எவரும் விரும்பாத கடிதம்

 “Wicked Little Letters,” மாறுபட்ட பிரிட்டிஷ் திரைப்படம். தியா ஷாராக் இயக்கிய புதிய நகைச்சுவை திரைப்படம்

துப்பறியும் கதை என்றும் சொல்லலாம். ஆனால் துப்பறியப்படும் விஷயமும் பின்புலமும் புதியது. சுவாரஸ்யமானது.

1920களில் கதை நடக்கிறது. லிட்டில்ஹாம்ப்டனில் உள்ள ஒரு வீட்டிற்குத் தபால் வருவதில் துவங்குகிறது. அந்தத் தபாலை பார்த்த மாத்திரம் வீட்டில் உள்ளவர்கள் அலறுகிறார்கள். காரணம் அது ஒரு மொட்டைக்கடிதம். அதுவும் ஆபாச வார்த்தைகளால் எழுதப்பட்ட கடிதம். அதைப் பிரித்துப் படிக்கவே சங்கடப்படுகிறார்கள்.

இப்படியான கடிதங்கள் தொடர்ந்து வருவதைத் தாங்க முடியாமல் எடித்தின் குடும்பம் காவல்துறையில் புகார் தருகிறார்கள். அவளது அப்பா தீவிரமான மதப்பற்றாளர். அம்மா கோபக்காரர். எடித்தையும் தீவிர மதநம்பிக்கை கொண்டவராக வளர்த்திருக்கிறார்கள். இளம்பெண்ணாக இருந்த போதும் அவளை ஒரு சிறுமியைப் போலவே தந்தை நடத்துகிறார்கள். கட்டுபாடுகளை விதிக்கிறார். பிறந்தநாள் விருந்து அதற்கு ஒரு உதாரணம்.

கடவுளுக்குப் பயந்து வாழும் தங்களைப் பற்றி இப்படி மோசமாக எழுதும் நபர் யாராக இருக்ககூடும் என அவர்கள் யோசிக்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண் ரோஸ் தான் இப்படி எழுதுகிறாள் என்று நினைத்து அவள் மீது போலீஸில் புகார் கொடுக்கிறார்கள்.

ரோஸ் ஐரீஷ் பெண். விளையாட்டுதனமானவள். போரில் கணவனை இழந்து தனியே வாழுகிறவள். தன் மகள் நான்சி மீது மிகுந்த அன்பு கொண்டவள். பக்கத்துவீட்டுக்காரர்களின் கட்டுபாடுகளைத் துச்சமென நினைப்பவள். சுதந்திரமான மனநிலை கொண்டவள்

ஆரம்ப நாட்களில் எடித் பக்கத்துவீட்டு ரோஸ் உடன் நட்பாகவே பழகுகிறாள். ஆனால் அவளது துடுக்கான பேச்சும் செயலும் எடித்திற்கு அச்சமூட்டுகின்றன. ஆகவே விலகிக் கொள்கிறாள். ரோஸ் பக்கத்துவீட்டுகார்களைப் பல்வேறுவிதமாக எரிச்சல்படுத்துகிறாள். ஆகவே ரோஸ் தான் மொட்டைகடிதம் எழுதியிருப்பாள் என எடித் சந்தேகப்படுகிறாள். அவளது தந்தை அதை உறுதியாக நம்புகிறார்.

ரோஸ் மீது காவல்துறையில் புகார் அளிக்கிறார்கள். காவல்துறை ரோஸை கைது செய்து சிறையில் அடைக்கிறது. ஆனாலும் மொட்டைக்கடிதம் வருவது நிற்கவில்லை. இப்போது அது போன்ற கடிதம் பலருக்கும் வரத்துவங்குகிறது. காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்துகிறது.

இதற்கிடையில் ரோஸ் ஒரு அப்பாவி என நினைக்கும் காவல்துறையைச் சேர்ந்த கிளாடிஸ் மோஸ் என்ற பெண் அதிகாரி அவளுக்கு உதவி செய்திட முன்வருகிறாள். நடந்தவற்றை அவள் விசாரிக்க ஆரம்பிக்கிறாள்.

மொட்டைகடிதம் எழுதுவது வேறு யாரோ என உணர்கிறாள். அவரைக் கண்டுபிடிக்க முயலுகிறாள். இந்த நிலையில் காவல்அதிகாரிக்கே வசைக் கடிதம் வந்து சேருகிறது. கடிதத்திலுள்ள கையெழுத்தை வைத்து அதை எழுதியவர் யார் எனத் தேடுகிறார்கள். முடிவில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள்.

வெளித்தோற்றத்தில் அமைதியாக, வெகுளியாகத் தோற்றம் தருபவர் மனதில் இது போல வசையும் வெறுப்பும் மறைந்திருக்கக் கூடும், அவர்கள் ரகசியமாகச் செயல்படுவார்கள் என்பதைக் கதை வெளிப்படுத்துகிறது.

ஒரு மொட்டைகடிதம் இங்கிலாந்து முழுவதையும் பரபரப்பாக்குகிறது. செய்தி தாட்கள் அந்தச் செய்தியை விற்பனைப் பொருளாக்கி பெரியதாக்குவதையும் படம் அழகாக விளக்குகிறது.

கிளாடிஸ் மோஸ் காவல்துறையில் பணியாற்றும் முதல் பெண் போலீஸ் அதிகாரி . உண்மையான கதாபாத்திரத்தின் சாயலில் உருவாக்கபட்டிருக்கிறார்.

ஒரு பெண்ணைக் காவல்துறை அதிகாரியாக ஏற்க மறுக்கிறார் எடித்தின் தந்தை. அவரது வெறுப்பும் ஏளனமும் அந்தக் காலகட்ட பொதுப்புத்தியின் வெளிப்படாகவே உள்ளது

1918-1920 காலப்பகுதியில் பிரிட்டிஷ் குடும்பத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் மற்றம் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகளைப் படம் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறது

ரோஸ் தனது சொந்தத் துயரங்களைக் கடந்து மகிழ்ச்சியாக வாழுகிறாள். சந்தோஷத்தைப் பரவவிடுகிறாள். ஆனால் எடித் கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்து தனது இயல்பை மறைத்துக் கொண்டு பிறரது சந்தோஷத்தை வெறுப்பவளாக மாறிவிடுகிறாள். குடும்ப வன்முறையின் அடையாளமே எடித். அவள் ரோஸைப் போல வாழ விரும்புகிறாள். ஆனால் அதற்கான தைரியமில்லை.

எடித்தின் தந்தை அந்தக்கால கட்ட பிரிட்டிஷ் தந்தையின் குறியீடு. அவர் அன்பை போதிக்கிறவராகவும் அடக்குமுறையை கையாளுகிறவராகவும் நடந்து கொள்கிறார்.

அன்றைய காவல்துறையின் செயல்பாடு, முதல் பெண் காவல்துறை அதிகாரி சந்திக்கும் அவமானங்கள். அவள் நடத்தப்படும் விதம் போன்றவற்றை உண்மையாக படம் சித்தரிக்கிறது.

ரோஸின் கடந்த காலம். அவளது கறுப்பினக்காதலன். அவளது மகள் ரோஸைப் புரிந்து கொள்வது, ரோஸிற்கு உதவிடும் பெண்கள், அவர்கள் வசிக்கும் வீதி, அன்றைய தபால்துறை என அக்கால உலகமும் அதன் தனித்துவமான மனிதர்களும் படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்

0Shares
0