ஒரே ஒரு ஊரிலே

மலையாளச் சிறுகதை

பால் சக்கரியா தமிழில்: எம்.எஸ்.

ஒரே ஒரு ஊரிலே ஒரு வீட்டைச் சுற்றியிருந்த புல்வெளியின் ஒரு மூலையில் ஒரு மீன் குளம் இருந்தது. அதில் சில தவளைகளும் வசித்து வந்தன. தவளைகளின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்தது. காரணம், மழைக்காலங்களில் இரவு முழுதும் கலங்கிய நீரில் தாய்த் தவளைகள் அழுது அழுது இடும் முட்டைகளின் கரிய மாலைகளின் பெரும் பகுதியும் குளத்தில் வாழும் கொழுத்த மீன்களுக்கும், நீண்ட கம்புகள் ஏந்திய அந்த வீட்டுக் குழந்தைகளின் வேடிக்கைக்கும் இரையாயின.

எப்படியோ தப்பிப் பிழைத்து உருவ பரிணாமத்தின் படிகளில் ஏறி மேலே வந்தவற்றின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்தது – மற்றவர்களின் பசிக்கும், விளையாட்டுக்கும் இரையானதன் காரணமாக, குளத்து மீன்கள் தொடர்ந்து வீட்டு சமையலறைக்குள் மறைந்து கொண்டிருந்தாலும் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளும் வீட்டிலுள்ளோர் எடுத்திருந்தனர்.

மீன்களின் எண்ணிக்கை வளர வளர தவளைகளின் பயமும் அதிகரித்தது. இந்தப் பயம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. குழந்தைகளால் ஏற்பட்ட பயம் படிப்படியாகக் குறைந்தது. அவர்கள் பரிணாம வளர்ச்சியடைந்து பெரியவர்களானார்கள். பள்ளிகளுக்கும், தூர இடங்களுக்கும் சென்றுவிட்டனர். எனினும் தவளை இனத்துக்கு ஏற்பட்ட அபாயம் அப்படியேதான் இருந்தது.

காரணம் மீன்களும், புதிதாய் வந்து சேர்ந்த ஓர் ஆமையும். (இந்த ஆமை நிரபராதி என்பது ரொம்ப நாளைக்குப் பின்னரே தெரியவந்தது. ஒரு நாள் வீட்டுப் பெண்குழந்தைகள் ஒரு பூனையைக் கொண்டுவந்தனர். இரவில் அதன் மென்மையான பாதங்கள் புல்வெளியில் அமர்ந்திருக்கும் தவளைகளின் இடையே நகர்ந்தபோது அவை இனம்புரியாத ஓர் ஆபத்து நெருங்குவதாக உணர்ந்து நடுங்கின.

எப்போதாவது தன்னுடைய நீண்ட கூர்மையான நகங்களை மின்னல் போல் வீசி குளத்திலிருந்து ஒரு மீனைப்பிடிக்கும். குளக்கரையில் மறைந்திருக்கும் தவளைகளின் உருண்ட கண்கள் பூனையின் நகங்களின் வெண்ணிறக் கொடுமையையும் கைகளின் வேகத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு தவளையின் மீது கூட அது தன் வெண்மயிர்கள் நிறைந்த கையை நீட்டியதில்லை. தவளைகளை அது புல்வெளியில் சிதறிக் கிடக்கும் கற்கள் போலவோ, குளத்துப் பாசி போலவோ அலட்சியப்படுத்தியது.

