எலியா கசானின் வைல்ட் ரிவர் 1960ல் வெளியான திரைப்படம். ஹாலிவுட்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

ஆவணப்படம் போல நிஜமான காட்சிகளுடன் வைல்ட் ரிவர் துவங்குகிறது. டென்னஸி ஆற்றில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்குக் காரணமாக நிறையப் பொருட்சேதங்கள் மற்றும் உயிர் இழப்பு ஏற்படுகிறது. அப்படி வெள்ளப்பெருக்கில் தனது குடும்பத்தை இழந்த ஒருவர் திரையில் தோன்றி உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகிறார்.
இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றத் தடுப்பணைகள் கட்டுவதோடு நீர்மின்சாரம் தயாரிக்கவும் அரசு திட்டமிடுகிறது. இதற்காக டென்னஸி பள்ளத்தாக்கு ஆணையம் என்ற நிறுவனத்தை உருவாக்குகிறார்கள். அந்த நிறுவனம் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறது. பெரும்பான்மையான இடங்களைக் கையகப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் சிறிய திட்டு போல உள்ள கார்த் தீவை அவர்களால் வாங்க முடியவில்லை.

பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் தங்களின் பூர்வீக நிலத்தை விட்டுத் தர முடியாது என எல்லா கார்த்தின் குடும்பம் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்தினர் உள்ளே நுழையக் கூடாது என்ற அறிவிப்பு பலகையைத் தீவின் நுழைவாயிலில் வைத்திருக்கிறார்கள்
கார்த் தீவை காலி செய்ய வைக்கும் பணிக்காக சக் குளோவர் அங்கே வருகிறார்.
முதன்முறையாக எல்லா கார்த்தைச் சந்திக்கிறார். அரசாங்கத்து நபர்களிடம் தான் பேச விரும்பவில்லை என அவள் துரத்தியடிக்கிறாள். எல்லாவின் மகன்களில் ஒருவன் கோபத்தில் அவரை ஆற்றில் தூக்கி வீசி எறிகிறான்.
காவல்துறையின் உதவியைக் கொண்டு அவர்களைக் காலி செய்துவிடலாம் என உயரதிகாரி ஆலோசனை சொல்கிறார். ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் பெரிய பிரச்சனையாக மாறிவிடும். ஆகவே பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களைத் தன்னால் வெளியேற்ற முடியும் எனக் குளோவர் நம்பிக்கையுடன் சொல்கிறார்.
அடுத்த முறை தீவிற்குச் செல்லும் போது அவரிடம் தவறாக நடந்து கொண்ட மகனை மன்னிப்பு கேட்க வைக்கிறார் எல்லா.

அத்தோடு குளோவரை அழைத்துச் சென்று தங்களின் குடும்பக் கல்லறைகளைக் காட்டுகிறார். இறந்தவர்களைத் தண்ணீரில் மூழ்கடித்துவிட்டு நாங்கள் வெளியேற வேண்டுமா எனக் கேட்கிறார்.
தேசத்தின் நலன் கருதியும் மக்களுக்கான மின்சார வசதியை ஏற்படுத்தித் தருவதற்காகவும் அவர்கள் நிலத்தை விட்டுத்தர வேண்டும் என்று சக் குளோவர் மன்றாடுகிறார். எல்லா அதனை ஏற்க மறுக்கிறாள். அவளது ஒற்றைக்குரலும் அதிலுள்ள நீதியுணர்வும் சிறப்பாக வெளிப்படுகிறது
ஒரு காட்சியில் எல்லாத் தனது பண்ணையடிமை வளர்க்கும் நாயை தனக்கு விலைக்கு வேண்டும் எனக் கேட்கிறாள். அவன் தர மறுக்கிறான். உன்னைக் கேட்டு உன் நாயை வாங்க வேண்டிய அவசியமில்லை. நான் உனது எஜமானி என்று உத்தரவிடுகிறாள்.
அந்த வேலையாள் எனது நாயை நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் விலைக்குத் தர மாட்டேன் என்று உறுதியாகச் சொல்கிறான். அதை ஏற்றுக் கொண்ட எல்லா இது போலத் தான் நானும் இந்தத் தீவை எதற்காகவும் விட்டுத் தர மாட்டேன் என்கிறாள். அவளது நியாயத்தை எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.
எல்லாவின் பேத்தியான கரோல் தனது கணவன் இறந்த பிறகு அந்தத் தீவுக்குத் திரும்பியிருக்கிறாள். அவளுக்கு இரண்டு பிள்ளைகள். அவள் சக்கிற்கு உதவி செய்வதற்கு முன்வருகிறாள். சக் அவளுடன் நெருங்கிப் பழகத் துவங்குகிறார். இந்த நட்பு ஒரு நாடகம் என நினைக்கும் எல்லாப் பேத்தியைக் கண்டிக்கிறாள்.

