எழுத்தாளனுடன் வாழுவது

Living with  a Writer என்ற கட்டுரைத் தொகுப்பினை வாசித்தேன். எழுத்தாளனுடன் வாழ்வது குறித்துப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மனைவி அல்லது கணவர் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

BBC TV series ‘Walking with Dinosaurs’ எனத் தலைப்பே பயமுறுத்துகிறதே என்று ஒரு கட்டுரையின் துவக்க வரியுள்ளது. நிஜம் தானே.

எழுத்தாளனுடன் சேர்ந்து வாழுவது என்பது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பது போலாகும். எப்போது ஊஞ்சல் சொர்க்கத்தை நோக்கிச் செல்லும் எப்போது நரகத்தை நோக்கித் திரும்பும் எனத் தெரியாது.

தாமஸ் ஹார்டியின் மனைவி எம்மா  தன் கணவரைப் பற்றி நினைவுகூறும் போது அவர் நாவல் எழுதிக் கொண்டிருக்கும் நாட்களில் தன் அறையை விட்டு வெளியே வரவே மாட்டார். நான் மட்டும் சிறிய அறையில் நாள் முழுவதும் தனித்திருக்க வேண்டும். அது கொடுமையான அனுபவம் என்று விவரிக்கிறார்.

வர்ஜீனியா வுல்பின் கணவரோ வர்ஜீனியா எப்போது தூங்குவார். எப்போது எழுதுவார் என்று தெரியாது. ஆகவே அவளது வாழ்க்கை முறைக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டேன். பல நேரங்களில் இருவரும் காலை எழுந்தவுடன் புத்தகம் வாசிக்கத் துவங்கிவிடுவோம். பல நாட்கள் வர்ஜீனியா ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டார். அவரது யோசனை முழுவதும் எழுத்தைப் பற்றியதாகவே இருக்கும். சில சமயம் மிகுந்த உணர்ச்சிவேகத்தில் தனியே அழுது கொண்டிருப்பார். அவரை ஆறுதல் சொல்லித் தேற்றுவதே எனது வேலை என்கிறார்.

எழுத்தாளனின் மனைவி. அல்லது கணவர் எவராகியிருப்பினும் எழுத்தைப் புரிந்து கொண்டு எழுத்தாளனின் தனிமையைப் புரிந்து கொண்டு வாழ்ந்தால் மட்டுமே துணையாக இருக்கமுடியும்.

நைப்பாலின் மனைவி குறித்து அவரது நண்பரான பால் தெரோ மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். நாற்பது ஆண்டுகள் வி.எஸ்.நைப்பாலின் எழுத்து வாழ்க்கைக்கு எவ்வாறு உறுதுணையாக இருந்தார் என்பதை விவரித்திருக்கிறார்.

தஸ்தாயெவ்ஸ்கி தனது இரண்டாவது மனைவி அன்னா அவரது எழுத்திற்குப் பக்கபலமாக இருந்தார். அன்னா இல்லாமல் போயிருந்தால் .தஸ்தாயெவ்ஸ்கி இவ்வளவு எழுதியிருக்க முடியாது.

எழுத்தாளனுடன் வாழ்வதன் மகிழ்ச்சியையும் சிக்கல்களையும் தனித்தனிப் பகுதிகளாக விவரித்திருக்கிறார்கள். இந்த தொகுப்பில். 26 கட்டுரைகள் உள்ளன. இதில் ஐந்து கட்டுரைகள் தான் சுவாரஸ்யமானவை. மற்ற கட்டுரைகளில் தகவல்களே அதிகமுள்ளன.

••

0Shares
0