எஸ்.ராவுடன் விடுமுறைக்காலம்

ஜனக், ரியா, தருணிகா மூவரும் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர்கள்.சிறந்த நண்பர்கள். இந்த விடுமுறைக்காலத்தில் தினமும் புத்தகங்கள் படித்து வருகின்றனர்.கடந்த வாரம் எஸ்.ரா அவர்களின் புத்தகங்களை படித்து விமர்சனம் எழுதி உள்ளனர் என ரம்யா ரோஷன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அவருக்கு எனது நன்றி. ஜனக். ரியா, தருணிகா மூவருக்கும் என் அன்பும் நன்றியும். சிறப்பாக எழுதியிருப்பதற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

———————————————————-

பெயர் :ஜனக்

புத்தகம்: எலியின் பாஸ்வேர்டு

விமர்சனம்:

வணக்கம். என் பெயர் ஜனக் மணிகண்டன். நான் 7 ஆம் வகுப்பில் இருக்கிறேன். நான் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியை எனது நண்பர்களுடன் பார்வையிட்டேன், புத்தக கண்காட்சியில் இருந்து பல புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒரு எலி தன் இனத்தை காப்பாற்ற என்ன வெல்லாம் செய்கிறது என்ற ஒரு கதை புத்தகம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அக்கதை எனக்கு உணர்த்திய பாடம் கத்தியை விட புத்தி தான் மேலானது ஆயுதம் ஏந்தி சண்டை போடுவதை விட அறிவை வைத்து சண்டை செய்தல் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்று உணர்ந்தேன்.

தன் அறிவையையும் தன்னம்பிக்கையையும்.

பயன்படுத்தி தன் இனத்தை காப்பாற்றும் எலி நமக்கு கற்றுத்தரப்போகின்ற பாடத்தை இங்கு காண்போம்.

மனவலிமை ஒன்றே  வெற்றியைத் தரும். பாம்பின் பிடியில் எலிகள் மாட்டிக் கொண்டன. பாம்புகள் கதவுகளற்ற எலியின் வலைக்குள் நுழைந்து அதன் எலிக்குஞ்சுகளையும் தனக்கு உணவாக்கிக் கொள்வதே தனது பணி.இதனால் எலிகள் மிகவும் பாதிக்கப்பட்டன டிஜிட்டல் டோர்கள் அமைக்கப்பட்டன.விடாத முயற்சியால் நவீன டோரை செய்து பாம்புகளை உள்ளே வர முடியாமல் செய்து தன் இனத்தை காப்பாற்றியது.

—————————————————-

பெயர் : ரியா

புத்தகம் : பறந்து திரியும் ஆடு

விமர்சனம் :

எலியின் பாஸ்வேர்டு, மீசையில்லாத ஆப்பிள், நீல சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து போன்ற எஸ்.ரா அவர்களின் புத்தகங்கள் நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகவிமர்சனம் பறந்து திரியும் ஆடு என்ற புத்தகத்திற்கு….எனக்கு ஆடுகள்  என்றால் பிடிக்கும்.அதென்ன பறக்கும் ஆடுகள் என்று ஆச்சர்யமாக இருந்தது. அதனால் தான் இந்தப் புத்தகத்தை நான் தேர்ந்தெடுத்தேன். சரி கதைக்கு போகலாமா.

கதை:

யக்கர் என்ற ஆடு மேய்ப்பவரிடம் நாற்பது ஆடுகள் இருந்தது. பூமியில் இருந்த புல்வெளிகள் அழிந்து  போனதால் யக்கர் வானத்திற்கு பறந்து சென்று ஆடு மேய்க்க தொடங்கினார். ஒரு நாள் அங்கு சென்று திரும்பும்போது டுவிங் என்ற கண்ணு தெரியாத ஆட்டுக்குட்டி வானத்திலேயே தொலைந்து போனது. அங்கு ஒரு இரவு முழுவதும் இருக்கிறது. டுவிங் ஆட்டுக்குட்டி ஒரு நட்சத்திரம், வண்ணத்துப்பூச்சி, பாரை, வான்மரம், மஞ்சள் அருவி, வானவில், ஒரு மேகம் மற்றும்  ஒரு சூரியகாந்தி பூவை சந்திக்கிறது. டுவிங் எப்படி யக்கர் மற்றும் மற்ற ஆடுகளுடன் சேருகிறதோ அதைப்பற்றி தான் இந்த கதை.

ஆடுகளுக்கு இங்கு மேய இடம் இல்லாமல் இந்த கஷ்டத்தை கொடுத்தது யார்? இங்கே இருக்கும் புல்வெளிகள் மரங்கள் அழிய காரணம் என்ன? அதற்கு காரணம் சூழல் சீர்கேடு, மிதமிஞ்சிய வாகன பெருக்கம்,தொழிற்

சாலைகளின் சீர்கேடுகள் என்று எஸ். ரா அவர்கள்  இந்த புத்தகத்தில் குறிப்பிடுகிறார்கள். நாம் நிறைய மரங்கள் புல்வெளிகள் வளர்ப்போம்.வளர்த்தால் இங்கேயே ஆடுகள் மேயும், உலகத்தை அழகாக ஆக்கும்.

எஸ். ரா அவர்கள் எழுதி நான் படிக்கும் நாலாவது புத்தகம் இது. அவர் எழுதிய புத்தகங்களில் எனக்கு பிடித்த புத்தகம் இதுதான். அடுத்ததாக நான் படிக்கப் போகும்  புத்தகம் – ஏழுதலை நகரம்.

————————————————————-

பெயர் : தருணிகா

புத்தகம் :கால் முளைத்த கதைகள்

விமர்சனம் :

வணக்கம் என் பெயர் தருணிகா.நான் ஏழாம் வகுப்பு படித்து வருகிறேன். நான் என்  அம்மாவுடனும் நண்பர்களுடனும் சேர்ந்து புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.அங்கு என் அம்மா கால் முளைத்த கதைகள் என்று ஒரு புத்தகத்தை வாங்கிக் கொடுத்தார்கள். இதை எழுதியவர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.

Summer vacation இல் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.இயற்கை எப்படி தோன்றியது என்பதை பற்றிய கதைகளின் தொகுப்பு இந்த புத்தகத்தில் உள்ளது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நாட்டிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது..இவை எல்லாமே மிகவும் interesting ஆக இருக்கிறது. மொத்தம் 80 கதைகள் இருக்கின்றன. எல்லா கதைகளுமே சின்ன சின்ன கதைகள் தான். one or two paragraphs தான் இருக்கிறது. அதனால் படிப்பதற்கு easy ஆக இருக்கிறது.

இதில் எனக்குப் பிடித்த கதைகள்

 மனிதர்கள் எப்படி தோன்றினார்கள்?  வண்ணத்துப்பூச்சி ஏன் பூக்களை சுற்றுகின்றது?

ஒட்டகம் ஏன் கூன் விழுந்து காணப்படுகிறது?

நிலா என் வானில் தனியாக இருக்கிறது?

மழை எப்படி உருவானது?

உலகம் எப்படி உண்டானது?

இப்படி பல   கேள்விகள் அதற்கு பதிலாக சொல்லப்பட்ட கதைகள் மிகவும் நன்றாகவும் சுவாரசியமாகவும் இருந்தன

***

0Shares
0