ஒளியின் பயணம்.

லைட்டிங் என்பது ஒளியை ஒரு குறிப்பிட்ட விதமாக எடுத்துச் செல்வது.  கையாளுவது. மிகையான வெளிச்சம் காட்சியின் இயல்பைக் கெடுத்துவிடும் ஆகவே நான் பெரும்பாலும் ஒளியை விட நிழல்களைப் பயன்படுத்த விரும்புகிறேன் என்கிறார் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் வில்மோஸ் ஸிக்மண்ட். ஆஸ்கார் விருது பெற்றவர்.

ஹாலிவுட் இயக்குநர்கள். நடிகர்கள் பற்றி நிறைய ஆவணப்படங்கள் உருவாக்கபட்டுள்ளன. ஆனால் அதன் ஒளிப்பதிவாளர்கள். இசையமைப்பாளர்கள் பற்றி மிகக் குறைவான ஆவணப்பதிவுகளே காணப்படுகின்றன.

ஹங்கேரியை பூர்வீகமாகக் கொண்ட ஒளிப்பதிவாளர் வில்மோஸ் ஸிக்மண்ட் பற்றிய ஆவணப்படமான Close Encounters With Vilmos Zsigmond யைப் பார்த்தேன்.

ஹங்கேரியின் திரைப்படப்பள்ளியில் ஒளிப்பதிவு பயின்ற தனது இளமைப்பருவம் குறித்தும், சோவியத் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைத் தாங்கள் நேரடியாகப் படப்பிடிப்புச் செய்து ஆவணப்படுத்திய நாட்கள் குறித்தும் அழகாக நினைவு கூறுகிறார்.

அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்த வில்மோஸ் ஹாலிவுட்டில் நுழைய முற்பட்ட போது ஒரு மூத்த ஒளிப்பதிவாளர் உன்னைப் போன்ற ஆட்களுக்கு இங்கே இடம் கிடையாது என்று துரத்திவிடுகிறார். ஆனால் அதையே சவலாக எடுத்துக் கொண்டு பி கிரேட் படங்களில் பணியாற்றத் துவங்கி மெல்ல தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் வில்மோஸ்.

அந்த நாட்களில் அவரது பெயரை வில்லியம் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். ஒருவகையில் அது வேறு யாரோ ஒளிப்பதிவு செய்த படம் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று வேடிக்கையாக குறிப்பிடுகிறார்.

அவருடன் முக்கியமான ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்கள் நிகழ்த்துகிற உரையாடல் தான் இந்த ஆவணப்படத்தின் முக்கியமான பகுதி. குறிப்பாக Darius Khondji உடன் அவர் நிகழ்த்துகிற உரையாடல் ஒரு பாடம் என்றே சொல்வேன்.

தனது திட்டமிடல், ஒளிப்பதிவு செய்யும் முறை, இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் என்று விரிவாகத் தன் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார். இதில் பொது நிகழ்வில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரையும் இடம்பெற்றிருக்கிறது

McCabe and Mrs. Miller, The Deer Hunter, Blow Out and The Long Goodbye.Close Encounters of the Third Kind படங்களின் ஒளிப்பதிவு குறித்து வில்மோஸ் விளக்கிச் சொல்கிறார். அரங்கத்தில் ஒளியமைப்பு செய்யும் போதும் திறந்த வெளியில் படப்பிடிப்பு நடத்தும் போதும் தான் எவ்வளவு துணிச்சலாக, சவாலாக காட்சிக் கோணங்களை உருவாக்கினேன் என்பதை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஒரு காட்சியில் அவர் அமெரிக்கரா அல்லது ஹங்கேரியனா என்று கேட்கிறார்கள். தான் ஹங்கேரியில் பிறந்திருந்திருந்தாலும் தான் வாழ்ந்தது அமெரிக்காவில் என்பதால் தன்னை ஒரு அமெரிக்கராகவே வில்மோஸ் சொல்கிறார். அவரது வீடும் தனிப்பட்ட வாழ்க்கையும் இயல்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் லாஸ்லோவுடன் அவரது பால்யகாலம் துவங்கிய நட்பு. இருவரும் ஒன்றாக ஹாலிவுட்டில் பணியாற்றிய நாட்கள் எனத் தனது நண்பரைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார் வில்மோஸ்.

எழுபதுகளில் ஹாலிவுட் சினிமாவின் முகத்தை உருவாக்கியதில் வில்மோஸிற்குத் தனிப்பங்கு இருக்கிறது. அவரது கலைத்திறனை ஆராயும் இந்தப்படம் அவருக்குச் செலுத்தப்பட்ட சிறந்த அஞ்சலி என்றே சொல்வேன்

0Shares
0