எழுத்தாளர்களின் உலகம்

 ‘எனதருமை டால்ஸ்டாய்வாசிப்பனுபவம்

முனைவர் ப. சரவணன், மதுரை

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்கள் முனைவர் சாமுவேல் சுதானந்தா அவர்களும் முனைவர் பிரபாகர் வேதமாணிக்கம் அவர்களும் வகுப்பறையில் ‘நாவல் இலக்கியம்’ பாடத்தை நடத்தினார்கள்.

அவர்கள் பிற ஆசிரியர்களைப் போலக் ‘கதைச்சுருக்கம்’ கூறுபவர்கள் அல்லர்; தம்மோடு மாணவர்களையும் இணைத்துக்கொண்டு, அந்த நாவலின் வழியாக அந்தப் படைபாளரின் படைப்பு மனத்தைப் பின்தொடர்பவர்கள். நாவலையும் சிறுகதையையும் பல கோணத்தில் புரிந்துகொள்ளவும் ஆராயவும் கற்றுக்கொடுத்தவர்கள். 

கி. ராஜநாராயணனையும் தி. ஜானகிராமனையும் த. ஜெயகாந்தனையும் புதுமைப்பித்தனையும் சுந்தர ராமசாமியையும் என்னால் அவர்களின் நுட்பமான வழிகாட்டுதல்களின் வழியாகவே அறிந்துகொள்ள முடிந்தது.

ஒரு நாவல் அல்லது ஒரு சிறுகதை “புரியவில்லை” என்று யாராவது பேராசிரியர் முனைவர் பிரபாகர் வேதமாணிக்கம் அவர்களிடம் கூறினால், உடனே அவர், “தமிழ் தெரியும் என்பதாலேயே ஒருவரால் தமிழில் எழுதப்படும் எல்லாவற்றையும் படித்துப் புரிந்துகொள்ள முடியாது” என்பார்.

அந்த வாக்கியம் எவ்வளவு தூரம் உண்மை என்பதை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள எனதருமை டால்ஸ்டாய் புத்தகத்தைப் படித்ததும் எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது.

தமிழ் மட்டுமல்ல, எந்த மொழியை அறிந்திருந்தாலும் ‘அந்த மொழியில் எழுதப்படும் அனைத்தையும் புரிந்துகொள்வது’ என்பது, இயலாத செயல்தான் போல. காரணம், ‘படைப்புமொழி’. அது, உலக அளவில் தனித்துவமானது. அதைப் படித்துப் புரிந்துகொள்ள கடுமையான பயிற்சி தேவை. குன்றாத ஆர்வமும் இடைவிடாத தேடலுமே நம்மைப் ‘படைப்புமொழி’யின் அருகில் கொண்டுசென்று நிறுத்தும்.

எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள எனதருமை டால்ஸ்டாய் என்ற இந்தப் புத்தகம் டால்ஸ்டாயைப் பற்றியது மட்டுமல்ல; டால்ஸ்டாயைப் பின்பற்றி எழுதத் தொடங்கிய உலக எழுத்தாளர்களைப் பற்றியது. அப்படியெனில், எதற்காக இந்தப் புத்தகத்துக்கு இந்தத் தலைப்பு? என்ற கேள்வி எழும்.

ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடியாக டால்ஸ்டாய் இருப்பதால், அவரைத் தொடர்ந்து எழுத வந்த ரஷ்ய எழுத்தாளர்கள் அனைவருக்கும் அவரே ஆதர்ஷனமாகிவிட்டார். ரஷ்யா மட்டுமல்ல உலகம் முழுக்கவுமே மனிதகுலத்தை நேசித்து, எளியோர் மீது இரக்கம் கொண்ட எழுத்து வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் அவரே ஆதர்ஷனம்.

இது ஒரு குருமரபுபோலத்தான். இந்தப் புத்தகம் உலக எழுத்தாளர்களைப் பற்றிப் பேசினாலும் டால்ஸ்டாயைத் தன் தலைப்பாகக் கொண்டதற்கு ஒரேயொரு காரணம், ‘குருவுக்கு அளிக்கும் எளிய காணிக்கை அது’ என்றுதான் நான் நினைக்கிறேன்.

எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தப் புத்தகத்தில், உலக எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளை உருவாக்கப் பின்புலமாக இருந்தவற்றைப் பற்றியே விரிவாகப் பேசியுள்ளார். ‘படைப்பு எழுந்த சூழல்’ – இதுதான் இந்தப் புத்தகத்தின் மையம். ஒரு படைப்பு எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதோ, அதைவிடப் பல மடங்கு சுவாரஸ்யமாகவே அந்தப் படைப்பு எழுந்த சூழலும் உள்ளது.   

