ஐசக் பேபலின் மாப்பசான்

A well-thought-out story doesn’t need to resemble real life. Life itself tries with all its might to resemble a well-crafted story. – Isaac Babel

ஆன்டன் செகாவைப் போலவே சிறுகதைகளில் தனித்துவமும் மொழிநுட்பமும் கொண்ட படைப்பாளி ஐசக் பேபல். சிறந்த ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவரான ஐசக் பேபல் பிரெஞ்சு எழுத்தாளரான மாப்பசானின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.

Guy De Maupassant கதை 1932ல் வெளியானது. இக்கதையைத் தமிழில் செங்கதிர் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தப் பிரபஞ்சத்தின் பெயர் – கதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

ஐசக் பேபலின் அன்றைய மனநிலை இக்கதையில் வரும் மாப்பசானின் மனநிலையைப் போன்றிருந்திருக்கிறது. 1916 நடக்கும் இக்கதை எழுத்தின் மீது விருப்பம் கொண்ட, வருவாய் எதுவுமில்லாத இளைஞன் ஒருவன் விவரிப்பது போலவே துவங்குகிறது.

அவன் மொழியியல் அறிஞரான அலெக்ஸி கசான்ட்சேவ்வின் நண்பன். அலெக்ஸி அன்று ரஷ்யாவில் புகழ்பெற்றிருந்த பிளாஸ்கோ இபானிஸின் ஸ்பானிஷ் நாவல்களை மொழிபெயர்த்து வந்தார். கசான்ட்சேவ் ஸ்பெயினுக்கு ஒருமுறை கூடச் சென்றதில்லை, ஆனால் அவரது முழு உள்ளமும் ஸ்பெயின் மீதான அன்பால் நிரம்பி வழிந்தது – அவர் ஸ்பானிஷ் கோட்டைகள், பூங்காக்கள் மற்றும் நதிகள் அனைத்தையும் அறிந்திருந்தார்.

வழக்கறிஞர் பெண்டர்ஸ்கி பதிப்பகம் ஒன்றை நடத்துகிறார் அவரது மனைவி ரைசா மாப்பசானின் படைப்புகளை ரஷ்யனில் மொழிபெயர்க்க முயலுகிறார். ரைசாவிற்கு உதவி செய்வதற்காக இளைஞனைச் சிபாரிசு செய்கிறார் அலெக்ஸி.

இளைஞன் ரைசாவின் மோசமான மொழிபெயர்ப்பைத் திருத்தி சரி செய்கிறான். அவனது மொழி வளம் மற்றும் எழுத்துநடையைக் கண்டு வியக்கும் ரைசா நெருங்கிப் பழகுகிறாள்.

மாப்பசானை மொழிபெயர்க்கும் போது இளைஞன் அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிறான். அவரது வாழ்க்கை வரலாறு அதிர்ச்சி அளிக்கிறது. உலகையே தனது கதைகளால் மகிழ்ச்சிப்படுத்திய மாப்பசான் மனநலம் பாதிக்கப்பட்டு விலங்கினைப் போல மிக மோசமான நிலையில் மனநலக்காப்பகத்தில் இருந்த உண்மையை அறிந்து கொள்ளும் போது திடுக்கிட்டுப் போகிறான்.

பேபலின் இக்கதை மாப்பசானை சுற்றிப்பின்னப்பட்டதில்லை. அது இளைஞன் மற்றும் ரைசாவின் உறவு பற்றியதே. ஆனால் கதையின் இறுதியில் மாப்பசானின் வாழ்க்கை குறியீடு போலவே விவரிக்கப்படுகிறது

சிறுவயது முதலே நோயுற்றவர் மாப்பசான் என்பதும் அவர் பிரெஞ்சு எழுத்தாளர் பிளாபெரின் உறவினர் என்பதும், பார்வை இழப்பின் ஊடாகவும் தனது மீட்சிக்கான வழியாக அவர் கதைகளை எழுதினார் என்பதையும் அறிந்து கொள்ளும் போது இளைஞனைப் போலவே நாமும் திகைத்துப் போகிறோம்

பேபல் ஏன் இது போன்ற கனன்று எரியும் கலைஞனின் அகத்தைப் பற்றிய கதையை எழுதினார். காரணம் அவரது சொந்த வாழ்க்கைச் சூழல் நிராகரிப்பு மற்றும் அடக்குமுறைக்கு உள்ளாகியிருந்தது.

கதையில் வரும் இளைஞன் தனது அறைக்குத் திரும்பிய பிறகு கனவு காணத்துவங்குகிறது. அந்தக் கனவு பாலுறவிற்காக ஏங்கும் அவனது ஆழ்மனதின் ஆசை. அதுவும் பேபலின் சொந்தவாழ்க்கையின் சாட்சியம் போலவே எழுதப்பட்டிருக்கிறது.

