ஒப்லோமோவின் கனவுகள்

A Few Days from the Life of I.I. Oblomov 1980 வெளியான ரஷ்யத் திரைப்படம். Nikita Mikhalkov இயக்கியது

இவான் கோன்சரோவ் எழுதிய ஒப்லோமோவ் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. ரஷ்ய பிரபுத்துவத்தினைக் கேலி செய்யும் விதமாகவே இந்த நாவலை கோன்சரோவ் எழுதியிருக்கிறார்.

மேடை நாடகம் போலவே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காட்சி அமைப்புகள் மற்றும் நடிப்பு இரண்டும் மேடையில் காண்பது போலவே இருக்கிறது.

இலியா இலிச் ஒப்லோமோவ் முப்பது வயதுக்குக் குறைவானவர், நடுத்தர உயரம் மற்றும் இனிமையான வெளித்தோற்றம் கொண்டவர். தன்னைச் சுற்றி எந்த மாற்றமும் வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர். பாதுகாப்பான வளையத்திற்குள் வாழ விரும்புகிறவர்.

தனது கட்டிலின் அடியில் விழுந்த கைக்குட்டையை எடுப்பதற்குக் கூடப் பணியாளரை அழைப்பவர். படுசோம்பேறி. இரவு அங்கியிலே எப்போதுமிருப்பார். சதா படுக்கையில் தூங்கிப் பொழுதைக் கழிப்பதில் விருப்பமுள்ளவர்.

அவரைப் பற்றி விவரிக்கும் போது கோன்சரோவ் மிக அழகாக எழுதியிருக்கிறார்.

திடீரென ஒரு எண்ணம் ஒரு பறவையின் சுதந்திரமான சிறகடிப்பை போல அவரது முகத்தில் அலைந்து திரிந்து, கண்களில் ஒரு கணம் படபடக்கும், பாதித் திறந்த உதடுகளில் குடியேறி, அவரது நெற்றியின் ரேகைகளில் ஒரு கணம் பதுங்கியிருக்கும். பின்னர் அது மறைந்துவிடும் “

போதுமான உடற்பயிற்சி இல்லாததால், அல்லது சுத்தமான காற்று இல்லாததால், அல்லது இரண்டும் இல்லாததால், அவர் வயதுக்கு மீறிய தோற்றம் கொண்டிருந்தார். சந்தேகம், அவநம்பிக்கை மற்றும் பயம் மூன்றும் அவரைச் சூழ்ந்திருந்தன. அவர் வீட்டில் இருக்கும் போதெல்லாம் – கிட்டத்தட்ட எப்போதும் அவர் வீட்டில் இருந்தார் – அவர் தனது கட்டிலில் படுத்துக் கொள்வதில் நேரத்தை செலவிட்டார்

19ம் நூற்றாண்டு ரஷ்ய பிரபுகளின் வாழ்க்கை இப்படியாகத் தானிருந்தது. அந்த வகையில் ஒப்லோமோவ் ஒரு உதாரண பாத்திரம்.

இவான் கோன்சரோவ் அரசு அதிகாரியாக இருந்தவர். வசதியான வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். கோன்சரோவ் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் செப்டம்பர் 15, 1891ல் பீட்டர்ஸ்பர்க்கில் இறந்தார்.

••

ஒப்லோமோவ் தனது அறை அல்லது படுக்கையை விட்டு வெளியேறுவது அரிது, அவருக்குத் தூங்குவதற்கும் தனது குழந்தைப் பருவ வீட்டைப் பற்றிக் கனவு காண்பதற்குமே நேரம் போய்விடுகிறது.

பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஒப்லோமோவின் வீட்டிலிருந்து படம் துவங்குகிறது. ஜாகர், ஜாகர் என்று வேலைக்காரனைச் சப்தமாகக் கூப்பிடுகிறார் ஒப்லோமோவ். பக்கத்து அறையில் உள்ள ஜாகருக்கு அந்த அழைப்பின் பொருள் புரிகிறது. ஒரு அவசரமும் இல்லாமல் மெதுவாக எஜமானரைக் காண வருகிறான். அந்த அறை தூசு படிந்திருக்கிறது. அழுக்கடைந்த இரண்டு சோஃபாக்கள், நாற்காலியின் கால் உடைந்து காணப்படுகிறது. எங்கும் குப்பை, தூசி. காலம் உறைந்துவிட்டது போலிருக்கிறது.

படுக்கையில் கிடந்தபடியே ஒப்லோமோவ் தனக்கு வந்த கடிதம் பற்றிக் கேட்கிறார். அதைப் படிக்கக் கூட அவர் எழுந்து உட்காருவதில்லை. அவரது பண்ணையில் அந்த வருடம் விளைச்சல் குறைவாக உள்ளது. நிதி நிலைமை மோசமடைந்து வருவதாகவும், சில முக்கிய முடிவுகளை எடுக்க அவர் நேரில் வருகை தர வேண்டும் என்றும் மேலாளர் எழுதியிருக்கிறார்.

அது ஒப்லோமோவிற்குக் கவலை அளிக்கிறது. நேரடியாகப் பண்ணைக்குச் சென்று விசாரித்து வர வேண்டும் என நினைக்கிறார் ஆனால் சோம்பேறித்தனம் வெளியே போவதைத் தடுக்கிறது

கசாப்புக் கடைக்காரன், காய்கறிக் கடைக்காரன், சலவைத் தொழிலாளி, பேக்கரி ஆகியோரால் அனுப்பப்பட்ட கணக்குகளைப் பார்த்துப் பணம் கொடுக்க வேண்டும். அது எரிச்சலை உருவாக்குகிறது.

சிறுவயதிலிருந்தே ஒப்லோமோவ் அப்படித்தான் வளர்க்கபட்டிருக்கிறார். வசதியான வீட்டுச்சூழல் அவரை முழுச் சோம்பேறியாக மாற்றியுள்ளது.

இப்படியே படுக்கையில் கிடந்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஜாகர் கேட்கிறான். தானும் மற்றவர்களும் ஒன்றில்லை எனக் கோவித்துக் கொள்ளும் ஒப்லோமோவ் அந்தக் கவலையில் மீண்டும் உறங்க ஆரம்பிக்கிறார்.

அரைமணி நேரத்தின் பின்பு அவரை எழுப்புகிறான் ஜாகர். ஆனால் எழுந்து கொள்ள மறுத்து அடம்பிடிக்கிறார் ஒப்லோமோவ்.

அவர் எப்போதும் படுக்கையில் தான் சாப்பிடுகிறார். படுக்கையில் கிடந்தபடியே தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். திடீரெனத் தனது குறைகளைப் பற்றி உணரும் அவர் அதை மாற்ற உடனே எழுந்து செயல்பட வேண்டும் என்றும் நினைக்கிறார். ஆனால் உடல் ஒய்வையே நாடுகிறது.

அவரைச் சுறுசுறுப்பாக வைக்கும் முயற்சியில் நண்பரான ஆண்ட்ரி இவனோவிச் ஸ்டோல்ட்ஸ் இறங்குகிறார். ஒப்லோமோவ் எழுந்து குளித்துப் புதிய உடை அணிந்து கொண்டு வெளியே செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தித் தயார் படுத்துகிறார். வழக்கமாகத் தரப்படும் உணவிற்கு மாற்றாக எளிய காய்கறி மற்றும் பழத்துண்டுகளை உணவாகத் தருகிறார்

ஸ்டோல்ட்ஸின் தோழியான ஓல்கா என்ற இளம் பெண் ஒப்லோமோவிற்கு அறிமுகமாகிறாள். அவளது அழகில் மயங்குகிறார். ஸ்டோல்ட்ஸ் வணிகத்திற்காகப் பல்வேறு நாடுகளுக்குத் தொடர்ந்து பயணம் செய்கிறார். இந்நிலையில் ஓல்காவின் அருகிலே இருப்பதற்காக ஒப்லோமோவ் புதிய வீடு எடுத்துக்கொள்கிறார் அவளைக் காதலிக்கவும் துவங்குகிறார்.

