எழுத்திற்குத் திரும்புதல்

எழுத்தாளர்களின் வாழ்க்கை குறித்து எத்தனையோ ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன. அவை எழுத்தாளரின் பிறப்பு, வளர்ப்பு மற்றும் படைப்புகள் குறித்த விபரங்கள், நேர்காணல்கள் அடங்கியதாகவே இருக்கும். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு José and Pilar என்ற ஆவணப்படம் நோபல் பரிசு பெற்ற போர்த்துகீசிய எழுத்தாளரான ஹோசே ஸரமாகோவை நிழல் போலப் பின்தொடர்ந்து அவர் ஒரு நாவல் எழுதுவதற்கு எப்படித் தயார் ஆகிறார், அவரது தினசரி வாழ்க்கை எப்படியிருக்கிறது. அவரது காதல்மனைவி பிலாருடன் உள்ள அன்பும் காதலும் எவ்வாறு வெளிப்படுகிறது என அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது.

ஆவணப்படத்தைக் காணும் போது பெரும்புகழும் அங்கீகாரமும் பெறுவதன் மூலம் எழுத்தாளனும் பிம்பமாகிப் போகிறான். அப்படி பிம்பமாவதும் ஒரு எழுத்தாளனின் சுதந்திரமான வாழ்க்கைக்குச் சுமையே என்பது புலப்படுகிறது, எழுத்தாளனின் குடும்பம் இந்த பிம்பத்தை சமாளிப்பதற்காக எப்படித் தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

உரைகள், நேர்காணல்கள். விழாக்கள். விவாதங்கள். கருத்தரங்குகள் என அலைந்த போதும் எழுத்திற்குத் திரும்புவதே எழுத்தாளனின் பிரதான வேலை. அதுவே அவனது முழுமையான சந்தோஷம். தன்னுடைய வாழ்க்கை என்பது எழுதுவதற்காகவே உருவாக்கபட்டது என்றே ஸரமாகோ நினைக்கிறார். அது அவரது விருப்பம் மட்டுமில்லை. தீவிரமாக எழுத்தை நேசிக்கும் அத்தனை எழுத்தாளர்களின் விருப்பமும் அதுவே

இந்த ஆவணப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது ஆனால் விருது கிடைக்கவில்லை.

ஹோசே ஸரமாகோ தனது 23 வயதில் எழுதத் துவங்கினார். Land of sin என்ற அவரது முதல் நாவல் வெளியாகி அதிகம் கவனிப்பு பெறவில்லை. ஆகவே இலக்கியத்தை விட்டு விலகி சில ஆண்டுகாலம் மெக்கானிக்காகப் பணியாற்றினார். பத்திரிக்கையாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பணிகள் செய்தார். இலக்கியத்தை விட்டு பெரிதும் ஒதுங்கியே வாழ்ந்தார். அவரது 57ஆம் வயதில் முழுநேர எழுத்தாளராகிய பின்பே அவர் உலகப்புகழ் பெற்றார். 1998ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது நூல்கள் இருபது லட்சம் பிரதிகள் உள்நாட்டில் விற்றுச் சாதனைபடைத்திருக்கின்றன.

முற்றுபுள்ளியில்லாமல் நீண்டு செல்லும் வாக்கியங்களைக் கொண்டு கதைசொல்லும் இவரது எழுத்துமுறை வியப்பூட்டக்கூடியது. யார் யாரோடு உரையாடுகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியாத ஊடுபாவும் முறை, வியப்பூட்டும் சம்பவங்கள், மாய நிகழ்வுகள், கவித்துவமான விவரணைகள் என்று வாசகனை எழுத்தாளனுக்கு நிகராக வேலை செய்ய வைப்பவர் ஸரமாகோ,

வெறுமனே கதையை மட்டும் வாசித்து விட்டுச் சிலாகித்துப் போகின்றவர்களால் அவரைப் புரிந்து கொள்ள முடியாது, மார்க்வெஸைப் போலவே புதிய பாணி கதை சொல்லும் முறையில் ஸரமாகோ எழுதுகிறார்,

மாய யதார்த்த வகை நாவல்களாகக் கருதப்படும் இவரது நாவல்கள் அரசியல் நையாண்டி கொண்டவை. எழுத்தாளனின் பணி இலக்கியத்தைப் பற்றி மட்டும் பேசுவதில்லை. உலகைப் பற்றியும் பேச வேண்டியதே எனக்கூறும் ஸரமாகோ தன் நாவல்களில் அதிகாரத்திற்கு எதிரான குரலை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

