ஒடும் ஆறு.


கடந்த வெள்ளிகிழமையன்று கர்நாடகாவில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் சென்றிருந்தேன்.  அதிகாலை நேரத்தில் பயணம் செய்தேன். விடியாத இருட்டும் விட்டுவிட்டு பெய்யும் மழையுடன் கூடிய பயணம்.


கோடையிலும் வயலின் பசுமை கண்ணில் படுகிறது. மண்டியா மாவட்டத்தின் கிராமங்கள் மிக அழகானவை. முற்றிலும் வயல்களுக்கு நடுவில் உள்ள சிறிய கிராமங்கள். ஆற்றங்கரையில் முளைத்துள்ள கிராமங்கள், ஆலமரங்களும் ஒற்றையடி பாதைகளும் கொண்ட கிராமங்கள் என்று காலத்தின் பின்செல்கிறோமோ என தோன்றும் தோற்றங்கள்.


வாத்து கூட்டம் ஒன்று மண்பாதையில் தனியே சென்று கொண்டிருந்தது. அடிவானத்தினுள் சூரியன். மழைக்கு பிந்திய மூடுவானம். யாருமற்ற தனிமை வெளி. அந்த காட்சி மிக அற்புதமாக இருந்தது. அங்கேயே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வயலின் ஊடாக நடந்தேன்.


விடிகாலையின் காற்று மிகுந்த சுகந்தமுடையது. அது உடலில் நிறைந்து பிளாஸ்டிக் பையினுள் காற்று புகுந்து அதை ஊதி பெரியதாக்கி பறக்க வைப்பதை போல உடலை காற்று இழுத்துக் கொண்டிருந்தது.


என்ன ஊர் அது என்று தெரியவில்லை. ஆனால் தொலை தூரத்தில் உள்ள ஊரின் அழகும் அங்கு தென்படும் கோவிலின் சிறிய கோபுரமும் கண்ணில் பட்டபடியே இருந்தது. வாய்க்காலில் தண்ணீர் ஒடிக் கொண்டிருந்தது. விழுந்து கிடந்த வைக்கோல் பொம்மையொன்று கண்ணில் பட்டது. பேண்ட் சர்ட் அணிந்த பொம்மை. அதன் தலையில் இருந்த வைக்கோல் காற்றில் இழுபட்டு பிய்ந்து போயிருக்க வேண்டும். யாரோ ஒரு விவசாயி வரைந்த அந்தபொம்மையின் கண்களும் மூக்கும் விசித்திரமாக இருந்தது.


காவல் காலம் முடிந்து போன பொம்மை வயலினுள் விழுந்து கிடக்கிறது. அந்த வைக்கோல் பொம்மையின் கால்கள் வாய்க்காலினுள் கிடக்கிறது. அதன் மீது தண்ணீர் ஒடிக்கொண்டேயிருக்கிறது. பொம்மையிடம் சலனமேயில்லை. நான் அந்த பொம்மையின் அருகில் உட்கார்ந்தபடியே மொழி தேவையற்ற அதனுடன் பேசத்துவங்கினேன்.


பொம்மையின் உடல் பருத்து போயிருந்தது. நிறைய வைக்கோல் அடைத்திருந்தார்கள். திடீரென தோன்றியது. பொம்மை போட்டிருக்கும் இந்த பேண்டும் சர்ட்டும் யாருடையது. அதை போட்டிருந்த மனிதன் தனது உடையை அணிந்த பொம்மையை பார்த்து என்ன நினைத்திருப்பான்.


எனது பள்ளி வயதில் ரோஸ் நிற புள்ளி இட்ட சட்டை ஒன்றை மிக விருப்பமானதாக வைத்திருந்தேன். அழுக்கான நாளில் அதை துவைப்பதற்காக சலவை தொழிலாளியிடம் போட்டிருந்தார்கள். அந்த வீட்டில் இருந்த சிறுவன் என்னுடைய சட்டையை போட்டுக் கொண்டு கண்மாயில் விளையாடிக் கொண்டிருப்பதை கண்டேன். அது என் சட்டையாயிற்றே என்று உடனே அவனிடம் கழட்டி கொடு என்று கத்தினேன். அவன் பயந்து போய் ஒடினான். நானும் அவனை துரத்தி கொண்டு ஒடினேன்.


சலவை தொழிலாளி சிரித்தபடியே தம்பி இது உன் சட்டையா. நல்லா துவைச்சி தர்றோம் என்று சொல்லி தன் பையனிடம் இருந்து கழட்டி வாங்கி கொண்டான். அன்றைக்கு அந்த சலவை தொழிலாளி பையனுக்கு மாற்று சட்டை இல்லை என்பது எனக்கு புரியவேயில்லை. என் சட்டை  அது வேறு யாரும் போடக்கூடாது என்ற நினைப்பு மட்டுமே இருந்தது. ஆனால் இன்று யோசிக்கும் போது எவ்வளவு அபத்தமாக நடந்து கொண்டிருக்கிறேன் என்று தெரிகிறது.