அவளால் மாற்றத்திற்கு உள்ளாகிறார். ஆனால் மற்றவர்களைப் போல உலகியல் விஷயங்களில் அவரால் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. அவர் தன்னைச் சுற்றிய மனிதர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் விலகி இருக்கவே ஆசைப்படுகிறார். சிறிய பிரச்சனை என்றாலும் மனவருத்தம் கொண்டுவிடுகிறார், செயலற்ற தன்மை மற்றும் பயத்தின் அடையாளமாக விளங்கும் ஒப்லோமோவ் ஆமை தனது ஒட்டிற்குள் வாழ்வது போன்ற ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்.

ஒரே இடத்தில் நிலை கொண்டுவிட்ட தேரை ஒட வைப்பது போல அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்துகிறாள் ஓல்கா. ஆனால் அவரோடு சேர்ந்து வாழ முடியாது என உணர்ந்து திருமணம் செய்து கொள்ளவில்லை.

வாழ்வில் புதிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் மாற்றம் ஏற்படும் போது அதை ஏற்றுக் கொள்வதில்லை. புகார் சொல்கிறோம். தவிர்க்க முயலுகிறோம். நமக்குள் ஒரு ஒப்லோமோவ் எப்போதுமிருக்கிறார். அவர் உலகம் தன்னைக் கையைப் பிடித்து அழைத்துப் போய் வழிகாட்ட வேண்டும் என்று விரும்புகிறார். புதிய சூழலை, புதிய செயல்பாடுகளை மேற்கொள்ள முயன்று அதில் வெற்றிபெற முடியாமல் பழைய ஒப்லோமோவாகவே திரும்புகிறார்.

அவரது கவலைகள் அனைத்தும் ஒரு பெருமூச்சாக மாறியது அக்கறையின்மை தூக்கத்தில் கரைந்து போனது என்றே கான்சரோவ் குறிப்பிடுகிறார்.

கோன்சரோவ் மூன்று நாவல்கள் எழுதியிருக்கிறார். அவரது சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு கொண்டதாகவே அந்த நாவல்கள் இருந்தன.

ஒப்லோமோவ் போன்றே பெலிகோவ் என்ற கதாபாத்திரத்தை ஆன்டன் செகாவ் எழுதியிருக்கிறார். அவரும் இப்படி வீட்டின் ஜன்னலை மூடிக் கொண்டு உள்ளே வாழும் ஒருவரே.

படத்தில் வேலைக்கார ஜாகர் சிறப்பாக நடித்துள்ளார். அவரும் ஒப்லமோவ் போன்ற சோம்பேறியே. ஆனால் தனது எஜமானன் மீது அதிக அன்பு கொண்டவர். இந்த இருவருமே செர்வாண்டஸின் டான் குவிக்ஸாட் சான்சோ பான்சாவை நினைவுபடுத்துகிறார்கள்.

ரஷ்யாவின் அன்றைய எழுத்தாளர்கள் உறுதியற்ற ஒப்லோமோவை ஒரு ரஷ்ய ஹாம்லெட்டாகக் கண்டனர் என்று குறிப்பிடுகிறார் லியோ டால்ஸ்டாய். அவருக்குப் பிடித்தமான நாவலது.

நான் வாழும் வாழ்க்கையை ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை அல்லது அது எனக்கு ஒருபோதும் பொருந்தவில்லை என்று நாவலின் ஒரு இடத்தில் ஒப்லோமோவ் சொல்கிறார். அந்த வரியே அவரது வாக்குமூலம்.

0Shares
0