எனது இணையதளம் துவங்கப்பட்டு இந்த மூன்று மாத காலத்தில் ஒரு லட்சம் முறை புரட்டப்பட்டு பார்வையிடப்பட்டிருக்கிறது என்ற சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதை சாத்தியமாக்கிய இணையதளத்தின் வாசகர்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
உங்களது பார்வைகளும் அக்கறையும் பலவேளைகளில் என்னை உற்சாகமூட்டியிருக்கின்றன. யோசிக்க வைத்திருக்கின்றன. நம்பிக்கையை உருவாக்கியிருக்கின்றன. அதற்காக யாவருக்கும் என் நிறைந்த அன்பும் நன்றியும்.
எனது இணைய தளத்தில் வாசகர்களின் பங்களிப்பிற்கு இடமில்லையே என்ற ஆதங்கம் பலரிடமிருந்தும் வந்து கொண்டேயிருக்கிறது. அது உண்மையில்லை. பெரும்பான்மையான வாசகர்களின் மின்னஞ்சலுக்கு நான் பதில் எழுதியிருக்கிறேன். இந்த மூன்று மாத காலத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல்கள் 831. இதில் 129 ஐ தவிர மற்ற யாவற்றிற்கும் நான் பதில் எழுதியிருக்கிறேன்.
வாசகர்களின் கடிதங்களை வெளியிடுவதில் எனக்குள்ள பொதுவான தயக்கம் அது தனிப்பட்ட மின்னஞ்சலாக எனக்கு அனுப்பபடுகிறது. அதை வெளியிடுவதற்கு அனுப்பியவரின் அனுமதி நிச்சயம் அவசியம். அத்தோடு அவருக்கான பதிலும் அந்தரங்கமானது. அதை எப்படி வெளியிடுவது என்றே தயங்கியிருக்கிறேன். பொதுவான விஷயங்கள் மற்றும் அறிந்து கொள்ளபட வேண்டிய தகவல்கள், விவாதங்கள், குறித்து வாசகர்கள் எழுதினால் அவற்றை பிரசுரிப்பதில் எனக்கு எவ்விதமான தயக்கமும் இல்லை.
தமிழ் எழுத்தோடு அக்கறையும் நேசமும் கொண்ட உலகெங்குமுள்ள இணையதள வாசகர்கள், படைப்பாளிகள், கலைஞர்களுடன் சேர்ந்து பயணிப்பதில் எப்போதுமே மிகுந்த விருப்பம் கொண்டிருக்கிறேன். அதற்கான ஒரு சாளரமாகவே என் இணைய தளம் எப்போதுமிருக்கும்.
**