ஆனால் சிறுவர்கள் தங்களது பொருட்கள் எதையும் மற்றவர்கள் பயன்படுத்த விடுவதில்லை என்பது உலகம் முழுவதும் ஒன்று போலதான் இருக்கிறது.


அந்த பொம்மை யாரோ ஒருவரின் இரவல் உடையை அணிந்திருந்தது. பெயரில்லாத அந்த வைக்கோல் பொம்மையின் மீது இரண்டு எறும்புகள் ஊர்ந்து போய்க் கொண்டிருந்தன. அதன் கைகள் எறும்பை தட்டிவிடவில்லை. அந்த பொம்மை என்னை வசீகரித்துக் கொண்டேயிருந்தது. வெயில் வானில் பீறிட துவங்கியதும் வயலை நோக்கி ஆட்கள் வரத்துவங்கினார்கள். நான் கிழக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


இந்த வயல்வெளிக்கும் எனக்கும் ஏதோ ஒரு அறியாத தொடர்பு இருக்கிறது. இல்லாவிட்டால் இங்கே எதற்காக நடந்து கொண்டிருக்கிறேன். மனிதர்களின் கால்கள் படும் இடங்கள் அத்தனைக்கும் அந்த மனிதனுக்கும் விவரிக்க முடியாத தொடர்பு இருந்து கொண்டுதானிருக்கிறது போலும். வயலை விட்டு விலகி மீண்டும் பயணம் செய்ய துவங்கினேன். சாலையோரம் ஒரேயொரு ஆலமரம். அதன் கீழே சுத்தமாக துடைத்து வைத்திருந்தார்கள். அந்த மரத்தில் ஒரு பறவை கூட இல்லை. 


ஸ்ரீரங்கபட்டினம் மிக பழமையான ஊர். திப்புசுல்தானின் கோடை மாளிகையும் அவனது சமாதியும் இந்த ஊரில் தான் உள்ளது. அதன் அருகில் சங்கமா என்ற இடத்தில் காவிரியின் கூடுதுறை உள்ளது. மிக அழகான இடங்களில் ஒன்று.


 ஸ்ரீரங்கபட்டினத்திலே அலைந்தேன். அந்த ஊருக்கு முப்பது நாற்பது முறை வந்திருப்பேன். ஒவ்வொரு முறையும் அதன் பழமை என்னை வசீகரித்துக் கொண்டேயிருக்கிறது.


இந்த முறை ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள விஜயகோபால சுவாமி கோவில் அருகில் உள்ள படித்துறைக்கு போய் பகல் முழுவதும் உட்கார்ந்தே  இருந்தேன். அந்த படித்துறை மிக முக்கியமானது.


இறந்து போனவர்களின் அஸ்தியை கரைப்பதற்கான இடமது. காந்தி நேருவில் துவங்கி எளிய மனிதர்களின் அஸ்தி வரை அங்கே தான் கரைக்க பட்டிருக்கிறது. ஒரு பக்கம் அன்னதானம் வழங்கபட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நீத்தார் சடங்குகள். இரண்டும் தாண்டி சிறிய பாலத்தின் அடியில் பெருக்கெடுத்து ஒடும் ஆறு. நீண்ட படித்துறை. பாலத்தின் இரண்டு பக்கமும் இருக்கிறது. ஒரு படித்துறையின் உடைந்து போன படிகள் ஒன்றில் நிழல் ஊர்ந்து கொண்டிருந்தது.


அங்கேயே உட்கார்ந்தபடியே ஒடும் ஆற்றை பார்த்தபடி இருந்தேன். ஆற்றில் கரைக்கபடும் அஸ்தி இங்கிருந்து ஒடி ஏதேதோ நிலங்களுக்கு உயிர்சத்தாகி முடிவில்லாத தொலைவை நோக்கி போகிறது. மீண்டும் ஒரு முறை ஏதோயொரு தானியத்தின் விதையாகவோ, செடியின் இலையாகவோ இறந்து போன மனிதன் மீள்உயிர்ப்பு கொள்கிறான். அல்லது அந்த விதைகள், செடிகள் மரங்கள் வழியாக இறந்தவனின் நினைவு தங்கிவிடுகிறது.


நான் பார்த்துக் கொண்டிருந்த நாளில் கூட அவசர அவசரமாக அஸ்தியை கரைத்து போனவர்கள் பலர். என்னை போலவே காலையில் இருந்து அந்த படித்துறையில் இருந்த ஒரு வயதான அப்பாவையும் அவரது மகளையும் கவனித்தேன். நல்ல உயரமும் சிவப்புமான நிறம் அந்த வயதானவருக்கு. அவரது மகளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். ஆரஞ்சு நிற சுடிதார் அணிந்திருந்தாள்.


