எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதைப் பற்றி எத்தனையோ படங்களைப் பார்த்திருக்கிறேன். அவை சாகசப்பயணமாகவே தோன்றும். ஆனால் ‘மை எவரெஸ்ட்’ முற்றிலும் மாறுபட்ட படம். கார்ல் வூட்ஸ் இயக்கியுள்ள இப்படம் உண்மை நிகழ்வை மையமாகக் கொண்டது

இங்கிலாந்தைச் சேர்ந்த மாக்ஸ் ஸ்டெய்ன்டன் பர்ஃபிட் Cerebal Palsy யால் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வாழுகிறார்
ஸ்டெய்ன்டன் தனது நீண்ட காலக் கனவாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதைக் கொண்டிருக்கிறார். அவரது இந்தப் பயணத்தினை எப்படித் திட்டமிடுகிறார்கள். எவரெஸ்ட் நோக்கி எப்படிப் பயணம் மேற்கொள்கிறார்கள். என்பதை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்
தனது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மாக்ஸ் தொலைவிலிருந்து இமயமலையைக் காணும் காட்சி சிலிர்க்க வைக்கிறது.

குதிரை சவாரி செய்வதில் மாக்ஸிற்குள்ள விருப்பம் மற்றும் இரண்டு பேர் துணையின்றி நடக்க இயலாத சூழ்நிலையிலும் அவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் அவரது மனவலிமையைக் காட்டுகின்றன.
மாக்ஸ் தனது குழுவோடு எவரெஸ்ட் பேஸ் கேம் பாதையில் குதிரையில் பயணம் செய்கிறார். மாக்ஸின் உடல் கட்டுப்பாட்டினை இழந்துவிடுகிறது. மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஆனாலும் உறுதியான மனம் அவரைத் தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. தனது வலியைத் தாண்டி சவாலைத் தொடரவே முனைகிறார். ஆனால் பாதியில் பயணம் முடிந்துவிடுகிறது.

இங்கிலாந்து திரும்பிய பிறகு, யாருக்கு நிரூபணம் செய்வதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டோம் என்ற கேள்வியை மாக்ஸே படத்தின் இறுதியில் எழுப்புகிறார்.
மாக்ஸ் ஸ்டெய்ன்டனின் குடும்பம் காட்டும் அக்கறை. அவரது பயணத்திற்கான வழிகாட்டிகளின் அன்பு. இரண்டும் இணைந்து அவருக்கு வாழ்வின் உண்மையான அர்த்தத்தைப் புரிய வைக்கின்றன.