ஆனால் சக் தன்னை உண்மையாகக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கரோல் தெரிவிக்கிறாள்.
எல்லாவிடம் வேலை செய்யப் பண்ணையாட்களைத் தீவை விட்டு வெளியேறச் செய்து புதிய வேலையும் வீடும் பெற்றுத் தருகிறான் சக். இதனால் எல்லா தனிமைப்படுத்தப்படுகிறாள்.
ஒரு நாள் காதலின் தீவிரத்தில் கரோல் சக்கை தீவிற்கு வெளியேயுள்ள தனது பழைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே அவர்கள் ஒன்றாக இரவைக் கழிக்கிறார்கள்.
சக் கறுப்பினத்தவரை வேலைக்கு வைப்பதை நகரின் மேயர் விரும்பவில்லை. அத்தோடு அவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டாலும் வெள்ளைக்காரர்களை விடவும் குறைவான சம்பளமே தரப்பட வேண்டும் என்கிறார். சக் இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். இதனால் உள்ளூர் மக்களின் பல்வேறு அச்சுறுத்தல்களைச் சந்திக்கிறான்.
கரோலைத் திருமணம் செய்து கொள்ள முற்படும் சக்கை பெய்லி என்ற முரடன் தாக்கி காயப்படுத்துகிறான். அவரது காரை உள்ளூர் மக்கள் உடைத்து நொறுக்குகிறார்கள்.
எல்லா மனநலமற்றவள். ஆகவே அவளால் எதையும் சரியாக முடிவு செய்ய முடியாது என்று அறிவித்து நிலத்தை விற்பதற்கு அவளது பிள்ளைகளே முன்வருகிறார்கள். அதைச் சக் ஏற்கவில்லை.
முடிவில் எல்லாவை தீவிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற காவற்படை தயாராகிறது. இதற்கிடையில் தானாக முன்வந்து அவள் வெளியேறும்படியான இறுதி முயற்சிகளைச் சக் மேற்கொள்கிறான். அது எப்படி நடைபெற்றது என்பதே படத்தின் இறுதிப்பகுதி
தலைமுறையாகத் தாங்கள் வாழ்ந்து வந்த நிலத்தை விட்டுத்தரமுடியாது என்பதில் எல்லா காட்டும் மனவுறுதியும், அந்த நிலத்தை அரசாங்கத்திற்குப் பெற்றுத் தருவதற்காகச் சக் மேற்கொள்ளும் முயற்சிகளும் படத்தில் உண்மையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன இருவரது நியாயங்களையும் கசான் சரியாக வெளிப்படுத்துகிறார். அதிகாரமே முடிவில் வெல்கிறது. எல்லாத் தோற்றுப் போகிறாள். ஆனால் அந்தத் தோல்வியின் வலியை சக் புரிந்து கொள்கிறார்.
எலியா கசான் பிரச்சனைக்கான தீர்வை விடவும் அதில் தொடர்புடையவர்களின் உணர்வுகளை, வலியை நிஜமாகப் பதிவு செய்திருக்கிறார். எல்லாக் கார்த் தனது புதிய வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கும் காட்சி மறக்க முடியாதது. அது போலவே வீடு எரியும் காட்சியும். எல்லாவாக ஜோ வான் ஃப்ளீட் சிறப்பாக நடித்திருக்கிறார். நியோ ரியலிச பாணியில் இப்படத்தை கசான் உருவாக்கியுள்ளார்.
வைல்ட் ரிவர் படத்தின் பாதிப்பை இன்றும் பல திரைப்படங்களில் காணமுடிகிறது.
கரோலின் கதாபாத்திரம் தனித்துவமானது. அவள் சக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளக் கேட்கும் காட்சி சிறப்பானது. எல்லாவை தீவிலிருந்து வெளியேற்ற வந்த சக் அமைதியாக நடந்து கொள்கிறான். அவனது தரப்பை உறுதியாக வெளிப்படுத்துகிறான். அவன் காட்டும் மரியாதையை எல்லா புரிந்து கொள்கிறாள்.
ஆற்றின் குரலைக் கேட்டு வளர்ந்த எல்லாவிற்கு இன்னொரு இடத்தில் வாழுவது ஏற்புடையதாகயில்லை. படத்தின் முடிவு நம்மைக் கலங்கச் செய்துவிடுகிறது.