இரவில் தவளைகள் குளத்திலும், குறிப்பாகக் குளத்துக்கு வெளியேயும் இரைதேடின. மாலைப் பொழுதில் வெளிக்கிளம்பும் சிறு பூச்சிகளுக்காக அவை புல்வெளியில் ஆங்காங்கே காத்திருந்தன. நீண்ட நாக்குகள் சாட்டைப் போல் காற்றில் சுழன்று துடிக்கிற மங்கிய நிறம் கொண்ட உடல்களைப் பற்றி இழுத்தன. பூனை சில நாட்களாகக் குளத்தில் மீன்பிடிக்க வரவில்லை. சற்றுத் தொலைவிலும் அண்மையிலும் ஒலித்த சில அழைப்பொலிகளைத் தேடிச் சென்றிருந்தது. அவசரமும் கடுமையும் கொண்ட அழைப்புக்குரலுக்கு எதிராக மெல்லிய சப்தத்தை எழுப்பிக் கொண்டு இருட்டில் எங்கோ போயிருந்தது.

சில தினங்களுக்குப் பின் அதன் வயிறு பெருத்திருந்தது. நடக்கும் போது தளர்வு இருந்தது. நிறை வயிறுடன் தவளைகளின் சந்தேகம் நிறைந்த பார்வைகளுக்கிடையே இருட்டில் நடந்து, குளக்கரையில் இருந்தபடி கையை நக்கி முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தது. தவளைகள் தினசரி தங்கள் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தன. அடுத்த மழைக்காலத்தில் தங்கள் வம்சம் எவ்வளவு அதிகரிக்கும் என்று அறிய எண்ணிப் பார்த்துக் கொண்டன.

தலைமுறை தலைமுறையாக நடந்து வந்த பயணத்தைக் கவனித்தபோது தங்கள் தொகை குறைந்து கொண்டு வருகிறதென்பதை அவை கவலையுடன் கண்டன. மீன்களுக்கு வீட்டிலிருந்து திண்பண்டங்கள் கிடைத்தாலும் (இதில் ஒரு பங்கை தவளைகளும் கைப்பற்றியிருந்தன) புது மழையின் போது மாலைகள் போல் நீரில் மிதக்கும் தவளை முட்டைகளையே அவை பெரிதும் விரும்பின. வீட்டில் இரவு உணவு முடித்துக் குளக்கரையில் காத்திருக்கும் பூனையும் அதன் கூரிய நகங்களில் துடிதுடிக்கும் மீனையும் பார்க்கும்போது தவளைகளுக்குச் சற்று – பயம் கலந்த – மகிழ்ச்சியாக இருக்கும்.

பூனை ஒருநாள் பிரசவித்தது. பஞ்சு உருண்டைகள் போல் ஆடி நடக்கும் மூன்று குட்டிகளை அது வீட்டின் நிலவறையில் ஒரு பழைய மெத்தை போல் இருத்தி நக்கித் துடைத்தது. குட்டிகள் சந்தேகம் மிளிரும் பெரிய உருண்டைக் கண்களால் சுற்றி நோக்கின. உரத்த குரலில் கத்தின. அவற்றின் தாய் வேளாவேளைக்கு அடுக்களைக் குள் சென்று கிண்ணத்திலிருந்து பாலைக் குடித்துவிட்டு திரும் பவந்து மெல்லிய குரலெழுப்பியபடி குட்டிகளுக்கும் பாலூட்டியது. குட்டிகள் வளர்ந்தன. ஒருநாள் அவை நிலவறையிலிருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்த்தன. பிறகு மெல்ல மெல்ல அடுக்களைக் குள் நுழைந்து அங்குமிங்கும் ஓடி விளையாடத் தொடங்கின.

ஒரு நாள் காலையில் தவளைகள் புல்வெளியில் கண்ட ஒரு காட்சி அவற்றைத் திடுக்கிட வைத்தது. இலைகளில் மின்னும் பனித்துளிகளுக் கிடையே அசைவற்றுக் கிடந்தது ஒரு தவளையின் உடல் அங்கங்கே கடிபட்ட காயங்களும் நகக் கீறல்களும். குளக்கரையில் இருந்தபடி பயம் நிரம்பிய கண்களால் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அங்கே பெருக்கவந்த வேலைக்காரி சுழித்த முகத்துடன் அதை ஒரு குச்சியால் எடுத்துத் தூரத்தில் வீசி எறிந்தாள்.