ஓர் எழுத்தாளரின் படைப்புகளையும் அந்த எழுத்தாளரைப் பற்றிய தகவல்களை நம்மால் சேகரித்துப் படித்துவிட முடியும்தான். ஆனால், ஓர் எழுத்தாளர் ஒரு படைப்பினை உருவாக்கப் பின்புலமாக இருந்தது எது? அதை அவர் தன் அகத்தால் எப்படி உள்வாக்கி, புறத்தால் எவ்வாறு படைப்பாக உருமாற்றினார் என்பதைப் பற்றி எங்குத் தேடி நம்மால் கண்டடைய முடியும்?

‘ஓர் எழுத்தாளர் ஒரு படைப்பினை எந்தச் சூழ்நிலையில் எழுதினார்’ என்பது பற்றி ஓர் எழுத்தாளர் எழுதிய புத்தகம் இது. அந்த வகையில், எனதருமை டால்ஸ்டாய் என்ற இந்தப் புத்தகம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

டால்ஸ்டாய் ‘புத்துயிர்ப்பு’ என்ற நாவலை எழுதினார் என்பதை அனைவரும் அறிவோம். ‘அவர் எதற்காக அந்த நாவலை எழுதினார்?’ என்பதை எத்தனை பேர் அறிவோம்?. டுகோபார்ஸ் (DUKHOBORS) இன மக்கள் ஏன் டால்ஸ்டாயை இயேசு கிறிஸ்துவுக்கு இணையாக வைத்து வணங்குகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால்தான், அவர் எதற்காகப் ‘புத்துயிர்ப்பு’ என்ற நாவலை எழுதினார்?’ என்ற வினாவுக்குரிய விடையை நம்மால் அறிய முடியும்.

டால்ஸ்டாய் எவ்வாறு மகாத்மா காந்தியடிகளுக்கும் மகாகவி தாகூருக்கும் ஆதர்ஷனமானார்? டுகோபார்ஸ் இனக்குழு மக்களிடமிருந்த அகிம்சைக் கொள்கையும் அறவழிப்போராட்டமும் எவ்வாறு டால்ஸ்டாய் வழியாக மகாத்மா காந்தியடிகளுக்கு வந்தது? ‘காந்தியம்’ மரமெனில், அதன் வேர் ‘டுகோபார்ஸியம்’தான் என்பதை நாம் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் நமக்குப் பேருதவிபுரிகிறது.  

ஆன்டன் செகாவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது? ஓர் எழுத்தாளர் எவ்வாறு உலக எழுத்தாளராகிறார்? ஒரு நாவல் எவ்வாறு வாழ்க்கையை நமக்கு உணர்த்துகிறது? என்ற வினாக்களுக்கெல்லாம் இந்தப் புத்தகத்தில் தெளிவான விடைகள் இருக்கின்றன.

‘ஒரு நாவலை நாம் எவ்வாறு படிக்க வேண்டும்?’ என்ற வினாவுக்கு விடையாக எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்,

எல்லா நாவலினுள்ளும் சில திறப்புகளும் சில முடிச்சுகளும் இருக்கின்றன. நாவலின் கதையை மட்டும் தொடர்ந்து செல்லும் வாசகர் பலவேளைகளில் இந்தச் சாவித்துளையை அடையாளம் கண்டுகொள்ளாமலே கடந்து போய்விடுவான். அதனால் அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது. ஒரு நாவலின் நோக்கம் கதையைச் சொல்வது மாத்திரமில்லை. எழுத்தாளன் கதையின் வழியாக விவாதங்கள், சந்தேகங்கள், அனுமானங்கள், கேள்விகள், நம்பிக்கைகள், கண்டுபிடிப்புகள், ஆதங்கங்கள் எனப் பல்வேறு தளங்களை வெளிப்படுத்துகிறான். நாவல் ஒரு கூட்டு வடிவம். ஒரு சிம்பொனி இசையைப் போல அதற்குள் பல எழுச்சிகளும் தாழ்நிலைகளும் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தஸ்தாயெஸ்கி எழுதிய, ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் உள்ள ஒரு திறப்பினைப் பற்றி மிக விரிவாக விளக்கியுள்ளார். ‘ஒரு நாவலை எவ்வாறு வாசிக்க வேண்டும்?’ என்பதற்குச் சரியான சான்று இந்த விரிவான விளக்கம்.

இதுவரை நாம் மேற்கொண்டுவந்த ‘படைப்புவாசிப்புமுறை’யைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது இந்த விளக்கம். இனிமேல், ‘நமது ‘படைப்புவாசிப்புமுறை’ எத்தகைய முறையில் இருக்க வேண்டும்?’ என்பது பற்றியும் ‘ஒரு படைப்பினை நாம் எந்த வகையில் அணுக வேண்டும்?’ என்பது குறித்தும் ஒரு தெளிவினை இந்த விரிவான விளக்கம் நமக்கு அளிக்கிறது.   