அப்பாவும் மகளும் பேசிக் கொள்ளவேயில்லை. அவர்கள் கையில் பெரிய வயர்கூடையிருந்தது. அதில் இருந்த வளையல்கள், ரிப்பன், சாந்து பொட்டு, புடவை என்று ஒவ்வொன்றாக அவர்கள் ஆற்றில் விட்டதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு இறந்து போனவரின் நினைவிற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. நான் கேட்டுக் கொள்ளவில்லை.


அன்றைக்கு வெயில் அதிகமில்லை. இருட்டு போன்ற நெருக்கம் தரும் நிழல். படித்துறையின் குளிர்ச்சி. நாங்கள் மூவர் மட்டுமே பின்மதியத்தில் இருந்தோம். ஆறு சீரான லயத்துடன் ஒடிக் கொண்டிருந்தது. அந்த பெண் ஆறு ஏழு வாழைபழங்களை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் தந்து சாப்பிடுங்கள் என்று சொல்லியபடியே யாருடைய நினைவிற்காக நான் வந்திருக்கிறேன் என்று கேட்டாள்.


நான் சிரித்தபடியே மரத்தில் இருந்த ஒரு குருவியை கைகாட்டி இந்த ஆற்றங்கரைக்கு வரும் குருவி யார் பொருட்டு வருகிறது என்று கேட்டேன். அவள் சிரித்துவிட்டாள். நான் ஆற்றை பார்ப்பதற்காக வந்திருக்கிறேன். பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். அன்றைக்கு அவளது அம்மாவின் பிறந்த நாள் என்றும் அம்மா இறந்து போய் பதினாறு வருசங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் இந்த இடத்திற்கு வந்துவிடுவோம். இங்கே தான் அம்மாவின் அஸ்தியை கரைத்திருக்கிறோம் என்று சொல்லியபடியே என்னை விலக்கி சென்றாள்.


இறந்து போன தன் மனைவியின் நினைவுகள் தன் முன்னே ஒடுவதை தான் அந்த மனிதர் அவதானித்து கொண்டிருக்கிறார் போலும். பிரம்மாண்டத்தில் கரைந்து விடும்போது மனித இருப்பின் அர்த்தம் மாறிவிடுகிறது. அதை மனிதர்கள் அரிதாகவே உணர்கிறார்கள். அப்பாவும் மகளும் ஒடும் ஆற்றின் நீரின் வழியே தங்களது விருப்பத்திற்குரிய பெண்ணின் இப்போதும் இருப்பதாக உணர்கிறார்கள். ஆறு வெறும் நீரோட்டம் மட்டுமில்லை. அது எத்தனையோ மனிதர்களின் நினைவுசாட்சி.


மாலை நேரத்தில் சிறார்கள் படித்துறைகளில் வந்து நிரம்பினார்கள். குதித்து நீந்தி கொண்டாடினார்கள். ஆறு அவர்களோடு சேர்ந்து துள்ளியது. நானும் படியில் இறங்கி நின்று குளித்தேன். அப்பாவும் மகளும் கிளம்பி போயிருந்தார்கள். முகம் அறியாத அந்த வயதானவரின் மனைவியை,அந்த பெண்ணின் தாயை நினைத்துக் கொண்டு ஆற்றினுள் முழ்கினேன்.


ஆற்றின் ஆயிரம் நீர்கைகள் என்னை தடவிக் கொடுக்கின்றன. சாந்தம் கொள்ள வைக்கின்றன. ஈரத்துடன் கரையேறிய போது குருவி சப்தமிட்டபடியே பறந்தது. எதற்காக இங்கேவந்திருக்கிறேன் என்று காலையில் இருந்து என் அடிமனதில் ஒரு குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. ஒருவேளை இந்த அப்பாவையும் மகளையும் பார்க்க வேண்டும் என்பதற்காக தானே என்று தோன்றியது.


வாழ்க்கை என்பதே தொடர்பு படுத்திக் கொள்வதும் பகிர்ந்து கொள்வதும் தானே.


காலையில் கிளம்பி வந்த அதே சாலையில் இரவில் மீண்டும் பயணம் செய்யதுவங்கினேன். ஆனால் இப்போது அந்த வயல்கள் கண்ணில்படவில்லை. ஊர் தெரியவில்லை. சாலையில் வாகனங்களின் ஒளி மட்டுமே தெரிகிறது. ரயில் நிலையத்தினுள் பரபரப்பான உலகம். அவசரம். ஒடும்கால்கள்.


வீடு வந்து சேரும்வரை மனதில் ஆறு ஒடிக்கொண்டேயிருந்தது. அதை தடுக்க எதுவும் இல்லை.


**

0Shares
0