எழுத்தின் அடையாளம்.


 


 


 


 


 


 


கோவில்பட்டியிலிருந்து ஏழுகிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இடைசெவல் கிராமம். கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சிறிய கிராமம். கரிசல் பூமி. இந்தச் சிற்றூரில் பிறந்து, ஒன்றாக வளர்ந்து, இசைக்கற்று, தமிழ் இலக்கியத்தின் மீது விருப்பம் கொண்டு எழுத்தாளர்களாகி, இருவருமே சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும்.

இப்படி ஒரே கிராமத்தைச் சேர்ந்த, ஒன்றாக வளர்ந்த இரண்டு நண்பர்கள் வேறு எந்த மொழியிலும் சாகித்ய அகாதமி பெற்றிருப்பார்களா எனத்தெரியவில்லை. நிச்சயம் இருக்க முடியாது தான். நினைக்கையில் பெருமையாக உள்ளது.

பெரிய நகரங்களில் எத்தனையோ எழுத்தாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் குக்கிராமம் ஒன்றில் பிறந்து தாங்கள் வாழ்ந்து அறிந்தவற்றை எழுதிப் புகழ்பெற்ற இரண்டு முக்கிய ஆளுமைகள் இவர்கள் இருவர் மட்டுமே.

இவ்வளவு சிறப்பு மிக்க அந்தச் சிற்றூரைக் கடந்து போகின்ற எவருக்கும் அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. சாலையோரம் உள்ள உணவகங்கள் கூட எளிதாக அடையாளம் பட்டுவிடுகின்றன ஆனால் இரண்டு சாகித்ய அகாதமி பெற்ற எழுத்தாளர்களைக் கொண்ட கிராமம் அடையாளமற்றே உள்ளது.

ருஷ்யாவில் மாக்சிம் கார்க்கி வசித்த வீடு ம்யூசியமாகப் பாதுகாக்கபட்டு வருகிறது. கார்க்கி தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய வீட்டைப் பின்வாசலின் வழியாகவே மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கிறார். அப்படியொரு பழக்கம். அதனால் இன்றும் அவரது ம்யூசியம் பின்வாசல் வழியாகவே செயல்படுகிறது. எந்த அளவு ஒரு எழுத்தாளரரை சமூகம் மரியாதை செய்கிறது என்பதற்கு இது ஒரு அடையாளம்.

அதுபோலவே தஸ்தாயெவ்ஸ்கி குற்றமும் தண்டனை எழுதிய நாட்களில் வசித்த இடம் என்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே அடையாளப்பலகை வைக்கபட்டிருக்கிறது. அமெரிக்காவிலும் ஐரோப்பியநாடுகளிலும் இசை. இலக்கியம், கலை, தத்துவம் என்று துறை சார்ந்த ஆளுமைகள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்களது கையெழுத்து பிரதிகள் பாதுகாக்கபடுகின்றன. அவர்களது நினைவகங்களைத் தேடிச் சென்று மக்கள் பார்த்துவருகிறார்கள்.

உலகமெங்கும் ஏப்ரல் 23 தேதியை புத்தக தினமாக கொண்டாடுகிறார்கள். அதற்கு காரணம் அந்த நாள் ஷேக்ஸ்பியர் இறந்த நாள். அதன் நினைவாகவே புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. அது போன்ற நாளில் எழுத்தாளர்களை நினைவுகூறும் விதமாக அவர்கள் பிறந்த ஊர்களில் விழாக்கள் நடத்தலாம். புத்தக வாசிப்பு இயக்கம் உருவாக்கலாம்.நான் அறிந்தவரை தமிழ் எழுத்தாளர்களுக்கு முறையான, விரிவான வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் கிடையாது. ஜானகிராமனைப் பற்றி வான் உயரப் பேசும் நாம் அவரது வாழ்க்கை வரலாற்றை வாசிக்கத் தேடினால் கிடைப்பது நாற்பது பக்க குறிப்புகளும் , பயணக்கட்டுரைகளும் மட்டுமே.

தன் கதைகளின் வழியே ஜி.நாகராஜன் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால் அவரது பன்முகப்பட்ட ஆளுமையை, அதன் வீழ்ச்சியை விவரிக்கும் வாழ்க்கைச் சரித்திரம் எழுதப்படவேயில்லை. இப்படி மௌனி, சிங்காரம், ஆதவன், பிரமீள் என்று பல முக்கியப் படைப்பாளிகளுக்கு குறிப்புகளாக மட்டுமே வாழ்க்கை வரலாறு எஞ்சியிருக்கின்றது.

