உலககெங்கும் பள்ளி மாணவர்களின் லட்சியமனிதர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் . ஜீனியஸ் என்பதற்கு அடையாளமாக ஐன்ஸ்டீனைத் தான் காட்டுகிறார்கள். தீவிர வாசிப்பில் ஈடுபாடு கொண்ட ஐன்ஸ்டீன் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை விரும்பிப் படித்தார். அவரது புகழ்பெற்ற மேற்கோள்
“Dostoevsky gives me more than any scientist“
ஐன்ஸ்டீன் தஸ்தாயெவ்ஸ்கியைப் புரிந்து கொண்ட விதம் பற்றி ஆராய்கிறது B. G Kuznetsov எழுதிய Einstein and Dostoyevsky புத்தகம்
பள்ளி மாணவர்கள் ஐன்ஸ்டீனுக்கு எழுதிய கடிதங்களும் அவற்றிற்கு அவர் எழுதிய பதில்களும் தொகுக்கபட்டு Dear Professor Einstein என்ற தனிநூலாக வெளிவந்துள்ளது. அதை இன்று காலையில் வாசித்தேன்.
இதில் சில கடிதங்கள் ஆசிரியர்களின் தூண்டுதல்களால் மாணவர்கள் எழுதியவை. மற்றவை மாணவர்களுக்கு எழுந்த சந்தேகங்கள். கேள்விகள்.
குறிப்பாக விஞ்ஞானிகளுக்குக் கடவுள் நம்பிக்கையிருக்குமா, காலத்தைப் பகுத்து ஆராயும் ஐன்ஸ்டீன் நிகழ்காலத்தை எப்படிப் பார்க்கிறார். நான்காவது பரிமாணம் எப்படியிருக்கும். அறிவாளியாக என்ன செய்ய வேண்டும் என இயல்பாக எழும் சந்தேகங்களும் இக்கடிதங்களில் காணப்படுகின்றன.
கல்வியில் மாற்றம் உருவாக வேண்டும் என்பதில் ஜன்ஸ்டீனுக்கு மிகுந்த அக்கறையிருந்தது. பள்ளி ஆசிரியர்கள் கெடுபிடியான ராணுவ அதிகாரிகளைப் போலத் தண்டனை தருவதை அவர் கண்டித்துள்ளார். படிப்பு ஒரு போதும் சுமையாகிவிடக்கூடாது. மாணவர்கள் மண்டையில் அறிவை திணிப்பதில்லை கல்வி. சுதந்திரமாக அவர்கள் கல்வி பயில்வதுடன் ஆளுமைதிறனை வளர்த்துக் கொள்ளவே கல்வி நிலையங்கள் உதவி செய்ய வேண்டும் எனக் கருதினார்
ஜப்பானிய மாணவன் ஒருவனின் கடிதத்திற்கு ஐன்ஸ்டீன் நன்றி தெரிவித்து எழுதும் போது இன்று உலகெங்கும் சகோதரத்துவம் பரவி வருகிறது. ஜப்பானியர்கள் அமைதியை விரும்புகிறவர்கள். அழகிய ஜப்பானை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று பதில் எழுதியிருக்கிறார்
விஞ்ஞானிகளுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குமா என மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு விஞ்ஞானிகள் மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் இந்தப் பிரபஞ்சம் உருவாக்கபட்டதன் பின்புலத்தில் ஏதோவொரு சக்தி இயங்குவதை ஒத்துக் கொள்வார்கள். மதத்தின் வழியாக அறிமுகமான கடவுள் ஒருவிதம் என்றால் அறிவியல் வழியாக உணரப்படும் கடவுள் வேறுவிதம் என்கிறார் ஐன்ஸ்டீன்.
ஒரு மாணவன் எழுதியுள்ள கடிதத்தில் உங்களால் பதில் எழுதமுடியவில்லை என்றால் நீங்கள் எழுதிக் கிழித்துப் போட்ட காகிதம் ஒன்றை அனுப்பினால் கூடப் போதும். அதைப் பிரேம்போட்டு மாட்டி வைத்துக் கொள்வேன் என எழுதியிருக்கிறான்.
இன்னொரு கடிதம் ஒன்றில் நான்காவது பரிமாணம் பற்றிக் கேட்கும் ஒரு மாணவி, உங்களால் சுவருக்குள் ஊருடுவி நடந்து போய்விட முடியும் என என்னுடைய தோழி சொல்கிறாள். அது நிஜமா எனக் கேட்டிருக்கிறாள்.
இத்தொகுப்பில எனக்கு மிகவும் பிடித்த கடிதம் ஆறுவயது சிறுமி ஒருத்தி ஜப்பானிலிருந்து எழுதியது
டியர் மிஸ்டர் ஐன்ஸ்டீன்
உங்கள் புகைப்படத்தை நியூஸ்பேப்பரில் பார்த்தேன். நிறையத் தலைமுடி வைத்திருக்கிறீர்கள். அதை வெட்டிக் கொண்டால் இன்னும் அழகாகத் தெரிவீர்கள்
அன்புடன் உங்கள்
ஆன்
ஐன்ஸ்டீனை குழந்தைகள் எவ்வளவு நேசித்தார்கள் என்பதையும், பள்ளிக்குழந்தைகளின் வியப்பு, நம்பிக்கைகள் மற்றும் சந்தேகங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது என்பதே இத்தொகுப்பின் தனிச்சிறப்பு.
••