அன்று மாலையில் தவளைகள் ஒன்று கூடின. பயம் ஒரு வலை மாதிரி அவற்றைக் கவிந்திருந்தது. ஆபத்தின் அழுத்தம் நிறைந்த ஓர் அமைதியில் அவை தங்களை எண்ணிப்பார்த்தன. ஒரு நபர் குறைகிறது. நடுங்கும் இதயத்தோடு ஓர் உண்மையை உணர்ந்து கொண்டன. உதவிக்கு யாருமில்லை.

முடிந்தவரை மனதைத் தேற்றிக் கொண்டு மறுநாள் காலை வரப்போகும் ஆபத்தை எதிர் நோக்கி, குளப்படிகளிலோ, நனைந்த புற்களுக்கிடை பிலோ, நீரின் இருண்ட பரப்பிலோ, வானில் நிலைத்த கண்களுடன் ஒற்றையாய்ப் பறக்கும் இரவு பூச்சிகளையும், தாழ்ந்து பறக்கும் மின்மினிகளையும், யாருமற்ற புழுக்களையும் பிடிக்கக் காத்திருந்தன.

இரவு உணவு முடிந்து உறக்கத்திலாழ்ந்த வீட்டின் உள்ளறையிலிருந்து தெளிவற்ற மணியோசை போன்று பூனைக்குட்டிகளின் கொஞ்சல்களும், தாயின் அமைதிப்படுத்தும் குரலும் உயர்ந்தன. இந்த ஒலிகள் தவளைகளின் இதயங்களை இடிமுழக்கம்போல் தாக்கின. அவை பசியையும் மறந்து, மண்ணுக்குள் புதைவது போல் உடல்களைத் தாழ்த்தி இருட்டில் மரத்துப்போயிருந்தன. சிறிது நேரம் கழித்து வீட்டினுள் கேட்ட ஒலிகள் மெதுவாக வெளியே வந்து, இருட்டில் கண்ணுக்குப் புலப்படாமல் நெருங்கி வருவதைக் கேட்டன. யாரோ மெதுவாக இழுத்துச் செல்லும் கம்பளிப் போர்வைப் போல் இரவு அகன்றது. வெளிச்சம் மீண்டும் வெளிப்பட்டபோது, நிழல்களால் தீண்டப்படாத இளம் வெயிலில் மேலும் ஒரு தவளை இறந்து மரத்துப்போய்க் கிடந்தது.

சகிக்க முடியாத அந்தப் பகல் பொழுது நீங்கியதும் தவளைகள் குளப்படியில் அனாதைப் பிணங்கள் போல ஒன்று சேர்ந்து மீண்டும் தங்களை எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டன. இரண்டு பேர்கள் குறைவதை ஒரு பலத்த அடியாகத் தாங்கிக் கொண்டன. சுழலும் ஒரு பயங்கர ஒளிபோல இந்த உண்மை அவற் றை நடுங்க வைத்தது. வழியை மறித்தது.

நட்சத்திரங்களால் மூடப்பட்ட நம்பிக்கையற்ற ஆலயத்தின் கீழ் கனத்த ஆபத்தின் அறிகுறிகள் அமுத்திய இதயங்களுடன் அவை வெறுமனே இரவை நோக்கியபடி விழித் திருந்தன. இரவு விடியலை நோக்கி வேகமாக நகர்ந்தது. பசி சுட்டிக்காட்டிய வழியே தவளைகள் செல்லத் தொடங்கின. இயந்திர கதியில் இருண்ட குளத்தில் ஆங்காங்கே இடம் பிடித்தன. மறுநாளும் புல்வெளியில் ஒரு தவளையின் உடல் சின்னாபின்னமாகக் கிடந்தது.