எனதருமை டால்ஸ்டாய் என்ற இந்தப் புத்தகம் உலக இலக்கியம் பற்றி மட்டுமல்ல, இந்திய இலக்கியம் பற்றியும் தன்னுடைய பார்வையை முன்வைத்துள்ளார் எழுத்தாளர். மன்னர் மகேந்திர வர்மர் எழுதிய ‘மத்தவிலாச பிரகசம்’ பற்றியும் குர் அதுல் ஐன் ஹைதர் எழுதிய ‘அக்னிநதி’ குறித்தும் நிகோஸ் கசான்ஸ்சாகிஸ் எழுதிய ‘ஜோர்பா தி கிரேக்’ பற்றியும் விரிவாக இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விமர்சகர்கள், சக படைப்பாளர்கள் போன்றோரால் படைப்பில் உள்ள பரிமாணங்களுள் சிலவற்றை மட்டுமே வெளிப்படுத்த முடியும். ஒரு படைப்பின் பல்வேறு பரிமாணங்களை வாசகரே கண்டடைய வேண்டும். ஒரு வாசகர் குறிப்பிட்ட வயதில் படித்த ஒரு படைப்பினைப் பின்னாளில் படிக்கும்போது புதிய கண்டடைதல்களை அடைய முடியும் அல்லது அந்தப் படைப்பு பற்றித் தாம் முன்பு அடைந்திருந்த பரவசங்கள் அழியத் தொடங்கும். படிப்போரின் வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ப படைப்பு தன்னை உருமாற்றிக்கொண்டே இருக்கிறது. இந்த உண்மையைத் தன்னுடைய சுய அனுபவத்தின் வழியாகக் குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர்.

உலக எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரின் மனைவிமார்கள் பற்றிய ஒரு கட்டுரை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. நாமறிந்த கலைஞர்களின் மனைவிமார்கள் தம் கணவர்மார்களின் மீது கொண்ட வெறுப்புக்குப் பின்புலமாக இருந்திருக்கும் யதார்த்த வாழ்க்கைதந்த அழுத்தம் பற்றி எழுத்தாளர் விவரித்துள்ளார்.    

உலக இலக்கியத் தரத்தில் எழுதப்பட்ட தமிழ்ப் படைப்புகள், இந்திய மொழிப் படைப்புகள் வாசகரிடம் ஏன் வரவேற்பு பெறாமல் இருக்கின்றன என்பதற்கு முழுக்காரணம், ‘நுட்பமான வாசிப்புத்திறன் வாசகருக்கு இல்லாமையே’ என்பதுதான். அத்தகைய நுட்பமான வாசிப்புத் திறனை ஊட்டும் வகையில்தான் எழுத்தாளர் இந்த எனதருமை டால்ஸ்டாய் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் ஓர் இடத்தில், எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு வரையறையைக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வின் ஆதார விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறார்கள். ஆழ்ந்து விவாதிக்கிறார்கள். மனித மனத்தை ஊடுருவி ஆராய்ச்சி செய்கிறார்கள். கடவுள், மதம் குறித்து நிறைய கேள்விகளைக் கேட்டவர்கள் எழுத்தாளர்களே! அதிகாரத்திற்கு எதிராக அவர்களின் குரல் ஒலித்திருக்கிறது. எழுத்தாளர்கள் சமூகத்தின் மனசாட்சி போல இருந்திருக்கிறார்கள். எழுதிப் பணம் சேர்ப்பது அல்ல அவர்களது நோக்கம். மக்கள் வாழ்வை மேம்படுத்துவதே! தினசரி வாழ்வின் நெருக்கடி, துர்மரணம், ஏமாற்றம், பேராசை, நிர்க்கதி, புறக்கணிப்பு போன்றவற்றைப் பார்க்கும்போது வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்வி பிறக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலை ஆராய்வதுதான் எழுத்தாளரின் வேலை. மனித மனம் விசித்திரமானது. அதைப் புரிந்துகொள்வது எளிதல்ல. அதன் ரணங்களை, வலிகளை, நினைவுகளை எழுத்தாளர்கள் சரியாகப் புரிந்துகொள்கிறார்கள்.”

‘ஏன் படிக்க வேண்டும்?’, ‘ஏன் எழுத வேண்டும்’ என்ற வினாக்களுக்குரிய ஆத்மார்த்தமான விடையாகவே இது உள்ளது. நிச்சயமாக, ஒவ்வொரு வாசகரும் இளம் எழுத்தாளர்களும் தன் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டியது இது.

இந்தப் புத்தகத்தில் உள்ள சிறிதும் பெரிதுமாக 20 கட்டுரைகள் உள்ளன. இவற்றுள் சில இந்த எழுத்தாளர் மேடைகளில் ஆற்றிய உரைகள். அதனால், இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க எளிய தமிழ் நடையில்தான் எழுதப்பட்டுள்ளது. இளந்தலைமுறை வாசகர்களின் மனத்தில், ‘படைப்பிலக்கியங்களை எப்படி நுட்பமாக வாசிக்க வேண்டும்?’ என்பதனை விதைக்க, இந்தப் புத்தகம் பெரிதும் பயன்படும். 

0Shares
0