எழுத்தின் வலிமை

ஸ்டீபன் ஸ்வேக் (Stefan Zweig) ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் 1930 களில், அவர் உலகில் மிகவும் பரவலாக மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார். குறிப்பாகச் சீனாவில் அவரது புத்தகங்கள் மிகவும் விரும்பி படிக்கப்பட்டன. அவரது முக்கியப் படைப்புகள் யாவும் சீனமொழியில் வெளியாகியுள்ளன. சீனாவின் பெஸ்ட் செல்லராக ஸ்வேக் அறியப்பட்டார்.

எதனால் ஸ்டீபன் ஸ்வேக்கை சீனர்கள் இவ்வளவு ஆர்வமாகப் படித்தார்கள் என்பதை ஆராய்ந்து ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அது ஸ்வேக்கின் கதைகள் உளவியல் ரீதியாகக் கதாபாத்திரங்களின் செயல்களை ஆராய்கின்றன. அதிகாரத்திற்கு எதிரான குரலை ஸ்வேக் தொடர்ந்து தனது படைப்புகளில் வெளிப்படுத்துகிறார். கவித்துவமான விவரிப்பு. மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்கள் காரணமாகச் சீன மக்களால் விரும்பி வாசிக்கப்பட்டார் என்கிறது இக்கட்டுரை.

தமிழில் ஸ்வேக்கின்  ராஜ விளையாட்டு, யாரோ ஒருத்தியின் கடிதம் ஆகிய இரண்டு நாவல்கள் வெளியாகியுள்ளன. நானே அவற்றைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால் குறைவான வாசகர்களே அந்த நாவல்களைத் தேடி வாசித்திருக்கிறார்கள்.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வங்க நாவல்கள் விரும்பி வாசிக்கப்பட்ட அளவிற்கு வேறு இந்திய மொழி நாவல்கள் எதுவும் வாசிக்கப்படவில்லை. அது போலவே ரஷ்ய நாவல்களுக்குத் தமிழ் இலக்கிய உலகில் உள்ள இடம் பிரெஞ்சு இலக்கியத்திற்குக் கிடைக்கவில்லை.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்புகளில் சில ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை போதிய கவனம் பெறவில்லை. அது ஏன் என்று ஆராயப்படவுமில்லை.

90களில் லத்தீன் அமெரிக்க இலக்கியம் குறித்துத் தீவிரமான உரையாடல்கள் தமிழ்ச் சூழலில் நடைபெற்ற போதும் முக்கிய நாவல்களில் ஒரு சிலவே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. அவையும் போதிய கவனம் பெறவில்லை.கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் உலகம் முழுவதும் விரும்பி வாசிக்கப்பட்டது ஆனாலும் பிரான்சில் அதற்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாம் நிலையானதே. காரணம் பிரெஞ்சு மக்கள் மார்க்வெஸின் மாய யதார்த்த கதை சொல்லலை விரும்பவில்லை. அவர்கள் I NOVEL எனப்படும் சுயவரலாற்றுத் தன்மை கொண்ட நாவல்களையே அதிகம் விரும்புகிறார்கள் என்று இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்கள்.

துருக்கி எழுத்தாளர் அய்ஃபர் டுன்ஷ் தனது நேர்காணல் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்

“நீங்கள் ஆச்சரியப்படலாம் வெளிநாட்டில் எனது புத்தகங்கள் வெளியிடப்படுவதால் கிடைக்கும் அங்கீகாரத்தினை நான் உண்மையில் விரும்பவில்லை. நிச்சயமாகப் பிறமொழிகளில் புத்தகம் வருவது சந்தோஷமானதே. ஆனால் அது சர்வதேசச் சந்தையால் முன்னெடுக்கப்படும் செயல்பாடு. மேற்கத்திய வாசகர்கள் துருக்கியிலிருந்து வெளியாகும் படைப்புகளைச் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கீழை நாடுகள் குறித்து முன் தீர்மானத்துடன் இருக்கிறார்கள். அந்தக் கண்ணோட்டத்துடன் மட்டுமே இலக்கியப் படைப்புகளை அணுகுகிறார்கள். பதிப்பாளர்களும் அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் படைப்புகளையே பிறமொழிகளுக்குக் கொண்டு செல்கிறார்கள்

இது உண்மையில் துருக்கியைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமே ஆன பிரச்சனையில்லை, சர்வதேச எழுத்தாளராக அறியப்பட்ட பலரும் தங்கள் சொந்த இலக்கிய அம்சங்களை விட்டுக் கொடுக்கிறார்கள். சந்தைக்காகப் பல்வேறு வகைகளில் சமரசம் செய்து கொள்கிறார்கள், இதன் விளைவாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும் அனைத்து நாவல்களும் ஒன்று போலவே தோற்றமளிக்கின்றன

உண்மையில் சிறந்த இலக்கியம் என்பது வெறும் சந்தைப் பொருளாக இருக்க முடியாது. சந்தையால் முன்னெடுக்கப்படாமல் போவதால் நல்ல படைப்பிற்குப் பெரிய இழப்பு ஒன்றுமில்லை. எந்த மொழியில் எழுதப்பட்டதோ அங்கே அதன் முக்கியத்துவம் என்றைக்கும் இருக்கும்“ என்கிறார்.

0Shares
0