ரைசா ஏன் மாப்பசான் கதைகளில் ஆர்வம் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உயர்குடி வாழ்க்கை. சலிப்பூட்டுகிறது. மாப்பசானின் கதாபாத்திரங்களின் விசித்திரம் மற்றும் மீறல்கள் அவளைக் கவருகிறது. ஒரு வகையில் உயர்குடி மக்களின் ஆன்மீக வறுமையைப் பற்றிப் பேசுகிறது இக்கதை.

தனது வாழ்நாளில் மாப்பசான் எழுதிக் குவித்திருக்கிறார். அவை 29 தொகுதிகளாக வெளியாகியுள்ளன. அந்தத் தொகுதிகளைச் சைரா தனது வீட்டில் வைத்திருக்கிறாள். பீட்டர்ஸ்பர்க் சூரியனின் உருகும் விரல்கள் பைண்ட் செய்யப்பட்ட மாப்பசான் தொகுதிகளின் முதுகெலும்புகளைத் தொட்டன என்று கவித்துவமாக எழுதுகிறார் பேபல்.

கதையின் துவக்கத்திலே மாப்பசான் தான் எனது வாழ்வின் ஒரே கனவு என்று ரைசா சொல்கிறாள். அவளது மொழிபெயர்ப்பில் கதை உயிரற்றுக் கிடக்கிறது. அதைச் சரிசெய்யும் போது மாப்பசான் எழுத்தின் அழகியலை இளைஞன் முழுவதுமாக உணருகிறான்.

அந்தக் கதையின் ஒரு இடத்தில் இளைஞன் குடித்துவிட்டு டால்ஸ்டாயை கேலி செய்கிறான். அது உண்மையிலே பேபல் வாழ்வில் நடந்த சம்பவம். அவர் நடனத்திற்குப் பிறகு கதையைப் படித்துவிட்டு இது போல டால்ஸ்டாயை கேலி செய்திருக்கிறார்.

மாப்பசான் பிறக்கும் போதே சிபிலிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது தாயிற்கு இருந்த நோயது. அந்தக் காலத்தில் சிபிலிஸ் மோசமான பால்வினை நோய். தலைவலியும் நரம்புக் கோளாறும் கொண்ட அவர் தீவிரமாக எழுதினார். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குப் பார்வைக் குறைவு ஏற்பட்டது. நலிவடையும் தனது உடலுக்கு எதிராக வெறித்தனமாகச் செயல்பட்டார். மனப்பிறழ்விற்கு ஆளாகி , தனது நாற்பதாவது வயதில் தொண்டையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ரத்தவெள்ளத்தில் கிடந்தவரைக் காப்பாற்றினார்கள். உயிர்பிழைத்த அவரை மனநல விடுதியில் சேர்த்தனர். அங்கு அவர் நான்கு கால்களிலும் தவழ்ந்து விலங்காக மாறிப்போனார். மீளமுடியாத மனப்பிறழ்வால் நாற்பத்திரண்டு வயதில் மாப்பசான் இறந்து போனார்.

பேபலின் சிறுகதை மூன்று தளங்கள் கொண்டிருக்கிறது. ஒன்று அந்தக் காலத்தில் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இருந்த வரவேற்பு. இதன் அடையாளமாகவே ஸ்பானிய நாவலை கசான்ட்சேவ் ஆசையாக மொழிபெயர்ப்பு செய்கிறார். சைரா மாப்பசானை மொழியாக்கம் செய்ய முயலுகிறார்.

,இரண்டாவது தளம் வேலையற்ற இளைஞன் பணக்கார பெண்ணிற்கு உதவி செய்வதன் வழியே தனது கனவுகளை நனவாக்கிக் கொள்வது. அது கதையில் அழகாக வெளிப்படுகிறது

மூன்றாவது மாப்பசானின் வாழ்வும் இந்த கதையில் நடைபெறும் நிகழ்வும் சந்திக்கும் புள்ளி. சைராவும் இளைஞனும் போதையில் ஒன்று சேருகிறார்கள். அந்த நிகழ்வே மாப்பசானின் கதை போல மாறுகிறது. கற்பனையிலிருந்து பிறக்கும் நிஜம் என்று அதை சொல்லலாம்.

பணக்கார வீட்டின் சூழல், அங்கே நடக்கும் இரவு உணவு. அதில் எழும் கேலிப்பேச்சுகள், விலை உயர்ந்த மதுவை பற்றி சைரா பெருமை பேசும் இடம் என பேபலின் எழுத்து மினுமினுக்கிறது.