தீவிர நாத்திகரான இவர் திருச்சபைக்கு எதிரான தனது விமர்சனங்களைக் கறாராக வைக்கிறார். அறிவியல்பூர்வமாகத் தான் பிரபஞ்சதை அணுகுவதாகக் கூறும் ஸரமாகோ சொர்க்கம், கடவுள் என்பதெல்லாம் புனைவுகளே அவற்றில் தனக்கு நம்பிக்கை என உறுதியாகக்கூறுகிறார். ஹோசே ஸரமாகோ கதாபாத்திரங்களுடன் கலந்து தானே கதையை முன்னெடுத்துப் போகிறவர். துல்லியமான விவரிப்பு அவரது பலம். .The Gospel According to Jesus Christ, All the Names, Balthasar and Blimund, The Cave, ‘The Gospel According to Jesus Christ’, Death at Intervals Blindness போன்றவை அவரது புகழ்பெற்ற நாவல்கள். இதில் Blindness திரைப்படமாக வெளியாகியுள்ளது

இயேசுவை விமர்சித்து எழுதினார் என்பதற்காக இவரது நாவலை ஜரோப்பிய இலக்கிய விருதுக்குப் போட்டியிட அனுமதி மறுத்த போர்ச்சுகீசிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அந்த நாட்டைவிட்டு வெளியேறி கனேரி தீவில் வசித்துவந்தார் ஸரமாகோ. 25 மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

ஸரமாகோ பற்றிய இந்த ஆவணப்படம் அவரது வீட்டில் துவங்குகிறது. அழகான வீடு. அதன் உறுதியான கதவுகளை மீறி காற்று குபுகுபுவென உட்புகுகிறது. அவரைச் சந்தித்த வரும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் தான் எந்த மொழியில் பேச வேண்டும் என்று கேட்கிறார். ஆளுக்கு ஒரு மொழியைச் சொல்கிறார்கள். போர்த்துகீசிய மொழி, ஸ்பானிஷ், பிரெஞ்சு என மாறி மாறி பேசுகிறார். ஆங்கிலம் தன்னால் சரிவரப் பேச முடியாது. ஆனால் வாசிக்க முடியும் என்கிறார். இந்தச் சந்திப்பில் அவர் இளைஞர்களிடம் காட்டும் வாஞ்சையும் அக்கறையும் மகிழ்ச்சியூட்டுகிறது.

நோபல் பரிசு பெற்றவர் என்பதால் உலகெங்குமிருந்து அவருக்குக் கடிதங்கள். அழைப்புகள். புத்தகங்கள். சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக அழைப்புகள் என வந்து கொண்டேயிருக்கின்றன. அவர்களின் கடிதங்கள் ஒரு டிரே நிறைய அடுக்கி வைக்கபட்டுள்ளன. பிலார் அதை வாசித்து முடித்து முக்கியமானவற்றை மட்டுமே ஸரமாகோ வாசிக்கத் தருகிறார்

ஒரு மாதத்தில் பத்து முதல் இருபது நிகழ்ச்சிகள். அத்தனையும் முக்கியமானவை. விமானத்தில் பறந்து காரில் பயணித்து என மாறி மாறி போய்க் கொண்டேயிருக்கிறார். பத்திரிக்கையாளர்களைக் கண்டதும் பதற்றமாகி விடுகிறார்

ஒரே மாதிரி கேள்வியை எவ்வளவு நாட்கள் கேட்டுக் கொண்டேயிருப்பீர்கள். ஒரே போலப் பதிலை எவ்வளவு நாட்களுக்கு நானும் சொல்லிக் கொண்டேயிருப்பது எனச் சலித்துக் கொள்கிறார். அத்துடன் எழுத்தாளனின் வேலை என்பது உலகிலுள்ள எல்லா விஷயங்களுக்கும் அபிப்ராயம் சொல்வதில்லை எனக் கோபத்துடன் மறுக்கவும் செய்கிறார்

முதுமையின் அயர்ச்சியும் சோர்வும் அவரை அமுக்குகின்றன. படிப்பறை மேஜையில் உட்கார்ந்தபடியே உறங்குகிறார். புத்தகக் கண்காட்சியில் உரையாற்ற விமானத்தில் போகிறார். விமானத்தில் ஒடுங்கி உட்கார்ந்தபடியே வானை வெறித்து பார்க்கிறார். புத்தக கண்காட்சி மேடையில் மார்க்வெஸ் உடன் இணைந்து பேசுகிறார். எல்லா இடங்களிலும் ஆரவாரமான வரவேற்பு.