பாரதி, புதுமைபித்தன், போன்ற கலைஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் புத்தகமாக வந்திருந்த போதும் தற்போது கிடைத்துள்ள எல்லாத் தகவல்களையும் உள்ளடக்கிய முழுமையான வாழ்க்கை வரலாறு எழுதப்படவில்லை.

ஆங்கிலத்திலோ ஹெமிங்வே, பாக்னர், வால்ட்விட்மன், மார்க் ட்வையின் என்று புகழ்பெற்ற இலக்கியவாதிகளைக் குறித்து புதிது புதிதாக புத்தகங்கள் வெளிவந்தபடியே உள்ளன. மலையாளத்தில் அரசியல்வாதிகள் எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள் சிந்தனையாளர்கள் என்று துறைவாரியாக சுயசரிதை புத்தகங்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் வெளியான நளினி ஜமீலா என்ற பாலியல் தொழிலாளியின் சரித்திரம் இதற்கு ஒரு சாட்சி.

தமிழில் நான் வாசித்தவற்றில் நாமக்கல்ராமலிங்கம் பிள்ளை எழுதிய சுயசரிதம் முக்கியமானது. அதுபோலவே சுத்தானந்த பாரதியார். உ.வே.சா. எழுதியவை மிக முக்கியமானவை. சாகித்ய அகாதமி தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுக நூல் வரிசை என்று நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. அதில் சிலவற்றைத் தவிர மற்றவை வாசிக்க இயலாத தக்கையான மொழியில் எழுதப்பட்டவை. எந்த ஆண்டு என்ன எழுதினார் என்பதை மட்டுமே விவரிப்பவை .

எனக்கு விருப்பமான எழுத்தாளர்கள் பிறந்த, வசித்த, கதைகளில் குறிப்பிட்ட சில ஊர்களைத் தேடிச் சென்று பார்த்திருக்கிறேன். சில வேளைகளில் இந்தத் தேடுதல் அர்த்தமற்றதாகக் கூட இருக்க கூடும். சென்னையில் புதுமைபித்தன் வசித்த விடுதிகளைத் தேடி அலைந்திருக்கிறேன். மௌனி கதையில் வரும் யாழி எந்தக் கோவிலில் உள்ளது என்று சுற்றியிருக்கிறேன்.

வண்ணநிலவன் எழுதியதற்காகவே இடிந்தகரை மற்றும் மணப்பாடு தேவலாயத்தை சென்று பார்த்தேன். பிச்சமூர்த்தி வேலை செய்த ஸ்ரீரங்கம் ஆலய கோவில் ம்யூசியம் , புளியமரத்தின் கதையில் புளியமரமாக மாற்றப்பட்ட வேப்பமூடு ஜங்ஷன், மாதவன் எழுதிய திருவனந்தபுரத்தின் சாலைத்தெரு என்று புனைவுப்பிரதேசங்களைத் தேடி அலைந்திருக்கிறேன்.ஒரு முறை மோகமுள்ளில் வரும் தங்கம் வசித்த வீடு எதுவாக இருக்ககூடும் என்று கும்பகோணத்தில் உள்ள ஆற்றின் கரையோரம் உள்ள வீடுவீடாகத் தேடினோம்.
கும்பகோணத்தில் வசிக்கும் தமிழ்துறை தலைவர் மணி அய்யா அவர்கள் ஒரு வீட்டைக்காட்டி இந்த வீட்டின் அமைப்பு மோகமுள் நாவலில் விவரிக்கபட்டதைப் போன்று இருக்கிறது என்று சொன்னார். அருகில் சென்று பார்த்த போது நாவலில் வரும் வீடு போலவே இருந்தது. பின்வாசலில் பெருக்கெடுத்து ஒடும் காவேரி. மாடி அறை. ஜானகிராமனின் கதை கற்பனை என்ற போதும் அதன் ஊற்றுக்கண் எங்காவது இருக்காதா என்று தேடுவது சந்தோஷம் தருவதாக இருந்தது.