அன்று பகல் முழுதும், மாலையிலும் தவளைகள் குளப்படியில் இருண்ட குழுவாகக் காணப்பட்டன. மாலையில் வீட்டின் ஒளி நிறைந்த ஜன்னல்கள் வழி பிரார்த்தனை குரல்களும், பூனைக்குட்டிகளின் அழுகை யும் எழுந்தன. பூனைக்குட்டிகள் விளையாட்டு பொருட்களுக்காக மாலையிலேயே கத்தத் தொடங்கிவிட்டன – தேவை இரவு உணவுக்குப்பின்தான் என்றாலும். குளப் படிகளின் இருண்ட கூட்டம் தங்கள் பயங்கரமான நிலைமையை உடையும் உள்ளத்துடன் நினைத்துக் கொண்டன.

செயல் – செயல்தான் உடனடித் தேவை. மூன்று பேரை இழந்தாயிற்று. நாளையும் சூரியனின் கதிர் தங்களில் ஒருவரின் பிணத்தின் மேல் விழாது என்பது என்ன நிச்சயம்? ஒரு தலைமுறையில் மட்டுமே தங்க ளுக்கு இத்தனை இழப்பு ஏற்பட்டிருக்கிறது! இதோ இந்த மூன்று நாட்களில் மூன்று இழப்பு. மூன்று பேரில் இரண்டு கர்ப்பிணிகள்! செயல். செயல்தான் வேண்டும். வம்சத்தை நிலைநாட்டுவதற்கான உடனடி செயல்பாடு. முதலில் அவை இனியொரு புதிய முடிவு எடுக்கும்வரை யாரும் – குறிப்பாகக் கர்ப்பிணிகள் – குளத்தில் ஜலப் பரப்பின் பாதுகாப்பை விட்டு இரைதேட வெளியே செல்ல வேண்டாம் எனத் தீர்மானித்தன.

அடுத்து, பெண் தவளைகளைத் தவிர, பிற அங்கத்தினர்களைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, நாளுக்கு ஒரு தவளை என்ற கணக்கில் பூனைக்குப் பலிகொடுக்க வேண்டும் என்றும் தீர்மானித்தன. வம்சத்தை நிலைநாட்ட அவசர நடவடிக்கையாகச் செயல்பட அவை தயாராயின.

கொல்லப்பட்ட தவளைகளைத் தின்னவில்லை என்பது பூனைக்கும் குட்டிகளுக்கும் தவளை மாமிசம் விருப்பமில்லை என்பதையே காட்டியது. இருப்பினும் இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் குறிப்பது போல் இது தேவையற்ற ஒரு கொடுமை. தொடர்ந்தோஇடைக்கிடை யோ கொலை நடக்கட்டும். நாள் செல்லச் செல்ல பூனைக்கும், குட்டிகளுக்கும் தவளை மாமிசத்தில் ருசி ஏற்பட்டுவிட்டால்? இதில்தான் ஆபத்து இருக்கிறது. பெரிய ஆபத்து. தங்கள் தலைமுறையில் ஏதாவது ஒரு கர்ப்பிணி பிரசவத்திற்காகக் காப்பாற்றப்பட்டாலும் அந்தத் தலைமுறையும் சில நாட்களில் கொல்லப்பட்டு விடுமே!

ஒரே தீர்வுதான் இதற்கு. பூனைகளுக்கும் குட்டிகளுக்கும் தவளை மாமிசத்தில் வெறுப்பு ஏற்பட வேண்டும். தொடர்ந்து… தொடர்ந்து தினசரி பூனைகளுக்குத் தவளை மாமிசம் தரவேண்டும். வம்சத்தின் உறுதிக்கும் பாதுகாப்பான வாழ்வுக்கும் இரை தேடலுக்குமான ஒரு சூழ்நிலையை உருவாக்குவ தற்கான ஓர் அசாதாரண ஏற்பாடு. தங்கள் பழைய வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் இது போன்ற ஒரு நிகழ்ச்சியைக் காணவே முடியாது என்பது இதன் முக்கியத் துவத்தைக் காட்டவில்லையா? ஓர் உறுதியான ஒற்றுமையில், வம்சம் என்ற சொல்லின் ஒருமித்த கருத்தில் அவை தாமாக எடுத்த தீர்மானத்தைக் குளிர்ந்த இதயத்தோடு ஏற்றுக் கொண்டன. யாரும் பயப்படவில்லை. துக்கப்படவில்லை. சந்தேகப்படவில்லை.

