிமையும், ஆழ்ந்த அறிவும், விளக்கி சொல்லும் திறன்மிக்க மொழியும் ஒன்று சேர்ந்து எழுத்து உருவானால் அப்போது வாசகன் கற்றுக்கொள்வதோடு நல்ல கலைப்படைப்பை வாசித்த அனுபவத்தையும் பெறுகிறான்.



4) தன் கருத்துக்களை தெரியப்படுத்த
இந்த வகை எழுத்தாளர்கள் தாங்கள் தனித்துவமானவர்கள், ஞானம்பெற்றவர்கள், அதிக அறிவுதிறன் கொண்டவர்கள் என்று தங்களை நம்பக் கூடியவர்கள். உலகில் தங்களுக்கு மட்டுமே சில அரிய கருத்துகள் மனதில் உதயமாகியுள்ளதாக நம்புகிறவர்கள். தத்துவத்திலும் அரசியலிலும் விருப்பம் கொண்டவர்களே இந்தவகை எழுத்தில் அதிகம். இந்த வகை எழுத்தில் ஒரிஜினாலிடி மிக அரிதாகவேயிருக்கிறது.


5) வேதனையிலிருந்து விடுதலை அடைய
பிரச்சனைகளை நேரிடையாக சந்திக்க முடியாமலும், ஆறுதல் தேடுவதற்கு வழியற்றும், எழுதுவது ஒரு பாவமன்னிப்பு கோருதல் போல என நம்புகிறவர்களே இந்த வகை எழுத்தாளர்கள். ஆனால் எழுத்தாளனின் வேதனைகளை வாசகனின் மீது திணிப்பதும் பலநேரங்களில் தவறானதாகிவிடுகிறது. அது தானும் விடுதலை அடையமுடியாமல் வாசிப்பவனையும் நரகத்தில் தள்ளிவிடும்



6) புகழ்பெற
ஒரு பைத்தியக்காரன் தான் புகழ்பெறுவதற்கென்றே எழுத முயற்சிப்பான். காரணம் எழுதிப் புகழ்பெறுவது எளிதான காரியமில்லை. எல்லா எழுத்தாளர்களுக்கும் மனதில் தனக்குப் பெரிய புகழ் கிடைக்கவேண்டும் என்ற ஆசையிருக்கதான் செய்கிறது . ஆனால் அதற்காக யாராவது எழுதத் துவங்கினால் அந்த எழுத்து நிச்சயமற்ற பலனைத் தான் உருவாக்கும்



7) பணக்காரன் ஆக
சம்பாதிக்க, கடனை அடைக்க, வசதியாக வாழ என பலகாரணங்களுக்காக எழுதுபவர்கள் பலரிருக்கிறார்கள். உபயோகமான எந்த விஷயத்திற்கும் வழங்கபடுவது போல தான் எழுத்திற்கும் சன்மானம் வழங்கப்படுகிறது. ஆனால் பணத்துக்காக மட்டும் எழுதுவது ஆபத்தானது. அது மலிவான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்



8) உலகை செம்மைபடுத்த
இந்தவகை எழுத்தாளர்கள் உலகம் தங்களால் தான் காப்பாற்றப் படப் போகிறது என்று நம்புகிறவர்கள். மேலும் உலகைப் பற்றி தங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்று நம்புகிறவர்கள்.ஹிட்லர் மெயின்கேம்ப் எழுதியது கூட இந்த வகை ஈடுபாட்டில் உருவானது தான்.



9) பழக்கத்தின் காரணமாக.
இது தன்னைத் தானே காப்பிசெய்து கொள்வது போன்ற எழுத்து ரகம். தன்பெயரைத் தொடர்நது அச்சில் பார்ப்பது ஒரு நோக்கமாக இருக்க கூடும். மற்றவகையில் வெறுமனே பழக்கம் காரணமாக மட்டும் ஒருவர் தொடர்ந்து எழுதுவதை விடவும் மெளனமாக எதையும் எழுதாமலிருப்பது அவருக்கும் நல்லது, வாசகர்களுக்கும் நல்லது.


லெவியை வாசித்த போது தமிழில் இந்த ஒன்பது வகைக்கும் அப்பாலும் நிறைய பிரிவுகள் இருப்பதை உணரமுடிகிறது. எனக்குத் தெரிந்த சில காரணங்கள்



1) அடுத்தவர் எழுதுகிறாரே என்று எழுதுவது.
அநேகமாக எனக்கு தெரிந்த பலரும் சொன்ன முதல்காரணம் இது தான். அதைப் பொறாமை என்று மட்டும் முடிவுசெய்து கொண்டுவிட முடியாது. நு¡ற்றுக்கும் மேற்பட்ட நுட்பமான காரணங்களிருக்கின்றன. சில புத்தகங்களை வாசித்து முடித்தவுடன் எழுதுவது என்றால் இவ்வளவுதானா? இது என்ன மாயவித்தையா என தோன்றுவதும் காரணமாகயிருக்கலாம்


 


