எஸ்.வி.ஆர் – சந்திப்பு.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கோத்தகிரி சென்று உடல் நலமற்றிருந்த தோழர் எஸ்.வி. ஆர் அவர்களைச் சந்தித்தேன். தாங்க முடியாத வலியுடன் போராடியபடி படுக்கையில் இருந்தார். அவரது கட்டிலின் அருகிலே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.

உரையாடல் துவங்கிய அரைமணி நேரத்தில் அவரிடம் உற்சாகம் ஏற்பட்டு எழுந்து அமர்ந்து கொண்டார். பேச்சும் எழுத்தும் தான் அவருக்கான மருந்து

எங்களுக்காக மதிய உணவு தயாரிக்கச் சொன்னார். நல்ல உணவளித்தார்கள். நான்கு மணி நேரம் அவருடன் இருந்தேன்.

வலியின் உச்சத்தில் வாழ்ந்து வந்த போதும் தொடர்ந்து படிப்பு. எழுத்து, இணையவழி உரைகள்  என இயங்கி வருவது அவரது நிகரற்ற மனவலிமையாகும்.

எஸ்.வி.ஆர் சர்வதேச இலக்கியங்களைத் தேடித்தேடி வாசிக்கக்கூடியவர். மேற்கத்திய இசையை விரும்பிக் கேட்பவர். சமகால அரசியல் மற்றும் சமூகப்பிரச்சனைகள் குறித்து ஆழ்ந்து அறிந்தவர். அவரது நினைவாற்றல் வியப்பூட்டக்கூடியது.

ஸரமாகோ: நாவல்களின் பயணம் என்ற அவரது புதிய புத்தகத்தில் ஸரமாகோவின் அத்தனை நாவல்களையும் ஆழ்ந்து படித்துச் சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார். அந்த நூல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று பாராட்டிச் சொன்னேன். மகிழ்ச்சியுடன்  ஏற்றுக் கொண்டு அதை எழுதுவதற்காக எவ்வளவு புத்தகங்களை வாசித்தார் என்பதையும் எப்படி அந்த கட்டுரைகளை எழுதினார் என்பதையும் விவரித்தார். 

ஸரமாகோ பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் பார்த்திருக்கிறேன். அதைப்பற்றியும் உரையாடினேன். அவரும் அந்த ஆவணப்படத்தைப் பார்த்திருக்கிறார். எஸ்.வி.ஆர் அளவிற்கு ஸரமாகோவை யாராவது தமிழ்நாட்டில் வாசித்திருப்பார்களா என்பது சந்தேகமே.

ரஷ்யப்புரட்சி இலக்கியச் சாட்சியம் புதிய பதிப்பு. சமகால ஐரோப்பிய நாவல்கள். அந்நியமாதல், ஆர்மீனிய வரலாறு. உலக சினிமா,  பெரியார் மற்றும் அம்பேத்கர் பற்றிய அவரது ஆய்வுகள். The Elephant’s Journey நாவல் எனப் பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். சார்த்தர் பற்றி அன்று விரிவாகப் பேசினார். இவ்வளவு ஞானமும் புரிதலும் கொண்ட ஒரு படைப்பாளியைக் காண்பது அரிது.

அவரிடமிருந்து தொடர்ந்து தீவிரமாக செயல்படுவதற்கான சக்தியினையும் புதிய கனவுகளுக்கான நம்பிக்கையினையும் பெற்றுக் கொண்டு திரும்பினேன்.

0Shares
0