ஒரே ஒரு நபரைத் தவிர. இறந்து போன மூன்று தவளைகளும் பூனைக்குட்டிகளின் விளையாட்டுப் பொருட்களாகவே இறந்திருக்கின்றன, உணவாக அல்ல. இதைப் புரிந்து கொண்ட இந்தத் தவளை தன் கூட்டத்தினர் எடுத்த முடிவின் அர்த்தமின்மையை எண்ணி வருந்தியது. விளையாட்டுப் பொருள் தான், இரையல்ல என்று அறிந்திருந்ததால், எதுவும் செய்வதற்கில்லை. வருந்து வதற்கில்லை என்று உணர்ந்து எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு – அதாவது எல்லாவற்றையும் துறந்து காத்திருந்தால் மட்டும் போதுமாயிருந்தது.

ஆனால் தான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பலன் ஒன்றுதான் என்று உணர்ந்ததால் இந்தத் தவளை மௌனம் சாதித்தது. தானும் இந்தப் பயனற்ற ஓட்டெடுப்பிலும் அர்த்தமற்ற தியாகத்திற்கும் கட்டுப்பட்ட உணர்வில் ஏற்பட்ட பயத்தையும் வேதனையையும் ரகசியமாக வைத்துக் கொண்டு, கூட்டத்தின் உறுதியான முடிவில் தன்னை மாய்த்துக் கொண்டது.

எனினும் அதன் உள்ளத்தில் தன் இனத்தைப் பற்றிய வலி தொடர்ந்தது. இரைகள் என்று தாங்களே தவறாக நினைத்துக் கொண்டு இனம் முழுதையுமே இழப்பதும், கையாலாகாத்தனம் தந்த எளிய சமாதானமும், அடிமையாக்கப்படுதலின் நிறைவும், சரணடைதலின் அமைதியும், பொறுமையின் ஒளிமிக்கக் காத்திருப்பும் எல்லாம் குருடர்களைப் போலத் தூக்கி எறிவதையும், தானும் இந்தக் கொடிய இழப்பில் பங்கு பெறுவதையும் அது வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது.

இந்தப் பலிக்காக முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி நிறைந்த வாலிப் பருவத்தை அண்மையில்தான் எய்திய இந்தத் தவளைதான். தான் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றி அது வருத்தத்தோடு கேட்டது. இந்த அர்த்தமற்ற பலிதொடரை நான்தானா தொடங்கி வைக்கவேண்டும்? தன்னுடைய சிறிய வாழ்க்கை இப்படி அர்த்தமற்று முடிவடைகிறதே என்று நினைத்து அது கடும் துயரில் தவித்தது.

தனது பயனற்ற பலி எவ்வளவு விரைவில் முடிவடையும். பூனையும் குட்டிகளும் சீக்கிரம் தங்கள் விளையாட்டுப் பொருளைத் தேடி வந்துவிடும் என்று நினைத்துக் கொண்டு மேல் உத்தரவுக்காகக் காத்திருந்தது. குளத்தில் இருண்ட நீரில் தவளைக்கூட்டம் முழுவதும் முதல் களப்பலியைச் சுற்றி மெளனமாக நின்றது. நேரம் வந்ததும் பலி தவளை நீர்பரப்பில் ஒருமித்த கூட்டத்திலிருந்து சுழன்று விழும் இலைபோல் விலகியது. குளிர்ந்த ஜலத்தின் அமைதியின் நடுவே அதன் தனிமை உருவம் தன் கூட்டத்தைவிட்டு அகன்று கரையை நோக்கி மெது வாக நீந்திச் சென்றது. குளத்தின் கரையை மிருதுவான அலைகளின் உதடுகள் மெல்ல அழுத்தின.