அன்று கும்பகோணத்தில் சுற்றியலைந்த போது தொண்டர் கடையை அறிமுகம் செய்து வைத்து இதைப்பற்றி ஜானகிராமன் எழுதியிருக்கிறார் என்றார். ஜானகிராமனின் கதையில் இடம்பெற்றதால் இன்றும் அக்கடை சிறப்பு அடையாளம் கொண்டிருப்பது வியப்பானதாக இருந்தது

போர்ஹே ஒரு கதை எழுதியிருப்பார். கூண்டில் அடைக்கப்பட்டு புலி ஒன்று தெருவில் கொண்டு வரப்படும். அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்த கவிஞர் தாந்தேவின் கண்களில் புலி தென்பட ஒரு நிமிசம் புலியின் கண்கள் அவரை உற்றுப் பார்க்கும். அவரும் புலியை ஆழ்ந்து நோக்கிபடியே இருப்பார். அவர் மனதில் புலியைப் பற்றிய கவிதை வரியொன்று பிறக்கும். புலி பிடிபட்டு கூண்டில் அடைக்கப்பட்டு வந்தது தாந்தேயின் கண்களில் பட்டு ஒரு கவிதையில் என்றென்றும் அழியாமல் நித்யமாக இருப்பதற்குத் தானோ என்று கதை முடியும்.

அது தான் எழுத்தின் வல்லமை. தன் எழுத்தால் தான் வாழும் உலகை. தன்னைச் சுற்றிய மனிதர்களை என்றென்றும் நித்யமானவர்களாக்குகிறான் எழுத்தாளன். அப்படி கு.அழகிரிசாமியும், கி.ராஜநாராயணனும் இலக்கியத்திற்கு அறிமுகம் செய்த மனிதர்கள் எத்தனையோ நூறுபேர்.

எனக்கு இந்த இருவரின் எழுத்துக்களும் ரொம்பவும் பிடிக்கும். குறிப்பாக கு.அழகிரிசாமியை இந்திய அளவில் அறியப்பட்ட பிரேம்சந்தை விட மிக முக்கியமான சிறுகதை ஆசிரியர் என்று சொல்வேன்.

சிறுகதை எழுத்தில் நுட்பமானவர் ஆன்டன் செகாவ். அவரது கதைகளில் தான் சிறுகதையின் கச்சிதமான வடிவமும், மொழியமைப்பும், ஒழுங்கும் கூடியிருக்கும். ருஷ்யச் சிறுகதைகளில் அவர் வடிவ ரீதியாக பல முன்முயற்சிகளை மேற்கொண்டார். அவரது சிறுகதைகளைப் போன்ற கச்சிதமும் மொழியைப் பயன்படுத்தும் விதமும், கதாபாத்திரங்களின் மனவோட்டங்களைச் சித்தரிக்கும் பாங்கும் கு.அழகிரிசாமியிடம் உண்டுகு.அழகிரிசாமி கதைகள் என்றொரு தொகுப்பை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருக்கிறது. கி. ராஜநாராயணன் தொகுத்தவை. அதில் அழகிரிசாமியின் முக்கியமான 25 கதைகள் உள்ளன. அழகிரிசாமியின் கதைகளில் வரும் பெண்களும் குழந்தைகளும் அபூர்வமானவர்கள். குழந்தைகளின் மனவுலகை நெருக்கமாகவும், உண்மையாகவும் சித்திரித்தவர் அழகிரிசாமி. குறிப்பாக ராஜா வந்திருக்கிறார். அன்பளிப்பு, குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் போன்ற கதைகள் இப்போதும் வாசிக்கும் போதும் பரவசம் தருவதாகவே உள்ளது.

அழகிரிசாமிக்கு இசையில் மிகுந்த ஈடுபாடு இருந்திருக்கிறது. அவரும் கிராவும் ஒன்றாக விளாத்திகுளம் சுவாமிகளிடம் இசை கற்றிருக்கிறார்கள். விளாத்திகுளம் சுவாமிகள் ஒரு இசைக்கடல். அவரைப்பற்றி கி.ரா எழுதிய நினைவுகள் சிறப்பானவை. அதனால் அழகிரிசாமி இசையின் நுட்பத்தை தனது கதைகளில் கொண்டு வர முயன்றிருக்கிறார். குறிப்பாக திரிவேணி சங்கமம் போன்ற கதைகள் அவரது இசை நுட்பத்திற்குச் சான்றானவை.