வரிசையாக நின்று அவரிடம் ஆட்டோகிராப் வாங்குகிறார்கள். ஒரு பெண் அவரது காதருகே வந்து உங்களைக் காதலிக்கிறேன் என்கிறாள். நமுட்டு சிரிப்புடன் சரியெனத் தலையாட்டுகிறார் ஸரமாகோ

ஸரமாகோவின் பணிகளைத் திட்டமிடுவது பிலார். அவர் ஸரமாகோவின் இரண்டாவது மனைவி. முதல் மனைவி இலா இறந்த பிறகு பத்திரிக்கையாளரான பிலாரை திருமணம் செய்து கொண்டார். பிலார் சிறந்த மொழிபெயர்ப்பாளரும் கூட. அவரே ஸ்பானிய மொழியில் ஸரமாகோவை மொழிபெயர்ப்பு செய்கிறார். ஸரமாகோ எழுத எழுத கூடவே மொழிபெயர்ப்பு நடக்கிறது. இருவரும் இணைந்தே பணியாற்றுகிறார்கள்

முடிவில்லாத பயணம். புதிய புதிய மனிதர்கள். சந்திப்புகள். உணவு மேஜைகள். விடுதிகள். தன்னை அழுத்தும் பணிகளை வேண்டாம் என உதறிவிடாமல் இழுத்துக் கொண்டு செயலாற்றுகிறார் ஸரமாகோ. உடல் அவர் விரும்பியபடி இயங்க மறுக்கிறது. அவரது முகத்தில் அது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ஆனால் அவர் ஒய்வெடுக்க விரும்பவில்லை

தன் எழுத்துல வாழ்க்கை அறுபது வயதில் தான் துவங்கியது. அதன் முன்னால் வரை தன்னை உலகம் அறியாது. ஆகவே கிடைக்கும் ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாகக் கழிப்பேன் எனப் பிடிவாதமாக அவர் இலக்கிய நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறார். வாசகர்களைச் சந்திக்கிறார். இலக்கிய அமைப்புகளில் உரையாற்றுகிறார். தொலைக்காட்சி நேர்காணல்களில் கலந்து கொள்கிறார்.

அவரது கதையை மையமாக் கொண்ட குறும்படம், இசை நிகழ்ச்சி. சினிமா என அத்தனையிலும் உடனிருந்து உதவுகிறார். அந்த வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்

தனது சொந்த கிராமத்திற்கு ஒரு நூலகம் அமைத்துத் தந்திருக்கிறார் ஸரமாகோ. அவரது வீட்டிலே பல்லாயிரம் புத்தகங்கள் கொண்ட பெரிய நூலகமிருக்கிறது. ஸரமாகோ பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கி அதைப் பிலாரே நிர்வாகம் செய்ய வைக்கிறார்.

பிலாரின் மீது அவர் கொண்டுள்ள தீராக்காதல் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையாக உணர்த்தப்படுகிறது. பிலாரை விட ஸரமாகோ வயது அதிகம். ஆனாலும் இளம்காதலர்களைப் போல அவர்கள் கொஞ்சுவதும் முத்தமிட்டுக் கொள்வதும். ஒன்றாகப் பயணிப்பதும் உண்பதும் எனச் சந்தோஷத்தை பரவ விடுகிறார்கள்.

பெண்ணியச் சிந்தனைகள் கொண்டவர் பிலார். அரசு அதிகாரம் குறித்துக் கறாரான பார்வைகள் கொண்டவர். ஆகவே அவரும் பத்திரிக்கையாளர்களால் நேர்காணல் செய்யப்படுகிறார். பகிரங்கமாகத் தனது எண்ணங்களை வெளிப்படுத்துகிறார். இதற்கிடையில் ப்யூட்டி பார்லருக்கு போய் அழகாக ஒப்பனையும் செய்து கொள்கிறார்

ஸரமாகோ என்ற படைப்பாளி எழுத்திற்குத் திரும்புவதையே ஆனந்தமான விஷயமாகக் கருதுகிறார். எழுதப்போகிற புதிய நாவலுக்காக நிறையப் படிக்கிறார். ஆய்வு செய்கிறார். ஆவணங்களை வாசிக்கிறார். அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார். புத்தகங்களே தனது வாழ்க்கை எனக்கூறும் அவர் தினமும் இரண்டு முதல் ஐந்து பக்கம் வீதம் நாவலை எழுதுகிறார். பின்பு அதைக் கவனமாகத் திருத்துகிறார். மற்ற நேரங்களில் வாசிக்கிறார்

The Elephant’s Journey என்ற நாவல் உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த நாவலை எழுத வேண்டும் என்று கள ஆய்வில் ஈடுபடுகிறார் ஸரமாகோ.

