ஒளிமலர்

பிரபு மயிலாடுதுறை

ஒரு பெரிய கிராமம். அதில் உலகம் கண்ட மகத்தான கலைஞர்களில் ஒருவன் வாசம் புரிகிறான். அவனது குடும்பம். நேசிக்கும் மனைவி . கலையார்வம் மிக்க வாரிசுகள். நூற்றுக்கணக்கான அவனது பண்ணைத் தொழிலாளர்கள். பெரிய மாளிகை. பெரிதினும் பெரிது கேட்கும் அவனது மனநிலை. சாரட்டு வண்டிகள். கிராமத்துத் திருவிழாக்கள் என உலகின் மகத்தான கலைஞன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கையைத் தன் சொற்கள் மூலம் என்றுமுள காலத்தில் நிறுவியிருக்கிறார் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.

பித்தேறிய தன் மனத்தின் சங்கேதங்களைத் தொடர்ந்த படி வாழ்வின் அனைத்து போகங்களையும் நோக்கிச் செல்கிறார் இளம் டால்ஸ்டாய். குடி, சூதாட்டம், பெண் என அனைத்தையும் அறிய முற்படுகிறார். இராணுவத்தில் பணி புரிந்து சாகசமான வாழ்முறை மூலம் சாவினையும் சாவினுக்கு ஒப்பான தருணங்களையும் மிக அண்மையில் பார்த்து அறிகிறார் லேவ். எனினும் அவர் அகத்தில் ஏதோ ஒன்று அவரைப் போகங்களைக் கடந்து செல்ல தூண்டிக் கொண்டே இருக்கிறது. அது புறவயமாக வரையறுக்கத் தக்கதாக இல்லை. அது தன்னை அவ்வாறு வெளிப்படுத்திக் கொள்ளவில்லை; அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

தன்னை முழுமையாக நேசிக்கும் பெண்ணைச் சந்திக்கிறார். மண்ணுக்குத் தன்னை முற்றிலும் ஒப்படைக்கும் விதையைப் போன்றவளாக இருக்கிறாள் அப்பெண். வானத்துச் சூரியனை நேசிக்கும் ஏரிக்கரை மலரைப் போன்றவளாக இருக்கிறாள் அவள். டால்ஸ்டாயின் அகத்தில் சுடரும் ஒளியைக் காண்பவளாகவும் அதனை ஆராதிப்பவளாகவும் இருக்கிறாள் அவள். எனினும் டால்ஸ்டாய்க்கு தான் முன்னர்ப் பழகிய பெண்களைப் போன்ற இன்னொரு பெண்ணே அவள். காதல் என்ற உணர்வை அவள் டால்ஸ்டாய் உடனான உறவின் மூலம் முழுமையாக அடைகிறாள் அந்தப் பெண். டால்ஸ்டாய்க்கு அந்த உணர்வு முதல் அறிமுகம் ஆகிறது.

டால்ஸ்டாய் பின்னர்ச் சோஃபியாவை மணக்கிறார். தனது ரகசியங்கள் அனைத்தையும் சோஃபியாவிடம் முன்வைக்கிறார். அது அவளுக்கு வேதனையளிக்கிறது. உலகின் மகத்தான கலைஞன் தன் கணவன் என்ற உணர்வும் ஒரு பெண்ணாகத் தன் மனம் உணரும் துயரங்களும் அவளை வாழ்நாள் முழுதும் அலைக்கழிக்கிறது.

டால்ஸ்டாய், அக்ஸின்யா, திமோஃபி என்ற முக்கோணச் சித்தரிப்பில் நான் மகாபாரதத்தின் சூரிய பகவான், குந்தி, கர்ணன் என்ற கோணம் வெளிப்பட்டதாக நினைக்கிறேன். சிறுவனான திமோஃபி குதிரை லாடத்தால் தாக்குவது என்பதிலும் மகாபாரதம் உப பிரதியாக இருக்கிறது என்று தோன்றியது.

யஸ்னயா போல்யானாவிற்கு ஜிப்சிகள் வருகை புரிவதை சொல்லும் பகுதி மிக அழகாக இருக்கிறது. பண்ணை மட்டுமே உலகம் என இருக்கும் மனிதர்கள் மத்தியில் ஜிப்சிகள் வண்ணமயமான உடைகளுடனும் ஆபரணங்களுடனும் உள் நுழைவது என்பது குறியீட்டு ரீதியில் பல அர்த்தங்கள் பொதிந்தது. அவர்களது மாயங்கள் எல்லா மனித மனத்திலும் இருக்கும் கண்டடையப் படாமலே போகும் மாயங்களே.

அக்ஸின்யா டால்ஸ்டாயிடம் அர்ப்பணம் ஆனதைப் போலத் தனது படைப்பாற்றலுக்குத் தன்னை முழுதாகக் கொடுக்கிறார் டால்ஸ்டாய். அவரது அக ஒளி அவரை வழிநடத்துகிறது. மானுடத்தின் மகத்தான ஆக்கங்களைப் படைக்கத் தொடங்குகிறார் டால்ஸ்டாய்.

தன்னைச் சூழ்ந்திருக்கும் சக மனிதர்களுக்காகத் தான் வாழும் ஒட்டு மொத்த உலகுக்காகச் செயல்படத் தொடங்குகிறார் டால்ஸ்டாய். அவரது அகம் கனியத் தொடங்குகிறது. திமோஃபி சில ஆண்டுகள் பண்ணையை விட்டு ஓடிப் போய் விட்டு மீண்டும் வீடு திரும்புகிறான். பண்ணையை விட்டு ஓடியவன் ஒருவன். திரும்பி வரும் போது ஓடிப் போனவனாகத் திமோஃபி இல்லை. வேறு ஒருவனாக மாற்றம் பெற்றிருக்கிறான். இந்தப் பகுதி எனக்கு ஜீசஸ் சொல்லும் கதையான ‘’The lost son” ஐ நினைவுபடுத்தியது. புனைவு ரீதியில் இதை டால்ஸ்டாய்க்கும் பொருந்தும் படியாகக் காட்டியுள்ளார் எஸ். ரா.

பல்வேறு ஆழமான நுட்பமான உணர்ச்சிகள் பிரவாகிக்கும் தருணங்கள் நாவல் முழுதும் நிரம்பியுள்ளன. ஒரு விதை மண்ணைக் கீறி தளிராக எழுந்து வான் நோக்குவது போல வாசக மனம் இந்த நாவலை வாசித்த பின்னும் அதன் உணர்வுநிலைகளைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

•••

0Shares
0