அழகிரிசாமி வேலைக்காக மலேசியா சென்று, அங்கே ஒரு தமிழ்பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகிரிசாமியின் விருப்பம் தமிழின் சங்கப் பாடல்கள் கம்பராமாயணம் என்று ஆழ்ந்து விரிந்திருந்தது. தமிழின் செவ்வியல் இலக்கியங்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் தனித்த அகப்பார்வைகள் கொண்டவை.
அழகிரிசாமியின் கதைகள் தமிழ் சிறுதைகளுக்கு புதியதொரு நிலவெளியை அறிமுகம் செய்து வைத்தன. குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன், கடம்பூர் சாலை, குறுமலை,வைப்பாறு என்று கரிசல்வெளியையும் அங்கு வாழும் மனிதர்களையும் விவரித்தது. அதே நேரம் புதுமைபித்தனைப் போல சென்னைபட்டணத்து வாழ்க்கையையும் விமர்சன பூர்வமாக விவரித்தன. ஒன்பது சிறுகதை தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். மிக வறுமையான குடும்பச் சூழலில் பிறந்து தனது கல்வியின் வழியாக மட்டுமே வாழ்வில் முன்னேறி, இசை, எழுத்து என்று தன்விருப்பத்தின் பாதையில் பயணம் செய்து எதிர்பாராத நோய்மையின் காரணமாக இளவயதிலே இறந்து போனவர் அழகிரிசாமி.

ஆனால் கி.ரா வசதியான வீட்டுப் பிள்ளை. சிறுவயதிலிருந்தே உடல்நலக்குறைபாடு கொண்டவர். காசநோயின் காரணமாக மிகுந்த சிரமம் கொண்டு காப்பகங்களில் தொடர்சிகிட்சைகள் மேற்கொண்டவர். நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியவன். ஆனால் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்து கொண்டு இருந்துவிட்டேன் என்று தன்னைப்பற்றிக் கூறிக் கொள்பவர். இசையில் ஆர்வம் கொண்டு முறையாகக் கற்றுக் கொண்டவர். கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்.


இவரது கோபல்ல கிராமம். கரிசல்காட்டு கடுதாசி, கதவு, பிஞ்சுகள், அந்தமான் நாயக்கர் போன்றவை முக்கியமான படைப்புகள். நாட்டுப்புறக் கதைகளைத் தேடித்தேடி சேகரித்து ஒன்று திரட்டியவர். அத்தோடு பலரும் உரக்க பேசத் தயங்கிய பாலியல் கதைகளைத் திரட்டி தொகுப்பு நூலாக வெளியிட்டிருக்கிறார். கரிசல் வட்டார வழக்குச்சொல் அகராதி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றச் சென்று அங்கேயே வசிக்க துவங்கிவிட்டார். கரிசல்கதைகள் என்ற வட்டார மொழிக்கதைகள் உருவாதற்கு கிராவின் முன்முயற்சிகள் மிக முக்கியமானவை.

கிராவின் வாழ்வையும் அவரது ஊரையும் ஆவணமாகப் பதிவு செய்து இடைசெவல் என்ற ஆவணப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. அழகிரிசாமியின் மகன் சாரங்கன் முக்கிய விளம்பர பட இயக்குனராக உள்ளார். அவர் தனது தந்தை குறித்து ஒரு ஆவணப்படம் செய்தால் சிறப்பாக இருக்ககூடும்.

இடைசெவலை அடையாளம் காட்டும் முன்முயற்சியில் அந்த ஊர் பஞ்சாயத்தோ, அல்லது ஏதோவொரு தன்னார்வ, இலக்கிய அமைப்போ நெடுஞ்சாலையோரம் ஒரு அடையாளப்பலகை அமைக்கலாம். அத்தோடு அந்த ஊரில் காப்பகம் ஒன்றை அமைத்து அதில் கு.அழகிரிசாமி மற்றும் கி.ராவின் படைப்புகள் அத்தனையும் ஒன்று சேர்த்துக் காட்சிக்கு வைப்பதோடு நிரந்தர புகைப்பட கண்காட்சி ஒன்றும் வைக்கபடுமாயின் அது அந்த ஊருக்கும் அவர்களுக்கும் செய்யும் மரியாதையாகும்.

0Shares
0