பலி தவளை காத்திருக்கத் தொடங்கியது. வீட்டுப் படிகளிலிருந்து புல் வெளிக்கு வரும் வழியில் அது காத்திருந்தது. வீட்டில் சப்தம் ஓய்ந்தது. பாத்திரங்கள் அமைதி யடைந்தன. பலியை ஏற்றுக் கொள்ள யாரும் வரவில்லை. இரவு மணி ஒவ்வொன்றாகக் கடந்தது. நள்ளி ரவுக்குப்பின் சந்திரன் உதித்தது. புல் வெளியின் இடையே பனித்துளிகளின் ஈரத்தில் நிலவொளி ஒளிர்ந்தது. பலியை ஏற்றுக்கொள்ள யாரும் வரவில்லை.

குளத்து நீரில் தவளைக் கூட்டம் பொறுமையற்ற அசைவுகளால் ஏற்படுத்தும் ஒலியும் அலைகளும் குமிழ்களும் இடைவிட்டுத் தோன்றி மறைந்தன. இருண்ட இரவு போய் மங்கலான இரவு பலியிடத்தில் காவலுக்கு நின்றது. பலி இன்னும் தீண்டப்படாமலே இருந்தது. ஏனெனில், வீட்டில் அன்று இரவு ஒரு பிறந்தநாள் விருந்து நடந்தது. பூனைக்குட்டிகள் வயிறு புடைக்கத் தின்றுவிட்டு, உணவு மேஜையின் அடியில் தாய் பூனையின் வால் அசைவையும் மறந்து தூங்கி விட்டிருந்தன. புல்வெளி விளையாட்டையும், வேடிக்கையையும் மறந்துவிட்டிருந்தன. சோர்வுற்று தூங்கி விட்டன.

பலி ஏற்க ஏற்பட்ட காலதாமதம் பலி தவளையைக் கடுமையாகப் பாதித்தது. எல்லாம் விரைவில் நடந்து முடிந்துவிடுமென்ற அதன் நம்பிக்கை தகர்ந்து விட்டது. தெய்வங்கள் காட்சியளிக்கத் தாமதித்த ஒவ்வொரு நிமிஷமும் அடுக்கடுக்காக அதன் மனதில் ஏற்படுத்திய கனத்த உணர்வின்கீழ் அதன் அமைதியில் சலனம் ஏற் பட்டது. நேரம் செல்லச்செல்ல அந்த இடத்தில் நிலவிய அமைதியில் அதற்குத் தன்னைத்தவிர வேறெதையும் நினைக்க இயலாமல் போயிற்று.

அது தனக்குள்ளே நினைத்து நினைத்து கலக்கத்திலும், துக்கத்திலும் கடந்து செல்கிற ஒவ்வொரு கணமும் பயந்திருந்தது. இப்போது ஓர் உண்மை வெளியாயிற்று. நிலவு தோன்றியதும் அதன் காத்திருப்பு வெட்ட வெளிச்சமான ஒரு விஷயமாகப் போகிறதே என்ற எண்ணம் அதன் அமைதியின்மையை மேலும் அதிகரித்தது. அது தனக்குத்தானே கூறிக்கொண்டது. இருட்டின் துணை எனக்கிருந்தால், குளத்திலிருக்கும் அவர்கள் என்னைப் பார்க்காமல் நான் அவர்களைப் பார்க்கும்படியிருந்தால், மரணத்தின் இந்த அந்தரங்க நிமிஷங்களிலாவது மற்றவர்கள் கண்களில் படாமலிருந்தால், அவர்களின் ஆர்வத்தில் மரத்துப்போன கண்களின் துணையில்லாமல் என்பலி நிறைவேற்றப்படுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர்கள் காத்திருந்து பொறுமையிழந்து கண்மூடியிருப்பார்கள். அப்படியெனில் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான். எனக்காக இரக்கப்படுபவர்கள் யாராவது அவர்களிடையே இருப்பார்களா? வேண்டாம். இந்த நேரத்தில் எதையும் நினைக்கவேண்டாம். சந்திரனின் குளிர் ஒளியை ஒரு மேகம் மறைக்கலாகாதா. இருட்டில் நான் ஓடி மறைவதற்கல்ல; அந்த முக்கியமான நேரத்தில் பிறர் கண்களுக்குப் புலப்படாமல் அழவோ சிரிக்கவோ பயந்து நடுங்கவோ உள்ள சுதந்திரம் கிடைப்பதற்குத்தான்.