1551 ஆம் ஆண்டில் போர்ச்சுகலின் மன்னரான மூன்றாம் ஜோவா ஆஸ்திரிய மன்னருக்கு திருமணப்பரிசாக யானை ஒன்றை அளிக்க முடிவு செய்து இந்தியாவிலிருந்து ஒரு யானையை வரவழைத்தார். சாலமன் அல்லது சுலைமான் என்ற யானையும் அதன் பாகனான சுப்ரோவும் லிஸ்பனிலிருந்து வியன்னாவிற்குச் சென்ற யானைப் பயணம் வரலாற்றில் முக்கியமானது. ஐரோப்பாவின் கிராமப்புற மக்கள் யானையை நேரில் கண்டதில்லை. யானையும் பனிபொழியும் சூழலில் வாழ்ந்திருக்கவில்லை. ஆகவே இந்தப் பயணம் அபூர்வமான ஒன்றாக விளங்கியது. கடவுளே யானை வடிவில் நடமாடுகிறார் என எளிய மக்கள் நம்பினார்கள்.

முடிவற்ற பாதையில் நடந்து நடந்து யானை சோர்ந்து போகிறது. ஆல்ப்ஸ் மலையைக் கடந்து அதன் குகைவழிகள் வழியாக யானை செல்கிறது. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அந்த யானையை விசித்திரமான விலங்காக மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். உண்மையில் யானை ஒரு குறியீடே.

யானையை முன்வைத்து ஸரமாகோ எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. விநாயகர் பற்றிய கதை இதில் வந்து போகிறது. அவ்வளவு நீண்ட பயணம் மேற்கொண்ட யானை  முடிவில் நோயுற்று இறந்து போகிறது. அதன் கால்களைத் துண்டித்துக் காட்சி சாலையில் வைக்கிறார்கள். அதுவே ஸரமாகோ நாவலை எழுதுவதற்கான தூண்டுகோலாக அமைகிறது

இந்த நாவலை எழுத திட்டமிட்டிருந்த நாட்களில் ஸரமாகோ நோயுறுகிறார். மருத்துவமனையில் தீவிர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கபடுகிறார். தன்னால் இந்த நாவலை எழுதி முடிக்கமுடியாமலே போய்விடுமோ எனப் பயப்படுகிறார். பிலாரும் அதை நினைத்து பயப்படுகிறார் அவர் நலமடையப் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அவரது காலியான இருக்கை. அறை காட்சியாக வந்து போகிறது. ஆறு மாத சிகிட்சைகளுக்குப் பிறகு நலமடைந்து வருகிறார்

நாவலை மீண்டும் எழுத துவங்குகிறார். கூடவே மொழிபெயர்ப்பு பணியும் நடக்கிறது. நாவலை முடித்த நாளில் தன் வாழ்க்கை மறுஉயிர்ப்பு கொண்டது இந்த நாவலை முடிப்பதற்காகவே என நினைக்கிறார். மனைவியோடு நாவலை முடித்த சந்தோஷத்தை கொண்டாடுகிறார்

அந்த நாவல் வெளியாகிறது. நல்ல வரவேற்பு கிடைக்கிறது. படத்தின் கடைசிக் காட்சியில் தான் இந்தியாவிற்குப் போக விரும்புவதாகச் சொல்லியபடியே. விமானநிலையத்தில் நடந்து போய்க் கொண்டேயிருக்கிறார் ஸரமாகோ. இந்தியாவிற்கு அவர் ஒருமுறை கூட வந்ததில்லை. ஆனால் இந்தியாவை மிகவும் நேசித்தார். இந்திய யானையினை உலக இலக்கியத்தின் அழியா சின்னமாக மாற்றிக்காட்டியவர் ஸரமாகோ.

ஸரமாகோ இயற்கை நாடி போய் ஒன்று கலக்க விரும்புகிறார். அடிக்கடி வீட்டின் அருகிலுள்ள மலையைப் பார்வையிடச் செல்கிறார். இசை கேட்கிறார். அதில் கரைந்து உணர்ச்சிவசப்பட்டு  போகிறார். ஸரமாகோவின் நோபல் பரிசு உரையை நான் அட்ரசம் இதழில் வெளியிட்டிருக்கிறேன். அற்புதமான உரை.