2) பெண்நண்பர்கள் பெறுவதற்கு
இருபது வயதில் அதிகமாக எழுதும் ஆசை வருவதற்கு இதுவே முக்கிய காரணம். ஆனால் இந்த வகை எழுத்தாளர்களை பெண்கள் ஏறிட்டுக் கூடப் பார்ப்பதில்லை என்பது நிதர்சனம்


 


3)அலுவலக ஊழியர்களிடம் தனித்து காட்ட, பாராட்டு பெற
தனது அலுவலகத்தில் உள்ள மேலதிகரிகள் பாராட்டு பெறுவதற்கும், தான் அறிவுஜீவி என்று தனித்து காட்டுவதற்கும் எழுதும் கூட்டம் நிறைய இருக்கிறது. அவர்கள் யாராவது ஒய்வு பெறும் நாளில் கவிதை எழுதி அதை பரிசாக தந்து அனுப்பிவிடக்கூடியவர்கள்.


 


4) பதவி உயர்விற்காக எழுதுவது.
பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள் மற்றும் துறைவல்லுனர்கள் தங்களது பதவி உயர்விற்காக எழுதுகிறார்கள். நு¡லகத்தில் பாதி இந்த வகை எழுத்துகள் தான்.கையில் பேனாவும் சிந்தனையுமாக புகைப்படம் எடுத்துக் கொள்வது அவர்களின் தனித்துவம்.


 


5) சினிமாவிற்குள் நுழைவதற்கு
சினிமாவிற்குள் நுழைவதற்கு விசிட்டிங் கார்டு போல பயன்படுவதற்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிடுதல் அல்லது சிறுகதைகள் எழுதுதல் அதிகம்.. சென்னையில், கர்சீப் வைத்திருப்பது போல பாக்கெட்டில் கவிதை நோட்டுவைத்திருப்பவர்களை கோடம்பாக்கத்தில் எங்கே வேண்டுமானாலும் பார்க்கலாம்







6) சென்னைக்கு வந்தபிறகு வாழ்வதற்கு என்ன செய்ய என்று எழுதுவது.
ஏதோவொரு காரணத்தால் சென்னைக்கு ஒடிவந்த பிறகு பிழைப்பிற்காக பத்திரிக்கைகளிலோ, பதிப்பகங்களுக்கோ எதையாவது எழுதி தருவது. முப்பது நாட்களில் நீச்சல் கற்றுத்தருவது, சைனீஸ் சமையற்கலை, ஆவியுலகம் ஒரு நேரடி அனுபவம் என ஏதாவது ஒரு தலைப்பில் 250 பக்க புத்தகம் எழுதி தருவதற்கு 175 ரூபாய் தருகிறார் தாராளமனதுடைய தமிழ்பதிப்பகத்தார்.



7) ஒய்வு பெற்ற பிறகு ஏதாவது செய்யவேண்டுமென என்று
ஒய்வு பெற்றபிறகு தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் அளவுகடந்த ஆர்வம் உருவாகி அவர்களுக்கு சேவை செய்வதற்காக திருக்குறள், சங்கஇலக்கியம் துவங்கி எதையாவது பற்றி எழுதுவது. அதை தானே தனது பேத்தி பேரன் பெயரில் பதிப்பகம் துவங்கி வெளியிட்டு தன்வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு தவறாமல் தருவது. சுதந்திர தினத்தன்று காலனியில் சொற்பொழிவு ஆற்றுவது இந்த ரகம்



8) பிரபலமானதை உறுதி செய்து கொள்வதற்கு எழுதுவது
தான் ஏதாவது ஒரு துறையில் பிரபலமாகிவிட்டால் அந்த பிரபலத்தின் காரணமாக மற்றவர்களுக்கு தனது அரிய சிந்தனைகளை, அறிவுதுளிகளை, கற்பனையை பகிர்ந்து கொள்வது. இந்த வியாதி அரசியல்வாதிகளுக்கு அதிகம். அது போலவே பிரபலமான வணிகநிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் பிரபல்யத்தை புத்தகம் எழுதிதான் வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். பிரபலமான ஒரு ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் எழுதிய திருக்குறள் உரை அங்கு வாங்கும் அல்வா மைசூர்பாகு மிக்சர் எது கால்கிலோ வாங்கினாலும் இலவசமாகத் தரப்படுகிறது. ஆன்மீகத்தில் நீங்கள் பிரபலமாகி விட்டால் புத்தகம் எழுதி அண்ணாநகரில் பிளாட்பிளாட்டாக வாங்கிப் போட்டுவிடலாம் என்று பஞ்சபட்சி ஜோதிடம் சொல்கிறது.



9) வீட்டில் பகலில் சும்மா இருப்பதால்
பெரும்பான்மை குடும்பதலைவிகள் எழுத்தாளராவது இந்த காரணத்தால் தான். கூடை பின்னுவது தோட்டம் போடுவது, அலங்கார பொருட்கள் செய்வது போலவே கவிதை செய்வது கதைகள் செய்வது என்று தங்கள் நேரத்தை பயனுள்ளதாக கழிக்கிறார்கள்.
10) எதற்கு என்றே தெரியாமலிருப்பது



தான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.

0Shares
0