என் பலி தேவதைகளே, எங்கேயிருக்கிறீர்கள் நீங்கள்? என்னை ஏற்றுக் கொள்ளுங்கள், எனது கூட்டத்தினர் இந்த நிமிஷத்திலும் என்னைச் சுதந்திரமாக விடாதது ஏன்? என் உடல் கூரிய நகங்களின் கீழே சின்னா பின்னமாவதையும், கத்தி போன்ற பற்கள் என்னைத் துண்டு துண்டாக்குவதையும் யாரும் பார்க்க வேண்டாம். எனது ஓலங்களை யாரும் கேட்க வேண்டாம்.

ஒரு வேளை பூனைக்குட்டிகள் சிறிது நேரம் என்னை நகங்களால் பிறாண்டியும் துன்புறுத்தியும் விளையாடலாம். எனது அந்தப் பரிதாப நிலையை, ஏளனத்துக்குரிய இழிவான வேதனையை யாரும் பார்க்கவேண்டாம். அவர்கள் எதிர்பார்ப்பது போல நான் அரை உயிருடன் உறுப்புகள் இழந்து இந்தப் புல் வெளியில் வீசப்படும் போது எனது அருவருப்பான உருவத்தின் கடைசித் துடிப்புகளை, முனகல்களை யாரும் அறிய வேண்டாம். இந்த இருட்டுக்கும் நிலவுக்கும் மட்டும் தெரிந்தால் போதும். என்னுடைய மரணம் என்னுடையது மட்டுமே. பூனைக்குட்டிகள் வளையம் போலத் தாயின் உடலைச் சுற்றி அணைத்துக் கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தன. கனவுலகில் அவை வாலை உயர்த்தித் துள்ளி ஆடின.

குளத்தில் கண்கள் பொறுமையிழந்தன. இரவு மறையும் போது நிலவு மேலும் ஒளிவீசியது. நள்ளிரவுக்குப்பின் தோன்றிய நட்சத்திரங்கள் மின்னி ஒளிர்ந்தன. வரப் போகும் வைகறை ராகங்களுடன் காற்று மரக்கிளைகளை அசைத்தது. பலிக்குத் தயாராயிருக்கும் தவளையிட மிருந்து அழுகைபிறந்தது. தன்னால் இனி திரும்பிப் போக முடியாத கூட்டத்திற்கும், தன்னை ஏற்றுக் கொள்ளாத உறங்கும் தேவதைகளுக்கும் இடையே நிலவில் ஒரு புழுபோலச் சுற்றி அலைந்தது. பிறகு தன்மேல் கவனத்தைத் திருப்புவதற்காக அழுதபடி மெல்ல தேவதைகள் உறங்கும் வீட்டை நோக்கி புறப்பட்டது.

அதன் அழுகை ஒலி வீட்டின் இருண்ட உருவங்களின் மேல் அனாதையாக எதிரொலித்தது. குளத்தில் தவளை வம்சம் பொறுமையிழந்து அமைதி யின்மையால் சோர்ந்து சிறு அலைகளின் மேலேறி கரையில் மோதி மண்ணோடு கலந்தது.

2002 ஜனவரி அட்சரம் இதழில் வெளியான சிறுகதை

***

0Shares
0