ஆவணப்படத்தை காணுவதன் வழியாக புகழ்பெற்ற எழுத்தாளனுடன் நாமும் கூடவே பயணிக்கிறோம். அவரது எண்ணங்களை அறிந்து கொள்கிறோம். மகளை நேசிக்கும் தந்தையாக, நிறைய நண்பர்களுடன் நட்பு கொண்டவராக, நித்ய காதலின் அடையாளச் சின்னமாக ஸரமாகோ உருமாறிக் கொண்டேயிருக்கிறார். அவரது எழுத்தைப் போலவே வாழ்க்கையும் தனித்துவமிக்கதாக இருக்கிறது

தன் எல்லாப் புத்தகங்களிலும் பிலாருக்கு தனது தீராத நன்றியைத் தெரிவிக்கிறார் ஸரமாகோ. அந்த வாக்கியங்கள் திரையில் மின்னுகின்றன. படத்தின் கடைசிப் பகுதியில் இடம் பெறும் உரையொன்றில் பிலார் தன்னைக் காக்கும் தேவதை. அவளால் தான் மரணத்திலிருந்து மீண்டிருக்கிறேன் என உணர்ச்சி பூர்வமாகக் கூறுகிறார். பிலார் கண்களைத் துடைத்தபடியே மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

இத்தாலியை சேர்ந்த டரியோ ஃபோவிற்கு நோபல் பரிசு கிடைத்த போது அவர் ஸரமாகோவினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பரிசை நான் அபகரித்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார். பின்பு ஸரமாகோவிற்கு நோபல் பரிசு கிடைத்த போது உங்கள் சபைக்கு நானும் வந்துவிட்டேன் என ஸரமாகோ சொல்லி சிரித்திருக்கிறார். தனது சமகாலப் படைப்பாளிகளுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார் ஸரமாகோ. கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிய இவர் தன் வாழ்நாள் முழுவதும் இடதுசாரி சிந்தனையாளராகவே வாழ்ந்தார்.

நான் இந்தியாவிற்குப் போக விரும்புகிறேன் என்ற ஸரமாகோவின் கடைசிக்குரலை கேட்கும் போது சிலிர்த்துப் போனேன். இதே எண்ணம் போர்ஹெஸிற்கும் இருந்தது. ஒருவகையில் போர்ஹெஸின் வாழ்கையும் ஸரமாகோவின் வாழ்க்கையும் ஒன்று போலவே இருக்கிறது. போர்ஹெஸிற்கும் ஜப்பானைச் சேர்ந்த மரியா கோடமா என்ற இளம்பெண்ணே உதவியாளராக வந்து உறுதுணையாக நின்று அவரைப் பராமரித்தார். தனது 86வது வயதில் அவரைப் போர்ஹெஸ் திருமணம் செய்து கொண்டார். மரியா கோடமாவே தற்போது போர்ஹெஸ் அறக்கட்டளையினை நிர்வாகம் செய்து வருகிறார்.

ஸரமாகோ நாவல் எழுதும் தருணங்களில் ஒவ்வொரு சிறு தகவலையும் தேடிச் சரிபார்க்கிறார். துல்லியமாக இடங்களை எழுதுகிறார். கவித்துவமான உரைநடையின் வழியாக வாசகனுக்கு ஞானத்தை வழங்குகிறார்

ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் பணம் பெயர் புகழ் எல்லாமும் கிடைத்துவிட்டது. இனி எதற்கு ஆசைப்படுகிறீர்கள் என கேட்கிறார் ஒரு பத்திரிக்கையாளர்.

காலம். எழுத நினைத்துள்ள விஷயங்களை எல்லாம் எழுதி முடிக்க காலம் அனுமதிக்க வேண்டும். எழுத்தாளனாகவே வாழ்க்கை தொடர வேண்டும். காலமும் வாழ்க்கையுமே தனது வேண்டுதல் என்கிறார் ஸரமாகோ.

ரத்தப்புற்று நோய் பாதித்து இறந்து போன ஸரமாகோ உலகெங்கும் தீவிர இலக்கிய வாசகர்களால் தொடர்நது கொண்டாடப்படுகிறார். அவரது இரண்டு நூல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. அதில் அறியப்படாத தீவின் கதை சிறந்த மொழியாக்கம். அதை செய்திருப்பவர் கவிஞர் ஆனந்த்.

ஒரு எழுத்தாளனின் காதலையும் எழுத்துலக வாழ்க்கையையும் நேர்த்தியாக எடுத்துச் சொன்ன விதத்தில் இந்த ஆவணப்படம் மிக முக்கியமானதாகிறது•

**

0Shares
0