15 மே 1939 இல், ஐசக் பேபல் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு மாஸ்கோவின் லுபியாங்கா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரது கையெழுத்துப் பிரதி கொண்ட கோப்புகள் , 11 குறிப்பேடுகள் மற்றும் ஏழு டயரிகளைப் பறிமுதல் செய்யப்பட்டன அதில் நிறையக் கதைகளும் இரண்டு நாடகங்கள், திரைப்பட ஸ்கிரிப்டுகள் இருந்தன “

பேபல் சோவியத்-எதிர்ப்புக் குற்றச்சாட்டில் கைதியாகி எட்டு மாத சிறைவாசத்தின் பின்பு அதே சிறைச்சாலையில் கொல்லப்பட்டார்.. “பயங்கரவாத சதியில் உறுப்பினராக இருந்ததற்காகவும், பிரெஞ்சு மற்றும் ஆஸ்திரிய அரசாங்கங்களுக்கு உளவு பார்த்ததற்காகவும்” தண்டிக்கப்பட்டார் என அரசு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

1894 இல் ஒடேசாவிலுள்ள யூத குடும்பத்தில் பிறந்த பேபல், புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் வளர்ந்தார், அந்த நாட்களில் “ரஷ்யன்” என்ற சொல் யூதர்களை விலக்கியது, மேலும் நாடு முழுவதும் யூதவெறுப்பு மேலோங்கியிருந்தது. யூதர்கள் அதிகம் வசித்த ஒடேசா பகுதியில் வளர்ந்த பேபல் இளவயதிலே இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் தனது முதல் கதையை 1913 இல் வெளியிட்டார், மாக்சிம் கார்க்கியால் பாராட்டு பெற்ற பேபல் பின்னாளில் அவரது நெருக்கமான நண்பர்களில் ஒருவராக இருந்தார்.

1920 இல் போர் செய்தியாளராகப் பணியாற்றினார். சோவியத்-போலந்து போரின் அனுபவங்களின் அடிப்படையில் பேபல் எழுதிய கதைகள் ரெட் கேவல்ரி எனத் தனித்தொகுப்பாக வெளியாகியுள்ளது

ஆங்கிலம், ஜெர்மன். பிரெஞ்சு உள்ளிட்ட எட்டு மொழிகள் அறிந்தவர் பேபல். ஆகவே அந்நாளில் வெளியான சர்வதேச படைப்புகள் யாவையும் விரும்பி வாசித்திருக்கிறார்.

 பேபலின் மொழிநடை கவித்துவமானது. தேர்ந்த ஓவியரைப் போலக் காட்சிகளைக் கண்முன்னே சித்தரிக்கக்கூடியவர். செகாவின் பாணியைச் சேர்ந்த கதைகளை அதிகம் எழுதியிருக்கிறார். ஆனால் செகாவிடம் காணமுடியாத இருண்மையைப் பேபலிடம் காணமுடிகிறது. கதை தன்னைத்தானே சொல்ல வேண்டும் என விரும்பியவர் பேபல் அவரது கதைகளில் குழந்தைகளின் சிறிய உலகம் பிரபஞ்சத்தின் பெரிய உணர்ச்சி நிலையுடன் இணைவு கொள்கிறது

மிக நுணுக்கமான விவரங்களை ஒன்றாக இணைப்பதன் மூலம் பேபல் தனது சொந்த அனுபவத்தினை ஆழமானதாக வெளிப்படுத்த முயலுகிறார், அவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், சொந்த யதார்த்தத்திற்கும் மனதில் உருவாகும் கற்பனைக்கும் இடையே ஊசலாடுகிறார்கள்.

அவரது விருப்பத்திற்குரிய படைப்பாளி கைய் டே மாப்பசான். அவரது சிறுகதைகளை ஆதர்சமாகக் கொண்டே தனது படைப்புகளைப் பேபல் எழுதிவந்தார். மனிதர்களின் இழிநிலை, ஊழல் மற்றும் யுத்த கால வன்முறையை மாப்பசான் போல எழுதியவரில்லை என்கிறார் பேபல்

பேபல் இரண்டே சிறுகதைத் தொகுப்புகளையும் சில நாடகங்களையும் திரைக்கதைகளையும் மட்டுமே தனது வாழ்நாளில் வெளியிட்டுள்ளார். அவரது வெளிவராத படைப்புகள் தற்போது தொகுக்கப்பட்டு முழுத்தொகுப்பாக வெளியாகியுள்ளன. ஒடேசாவில் பேபலிற்கு தற்போது நினைவுச்சின்னம் உருவாக்கியிருக்கிறார்கள். இன்றும் உலகெங்கும் அதிகம் வாசிக்கபடும் ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவராக ஐசக் பேபல் இருக்கிறார்.

0Shares
0